Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 5

 தரையில் கொட்டியிருந்த நீரோடு ரத்த துளிகள் கலந்து அவ்விடமே சிவப்பாக மாறிக் கொண்டிருந்தது. 

இடது உள்ளங்கையில் சேகரிக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளை கவனத்தோடு பார்த்தாள் சங்கவி. கரம் நடுங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம் அசந்தாலும் கையிலிருந்து கண்ணாடி துண்டுகள் சிதறி கீழே விழுந்து விடுமோ என்று பயம்.

"இப்ப நான் உன்னை என்ன கொடுமை பண்ணிட்டேன்னு அழுதுட்டு இருக்க?" கோபத்தோடு கேட்ட காந்திமதியை நிமிர்ந்துப் பார்த்தாள். காந்திமதி முறைத்தாள்‌. 

"என்னடி பார்வை? சட்டுன்னு வேலையை முடி.!" என்ற காந்திமதி அவளை தாண்டி நடந்தாள்‌. போகும் போது அவளின் மீது மோதியது இவளின் கால். சங்கவி தன் கையிலிருந்த கண்ணாடி துண்டுகள் பாதியை கீழே விட்டு விட்டாள்.

கண்கள் மேலும் கலங்கியது. மங்கலாய் தெரியும் பார்வையோடே வேலையை செய்து முடித்தாள். கைகளை சுத்தம் செய்துக் கொண்டு பார்த்தாள். இரண்டு கைகளிலும் இருபது வெட்டுகளுக்கு மேல் இருந்தது. வலித்தது. அக்கா எப்படிதான் இந்த ராட்சசனை காதலித்தாளோ என்று அக்காவின் மீது பரிதாபம் வந்தது. அக்கா தப்பித்தது போல தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நலம் என்று தோன்றியது.

"சங்கவி.!" கையை பார்த்தபடி பின் வாசலின் அருகே நின்றிருந்தவள் ஆதீரனின் அழைப்பில் திரும்பினாள். 

"என்னோடு வா.!" அழைத்தான்.

உண்மையிலேயே உள்ளுக்குள் உதறல் எடுத்தது சங்கவிக்கு.

"எ.. எதுக்கு?" எனக் கேட்டவளை அளப்பது போல பார்த்தவன் அருகில் வந்து அவளின் கையை பற்றினான். அவளை இழுத்துக் கொண்டு மாடி ஏறினான்.

அவனின் கையை உதறிவிட பயமாக இருந்தது அவளுக்கு‌. உதற முயற்சிக்கலாம். ஆனால் உதற முடியுமா? அவனின் பலம் பற்றி அறியாதவளா அவள்?

அறைக்கு வந்ததும் பயத்தில் முதுகு தண்டு சிலிர்த்தது.

அவளை கைப்பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தான். அவள் அருகே அமர்ந்தான். 

"சங்கவி.." என்றான். அவனின் குரலில் கெஞ்சல் இருந்தது‌. 

"ப்ளீஸ்.. குந்தவி எங்கேன்னு சொல்லு.!" என்றான் அவளின் கையை விட்டுவிட்டு.

"அவ இல்லாம செத்துடுவேன் போல.." என்றவன் இரு கைகளாலும் தன் தலைமுடியை கோதி விட்டுக் கொண்டான்.

திருமணம் நடப்பதற்கு முன்பும் கூட இப்படிதான் தினமும் கேட்டான். அப்போதே தெரியவில்லை. அதனால்தான் இவனோடு சிக்கிக் கொண்டாள். இப்போது கேட்டால் மட்டும் எப்படி தெரியும்?

"எனக்கு தெரியாது.!" என்றவளின் தலைமுடியை பற்றினான். பற்றிய வேகத்தில் கீழே தள்ளினான். கால் முட்டிகள் இரண்டிலும் வலியை உணர்ந்தாள். "அம்மா.!" என்றுக் கத்தினாள்.

அருகே வந்து அவளின் பின்னங்கழுத்தை பற்றியவன் அவள் தன்னை பார்க்கும்படி திருப்பினான்.

"எனக்கு அவ வேணும். உனக்கு தெரியாதுன்னு சொல்லாத. அவ உன்கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டா.. நீயும் உன் பேரண்ட்ஸ்ம் சம்மதம் சொல்லிதானே என்னையே லவ் பண்ணா?" எனக் கேட்டவனின் கரம் இறுகியது.

குந்தவிக்கு பிடித்திருந்தது. அதனால்தான் இவர்களுக்கும் சம்மதம் சொன்னார்கள். தேவனின் தோல் போர்த்திய அரக்கன் என்பதை அப்போது அறியாமல் போய் விட்டார்கள்.

"எனக்கு அவ எங்கே இருக்கான்னு நிஜமா தெரியாது. இருந்திருந்தா முன்னாடியே சொல்லி இருப்பேன். இப்படி உங்ககிட்ட சித்திரவதை படணும்ன்னு எனக்கு என்ன தலையெழுத்தா?" எனக் கேட்டாள் ‌

அவளின் கழுத்தை பற்றியபடியே அவளை தூக்கி நிறுத்தினான். கழுத்து வலித்தது. முகத்தை சுளித்தாள்.

"நீ செத்துட்டா அவ திரும்பி வருவாதானே?" எனக் கேட்டவனை பயத்தோடு பார்த்தாள்.

பற்களை காட்டி இளித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகிலிருந்த பெட்ஷீட்டை எடுத்து வந்தான். அவன் விலகிய அந்த நொடியில் ஓரடி நகர்ந்தாள். அதற்கு மேல் நகர முடியவில்லை.

பயத்தில் கால்கள் மடங்கியது.

"ப்ளீஸ்.. வேணாம்.!" என்றாள்.

"உன்னால எனக்கு ஒரு பயனும் இல்ல. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகியும் கூட அவ வரல. நீ சாவு‌. என்னோட கடைசி நம்பிக்கை இதுதான்.!" என்றவன் அவளை நெருங்கினான்.

இடம் வலமாக தலையசைத்தவள் "என்னை எதுவும் செய்யாதிங்க. வேணாம்.. என் அக்கா உங்களை எப்பவும் மன்னிக்கவே மாட்டா.!" என்றாள் கெஞ்சலாக.

ஆனால் அவளின் கழுத்தை சுற்றியது பெட்ஷீட். 

"உன்னை நேசிக்கிறேன் சங்கவி. உன் ஆன்மா சாந்தியடைய சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன்.!" என்றவன் பெட்ஷீட்டை இறுக்கினான்.

சங்கவிக்கு பேச்சே எழவில்லை. கழுத்தை சுற்றியிருந்த பெட்ஷீட் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை நெருக்கிக் கொண்டே வந்தது.

கழுத்தை அந்த புறமும் இந்த புறமும் அசைத்தாள்‌. அவள் அசைய அசைய மேலும் இறுக்கினான். இன்னும் சில விநாடிகள் இருந்திருந்தால் இறந்திருப்பாளோ என்னவோ? 

"தம்பி.. என்ற காரியம் செய்றிங்க.. விட்டுடுங்கப்பா அவளை‌.!" எங்கிருந்தோ ஓடி வந்து அவனின் காலை பற்றியபடி கெஞ்சினாள் பவளம்.

பல நாள் பழக்கம் இல்லைதான். ஆனால் பவளத்தில் மகளுக்கும் கூட சங்கவியின் வயதுதான். சிறு பெண் சாவின் விளிம்பில் இருப்பதை யார்தான் விரும்புவர்?

அவள் அறைக்குள் வந்தது அவன் எதிர்பார்க்காத விசயம். கொண்டிருந்த வெறி குறைந்ததா, இல்லை தள்ளிப் போடப்பட்டதா தெரியவில்லை‌. பெட்சீட்டோடு சேர்த்து சங்கவியை கீழே தள்ளியவன் அங்கிருந்து நகர்ந்தான். மேஜை மேல் இருந்த தண்ணீர் ஜாடியை எடுத்துக் கொண்டு படுத்திருந்தவளின் அருகே ஓடி வந்தாள் பவளம்.

"பெட்ஷீட்டை பிரித்து எரிந்தாள். "தண்ணியை குடிங்க பாப்பா.!" என்று தண்ணீரை நீட்டினாள். நடுங்கும் கரங்களில் ஜாடியை பிடிக்கவே முடியவில்லை. கடைசியில் பாவமாக இருக்கிறதென்று பவளமே தண்ணீரை குடிக்க வைத்தாள்.

"ஏன்ம்மா வாயை கொடுத்து உன்னை நீயே பலிக்கடா ஆக்குற.. இந்த வீட்டுல இருக்கும் இரண்டு பேருக்குமே மனசாட்சி கிடையாது. உன் அக்காவுக்கு நரகம் தப்பிடுச்சி. ஆனா நீ அப்பாவி போல வந்து மாட்டிக்கிட்டியேம்மா.!" என்று பரிவோடு வியர்வையில் நெற்றியோடு சேர்ந்து ஒட்டிக் கொண்ட தலைமுடியை தள்ளி விட்டாள்.

'நான் வாயை கொடுக்கவே இல்ல.. அந்த பைத்தியக்காரன்தான் இப்படி பண்ணிட்டு இருக்கான்.!' என்று நினைத்தவள் "நரகமா? விளக்கமா சொல்லுங்க அக்கா.." என்றாள். விசயத்தை அறிந்துக் கொள்ள வேண்டிய ஆவலில் கழுத்து வலி மறந்துப் போய் விட்டது.

"சக மனுசங்களை மனுசனா யார் மதிக்கறாங்களோ அவங்கதான் மனுசனா வாழவே தகுதியானவங்க.. இந்த வீட்டுல பணம் மட்டும்தான் பேசும். வேலைக்காரங்களை கேவலமா திட்டுவாங்க. இந்த தம்பி சின்ன வயசுல நிறைய முறை வேலைக்காரர்களோட குழந்தைகளை அடிச்சிருக்காரு. ஆனா அவங்க அம்மா காசு தந்து எல்லாத்தையும் சமாளிப்பாங்க. ஒரு சாரி கூட சொல்ல தெரியாதவங்ககிட்ட ஏன் வேலை செய்யணும்ன்னு கேட்கலாம். பாதி பேர் இப்படிதான் இருக்காங்க. யாரோ ஒருத்தங்களை அட்ஜஸ்ட் பண்றதுக்கு இவங்களையே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமேன்னுதான்.!" என்றவள் சங்கவியை எழுப்பி நிற்க வைத்தாள்.

சங்கவியின் கழுத்தை சுற்றி சிவந்துப் போயிருந்தது. 

"வாம்மா.. நான் மருந்து போட்டு விடுறேன்.!" என்று அழைத்துச் சென்றாள். 

தான் தங்கியிருக்கும் அறையில் அவளை அமர வைத்து கழுத்தை சுற்றி மருந்தை தேய்த்து விட்டவள் "காயத்தை தொடாம இரும்மா. இரண்டு நாள்ல நல்லாகிடும்.!" என்றாள்.

சரியென்று தலையசைத்தாள் சங்கவி. தன் இடத்தில் அக்கா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்து பயந்தாள்‌. அவளையும் இப்படிதான் இவன் கொல்ல முயல்வானோ என்று நினைக்கும்போதே பயமாக இருந்தது.

அக்கா ஓடி போனதே நல்ல விசயம் என்று இப்போது தோன்றியது.

"போன் தரிங்களா அக்கா? என் அம்மாவோடு பேசிட்டு தரேன்.!" ஏக்கமாக கேட்டவளை பார்க்கும்போதே பரிவு தோன்றியது பவளத்திற்கு. தன் இடுப்பிலிருந்த போனை எடுத்து நீட்டினாள்.

சங்கவி அப்பாவின் எண் பதிந்தாள்.

"அம்மா சங்கவி.." அப்பாவின் குரலை கேட்ட மாத்திரத்தில் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. 

"அப்பா.." என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

போனின் ஸ்பீக்கரை மூடியவள் விம்மி அழுதாள். எவ்வளவு முயன்றும் அழுகையை அடக்க முடியவில்லை.

பவளம் அவளின் தலையை வருடி தந்தாள். 

துடைக்க துடைக்க கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது சங்கவிக்கு.

பொறுத்து பார்த்த பவளம் போனை வாங்கினாள். "சார், ஆதீ தம்பி‌ உங்க பொண்ணோட கழுத்தை நெரிச்சிட்டார் சார்.! அதனாலதான் பாப்பாவால பேச முடியல.!" என்றாள்.

சங்கவி அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள். வேண்டாமென்று தலையசைத்தாள். ஆனால் விசயம்தான் முன்பே தந்தையின் காதுக்கு போய் விட்டதே.

எதிர் முனையில் பேச்சே வரவில்லை. சங்கவி போனை வாங்கி காதில் வைத்தாள். "அப்பா.." என்றாள் அழுகையோடு. ஆனால் இணைப்பு துண்டாகிப் போனாது.

போனை தந்தவள் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழுதாள். ஒருநாள் கூட முழுதாய் ஆகவில்லை. அதற்குள் கொல்ல முயன்று விட்டான். இன்னும் என்னவெல்லாம் நடக்க காத்திருக்கிறதோ என்று பயமாக இருந்தது.

அதன் பிறகு தனக்கு தரப்பட்ட அறையை விட்டு வெளியே செல்லவில்லை சங்கவி. வெறும் தரையிலேயே சுருண்டு படுத்து கிடந்தாள். கழுத்து வலித்துக் கொண்டே இருந்தது.

ஆதீரன் தலை நிமிராமல் சாப்பிட்டான். அவனின் அமைதி காந்திமதிக்கே புதிதாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து தட்டை நகர்த்தி வைத்தவன் "அவ நல்லாருக்காளா அக்கா?" என்று பவளத்திடம் கேட்டாள்.

"ம.. மருந்து போட்டு விட்டிருக்கேன் தம்பி.!" பயந்துக் கொண்டே சொன்னாள். ஏன் மருந்து போட்டு விட்டாய் என்று கேட்டு தன்னிடம் சண்டை வருவானோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

தலையசைத்தபடி எழுந்த ஆதீரன் சங்கவி இருந்த அறைக்கு சென்றான். அவளின் அருகில் சென்று அமர்ந்தான். அரவம் கேட்டு கண்ணை திறந்த சங்கவி படக்கென்று எழுந்து அமர்ந்தாள். பயந்து பின்னால் நகர்ந்தாள்.

"சங்கவி.. சாரி.!" என்றான். விழிகள் கலங்கி இருந்தது அவனுக்கு. ஆனால் அவளுக்கு பயம்தான் கூடியது. அவளின் பாதத்தில் தலை சாய்த்தான்.

"சாரி சங்கவி.. நான் கோபத்துல ஏதோ முட்டாள்தனமா பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு.!" என்றான்.

கொன்றுவிட்டு, இறந்தவளின் கல்லறையில் மன்னிப்பு கேட்க தயங்காதவன் இவன் என்று புரிந்துக் கொண்டவள் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனம் காத்தாள்.

"உன்னை நான் கை தொட்டு இருக்க கூடாது.!" என்றவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். இதயம் நின்றது போலிருந்தது அவளுக்கு. மறுபடியும் கழுத்தை நெரிக்க போகிறான் என்று நடுங்கினாள். அவளின் முதுகை வருடி விட்டவன் "சாரி.. உன் அக்காகிட்ட இதை சொல்லிடாதே.! ப்ளீஸ்!" என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். 

கல்சிலையாக அமர்ந்திருந்தவள் இன்னும் என்ன நடக்க இருக்கிறது என்ற எண்ணத்தோடு இருந்தாள்.

அவன் அவளை விட்டு விலக இருந்த நேரத்தில் "தம்பி உங்களை தேடி போலிஸ் வந்திருக்கு.!" என்று வந்துச் சொன்னாள் பவளம்.

குழப்பத்தோடு எழுந்தவன் வெளியே வந்தான். ஹாலில் பெண் காவலர்கள் இருவர் நின்றிருந்தனர். அவர்களை முறைத்தபடி எதிரில் நின்றிருந்தாள் காந்திமதி.

"ஆதீரன்‌.." என்றுக் கேட்டவர்களிடம் ஆமென்று தலையசைத்தான்.

"உங்க மனைவியை நீங்க கொலை பண்ண டிரை பண்ணதா கம்ப்ளைண்ட் வந்திருக்கு‌.!" என்ற இன்ஸ்பெக்டர் சக்தி தன்னோடு வந்த கான்ஸ்டபிள் வனஜாவிடம் சைகை காட்டினாள்.

ஆதீரன் அதிர்ச்சியோடு போலிஸை பார்த்தான்.

"அந்த பொண்ணு எங்கே?" என்றபடி முன்னால் வந்தாள் வனஜா.

அவன் முறைத்தபடி நின்றான். லத்தியை அப்படியும் இப்படியும் சுழற்றிய வனஜா அவனின் தோளில் ஒரு அடியை தந்தாள்.

"என்னடி பண்ற?" ஆவேசமாக வந்தாள் காந்திமதி. 

தன் மீது அடி விழுந்தது என்பதை நம்பவே முடியாமல் நின்றான் ஆதீரன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments