Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 12

 சங்கவி தனது அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு தனது அறைக்கு வந்தபோது மணி பகல் இரண்டை தாண்டி விட்டிருந்தது. இறந்த தாய்க்கு முழுதாய் துக்கம் கூட அனுசரிக்கவில்லை. நெஞ்சத்தின் பாரம் துளியும் குறையவில்லை.

சோகத்தோடு சுவரில் தலைசாய்த்து அமர்ந்தாள். ஒரே வாரத்தில் மொத்த வாழ்க்கையும் தலைகீழாக போய் விட்டது‌. 

உணர்ச்சிகள் மரத்துக் கொண்டிருந்தது.

இருக்கவே பிடிக்காமல் இருக்கையில் அமர்ந்திருந்தான் ஆதீரன். அவனது மனம் முழுக்க குந்தவியின் முகம் மட்டும்தான் இருந்தது.

நேரம் போனதே தெரியவில்லை. மாலையில் வீட்டிற்கு வரவே பிடிக்கவில்லை. ஆனாலும் அம்மாவிற்காக வந்தான்.

வந்ததும் அவனது கண்கள் தேடியது சங்கவியைதான். ஆனால் அவள் எங்கும் காணவில்லை. அவளது அறைக்குச் சென்றான். காலியாக கிடந்தது. அவனின் தேடுதலை பார்த்தபடி அமர்ந்திருந்த காந்திமதிக்கு மனம் தீயாய் பற்றி எரிந்தது.

"பவளமக்கா.." சமையல்கார அக்காவை அழைத்தபடி திரும்பி வந்தான்.

"சங்கவி எங்கே?" 

இரவு உணவு சமைத்த பாத்திரங்கள் அனைத்தையும் துலக்கி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் ஆச்சரியத்தோடு இவன் புறம் திரும்பினாள்.

"உங்கக்கிட்ட சொல்லலையா? பாப்பா அவங்க அப்பாவை பார்க்க போயிருக்காங்க.." 

ஆதீரனுக்கு கோபமாக வந்தது. 

"அவளை யாரு போக சொன்னது? அதுவும் என்கிட்ட சொல்லாம கூட போயிருக்கா.." என்றுக் கத்தினான்.

"எதுவும் இருக்க வேண்டிய இடத்துல இருந்தாதான் மதிப்பு. குப்பையில் கிடந்தவளை கொண்டு வந்து கோபுரத்துல வச்ச. இப்பவே மதிக்க மாட்டேங்கிறா.. இனி வருங்காலம் எப்படி இருக்குமோ? அவளோட அக்காவை உன்னை மதிக்காம ஏமாத்திட்டு எவனையோ இழுத்துட்டு போனா.. அப்ப இவ மட்டும் எப்படி இருப்பா? இரண்டு பேருக்கும் ஒரே ரத்தம்தானே?" என திட்டினாள் காந்திமதி.

அம்மா திட்டுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்று தோன்றியது ஆதீரனுக்கு. சீரியல் வில்லியை போல நடந்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு சற்று சலிப்பாக இருந்தாலும் கூட தன் அம்மா அவள் என்ற எண்ணத்தில் அமைதி காத்தான்.

அம்மா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ள கூடாது என நினைத்த அதே நேரத்தில் அவள் சொன்னதில் இருந்த விசயம் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. 'நான் இவ்வளவு பாடு படுத்தும்போதே சொல்லாம வீட்டுப் படி தாண்டியவ இன்னும் என்னவெல்லாம் செய்ய மாட்டா?' என்று நினைத்தான்.

அங்கிருந்து கிளம்பினான்.

"டேய் சாப்பிட்டு போடா.." என்ற அம்மாவிடம் "வந்துடுறேன்ம்மா.!" என்றுப் பதில் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தியவன் இறங்கி உள்ளே நடந்தான்.

அவளின் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த அறையை திறந்தான். காலியாக கிடந்தது.

"இந்த ரூம்ல இருந்த பேஷண்ட் எங்கே?" அந்த வழி சென்ற செவிலியையை நிறுத்திக் கேட்டான்.

"அவங்களுக்கு ஆபரேசன் நடந்துட்டு இருக்கு.." என்ற செவிலியை அங்கிருந்து சென்று விட, இவன் அறுவை சிகிச்சை அறை இருந்த தளம் நோக்கி ஓடினான்.

'ஆபரேசனா? அதுவும் இன்னைக்கா, இப்பவா?' என்று நினைத்தவனுக்கு உண்மையில் நெஞ்சம் கொஞ்சம் பதறியது. அம்மாவை இழந்த குந்தவி அப்பாவை இழக்க கூடாது என்று நினைத்தான். அதே நேரத்தில் தன்னை அனாதையாக விட்டுச் சென்ற அவளும் அனாதையாக வேண்டும் என்றும் எண்ணினான்.

அறுவை சிகிச்சை நடைபெறும் அறையின் வெளியே அமர்ந்திருந்த சங்கவி இரு கைகளையும் முகத்திற்கு நேராக கூப்பியபடி அமர்ந்திருந்தாள். "கடவுளே, எங்க அப்பாவையாவது காப்பாத்திக் கொடு!" என்று சிறு குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் அருகே வந்து அமர்ந்தான் ஆதீரன். அரவம் கேட்டு கண் விழித்தவள் இவனைக் கண்டதும் செய்வதறியாது கைகளை கீழே இறக்கினாள்.

"எதாவது தகவல் வந்ததா?" 

இல்லையென தலையசைத்தவள் "உள்ளே போய் மூனு மணி நேரம் ஆச்சி‌. ஆனா இன்னும் ஒரு நர்ஸ் கூட வெளியே வரல. ரொம்ப பயமா இருக்கு.." என்றாள். அதன்பிறகே இதை ஏன் இவனிடம் சொன்னோம் என்றிருந்தது. இவனுக்கு தனது குடும்பத்தின் அழிவுதானே முக்கியம் என எண்ணியவள் மீண்டும் கடவுளிடம் வணங்க ஆரம்பித்தாள்‌.

"அவருக்கு ஒன்னும் ஆகாது.!" என்ற ஆதிரனை ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தாள். இவனுக்கு ஏன் தன் தந்தையின் மீது திடீர் அக்கறை என நினைத்தாள்.

நேரம் கடந்துக் கொண்டே இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சை அறையிலிருந்து ஒருவரும் வெளியே வரவில்லை. காத்திருந்து காத்திருந்து அவனுக்கு சலிப்பாக இருந்தது. அவனுக்கு கொஞ்சமாக பசிக்கவும் செய்தது. அருகில் அமர்ந்திருந்த சங்கவியை திரும்பிப் பார்த்தான். அவள் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தாள். உதடுகள் மட்டும் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. தனக்கே பசிக்கும் பொழுது அவளுக்குப் பசிக்காதா என யோசித்தான்.

"சங்கவி சாப்பிட போலாமா?" எனக் கேட்டான்.

"எனக்கு பசிக்கல எனக்கு எதுவும் வேணாம்!" என்றவள் அறுவைச்சிகிச்சை அறையின் புறம் பார்வையை திருப்பினாள்.

ஆதிரனும் அவளோடு சேர்ந்து காத்திருக்க ஆரம்பித்தான். அவனின் நடவடிக்கை எதுவும் சங்கவிக்கு சரியாக படவில்லை. புயலுக்கு முன் அமைதி என்பது போல இவனின் பொறுமையின் பின்னால் என்ன வரப் போகிறதோ என்றுப் பயந்தாள்.

அப்படியே ஒரு மணி நேரம் கடந்தது. சங்கவியின் வேண்டுதலை ஆண்டவன் கேட்டு விட்டதை போல மலர்ந்த முகத்தோடு வெளியே வந்தனர் மருத்துவர்கள்.

சங்கவி மருத்துவர்களின் அருகே ஓடினாள்.

"டாக்டர் எங்க அப்பா இப்ப எப்படி இருக்காரு?" என்றுக் கேட்டாள். 

சங்கவியின் கையை பற்றினார் ஒரு பெண் மருத்துவர். "உங்க அப்பாவோட ஆபரேஷன் முழுசா சக்சஸ் ஆயிடுச்சு. ஆனாலும் அவரோட ஹெல்த் பத்தி இன்னும் ஒரு வாரம் கழிச்சுதான் எங்களால் சொல்ல முடியும். ஆனாலும் கூட இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள அவர் அபாய கட்டத்தை தாண்டிட்டார்ன்னா அப்புறம் எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்க தைரியமா இருங்க பாப்பா.!" என்றார்.

"நன்றிகள் டாக்டர்!" என்று கையெடுத்து கும்பிட்டவளுக்கு கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. வாழ்க்கையே திரும்ப கிடைத்துவிட்டது போல அகமகிழ்ந்தாள். குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தவளை அருகே வந்து அணைத்துக் கொண்டான் ஆதிரன்.

"தேங்க்ஸ் டாக்டர்.!" என்றான் எதிரில் இருந்தவர்களிடம். மருத்துவர்களும் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

பத்து நிமிடங்கள் கடந்து இருந்தது. சங்கவி அதேபோலத்தான் அழுது கொண்டிருந்தாள். அவளின் அழுகை அவனுக்குப் புரியவில்லை என்றாலும் கூட அவளுக்கு தன் நெஞ்சில் சாய இடம் தந்திருந்தான். அதீத வருத்தத்தில் இருந்தவளுக்கு முதன்முதலாய் கிடைத்த இந்த செய்தி ஒரு சிறு மகிழ்ச்சியாக அமைந்துவிட்டது. அவளுக்கு தன்னைச் சுற்றி நடப்பது கூட மனதில் பதியவில்லை. தனது எதிரியின் நெஞ்சில் தலை சாய்த்திருக்கிறோம் என்றுக் கூட புரியவில்லை.

"கொஞ்சம் தள்ளி நில்லுங்க.!" மருத்துவமனையின் பணியாளர் ஒருவரின் குரலில் நிமிர்ந்தாள் சங்கவி. அப்போதுதான் யாரிடம் தஞ்சம் புகுந்து உள்ளோம் என்பதை அறிந்தாள்.

நெருப்பை தீண்டியது போல சற்று விலகி நின்றாள். "சாரி.. சாரி.." என்றாள் அவசரமாக.

அப்படியே தலையைக் கொண்டுப் போய் சுவற்றில் இடித்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. ஆனால் அவள் சிந்தித்ததை செயல்பட விடவில்லை சூழ்நிலை. 

அவளைத் தாண்டி இழுத்துக் கொண்டு செல்லப்பட்டது ஒரு ஸ்ட்ரெச்சர். அதில் படுத்திருந்த தந்தையை கண்டவள் அவசரமாக அவரிடம் ஓடினாள்.

"அப்பா.." என்று பாய முயன்றவளை சற்றென்று இழுத்து தன்னருகே நிறுத்தினான் ஆதிரன். 

"பைத்தியமா நீ.?" என்று உறுமினான்.

அவனின் மிரட்டலில் பயந்து போனவள் அழுகையை நிறுத்திக் கொண்டு அப்பாவியை போல அவனைப் பார்த்தாள்.

"உங்க அப்பாவோட உடம்பைச் சுத்தி எத்தனை ஒயர்ஸ் இருக்குதுன்னு பாத்தியா? அவர் முகத்தில் இருக்கிற மாஸ்க்கை பார்க்கல நீ. இங்கே இழுத்துட்டு போற ஸ்டேன்ட்ல மாட்டியிருக்கும் செலைன் பாட்டில் உன் கண்ணுக்கு தெரியல. ஆனால் அவர் மேல போய் விழுந்து அவரை கொல்ல மட்டும் பாக்கற. உன்னோட ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா?" என்றுத் திட்டினான்.

"சாரி.." என்றவள் ஸ்டெச்சரை பின்தொடர்ந்து நடந்தாள். அப்பாவின் கையை பற்றிக் கொண்டாள். "சீக்கிரம் கண் விழிச்சிடுங்கப்பா.." என்றாள்.

ஐசியூவிற்குள் நுழைந்தது ஸ்டெச்சர். பின்னால் தொடர முயன்ற சங்கவியை கை காட்டி நிறுத்தினர் பணியாட்கள்.

"நீங்க உள்ளே வர கூடாது‌. விசிட்டர்ஸ் ஹவர்ஸ்ல வந்துப் பாருங்க.." என்றனர்.

சங்கவி கதவின் வெளியே சமைந்து நின்றாள். கைக் கடிகாரத்தைப் பார்த்தான் ஆதீரன். மணி ஒன்பதரையை தாண்டி விட்டிருந்தது.

"வீட்டுக்கு போலாம்.." அவனின் குரலில் திரும்பியவள் "அப்பா.." என்றுக் கையை காட்டினாள்.

"டாக்டரை தவிர வேற யாரும் உள்ளே போக முடியாது.. உனக்கு வராண்டாவுல படுக்க கூட இடம் கிடைக்கும்தான். ஆனா நான் உன்னை அப்படி விட்டுப் போவேன்னு நினைக்கிறியா?" எனக் கேட்டவன் அவளின் கழுத்தில் இருந்த செயினை எடுத்து காட்டினான்.

"இது என்னன்னு தெரிஞ்சா சத்தம் போடாம பாலோவ் பண்ணு‌‌.." என்றான்.

சோகம், வருத்தம் அத்தனையும் தொலைந்து போனது அவளுக்கு. 

தன்னை வெறித்துப் பார்த்து நின்றிருந்தவளின் கையை பற்றியவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

காரில் கொண்டு வந்து வழக்கம் போல தள்ளியவன் இந்த முறை காரை எடுக்காமல் அவளருகே அமர்ந்ததும் அவளின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான்.

கண்ணீர் தளும்ப கன்னத்தை பிடித்தவள் அவனை கேள்வியாக பார்த்தாள்.

"நீ யாரை கேட்டு ஹாஸ்பிட்டல் வந்த?" எனக் கேட்டான். மீண்டும் அறைந்தான். "அம்மா.." என்று தலை குனிந்து விம்மினாள். அவன் முன் அழ விருப்பம் இல்லைதான். ஆனால் வலியை பொறுக்க முடியவில்லையே.

"நான் அத்.. காந்திமதி மேடம்கிட்ட சொல்லிட்டுதான் வந்தேன்.." என்றாள் மறுகன்னத்தை பிடித்தபடி.

புருவம் நெரித்தான். யோசித்தான். அம்மா இதை பற்றி சொல்லவில்லையே என்றுக் குழம்பினான்.

அவளின் முகத்தை நிமிர்த்தியவன் "என்கிட்ட சொல்லணும். நான் வர வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதுதானே?" எனக் கேட்டான்.

அவனின் கையை தள்ளி விட ஆசையிருந்தது. ஆனால் கூடவே பயமும் இருந்தது.

"எனக்கு பயமா இருந்தது. அப்பாவுக்கு ஆபரேசன் நடக்கும்போது கூடவே இருக்கணும்னு நினைச்சேன். அதான் வந்துட்டேன். சாரி. இனி இப்படி சொல்லாம வர மாட்டேன்.." என்றாள் அழுதபடி.

அவளின் அழுகை முகம் பெரியதாக இரக்கத்தை வரவைக்கவில்லைதான். ஆனால் அவளின் காரணம் யோசிக்கும் படி இருந்தது. தந்தையே இல்லாமல் வளர்ந்தவனுக்கு இவள் தந்தை மீது கொண்டிருந்த பாசம் பொறாமையை கூட தந்தது.

காரை இயக்கினான். "இதுவே கடைசி." என்றான்.

அவள் சரியென தலையசைத்தாள். கார் விர்ரென்று கிளம்பியது.

***

உறங்கிக் கொண்டிருந்த மகனின் தோளில் தட்டியெழுப்பி அவனின் கையில் காஃபியை தந்தாள் பூங்கொடி.

கண்களை மூடியபடி காப்பியை உறிஞ்சியவன் காப்பியின் ருசியில் உயிர் பிறந்தது போல உணர்ந்தான். கண்களை திறந்தான். அம்மாவை பார்த்தான்.

"மாம்மா.." என்றான் இதழ்கள் விரித்து.

"எங்க‌ வீட்டுல பல் விளக்காம காப்பி குடிச்சா எங்க அம்மா வெளக்குமாத்தாலயே அடிப்பாங்க.." என்றாள்.

சிரித்தான் அவன். "பட் திஸ் காப்பி இஸ் வெரி டேஸ்டி மாம்மி." 

"என் பையனை நான் எப்படியெல்லாம் வளர்க்கணும்ன்னு நினைச்சேன் தெரியுமா? ஆனா உங்கப்பா செல்லம் கொடுத்து உன்னை முழுசா குட்டிச் சுவர் ஆக்கிட்டாரு.." என்றுப் புலம்பியவளைக் கண்டு மேலும் சிரித்தான்.

"ஸ்டுப்பிட்.. டோன்ட் ஸ்பீக் தட் சேவெஜ் லாங்வேஜ். ஸ்பீக் இன் இங்கிலீஸ்‌.." அந்த அறையின் கதவை திறந்து உள்ளே வந்துக் கத்தினார் அலெக்ஸ்.

பூங்கொடி எழுந்து நின்றாள். 

"எங்க வீட்டுல இருக்கற யார் காதிலாவது இந்த சேவிஜ் லாங்வேஜ்ங்கற வார்த்தை விழணும். வீச்சரிவாளை கொண்டு வந்து உடம்பு மேலயே எக்ஸ் மார்க்ல வெட்டி வீசியிருப்பாங்க.." என்றாள் அவரை முறைத்தபடி.

"ச்சை.. என்ன வாழ்க்கை இது. மொழியையும் உயிர்ன்னு சொன்ன வீட்டுல பொறந்துட்டு பாரின் மாப்பிள்ளைன்னு வந்ததும் கட்டி வச்சாங்களே அவங்களை சொல்லணும்.." என்று பிறந்த வீட்டை வசைபாடியபடி அவரின் தோளில் இடித்துக் கொண்டு வெளியே நடந்தாள் பூங்கொடி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

Post a Comment

0 Comments