Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 11

 ஆதீரன் அந்த மருத்துவமனையின் வாசலில் காரை நிறுத்தியதும் புயலாய் இறங்கி ஓடினாள் சங்கவி.

அப்பாவுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் மருத்துவரை தேடிச் சென்றவள் "சார் நான் பணம் ரெடி பண்ணிட்டேன். ப்ளீஸ் எங்க அப்பாவை காப்பாத்துங்க.." என்றாள் அவசரமாக.

மருத்துவர் செவிலியையிடம் கண் சைகை காட்டினார். "இவங்களோடு போங்க.. ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு வாங்க.!" என்றார்.

செவிலியை நீட்டிய பாரத்தில் படித்துக் கூட பார்க்காமல் அவசரமாக கையெழுத்திட்டாள். 

"எப்படியாவது சீக்கிரமா எங்க அப்பாவை காப்பாத்தி கொடுங்க.!" என்றாள் செவிலியையிடம்.

"ஆபரேசன் பண்ண பிறகுதான்ம்மா எதுவும் சொல்ல முடியும். நீ நம்பிக்கையை கை விடாம இரு.." 

"ம்ம்." என்றவள் ஆதீரன் தந்திருந்த பையிலிருந்த பணக் கட்டை எடுத்து வைத்தாள். பணத்தை பார்த்தவள் சில நொடிகள் சமைந்து நின்று விட்டாள். பணக்கட்டில் முதலில் இருந்த தாளில் பென்சிலால் இதயம் வரைந்து நடுவில் குந்தவி சங்கவி என்று எழுதியிருந்தது. 

கண்ணீர் தானாய் பெருக்கெடுத்தது. அவளும் அக்காவும் பதினான்கு வருடங்களாக பத்திரமாக சேர்த்து வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டு அது‌. அப்பா வாங்காத கடனுக்கு வட்டியென்று கேட்டு வந்த ஒரு பொய் நிறுவனம் பிடுங்கிய பணத்தில் இந்த நூறு ரூபாயும் சேர்ந்து சென்று விட்டது. அந்த பொய் நிறுவனம் ஆதீரன் ஏற்பாடு செய்தது என்பது அந்த வீட்டிலிருந்த அனைவருமே யூகித்ததுதான். ஆனால் அதை இப்போது இன்னுமொரு முறை ஆதாரமாக பார்க்கையில் நெஞ்சு கனத்தது சங்கவிக்கு.

மொத்த பணத்தையும் எண்ணினாள். ஆபரேசன் செலவு போக மீதி இருந்தது. அது இதர செலவுக்களுக்கு என்பதால் பத்திரப்படுத்திக் கொண்டாள். மறக்காமல் அந்த நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்து தனது ரவிக்கைக்குள் மறைத்துக் கொண்டாள்.

மருத்துவரிடம் பேசி முடித்து விட்டு வெளியே வந்தவளிடம் "போலாமா?" எனக் கேட்டான் ஆதீரன். காரிலேயே இவனை விட்டு வந்து விட்டாள். மீண்டும் இப்போதுதான் பார்த்தாள்‌. 

'கொஞ்ச நேரத்துக்கு என்னை விட்டு தொலைய கூடாதா?' என மனதோடு கேட்டவள் அமைதியாக அவன் பின்னால் நடந்தாள்.

பிரேத பரிசோதனை முடிந்து எப்போது அம்மாவின் உடலை தருவார்கள் என்ற தன் சந்தேகத்தை கூட அவளால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. அதற்குள் இழுத்துக் கொண்டு சென்றான். தந்தையின் உடல்நிலையால் வந்த துயரம் வேறு அவளை இம்சித்தது.

"டாக்டர் என்ன சொன்னாங்க?" காரை கிளப்பியபடி கேட்டான் ஆதீரன்.

"சாயங்காலம் ஆபரேசன் பண்ணிடலாம்ன்னு சொல்லி இருக்காங்க.!" என்றவளிடம் தண்ணீரை நீட்டினான். ரொம்ப தாகம். ஆனாலும் தண்ணீர் பற்றி யோசிக்கவேயில்லை. அவன் தந்த தண்ணீரை குடித்த பிறகும் கூட அந்த தாகம் அடங்கவேயில்லை.‌

மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று மேலும் மேலும் விசாரித்தான். அவளுக்கு தெரிந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள். ஒற்றை பெண்ணாய் நின்று மருத்துவரிடம் உரையாடுவது கூட அவளுக்கு இயலாத காரியம்தான். ஆனால் அனைத்தையும் இழந்து நிராதரவாக நிற்கையில் என்னவென்று யோசிக்க முடியும்? முடியும் முடியாதென்பது வேறு கணக்கு. அவசியம் என்பதல்லவா இங்கு விசயமே!

கார் சிறு குலுங்கலோடு நின்றது. "இறங்கு.!" என்றவன் அவளுக்கு முன்னால் இறங்கினான்.

இறங்கியவள் வீட்டைதான் எதிர்பார்த்தாள். ஆனால் அங்கே இருந்தது சுடுகாடு.

ஆதீரனை திரும்பிப் பார்த்தாள். 

"நட.!" என்றவன் அவளின் முதுகில் கை வைத்து அவளை தள்ளிக் கொண்டு நடந்தான்.

சுடுகாட்டு கடைசியில் ஓரிடத்தில் சிதை ஒன்று தயாராக இருந்தது. சிதையின் அருகே நின்றிருந்த பெரியம்மா இன்னமும் அழுதபடி இருந்தாள்.

"அ..ம்மா.." என்று திணறிய சங்கவிக்கு மேலே நடக்க முடியவில்லை. "அம்மா.." வீறிட்டு கத்தினாள்.

தன் இடது பக்க செவியை அரக்கி விட்டுக்‌ கொண்ட ஆதீரன் அழுதவளை சிதையின் அருகே அழைத்துச் சென்றான்.

தயாராய் இருந்த தீப்பந்தம் நீட்டப்பட்டது. மறுப்பாக தலையசைத்த சங்கவி "அம்மா!" என்று கதறியபடி சிதையின் அருகே ஓடினாள். மேலே அடுக்கப்பட்டு இருந்த கட்டைகளை கீழே தள்ளினாள். அம்மாவின் முகம் பாதி தெரிந்தது.

"அம்மா.." என்று கத்தியபடி சிதையின் மீது விழுந்தாள். 

அவளின் கதறல் சத்தம் கேட்டு பெரியம்மாவுக்கு இன்னும் அதிகமாக அழுகை வந்தது. பந்தத்தோடு நின்றிருந்த வெட்டியான் அழுதவளை பரிதாபமாக பார்த்தான்.

"என்னை விட்டு போக எப்படிம்மா மனசு வந்தது? எல்லோருமே என்னை மட்டும் அனாதையா விட்டுப் போயிட்டிங்களே! அக்காவும் கூட்டிப் போகல. நீங்களும் கூட்டிப் போகல.." என்று முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள்.

ஆதீரன் முகத்தை சுளித்தபடி அருகே வந்து அவளை சிதையிலிருந்து தூர இழுத்தான். 

"நேரம் ஆகுது.. எனக்கு பசிக்குது.." என்றவன் தன் கை கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது.

"அதை கொடுங்க.." ஆதீரன் கேட்டதும் தீப்பந்தத்தை நீட்டினார் வெட்டியான்.

அழுதுக் கொண்டிருந்த சங்கவியின் கையை பற்றி பந்தத்தை திணித்தான். "ஐயோ வேண்டாம்.." என்றவள் அவனிடமிருந்து திமிறியோட முயன்றாள். ஆனால் அவளின் கையை இறுக்கமாக பற்றியிருந்தவன் சிதையின் மீது நெருப்பை வைத்தான். சட்டென்று பிடித்தது நெருப்பு. "அம்மா.." என்று அலறியவளின் கத்தல் சத்தமும் அதிகரித்தது. 

கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் பாய முயன்றாள் சங்கவி.

அவளின் முதுகை தன்னோடு அணைத்துக் கொண்ட ஆதீரன் "பைத்தியமா நீ?" என்று கர்ஜித்தான்.

"அம்மா வேணும்.. நானும் அம்மாவோடு போறேன்.!" என்றுக் கத்தியழுதாள். 

"அப்புறம் உங்கப்பனையும் சேர்த்து கொண்டு வந்து இதே நெருப்புல பொதைக்க வேண்டி இருக்கும்.." அவன் விசமாய் சொன்னது கேட்டு அவளின் அழுகை அப்படியே நின்றுப் போனது. தான் இல்லாவிட்டால் அப்பாவின் கதி என்னவாகும் என்ற யோசனை ஒரு புறம். இவனின் கோபத்தால் நாசமான குடும்பத்திற்கு பழி தீர்க்க வேண்டிய கட்டாயம் ஒரு புறம்.

அழுது வறண்ட நாவை உமிழ் நீரால் நனைத்துக் கொண்டவள் அவனிடமிருந்து விலக முயன்றாள். அவளின் இடையோடு வளைத்திருந்த அவனின் கரம் இம்மியும் விலகவில்லை. 

அவளின் கையிலிருந்த நெருப்பு கட்டையை வாங்கி சிதையில் தூக்கி எறிந்தான். சிதை எரிவதை காண காண இன்னும் அழுகை வந்தது. 

நேரம் கடந்தது. நின்றுக் கொண்டிருந்த கால்கள் இரண்டும் மடங்க ஆரம்பித்தது. விழிகள் மேலே சொருக ஆரம்பித்தது. மணி பத்தை கடந்துக் கொண்டிருந்தது. பசியை அவள் மறந்தாலும் பசி அவளை மறக்கவில்லை.

பாதி சிதை எரிந்து முடிந்திருந்தது.

அம்மா அம்மாவென்று உள்ளுக்குள் உருகி கொண்டிருந்தவளை கொண்டு வந்து காரில் தள்ளினான் ஆதீரன்.

அருகில் வந்து நின்றாள் பெரியம்மா.

"இந்த பொண்ணை விட்டுடுப்பா.. நான் கூட்டிப் போய் பத்திரமா பார்த்துக்கறேன்.." என்றாள்.

உதட்டை பிதுக்கியபடி பெரியம்மாவை எடை போட்டவன் "ஹாஸ்பிட்டல்ல இருக்கும் இவங்க அப்பா, கடன்ல இருக்கும் இவங்க வீடு இரண்டுக்கும் என்ன வழி? இவ மனசார வந்து என் கையால் மறுபடியும் தாலியை வாங்கி இருக்கா.. உங்க இஷ்டபடியெல்லாம் விட முடியாது.." என்றான். பிறகு யோசனையோடு "இவங்க வீட்டு சாவி உங்கக்கிட்டயா இருக்கு?" எனக் கேட்டான்.

ஆமென தலையசைத்த பெரியம்மா சாவி கொத்தை எடுத்து காட்டினாள். அதை தன் கையில் பிடுங்கிக் கொண்டவன் "உங்க ஆஸ்பிட்டல் விசிட் முடிஞ்சதா?" எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.

பெரியம்மா "ம்" என்றாள்.

"அப்படின்னா நீங்க கிளம்பலாம்.. இனி உங்களுக்கு சாதம் வடிச்சி தரவும் ஆள் இல்ல.. உங்களை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போகவும் ஆள் இல்ல.." என்றவன் பெரியம்மா பதில் சொல்லும் முன்பே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

உள்ளங்கைகளில் முகம் புதைத்து அமர்ந்திருந்த சங்கவியால் பெரியம்மாவுக்கு கூட ஆறுதல் பார்வை தர முடியவில்லை. அவளே பைத்தியம் பிடிக்கும் நிலையில்தான் இருந்தாள். அழுது அழுதே உடல் பலம் முழுவதும் தீர்ந்து விட்டது.

வீட்டின் முன் வந்து நின்றது கார். அவன் இறங்கியதும் பின்னால் இறங்கினாள். சுற்றும் தலையை ஒற்றைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் வேகமாக வீட்டின் படிகளை ஏறினான்.

அரை மயக்க நிலையிலேயே படி ஏறி முடித்தாள் இவள். அவள் எதிர்பார்த்தது போலவே கூடத்தில் அமர்ந்திருந்தாள் காந்திமதி.

"இங்கே ஏன்டி வந்த?" சங்கவி எதிர்பார்த்த அதே கேள்வியை கேட்டாள். 

தான் எடுத்த மறு முடிவை அப்போதே காந்திமதிக்கு அறிவிக்கதான் நினைத்தான் ஆதீரன். ஆனால் அந்த அதிகாலை பொழுதில் காந்திமதி நல் உறக்கத்தில் இருந்ததால் அம்மாவை தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்து அமைதியாக அங்கிருந்துச் சென்று விட்டான்.

"அவ இங்கேதான் இருக்க போறா.."‌ என்ற மகனை முறைத்த காந்திமதி "சூடு சொரணையை தொலைச்சிட்டியா? நேத்து லாக்அப் போனது மறந்துடுச்சா?" எனக் கேட்டாள் எரிச்சலோடு.

ஆதீரன் தலையை பிடித்தபடி வந்து அம்மாவின் அருகே அமர்ந்தான்.

"என்னம்மா செய்யட்டும்? இவ குந்தவியோட தங்கச்சி.. இவங்க அம்மா இறந்துட்டாங்க.. அப்பா சீரியஸ் கன்டிஷன்ல இருக்காரு. இவளை அனாதையா விட என்னால முடியாது.." 

'சனியனுங்க.. எவ்வளவு தொலைச்சாலும் திரும்ப வந்துட்டே இருக்குங்க..' என்று மனதுக்குள் திட்டி தீர்த்த காந்திமதி "இதுக்கு என்ன முடிவு‌ பண்ணியிருக்க?" என்று விசாரித்தாள்.

சங்கவியை நிமிர்ந்துப் பார்த்தவன் "அவங்க அக்கா வரும்வரை நம்ம வீட்டுல இருக்கட்டும்மா.." என்றான்.

காந்திமதிக்கு இந்த முடிவு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் மகனிடம் இதை சொன்னால் மகன் தன்னை சந்தேகிப்பான் என்பதை புரிந்துக் கொண்டவள் அவன் வழியில் சென்றே அவனை மடக்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

"என்னவோ பண்ணு.. ஆனா இவ எனக்கு கோபம் வரும்படி ஏதாவது செஞ்சான்னா அப்புறம் நான் மனுசியாவே இருக்க மாட்டேன்!" என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

"போய் குளி.." என்று சங்கவியிடம் சொன்ன ஆதீரன் தனது அறைக்கு கிளம்பினான்.

சங்கவிக்கு தாயை இழந்தது தன்னையே இழந்தது போலிருந்தது. 

சிவந்த கண்களோடு கண்ணாடி முன் நின்ற ஆதீரன் கையிலிருந்த தூவாலையால் தனது ஈர தலையை துவட்டினான். தோளில் பிரம்படி பட்ட இடத்தில் தடிப்பு தெரிந்தது. மோகனின் மீது ஆத்திரமாக வந்தது. 

தனது போனை தேடி எடுத்தான். தனது நண்பன் ஒருவனுக்கு அழைத்தான்.

"நேத்து நைட் நடந்த விபத்துல என் மதர் இன் லா இறந்துட்டாங்க. பாதர் இன் லா சீரியஸா இருக்காரு.. விபத்து மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம். என்னன்னு கொஞ்சம் விசாரிச்சி சொல்லு.!" என்றான்.

"ம்.." என்ற எதிர்முனைக்காரன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டான்.

அவன் கீழே வந்தபோது ஈர தலையில் பழைய துண்டை முடிந்தபடி சமையற்கட்டில் இருந்த பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்தாள் சங்கவி. 

இவனுக்கான உணவை பரிமாறினாள் பவளம். 

"அவ சாப்பிட்டாளா?" எனக் கேட்டவனை நின்ற இடத்திலிருந்து திரும்பிப் பார்த்தாள் சங்கவி. அவன் தன்னைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்ததும் சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். 

"ஏதாவது சாதம் இருந்தா அவளையும் சாப்பிட சொல்லுங்க.. அக்கா வரும் முன்னாடி இவளும் செத்து கித்து தொலைஞ்சிட போறா.." என திட்டினான். சங்கவி குனிந்த தலை நிமிரவில்லை.

உணவை முடித்துக் கொண்டவன் அங்கிருந்து கிளம்பினான். 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. நாளான்னைக்கு வர வேண்டிய அடுத்த எபி ஒருநாள் தாமதமாக வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நட்புக்களே..

Post a Comment

0 Comments