Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 10

 ஆதீரனிடமிருந்து ஓடி வராத குறையாக வந்த குந்தவி அந்த அலுவலத்தை தாண்டுவதற்குள் அவளின் கண்ணீர் இமைகளை விட்டு தாண்டி விட்டது.

புறங்கையால் அழுகையை துடைத்தாள். அதே நேரத்தில் கைபேசி அழைத்தது. காந்திமதிதான் எதிர்முனையில் இருந்தாள்.

"என்னடி.. பேசி முடிச்சிட்டியா?" எனக் கேட்டாள் எடுத்த எடுப்பில்.

சாலையோரம் இருந்த சிமெண்ட் திண்டில் அமர்ந்தவள் "முடியல அத்தை.." என்றாள் அழுகையோடு. அவளின் பின்னால் இருந்த மரம் பெரிய கிளை பரப்பி வைத்திருந்தது. மரத்தின் அடியில் நின்றிருந்த ஒரு காதல் ஜோடி இவளை கண்டு விட்டு மீண்டும் தங்களின் காதல் லீலையில் ஈடுபட ஆரம்பித்தது. மரத்தின் வேர் அருகே படுத்திருந்த ஒரு நாய் தலை தூக்கி பார்த்து விட்டு, உடனே மீண்டும் படுத்துக் கண்களை மூடிக் கொண்டது. 

"ஏன்டி வெட்கம் கெட்டவளே! பணக்கார பையங்கறதால உன் சூடு சொரணை கூட இல்லாம போயிடுச்சா?"

எதிர் முனையில் உருவான காந்திமதியின் கோபம் இங்கிருந்த குந்தவியின் எண்ணத்தையும் சேர்த்து சுட்டது.

எத்தனையோ கெட்ட மாமியார்களை கேள்விப்பட்டுள்ளாள் குந்தவி. ஆனால் தன் மாமியாரே இப்படி ஒரு எண்ணம் கொண்டவளாக இருப்பாளென்று கனவிலும் நினைக்கவில்லை.

"உன் குடும்பத்து மேல உனக்கு கொஞ்சமாவது பாசம் இருக்கும்ன்னு நினைச்சிட்டேன் நான். சரி விடு.. கொல்லுறவங்களை கொன்னா உனக்கு எல்லாமே புரிய வரும்.. அப்படியும் உனக்கு சூடு சொரணை வரலன்னா நான் அடுத்த வேலையை பண்ணிக்கிறேன்!" என்றாள்.

கைபேசியை காதில் வைத்தபடியே விம்மினாள் குந்தவி. குடும்பமா காதலா என்று வருகையில் இரண்டுக்கும் இடையில் தன் உயிரை விடுவதே சிறந்ததாக தோன்றியது.

"வேணாம் அத்தை.." 

"இந்த வளவள பேச்சு எனக்கு சுத்தமா வராது. ஒன்னு என் பையனை விலகு. இல்லன்னா உன் குடும்பத்தை பலி எடுப்பேன் நான்.!"

"நான் பேசுறேன் அத்தை.. அவர்கிட்ட நான் பேசுறேன். கொஞ்சமா நேரம் கொடுங்க.. சுத்தமா முடியல என்னால. நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுங்களா?" என்றவள் நடு சாலை என்றும் பார்க்காமல் அழுதாள்.

சற்று நேரத்திற்கு எதிர் திசையில் சத்தம் ஏதும் வரவில்லை. காந்திமதி யோசிக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட குந்தவி "இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் நேரம் தந்தா போதும். அதுக்குள்ள நான் நல்ல முடிவா யோசிச்சு சொல்றேன்.." என்றாள் கெஞ்சலாக.

இப்படி கெஞ்சுகையில் ஏன் இந்த விதி என்று தன் வாழ்வின் மீதே கோபம் வந்தது அவளுக்கு. தன்மானம் இழந்து அழுவது என்பது அவ்வளவு சுலபமான விசயம் இல்லையே! இதுநாள் வரை பரிட்சையில் கூட தோற்றது இல்லை. எந்த இடத்திலும்‌ தலை குனிய கூடாது என்று நினைப்பவள். தனது மனதின் மானத்தை பெரிதென நினைத்து இருப்பவள்.

"சரி.. நைட் பத்து மணிக்கு போன் பண்ணுவேன். அதுக்குள்ள நல்ல முடிவா யோசிச்சி வை!" என்ற காந்திமதி அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

நேரம் நொடி நொடியாக நழுவிப் போய் கொண்டிருந்தது. அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் குந்தவி. 

"எனக்கு எங்க அம்மாவை தவிர வேற யாருமே இல்ல குந்தவி.. நீ எனக்கு கிடைக்கப் போற முதல் உறவு. உன்னை நான் எவ்வளவு விரும்புறேன்னு உனக்கு தெரியும். ஆனா உனக்கு தெரிஞ்சதை விட கோடி மடங்கு உன்னை நான் விரும்புறேன். எதுவும் செய்வியான்னு கேட்டா கேட்பதை அப்பவே செய்வேன். இப்ப கூட இந்த பில்டிங் மேல இருந்து குதிக்க சொன்னா, சத்தியமா குதிச்சிடுவேன்.. ஏனா நீன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும்!" ஆதீரன் என்றோ சொன்னது இன்று இப்போது செவிக்குள் எதிரொலித்தது.

எந்த முடிவுமே எடுக்க முடியவில்லை. தன்னை தாண்டிச் சென்ற வாகனங்களை யோசனையோடு பார்த்தாள். மரம் அவள் மீதிருந்த தனது நிழலை கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டி வேறு திசையில் பாய் விரிக்க ஆரம்பித்தது.

'பேசாம செத்துடலாமா?' என்று யோசித்தவள் தனது யோசனைக்காக தன்னையே திட்டிக் கொண்டாள்.

"அப்புறம்‌ ஆதீ ஜென்மத்துக்கும் நம்மை மறக்க மாட்டாரு. யாருக்கு தெரியும்.. நாம செத்த அடுத்த நாளே அவரும் கூட தற்கொலை பண்ணிக்கலாம்.. உன்னை காதலிச்ச பாவத்துக்கு அவர் சாக வேணாம்.!" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

மாலை வெயில் சுள்ளென்று முதுகையும், முகத்தையும் சுட்டது. எழுந்து நின்றாள். கைபேசியை இறுக்க பற்றியபடி எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறினாள்.

சரியாய் இரவு மணி பத்திற்கு அழைத்தாள் காந்திமதி.

"என்ன முடிவு செஞ்சிருக்க?"

"நான் செத்துட்டா அப்புறம் உங்க பையன் உடைஞ்சி போயிடுவாரு.. இறந்தும் கூட போவாரு.. என்னால அவருக்கு அப்படியொரு முடிவை தர முடியாது!" என்றாள் ஜன்னலருகே நின்றபடி. வெளியில் இருக்கும் இரவு தன்னை வந்து பிடித்துக் கொண்டால் நலம் என்றுக் கூட தோன்றியது.

காந்திமதி யோசித்தாள். இவள் சொல்வது சரிதான் என்று தோன்றியது அவளுக்கும்.

"அப்படின்னா நீ ஓடி போயிடு.!" என்றாள்.

"காலத்துக்கும் என்னை தேடி பைத்தியமா அலைவாரு அத்தை.." என்று அழுதவள் "நான் என்னதான் செய்யட்டும்? சாகவும் வழி இல்ல.. வாழவும் நீங்க வழி விடல.. உங்க பையனை தெரியாம காதலிச்சிட்டேன்!" என்றுச் சிறுகுரலில் கதறினாள்.

"நீ என்ன வேணாலும் செஞ்சி தொலை. ஆனா என் பையன் உன்னை மறந்துட்டு நிம்மதியா இருக்கணும். நான் காட்டுற பொண்ணை கட்டிக்கணும்.!" என்றாள் அவள்.

"நீங்க சொல்றதை செய்யுறேன்.. ஆனா என்னால அவர்கிட்ட நேரடியா பேச முடியல. நான் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டாரு. ஆயிரம் கேள்வி வரும். நான் உளறி கொட்டிட்டா பிரச்சனையாகிடும்.!" தனது பக்க பிரச்சனையை சொன்னாள்.

"வேறு எவன் கூடயாவது நீ ஓடினா.. அப்ப என்னாகும்?" யோசனையோடு இழுத்தபடி கேட்டாள் காந்திமதி.

மீண்டும் ஓர் அருவியாய் கொட்டியது கண்ணீர். "ச.. சரிங்க அத்தை.." என்றாள்.

அவனும் நன்றாக இருக்க வேண்டும். குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்ற திண்டாட்டத்தில் காந்திமதி என்ன சொன்னாலும் தலையாட்டிதான் ஆக வேண்டும் என்று புரிந்துக் கொண்டாள் இவளும்.

இணைப்பை துண்டித்த காந்திமதி அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் அழைத்தாள்.

"நாளைக்கு மதியம் என் ஆள் ஒருத்தன் உன்னை கூட்டிப் போவான். உன் தில்லாலங்கடி வேலை எதுவும் வேலைக்கு ஆகாது. அதையும் மீறி நீ ஏதாவது செஞ்சா அப்படியே பொதைச்சிடுவான் அவன். நீ எவனையோ இழுத்துட்டு ஓடிட்டன்னு என் மகன் நம்பிய பிறகு உன்னை கூட்டிப் போறவன் உன்னை விடுதலை செஞ்சிடுவான். அது வரைக்கும் உன் குறுக்கு புத்தியை வச்சி ஏதும் செய்யாம இரு. அப்புறமா நீ அப்படியே எங்காவது போய் தொலைஞ்சி கூட போகலாம். உன்னை யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க சரியா?" எனக் கேட்டாள்.

வாயிலிருந்து வர மறுத்த வார்த்தையை சிரமப்பட்டு வர வைத்து "சரி அத்தை!" என்றாள்.

மறுநாள் மதியம் வரையிலும் பித்து பிடித்தாற் போலதான் இருந்தாள். இடையில் பன்னிரண்டு முறை போன் செய்திருந்தான் ஆதீரன். அவனை சமாளித்தவள் மணிக்கொரு முறை அழைத்த காந்திமதியையும் சமாளிக்க வேண்டி இருந்தது. குடும்பத்தாருக்கு சந்தேகத்தை வர வைக்காமல் இருக்க இன்னும் சிரமமாக இருந்தது.

அன்றைய மதியத்தில் டெய்லர் கடைக்கு கிளம்புவதாக சொல்லி சென்றவளை பாதியிலேயே மடக்கினான் காந்திமதி அனுப்பி வைத்த ஆள். அவனோடு சேர்ந்து அவள் தொடர்வண்டி பிடித்ததை காந்திமதி ஆதாரமாக காணொளி காட்சியில் பதிவு செய்துக் கொண்டாள்.

குந்தவியை தேடிய காவல் துறையினரிடமும் அதே காணொளி காட்சி கிடைக்கும்படி செய்தாள்.

ஒரு வாரம் ஒரே அறையில் சிறை கைதி போல அடைந்து கிடந்தாள் குந்தவி. அவளை கடத்தி வந்தவன் அவளுக்கான உணவை கூட ஜன்னல் வழிதான் தந்தான். அவளின் கைபேசியை நடுவழியிலேயே பிடுங்கியவன், தொடர்வண்டி பாலத்தை கடந்த ஒரு இடத்தின் கீழ் தூக்கி வீசினான்.

கடத்தி வந்தவன் அந்த வார இறுதியில் அவளை விடுதலை செய்தான். கையில் பத்து பைசா காசு இல்லை. பூட்டு விடுவிக்கப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்தவள் ஜன கூட்டம் அதிகம் இருந்த அந்த தெருவில் பைத்தியக்காரி போல வந்து நின்றாள்.

அழுது ஓய்ந்த கண்களோடு நடந்தவள் காலடியில் வந்து விழுந்த செய்தித்தாள் கண்டு கையில் எடுத்தாள். அதே நேரத்தில் அவளின் தோளை இடித்து விட்டு நடந்தான் ஒருவன். அவளை கடத்தி வந்த அவனேதான் அது. இவள் புறம் திரும்பி கேவலமாக ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு சென்றான்.

எதேச்சையாகதான் செய்தித்தாளை பார்த்தாள். ஒரு புறம் வீட்டின் ஏலம். மறுபுறம் தங்கையின் திருமணம். முழுதாய் உடைந்தே விட்டாள். எந்த தங்கையின் உயிர் காப்பாற்ற காதலை துறந்து ஓடி வந்தாளோ அதே தங்கையை இப்போது காந்திமதி எனும் காலனிடம் ஒப்படைத்தாயிற்று. அதற்கு மேல் வாழவே மனமில்லை அவளுக்கு. 

அப்படி மரணம் தேடி கிளம்பியவள்தான் இப்போது இந்த ஹோட்டல் அறையில் கடிதத்தோடு அமர்ந்திருக்கிறாள்.

அவளுக்குள் ஏகப்பட்ட குழப்பம். ஆதிரன் தந்த குழப்பமும் இந்த கடிதம் தந்த குழப்பமும் அவளை பாடாய் படுத்தியது.

காதலி எவனையோ இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்று செய்தி கிடைத்த உடன் காதலியின் தங்கையை மணந்த ஆதீரனை அவளால் இனியும் காதலோடு பார்க்க முடியவில்லை. 

அவள் தன் காதலில் உண்மையாக இருந்தாள். அவன் உண்மையாக இல்லாமல் கூட போகட்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் காதலியின் குடும்பத்தை பழி வாங்குதல் எந்த வகையில் சேரும் என்றெண்ணினாள். 

ஆற்றையும் இழந்து சேற்றையும் இழந்து நிராதரவாக நின்றவளுக்கு இரவு நடந்த விசயம் வந்து தாக்கியது. அவள் மறந்தாலும் அவளின் மேனி எதையும் மறக்கவில்லை.

மறக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே சென்று குளித்து விட்டு வந்தாள். அப்போதும் கூட ஒரு பயனும் இல்லை. 

கடிதம் கட்டிலின் மீது கிடந்தது.

சாதாரணமாக பார்த்தால் அர்த்தமற்ற கடிதமாக தோன்றும் இது. ஆனால் அவளுக்குள் இருந்த மனம் இதை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவனுடனான கூடல் நேற்று இரவை விடவும் இன்று அதிகமான விளைவுகளை தந்து விட்டது. 

குளிக்கும்போதுதான் தன்னை இன்னும் தெளிவாக பார்த்தாள். அவனின் கைவினையாக மாறி விட்டிருந்தது அவளது உடம்பு. ஓரிரவா இல்லை ஓராயிரம் இரவா என்ற சந்தேகம் வந்தது அவளுக்கு. 

அவன் தேர்ந்தெடுத்திருந்த சுடிதார் அவளுக்கு மிக பொருத்தமாக இருந்தது. படுக்கையில் கிடந்த பணக் கட்டுகளை எடுத்து அடுக்கினாள். ஐந்து லட்சத்து இருபதாயிரம் ரூபாய் இருந்தது. வெறும் ஐநூறு கேட்டவளுக்கு இவ்வளவு தொகை தந்தவன் பைத்தியமோ என்று கூட சந்தேகம் தோன்றியது.

நேரம் நகர்வதை கூட கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருந்தவள் கதவு தட்டப்படும் சத்தத்தில் எழுந்து நின்றாள். 

சென்று திறந்தாள். எதிரில் உணவு தட்டோடு நின்றாள் ஒரு பணிப்பெண்.

இவள் மறுத்து சொல்ல முயலும் முன் இவளிடம் உணவு தட்டை நீட்டிய அப்பெண் இவளோடு இருந்தவன் இவளுக்கு நேரா நேரத்திற்கு உணவு தர சொல்லி விட்டு சென்றான் என்று தகவல் சொன்னாள்.

'யார்டா நீ? நான் பட்டினியா கூட இருக்க கூடாதுன்னு நினைச்சிருக்க? ஒரு ராத்திரிக்கு நான் என்ன இவ்வளவு வொர்த்தா?' என மனதோடுக் கேட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே



Post a Comment

0 Comments