Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 13

 சங்கவிக்கு இரவு முழுக்க தூக்கமே வரவில்லை. அப்பாவுக்கு எப்படி இருக்குமோ என்று கவலையாகவே இருந்தது. கைபேசி இருந்திருந்தால் மருத்துவருக்காவது அழைத்துக் கேட்டிருப்பாள். ஆனால் என்ன செய்வாள் இப்போது? அனாதை போல அமர்ந்திருந்தாள்‌.

அறையிலிருந்த விளக்கையும் பிடுங்கிக் கொண்டுச் சென்று விட்டாள் காந்திமதி. 

ஹாலில் இருந்து வந்த விளக்கின் அரை வெளிச்சத்தில் கூரையை பார்த்தபடி அமர்ந்திருந்தவள் காற்றில் குளிர் பரவுவது கண்டு கைகள் இரண்டையும் கழுத்தோடு கட்டிக் கொண்டாள். 

"தலையெழுத்தை என்னென்னு சொல்ல?" என்றுக் காற்றோடு புலம்பினாள்.

தரையில் படுத்தவள் கன்னம் தரையை தொட்டதும் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள். அவன் அறைந்த இடத்திலிருந்து எரிச்சல் புறப்பட்டது. 

எழுந்தவள் புடவையின் முந்தானையை பாய் போல விரித்து கையை தலையணையாக மாற்றி படுத்தாள்.

உடம்பின் வலியா, மனதின் வலியா என்றுத் தெரியவில்லை. கடைசியில் உறங்கிப் போய்  விட்டாள். 

காந்திமதியின் உரத்த குரலில் கண் விழித்தாள். இப்போதுதான் உறங்கியது போல இருந்தது. ஆனால் அதற்குள் விடிந்து விட்டிருந்தது‌. 

அவசரமாய் எழுந்து அமர்ந்தவளை துச்சமாக பார்த்தவள் "பிச்சைக்காரி.." என்று இகழ்ந்து விட்டு நகர்ந்தாள்.

நெருப்பாக எரிந்தது நெஞ்சம். எதிரில் செல்பவளை பெட்ரோலே இல்லாமல் எரிக்க வேண்டும் போல இருந்தது. குந்தவியின் விசயத்தில் இவள் காரணமாக இருப்பாளோ என்று சங்கவிக்கு சந்தேகம் பிறந்தது.

'பிச்சைக்காரியா இருந்தா நான் ஏன் உன் வீட்டுக்கு‌ வரேன்? எங்கேயாவது நாலு வீட்டுல பிச்சை எடுத்து சாப்பிட்டாவது நிம்மதியா இருந்திருப்பேன். அம்மாவும் மகனும் என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வச்சிட்டு குத்தி வேற காட்டுறிங்களா?' என்று மனதுக்குள் பொரிந்தாள். 

வேலையாட்களுக்காக இருக்கும் கழிப்பறை நோக்கி கிளம்பினாள். பின்வாசலில் தொடர்ந்த தோட்டம் பெரியதாய் விரிவடைந்து இருந்தது. அதன் ஓரத்தில்தான் கழிப்பறையும், குளியலறையும் இருந்தது. பவளம் நேற்றே தனது இரண்டு ஜோடி ஆடைகளை இவளுக்காக தந்திருந்தாள். உள்ளாடை கூட பவளத்தினுடையதுதான். 

குளித்து உடை மாற்றுகையில் அழுகையாக வந்தது சங்கவிக்கு. தாயும்‌ தந்தையும் வாங்கி குவித்த உடைகள் வீட்டிலிருக்க இந்த வீட்டில் இப்படி வாழ்கிறோமே என்று வருத்தமாக இருந்தது.

கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த தகர கதவை திறந்தாள். அலசிய உடைகளை தோளில் போட்டுக் கொண்டு வெளியே நடந்தவள் உறைந்து நின்றாள். ஆதீரன் அவனது அறையிலிருந்து இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதிர்ச்சியோடு குளியலறையை திரும்பிப் பார்த்தாள். மேலே ஓரடி இடைவெளி இருந்தது அந்த கதவிற்கு.

'குளிச்சதை பார்த்திருப்பானா?' என்று பயந்தவள் 'இல்ல.. இருக்காது.. முகம் மட்டும்தான் தெரிஞ்சிருக்கும்..' என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள்.

அங்கிருந்த கொடியில் உடைகளை காய வைத்தாள்.

' பொறுக்கி.. இப்படிதான் தினமும் வேலைக்காரங்க குளிக்கறதை வெறிச்சி பார்த்திருப்பான் போல.. இவனையெல்லாம் எதுக்குதான் அக்கா காதலிச்சாளோ?' என்று கடைசியில் தன் சகோதரியிடமே கொண்டு வந்து முடித்தாள்.

இவள் கொடியிலிருந்து‌ நகர்ந்த போது அவன் அங்கே இல்லை. 

வீட்டிற்குள் சென்றாள். இரண்டு நாட்களில் தனது இடம், வேலை எதுவென்று நன்றாக புரிந்துக் கொண்டதால் அமைதியாக சமையலறைக்குள் நுழைந்து தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

ஆதீரன் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பினான். அவன் பின்னால் ஓடினாள் சங்கவி. 

"ஏங்.‌" இவள் அவனை அழைக்கும் முன் "அடியே.." என்று காந்திமதி இவளை அழைத்தாள்‌.

மாமியாரிடம் திரும்பி வந்தாள். "அந்த சாம்பாரை தட்டுல விடுடி.." என்றாள் அவள் அதிகாரமாக.

அருகில்தான் பவளம் நின்றிருந்தாள். அவளிடம் கூட கேட்டிருக்கலாம். ஆனால் மனம் வர வேண்டுமே என்று நினைத்த சங்கவி சாம்பாரை ஊற்றினாள்.

'அவன் போயிட்டானா?' என்று உள்ளுக்குள் பதறினாள். முன்பே கேட்டிருக்கலாம்தான். ஆனால் காந்திமதியின் முன்னால் எதையுமே பேச மனம் வரவில்லை. அவன் காரில் ஏறும் முன் கேட்டு விட வேண்டும் என்று இருந்தாள். ஆனால் அதற்கும் இப்போது காந்திமதி தடைக்கல் போட்டு விட்டாள்.

காந்திமதி உண்டு முடித்து தனது கையை சுத்தம் செய்து கொண்டு நகர்ந்தாள்.

காரின் இன்ஜின் சத்தம் இதுவரையிலும் கேட்கவேயில்லை. கடவுளே போய் விட கூடாது என்று மனதோடு வேண்டிக் கொண்டிருந்தவளின் வேண்டுதல் பழித்து விட்டதோ என்னவோ? 

காந்திமதி அந்த பக்கம் நகர்ந்ததும் இவள் இந்த பக்கம் ஓடினாள். வாசலில் நின்று பார்த்தாள். அவன் காரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான். 

மூச்சு வாங்க ஓடி வந்தவளை என்னவெனும் விதமாக பார்த்தான். 

"நான் என் அப்பாவை பார்க்க போகணும்.." என்றவளின் முகத்தை சில நொடிகள் உற்றுப் பார்த்தான். அவளின் ரவிக்கையில் ஒரு பக்க கையில் சின்னதாக கிழிந்து இருந்தது.

'எனக்கு என் தங்கச்சின்னா எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?' குந்தவி காதோரத்தில் வந்து கேட்பது போலிருந்தது. உடம்பு சிலிர்த்தது.

"பஸ்க்கு பணம் வச்சிருக்கியா?" எனக் கேட்டவன் தனது பர்ஸை எடுத்தான்.

"இருக்கு.." என்றபடி ஓரடி பின்னால் நகர்ந்தாள். அவளை விசித்திரமாக பார்த்தவன் "சரி.. ஒரு மணி நேரம்தான் டைம்.." என்றான்.

"அது எப்படி முடியும்?" அதிர்ச்சியாக கேட்டவளை நக்கலாக பார்த்தபடியே காரில் ஏறி அமர்ந்தவன் "போக பத்து நிமிசம். வர பத்து நிமிசம். நீ நாற்பது நிமிசம் மட்டும் உங்க அப்பாவை பார்த்தா போதும். ஒரு நிமிசம் லேட்டான்னா கூட அப்புறம் உங்க அப்பனுக்கு போற ஆக்ஸிஜன் மாஸ்கை பிடுங்கி எறிஞ்சிடுவேன்.." என்றான்.

அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது இவளுக்கு. இப்படியும் கொடூரமாக இருப்பானா என்று நொந்துக் கொண்டாள்.

"சரி.. நான் கிளம்பறேன்.." என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.

மாடியில் தனது அறையில் இருந்தபடி கீழே நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த காந்திமதிக்கு ரத்தம் கொதித்தது. சங்கவியை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் கோபம் கொப்பளித்தது.

அன்று மதியம் தன் தந்தையை பார்க்க கிளம்பினாள் சங்கவி. இவளை உள்ளே விட மறுத்தனர் மருத்துவர்கள்.

"இன்னும் பன்னிரண்டு மணி நேரம். அப்புறம் நீங்க தாராளமா உள்ளே போய் பார்க்கலாம்.. எங்களுக்கு நீங்களும் கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க.." என்றனர்.

அவர்கள் சொல்வது இவளுக்கும் புரிந்ததுதான் இருந்தது. வேறு என்ன செய்ய முடியும் என்ற கவலையோடு அங்கேயே வராண்டாவில் இருபது நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.

ஐசியூவின் கண்ணாடி கதவு வழியே சிறிது நேரம் தந்தையை பார்த்தவள் அங்கிருந்து கிளம்பினாள்.  வழியில் பத்து நிமிடங்களை அம்மாவின் கல்லறை முன்பு செலவிட்டாள். 

அவன் தந்த ஒரு மணி நேரத்திற்குள் வீடு வந்து விட்டாள். ஆனால் வந்தவன் இன்றும் அறைந்தான்.

"யாரை கேட்டு சுடுகாட்டுக்கு போன?" எனக் கேட்டான்.

"சாரி.. எங்க அம்மா ஞாபகம் ரொம்ப வந்தது.. அதனால்தான் போனேன். இனி போகல.." தலை குனிந்தபடி சொன்னவள் அவன் அமைதியாக இருப்பதை கண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

மறுநாள் மதியம் மருத்துவமனைக்கு சென்றவள் தந்தை அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்ற செய்தி கேட்டு நிம்மதியடைந்தாள். 

இவளின் நிம்மதி பொறுக்காமலோ என்னவோ மருத்துவர் இவளை தனது அறைக்கு அழைத்துப் பேசினார்.

"அவர் அபாய கட்டத்தை தாண்டிட்டாரு.. ஆனா இன்னும் கூட மோசமான கன்டிசன்லதான் இருக்காரு.‌ அவரை ஆறு மாசத்துக்காவது ஹாஸ்பிட்டல் ரெஸ்ட்ல வச்சிருக்கணும். அப்போதான் பழையபடி எழுந்து நடமாடுவாரு.." என்றார்.

'ஆறு மாசமா? அதுக்கே நிறைய பணம் செலவாகுமே!' என்று பயந்தவள் சரியென்று தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

இவள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது காந்திமதி உரத்த குரலில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"உன்னை எப்பவும் காமெடியில் அடிச்சிக்கவே முடியாது வரு.." என்று‌ இளைஞன் ஒருவனை அவள் பாராட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட சங்கவி அமைதியாக தனது அறையை நோக்கி நடந்தாள்.

"வாவ்.. யார் இந்த ப்யூட்டி?" புருவம் உயர்த்தி கேட்ட வருணின் தோளில் அடித்தாள் காந்தமதி.

"என்ன ப்யூட்டி? வேலைக்கார பொண்ணு.." என்று அவனுக்கு பதில் சொன்ன காந்திமதி "ஏய்.. வருவுக்கு ஜூஸ் எடுத்துட்டு வா.!" என்றாள்.

தன் தந்தையின் மருத்துவம் சம்பந்தமான காகிதங்களை தனது அறையில் பத்திரப்படுத்தி விட்டு வந்தவள் குளிர்பானத்தை கொண்டுச் சென்று மாமியாருக்கும் அந்த புது விருந்தாளிக்கும் தந்தாள்.

இவளை பார்வையால் கடித்து தின்றவன் இவளின் விரல்களை வேண்டுமென்றே உரசியபடி குளிர்பானத்தை வாங்கினான்.

'இது என்ன புது தலைவலியோ?' என நினைத்தவள் அவர்கள் குடித்து முடித்த டம்ளர்களோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

மாலை வரையிலும் இவளை பார்வையால் பின்தொடர்ந்துக் கொண்டுதான் இருந்தான் அவன். அவன் காந்திமதியின் அக்காள் மகன் என்பதும், பெயருக்கு வெளியூரில் இருப்பவன் அடிக்கடி இங்கே வந்து மாதக்கணக்கில் தங்குவான் என்பதையும் பவளத்திடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள் சங்கவி. இவர்களின் திருமணத்தின் போது ஏதோ விசயமாக வேறு மாநிலத்திற்கு சென்று விட்டான் என்ற கூடுதல் தகவலும் கூட கிடைத்தது.

மாலையில் ஆதீரனின் சிற்றுண்டிக்காக உணவு பொருட்களை தயார் செய்துக் கொண்டிருந்த சங்கவி காதோரம் கனைப்புக் குரல் கேட்டு திரும்பினாள்.

வருண் பற்களை காட்டியபடி நின்றிருந்தான்.

"நீ ஒரு வேலைக்காரின்னு நம்பவே முடியல.." என்றான்.

அவள் காதில் வாங்காதவளாக திரும்பிக் கொண்டாள்.

"கழுத்துல புது தாலி போல தெரியுது. கவரிங் செயினா? பரவால்ல விடு.. ஆனா உன் புருசனுக்கு அறிவே இல்ல.. இவ்வளவு அழகான பொண்ணை வேலைக்கு அனுப்பி வச்சிருக்கான்.." என்றான்.

சங்கவி விழிகளை சுழற்றினாள். கரண்டியை கையில் வைத்திருந்தவள், அந்த கையை இடுப்பில் பதித்தபடி இவன் புறம் திரும்பினாள்.

"அழகான பொண்ணுங்க வேலை செய்ய கூடாதா? ஏன் பாஸ்? ஏதாவது சட்டம் இருக்கா அப்படி?" எனக் கேட்டாள்.

அவளாக பேசிய முதல் வாக்கியங்கள். அவனுக்கு பிடித்திருந்தது.

"நான் அப்படி சொல்ல வரல.." என்றவன் "உன்னை பார்த்தா, எந்த திசையில் இருந்து பார்த்தாலும் வேலைக்காரி போல தெரியல.. செல்லம் தந்து வளர்த்திய முயல் பொம்மை மாதிரி இருக்க.." என்றான்.

அவன் சொன்னது கேட்டு அவளுக்கு விழிகள் கலங்கியது. அப்படிதான் வளர்த்தி வைத்திருந்தார்கள்.

இவள் என்ன பதில் சொல்ல இருந்தாளோ? ஆனால் அதற்கும் முன்னால் அங்கே வந்து விட்டான் ஆதீரன்.

"வரு.." என்றபடி சகோதரனின் தோளில் கை பதித்தான்.

"நம்ம வீட்டு புது வேலைக்காரி அழகா இருக்காங்க.." 

சங்கவியை திரும்பிப் பார்த்த ஆதீரன் "அவ என் பொண்டாட்டி.." என்றான்.

வருண் அதிர்ச்சியில் வாயை ஆவென திறந்தான்.

"வாட்? அப்படின்னா குந்தவி?" சந்தேகத்தோடு கேட்டான். ஆதீரனின் அலுவலகத்தில் இரண்டு மூன்று முறை குந்தவியை பார்த்துப் பேசியுள்ளான் வருண். மூன்று வருடங்களாக காதலித்தவன் ஏன் அவளை விட்டுவிட்டு இந்த வேலைக்கார பெண்ணை காதலித்தான் என்று வருணுக்கு புரியவில்லை.

"இது அவளோட தங்கச்சி.. அவளுக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்ல.. ஆனா இவளுக்கு என் மேல கொள்ளை பிரியம்.. அதனால அவளுக்கு பதிலா என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா.." என்றான்.

சங்கவி முகத்தை திருப்பிக் கொண்டாள். அழுகையும் கோபமும் ஒன்றாய் வந்தது அவளுக்கு.

"வாட்.? ரியலி? ஆனா அது எப்படி சாத்தியம்? குந்தவிதான் உன்னை ரொம்ப ரொம்ப விரும்பினாங்களே.." என்ற வருண் குழப்பத்தோடு தலையை கீறிக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments