Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 3

 சங்கவி தன் மாமியாரின் பின்னால் வந்து நின்றாள். காந்திமதி அந்த வீட்டின் கடைசியில் இருந்த ஒரு சிறு அறையை கை காட்டினாள்.

"இனி இதுலதான் நீ தங்க போற.. சரியா?" எனக் கேட்டாள்.

"ச.. சரிங்க மேடம்.." என்றவளின் முகத்தை எரிச்சலோடு பார்த்த காந்திமதி "எப்ப பார்த்தாலும் அழுது வடிஞ்சே தொலையுற.. உன்னையெல்லாம் எதுக்கு இவன் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கானோ? ஓடுகாலி குடும்பத்தை சேர்ந்தவதானே நீ?" என்று திட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அறைக்குள் நுழைந்தாள் சங்கவி. ஆறுக்கு ஆறாக இருக்கலாம் அளவு. அதிலும் ஒரு புறம் ஏதோ பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கதவு இல்லாத அந்த அறையில் ஒரு ஆள் உறங்குவதாக இருந்தாலும் சிரமப்பட்டாக வேண்டும். 

ஒரு புறம் இருந்த சுவரோடு ஒட்டி அமர்ந்தாள்‌. முட்டிக் காலை கட்டிக் கொண்டாள். துக்கத்தில் வார்த்தைகளும் தீர்ந்து போனது. 'எவ்வளவு துன்பங்களையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அக்கா எப்போது வருவாள் என்று தெரிந்தால் போதும்.' இப்படிதான் தோன்றியது அவளுக்கு.

அம்மாவும் அப்பாவும் அனாதைகள் போல வீட்டில் இருப்பார்கள். அக்கா ஓடி போன கவலை ஒரு புறம், அரக்கன் கையில் இவள் சிக்கிக் கொண்டது மறுபுறம்.. எவ்வளவு கஷ்டத்தைதான் அவர்களும் தாக்குவார்கள் என்று கலங்கினாள்.

"அக்கா.. ப்ளீஸ்.. சீக்கிரம் திரும்பி வந்துடு.!" என்று முனகியவள் "இனி அக்கா வந்தாலும் என்ன பயன்? இந்த கல்யாணத்துல இருந்தும், அப்பா அம்மா கடன்ல இருந்தும் மீண்டுட முடியுமா? ஆதீ எங்க தண்டனையை ரத்து பண்ணிடுவானா?" என்றுத் தன்னையே கேட்டுக் கொண்டாள். அவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவள் அணிந்திருந்த சேலையினை நனைத்தது.

அவளுக்கு நேர் மேலே இருந்தது ஆதீரனின் அறை. கோபத்தோடு அறைக்குள் நுழைந்தான் ஆதீரன். கதவை அடித்து சாத்தினான். காதலியின் பெற்றோரை கடனாளியாக்கியதோ, காதலியின் தங்கையையே திருமணம் முடித்ததோ அவனின் கோபத்தை துளியும் குறைக்கவில்லை. மனதுக்குள் இருந்த சிறு ஈரத்தின் காரணமாக மிகவும் குறைவான குற்ற உணர்ச்சிதான் உண்டாகி  இருந்தது. ஆனால் அந்த குற்ற உணர்ச்சியை காரணம் காட்டி இன்னும் அதிகமாகதான் கோபப்பட்டான்.

குந்தவி இப்போது திரும்பி வந்து, நியாயமான காரணம் சொன்னாலும் கூட அவளை யோசிக்காமல் ஏற்றுக் கொள்வான். அவள் மீதிருந்து காதல் அப்படிப்பட்டது.

மூன்றரை வருடங்களுக்கு முன்பு இவனது அலுவலகத்தில் வேலைக்கு வந்துச் சேர்ந்தாள் குந்தவி. ஆரம்பத்தில் தொழிலாளி முதலாளியாய் ஆரம்பித்த பழக்கம் நாட்கள் செல்ல செல்ல காதலாய் மாறிப் போனது. 

அவளின் முகத்தில் தன் எதிர்காலத்தையே கண்டான் இவன். அம்மா ஆரம்பத்தில் இருந்தே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் இவன்தான் அம்மாவை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தான். இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்க அவன் பட்ட கஷ்டங்கள் அதிகம். இந்த காதல் கை கூட அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ஆனால் அத்தனையையும் ஒரு நொடியில் தகர்த்தெறிந்து விட்டாள் குந்தவி.

அவளை வெட்டிப் போட வேண்டுமென்று கோபம் வந்தது அவனுக்கு. அதே சமயம் அவள் கண் முன் வந்து நின்றதும் பாய்ந்து அணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. தனது கோபமும் ஆசையும் தன்னையே தின்றுக் கொண்டிருந்ததை வலியோடு பார்த்துக் கொண்டிருந்தான் அவன். என்ன செய்தால் இந்த கோபம் போகும், என்ன செய்தால் இந்த ஆசை போகும் என்று குழம்பி தவித்தான்.

குந்தவியுடனான அவனின் திருமண அழைப்பிதழ் மேஜையின் மீது கிடந்தது. அழைப்பிதழின் புகைப்படத்தில் அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தாள் அவள்‌. அவளின் முகத்தில் ஓராயிரம் சூரியன்கள் ஒளிக் கொண்டிருந்தது. இவனின் கண்களிலோ ஒரு கோடி வானவில் வண்ணங்களை தீட்டி இருந்தது. எவ்வளவு அற்புதமான காலங்கள் அது!? யோசிக்கும்போதே பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரு காதல். சிந்திக்கும் போதே அவனின் இதயத்தின் ஆழம் வரை இனிப்பை உணர வைக்கும் ஒரு காதல்.

குந்தவி எனும் பெயர் அவனின் உயிரை சுமக்கும் ஒரு பெயரென்று கூட எண்ணியுள்ளான். ஆனால் அத்தனையும் இப்போது கானல் நீர் கோலமாகி போனது. 

முடியவில்லை. ஒரு நொடி கூட இதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியவில்லை. மண்டியிட்டு விட்டான். உள்ளங்கைகளில் முகம் புதைத்தவன் விம்மி அழுதான். 

"ரொம்ப கெட்டவனா ஆகிட்டு இருக்கேன் குந்தவி. ப்ளீஸ் வந்துடு. இல்லன்னா நான் நிச்சயம் உன் தங்கச்சியை கொன்னுடுவேன். என்னால என் கோபத்தை கட்டுப்படுத்த முடியல. மிருகமா மாறிட்டு இருக்கேன். கொலைக்காரனா நான் மாறும் முன்னாடி திரும்ப வந்துடு.." என்றான் அழுகையோடு.

***

இரவு தொடங்கிய வேளை. மும்பை நகரத்தில் வாகனங்கள் பாய்ந்தோடிக் கொண்டிருந்த ஒரு தார்சாலையின் ஓரத்தில் நின்றிருந்தாள் குந்தவி. அவளின் வலது கரத்தில் இருந்த செய்தித்தாள் அவளது கண்ணீரை நனைத்து நனைத்து உருக்குலைந்து  போயிருந்தது. இதயத்தின் வெடிப்பை இதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

தான் தங்கியிருந்த அறையிலிருந்து இன்றுதான் வெளியே வந்தாள் குந்தவி. வந்தவளின் பார்வையில் முதலில் தென்பட்டது இந்த தமிழ் நாளிதழ்தான். அதில் முன் பக்கத்திலேயே சங்கவிக்கும் ஆதீரனுக்கும் இடையில் நடந்த திருமணம் பெரியதாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பக்கத்திலேயே கடன் செலுத்த முடியாமல் ஏலத்திற்கு செல்ல இருக்கும் அவளது வீட்டை பற்றிய செய்தியும் இருந்தது. இரண்டு செய்திகளும் அவளின் ஜீவனுக்குள் வலியை தந்து விட்டன.

பார்த்த நொடியிலேயே பாதி செத்து விட்டாள். நின்ற இடத்திலேயே ஆறாக அழுது தீர்த்து விட்டாள். எது தனக்கு நடக்க கூடாது என்று எண்ணினாளோ அது இப்போது தங்கைக்கு நடந்து விட்டதை எண்ணி உடைந்துப் போனாள்.

கலக்கும் விழிகளோடு சாலையை பார்த்தாள். லாரிகளும் கார்களும் வேகமாக சென்றுக் கொண்டிருந்தன.

இதற்கு மேலும் உயிரோடு இருந்து ஒரு பயனும் இல்லை. இதற்கு மேல் நடக்க போவது அனைத்தும் இதை விட கொடூரமானதாகதான் இருக்கும். உயிரோடு இருந்து அவற்றை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட இப்போதே செத்து விடலாம் என்று முடிவெடுத்தாள்.

அப்போதும் கூட மனம் வரவில்லை‌. முகத்தை மூடிக் கொண்டு சிறிது நேரத்திற்கு குலுங்கி அழுதாள். விரைந்தோடி வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்றை கண்டவள் நடைப்பாதையை விட்டு கீழே இறங்கினாள்.

***

சூழும் இருளை கவனிக்கவே இல்லை ஆதீரன். மண்டியிட்ட அதே நிலையில் இருந்தான். 

காந்திமதி தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி முந்தானையால் துடைத்தபடியே மாடி படி ஏறினாள். இப்போதுதான் சங்கவியை விரட்டி விரட்டி வேலை வாங்கி இருந்தாள். 

மகனை வெகு நேரமாக காணவில்லையே என்றுத் தேடிக் கொண்டு வந்தாள்.

வந்தவள் மகனின் அறை வாசலில் நின்று விட்டாள். மகனின் நிலை அவளுக்கு கோபத்தை தந்தது.

'அந்த பிச்சைக்காரியை காதலிச்சதுக்கு இவன் ஏன் இப்படி அழறான்?' என்று மனதுக்குள் பொரிந்தவள் உள்ளே நடந்தாள்.

மகனின் முன் நின்றாள். அவனின் தலையை வருடினாள். நிமிர்ந்தான் ஆதீரன். கலங்கிய விழிகளில் இருந்து கொட்டியது கண்ணீர். "அம்மா.." என்றவன் அவளின் காலை கட்டிக் கொண்டான்.

"நான் என்னம்மா தப்பு செஞ்சேன்? ஏன் குந்தவி என்னை விட்டு போனா? நான் அழகா இல்லையா அம்மா? நம்ம வீட்டோட பணம் அவளுக்கு போதலையா?" என்றான்.

காந்திமதிக்கு நெஞ்சம் நெருப்பாக எரிந்தது.

"அவ ஓடி போனதுக்கு நீ ஏன்டா அழற? உன்னை விட்டு போனவளைதான் நீ அழ வைக்கணும்.. அவங்க குடும்பமே அப்படிதான். அவதான் ஓடிட்டா.. நீ போய் கேடு கெட்டவனை போல அவ தங்கச்சியை கல்யாணம் பண்ணி வந்திருக்க. யாரையும் சரியா தலை முழுக கூட தெரியாதா உனக்கு?" என்றாள்.

ஏன் அழுதோம் என்றிருந்தது இவனுக்கு. 

'அம்மாவுக்கு என் காதல் புரியல..' என நினைத்தவன் 'அவளுக்கே புரியல.. விட்டுட்டு போயிட்டா. இனி அம்மாவுக்கு புரிஞ்சா என்ன புரியலன்னா என்ன?' என்றுக் கவலைப்பட்டான். 

"அழுது வடியாம எழுந்து போய் முகத்தை கழுவிட்டு வா.. போனவ போய் தொலைஞ்சிட்டா. இவளையும் சீக்கிரம் தொலைச்சிட்டு உன் வாழ்க்கையை பாரு. ஒரே பையன்னு உன் மேல உயிரையே வச்சிருக்கேன்.. உன் வாழ்க்கையை நாசம் பண்ணிக்காத.." என்றாள்.

அவனை விட்டுவிட்டு தனது அறைக்கு வந்தாள். 

அவளின் மேனியில் இன்னும் இளமை பொங்கிக் கொண்டுதான் இருந்தது. அவளின் மூளை வேகமாய் செயல்பட்டதை விடவும் சூழ்ச்சியோடுதான் அதிகம் செயல்பட்டு இருக்கின்றது.

முகம் சுத்தம் செய்தவள் வேறு அலங்காரத்தை செய்துக் கொண்டு வெளியே வந்தாள். அவளுக்கு தினமும் இரு வேளை அலங்காரம் செய்ய வேண்டும். அவள் உடுத்தும் பட்டு தினம் ஒன்றாகதான் இருக்கும். செல்வ செழிப்பிலும், கர்வத்திலும் வளர்ந்துக் கொண்டிருப்பவள் அவள்.

அவள் கீழே இறங்கி வந்த போது ஆதீரனும் ஹாலில் வந்து அமர்ந்திருந்தான். இலக்கற்றவனாக தொலைக்காட்சியில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தான்.

அவனருகே வந்து அமர்ந்த காந்திமதி சமையலறை பக்கம் பார்த்தாள். சங்கவி சமையலறை மேடையின் அருகே நின்றபடி காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள். அவளை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் இயல்பாய் இவளுக்குள் தோன்றியது.

சங்கவி இயந்திரம் போல காய்களை வெட்டிக் கொண்டிருந்தாள். கை விரல்களில் நான்கைந்து இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. அப்போதும் கூட அதை கவனிக்காமல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள். நேற்று வரை காய்கள் என்றால் சாப்பிடுவது என்றுதான் தெரியும். அம்மா வெண்டைக்காயும், கேரட்டையும் நறுக்கும் போது துண்டாகி இருப்பதை எடுத்து தின்றுக் கொண்டிருப்பாள். ஒரு வாரத்தில் விதி மாறும் என்று அவள் மட்டும் கனவா கண்டாள்?

"பவளமக்கா குடிக்க தண்ணீர் கொண்டு வாங்க.." ஆதீரனின் கரகரத்த தொண்டை தாகத்தில் தவித்தது.

"இதோ தம்பி.." என்ற பவளம் டம்ளரில் தண்ணீரை நிரப்பினாள்.

"நீ உன் வேலையை பாரு பவளம். அதை அந்த கழுதைக்கிட்ட கொடுத்து அனுப்பு.." என்றாள் காந்திமதி.

பவளத்துக்கே ஆச்சரியம்தான். நேற்று வரை தன்னை பாடாய் படுத்திக் கொண்டிருந்த தலைவி இப்போது தன்னிடமும் மனித தன்மையோடு பேசுகிறாளே என்று எண்ணினாள். காரணம் சங்கவி என்று‌ புரிந்திருந்தது. அவளை பார்க்கையில் சற்று பரிதாபமுமாகதான் இருந்தது. 

கத்தியை ஓரத்தில் வைத்த சங்கவி புடவை முந்தானையால் கைகளை துடைத்துக் கொண்டாள். கண்ணாடி டம்ளரை கைகளில் வாங்கினாள்.

பயத்தோடு தண்ணீரை கொண்டு வந்து ஆதீரனின் முன்னால் நீட்டினாள். அவனுக்கு தாகம் மறந்தே விட்டது. குந்தவியின் நினைவு குபீரென்று தாக்கியது.

உடைந்த உள்ளத்தோடு கையை நீட்டினான். தரை பார்த்து நின்றிருந்தவளின் கழுத்தில் வெள்ளி சங்கிலி ஒன்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. குந்தவிக்கும் இவளுக்கும் ஒரே மாதிரியான சங்கிலியை வாங்கி தந்திருந்தார் அப்பா.

காதலிக்க ஆரம்பித்த பிறகு அந்த வெள்ளி சங்கிலியை குந்தவியிடமிருந்து களவாடி விட்டிருந்தான் ஆதீரன். இன்று வரையிலும் அவன்தான் அதை அணிந்துக் கொண்டிருக்கிறான்.

டம்ளரை வாங்க கையை நீட்டியவன் நினைவுகளின் பிடியில் சிக்கியிருந்த காரணத்தால் முழுதாய் டம்ளரை வாங்கவில்லை. டம்ளர் பட்டென்று தரையில் விழுந்தது. சுக்கல் நூறாக உடைந்தது. 

டம்ளர் விழுந்த மறு கணம் சங்கவியின் கன்னத்தில் பளாரென்று அறை ஒன்று விழுந்தது. 

"திமிர் பிடிச்ச கழுதை.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா டம்ளரை கீழே போடுவ?" என்று கேட்டு மீண்டும் அறைந்தாள் காந்திமதி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments