Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 6

 "பொண்ணுங்கன்னா உனக்கு கிள்ளு கீரையோ.." எனக் கேட்ட வனஜா தன்னை நெருங்கிய காந்திமதியை திரும்பிப் பார்த்தாள். முறைத்தாள்.

"உன் மகன் அவனோட பொண்டாட்டியை கழுத்தை நெரிச்சிருக்கான். இதுக்கு கொலை முயற்சின்னு கேஸ் போட போறோம். உன் மகன் ஜெயில்ல நல்லா பாடம் கத்துட்டு அப்புறம் வெளியே வருவான்.!" என்ற வனஜா யோசனையோடு லத்தியை நீட்டினாள்.

"இந்த கழுத்து நெரிப்புக்கு நீயும் ஐடியாதாரியா?" எனக் கேட்டாள்.

"மேடம் யாரோ உங்களுக்கு தப்பான தகவல் தந்திருக்காங்க.!" என்று சக்தியிடம் சொன்னான் ஆதீரன். அவனுக்கு வனஜாவை சுத்தமாக பிடிக்கவில்லை.

"தகவல் தப்பா சரியான்னு விசாரிச்சா தெரிய போகுது.!" என்ற வனஜா அந்த வீட்டை நோட்டம் விட்டாள்.

"எங்கேடா உன் பொண்டாட்டி?" எனக் கேட்டாள்.

"டா போட்டு பேசாதிங்க.." என்று விரல் நீட்டி எச்சரித்தவனின் கையில் ஒரு அடியை விட்டாள் வனஜா.

"வனஜா‌.." சக்தி எச்சரிக்க முயன்றாள்.

"நீங்க அமைதியா இருங்க மேடம்.. இவனை போல ஆட்களையெல்லாம் உள்ளே வச்சி பிரிச்சி எடுக்கணும். அப்பதான் திருந்துவாங்க.." என்றவள் ஆதீரனிடம் "உன் மேல கம்ப்ளைண்ட் வராம இருந்திருந்தா நானும் உன் ஏரியா பக்கம் கூட வந்திருக்க மாட்டேன். தப்பு பண்ணிட்டு மரியாதை, சால்வையெல்லாம் எதிர்பார்க்காத.!" என்றாள்.

"கொஞ்சம் பொறுமையா பேசுங்க வனஜாக்கா.!" என்ற சக்தி "அந்த பொண்ணு எங்கே?" எனக் கேட்டாள்.

அதே நேரத்தில் பவளம் சங்கவியை அழைத்துக் கொண்டு அங்கே வந்தாள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே கழுத்தின் காயம் தெரிந்தது.

சக்தி அருகே சென்று கழுத்தை சோதித்தாள். சிவந்து கிடந்தது. மருந்து போட்டிருந்தும் கூட வீங்கியிருந்தது. அழுத முகமும், சிவந்த கண்களும் மனதிற்கு கஷ்டத்தை தந்தது.

கோபத்தோடு ஆதீரன் புறம் திரும்பினாள். திரும்பியவளின் பார்வையில் சங்கவியின் கைகளும் தென்பட்டு விட்டது. கையை பற்றிப் பார்த்தாள். ரத்த காயங்கள் ஈரமாக இருந்தது. தன் நெஞ்சில் பாரத்தை உணர்ந்தாள் சக்தி.

"அரெஸ்ட் பண்ணுங்க வனஜாக்கா.!" என்றாள்.

சங்கவி ஆச்சரியத்தோடு சக்தியை பார்த்தாள்.

"ஏன்ம்மா அப்படி பார்க்கற.. கணவனே கோவில்ன்னு சொல்லி இவனோடு வாழ போறியா?" சந்தேகமாக கேட்ட சக்தியிடம் மறுப்பாக தலையசைத்த சங்கவி "தேங்க்ஸ் மேம்.. செத்துடுவேனோன்னு நினைச்சி பயந்துட்டேன்.!" என்றாள் கரகரத்த குரலில்.

அவளின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை கண்டும் காணாதது போல திரும்பிக் கொண்டான் ஆதீரன்.

"அப்படியே என் அக்காவையும் கண்டுபிடிச்சி கொடுங்க மேம். இவங்கதான் என்னவோ பண்ணிட்டாங்களோன்னு பயமா இருக்கு.!" என்றவளிடம் பாய்ந்து வந்த ஆதீரன் அவளின் தலைமுடியை கொத்தாக பற்றினான்.

"நீயும் உன் பேரண்ட்ஸ்ம் அவளை ஓடி போக சொல்லி இருக்கிங்க.. ஆனா என் மேல பழி போடுறியா?" என்றுக் கேட்டான். அவனின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்தாள் சக்தி.

"ஏய் பொம்பளை.. என்ன பண்ற நீ?" எனக் கேட்ட காந்திமதியை நோக்கி துப்பாக்கியை திருப்பிக் காட்டிய சக்தி "உன்னையும் என்கவுண்டர் செய்யணுமா?" எனக் கேட்டாள்.

காந்திமதி உறைந்து நின்றாள். ஆனாலும் கூட "நான் யார்ன்னு தெரியாம இப்படி பண்ணிட்டு இருக்க.!" என்றாள்.

அதை காதில் வாங்கிக் கொள்ளாத சக்தி "அந்த கையை தூர எடு.!" என்றாள் ஆதீரனிடம்.

அவன் கையை எடுத்த அடுத்த நொடியில் விலங்கிட்டாள்.

"நான் இருக்கும்போதே இந்த பொண்ணை இப்படி துன்புறுத்துற. அப்படின்னா இன்னும் என்னவெல்லாம் செய்வ?" எனக் கேட்டவள் அவனை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

வனஜா சங்கவியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள். 

காந்திமதி அவசரமாக வக்கீலுக்கு அழைத்தாள். 

சங்கவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சக்தி, ஆதீரனை லாக்கப்பில் அடைத்தாள்.

"திமிர் பண்ணிட்டு இருக்கியா.? காலையில் கல்யாணம் பண்ணி நைட்டே அவளை கொல்ல பார்த்திருக்க.. உனக்கெல்லாம் எவ்வளவு எகத்தாளம் இருக்கும்.? சைக்கோ பயலே.!" என்று திட்டிய சக்தி, தனது மேஜையில் வந்து அமர்ந்தாள். அவளருகே தயக்கமாக வந்து நின்றார் மோகன்.

"உங்க மேலயும் ரொம்ப தப்பு இருக்கு சார். ஒருத்தன் ப்ளாக்மெயில் பண்றான், பழி வாங்கறான்னா வந்து எங்ககிட்ட கம்ப்ளைண்ட் செய்ய வேண்டியதுதானே.? ஊர் உலகத்துல போலிஸ், கோர்ட் எதுவும் இல்லாத மாதிரி அப்பாவி பொண்ணாட லைப்பை அடமானம் வைக்கிறிங்க.." என்று காய்ந்தாள்.

மோகனின் அருகே நின்றிருந்த ருக்மணி லேசாக விசும்பினாள். 

"அழாதிங்கம்மா.." என்ற சக்தி முன்னால் இருந்த டிஸ்யூ பேப்பரை எடுத்து தந்தாள்.

அதை வாங்காமல் தன் முந்தானையில் முகத்தை துடைத்துக் கொண்ட ருக்மணி, "பெரியவ நம்ப வச்சி ஏமாத்திட்டு போயிட்டா.. பரிகாரம் போல இருக்கட்டுமேன்னு இவளை கல்யாணம் பண்ணி வச்சோம். எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிப்போம். ஆனா பொண்ணை கொலை பண்ண பார்த்தார்ன்னு தெரிஞ்ச பிறகுதான்.." என்று தயங்கினாள்.

சக்தி ஆதீரனை பார்த்தபடியே தலையசைத்தாள்.

"நீங்க செஞ்சது ரொம்ப தப்பும்மா.. உங்க பெரிய பொண்ணு ஓடிப் போன காரணம் தெரியாம இரண்டாவது பொண்ணை பிடிச்சி கட்டி வச்சிருக்க கூடாது. யாருக்கு தெரியும்.? இவன் ஏதாவது நாடகமாடி உங்க பெரிய பொண்ணை கொன்னிருக்கலாம். இல்லன்னா அவளை விரட்டியடிச்சி இருக்கலாம்." என்றாள்.

லாக்கப்புக்குள் இருந்த ஆதீரனுக்கு உடம்பு எரிவது போல இருந்தது. அவன் குந்தவியை எவ்வளவு விரும்பினான் என்று அவனுக்கு மட்டும்தானே தெரியும்.?

"இல்லைங்க.. இந்த பையன் அப்படி இல்ல. அதுவும் இல்லாம என் பொண்ணு வேற ஒருத்தனோடு ரயில் ஏறிய வீடியோவையும் பார்த்தோம்." ருக்மணி சொன்னது கேட்டு சிரித்தாள் சக்தி.

"எல்லாமே வெளியில் இருந்து பார்க்க அப்படிதான் தெரியும் மேடம். ஆனா பழகிப் பார்த்த உங்க பொண்ணுங்களுக்குதானே விசயம் தெரியும்.? மூனு வருசம் காதலிச்ச ஒரு பொண்ணு, கல்யாணத்துக்காக வீட்டுல கூட சம்மதம் வாங்கிய ஒரு பொண்ணு ஏன் வேற ஒருத்தனோடு ஓடிப் போகணும்.? அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா தன் காதலை உங்ககிட்ட சொல்லாமலேயே இருந்திருப்பா. கடைசி நேரத்துல இன்னோருத்தனை இழுத்துட்டு போக மாட்டா. இழுத்துட்டு போனவன் ப்ளாக்மெயில் பண்ணி இருக்கலாம். இல்லன்னா உங்க பொண்ணே கூட விருப்பப்பட்டு போயிருக்கலாம்.!" தனது யூகத்தை விளக்கிச் சொன்னவள், "ஆனா அவளோட காதலை அவ டீல் பண்ணிப்பா.. சம்பந்தமே இல்லாம ஏன் இன்னொரு பொண்ணை இதுல சிக்க வைக்கணும். இதென்ன பண்டமாற்று முறையா.?" என்றுக் கேட்டாள்.

சிறை கம்பியை இறுக்க பற்றியது ஆதீரனின் விரல்கள். ஒருவேளை யாராவது அவளை கத்தி முனையில் கடத்தி சென்றிருக்கலாமோ என்று யோசித்தான். ஓடி போகும் முன்னால் நாள் வரை இவனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தவள் ஆயிற்றே! 

'எவன் இதுல சம்பந்தப்பட்டிருந்தாலும் சரி.. அவன் என் கையில கிடைச்சா அத்தோடு செத்தான்!' என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

"உங்க பொண்ணு கேஸை நானே விசாரிச்சி சொல்றேன்ம்மா.. நீங்க தைரியமா இருங்க. உங்க சின்ன பொண்ணை பத்திரமா பார்த்துக்கோங்க.!" என்றாள் சக்தி.

முகத்தை துடைத்தபடியே சரியென்று தலையசைத்தாள் ருக்மணி.

"நீங்க போய் உங்க பொண்ணை பாருங்க.. மாப்பிள்ளையை நான் நல்லா விசாரிச்சி வைக்கிறேன்!" என்ற சக்தி அவர்கள் இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

அவர்கள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் வந்து விட்டாள் காந்திமதி.

"ஜாமின் மேம்!" என்ற வக்கீலை சந்தேகமாக பார்த்த சக்தி 'எந்த ஜட்ச் இந்த நேரத்துக்கு கையெழுத்து போட்டிருக்காரு?' என்று குழம்பினாள். ஆனால் கையெழுத்து இருந்தது. ஜாமின் கிடைத்திருந்தது. அனைத்தையும் விலைக்கு வாங்க கூடிய ஆட்கள். எரிச்சலோடு எழுந்து சென்று கதவை திறந்து விட்டாள்.

அவனிடம் கையெழுத்து வாங்கினாள்.

இடைப்பட்ட நாளில் சங்கவிக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணமும் இவன்தான் என்று எழுதி வாங்கிக் கொண்டாள். 

"இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன், இந்த குடும்பத்து பொண்ணு வேணாம்டான்னு! சொன்னேன் கேட்டியா?" என்று எரிந்து விழுந்தாள் அம்மா. 

"அவளை எங்கே அட்மிட் பண்ணி இருக்காங்க?" காலரின் சட்டை பட்டனை போட்டபடி கேட்டான் அவன்.

"நரேன் ஹாஸ்பிட்டல்.." அம்மா சொன்னதும் காரில் ஏறி அமர்ந்தான். "நீ கீழே இறங்கு.!" என்றான் டிரைவரிடம்.

டிரைவர் இறங்கினான். அம்மா அமரும் முன் காரை எடுத்து விட்டான். 

"டேய்.!" அம்மாவின் அழைப்பு அவனின் காதில் விழவில்லை. 

மருத்துவமனைக்கு எதிரில் இருந்த சாலையில் வந்து நின்றது ஆட்டோ. மோகனும், ருக்மணியும் இறங்கினர். 

"நமக்கு மட்டும் ஏன்தான் இப்படியெல்லாம் நடக்குதோ?" சோகமாக சொன்ன மோகன் ஆட்டோவிற்கான பணத்தை தந்தார்.

ருக்மணியின் போன் ஒலித்தது.

"எங்க அக்காதான்.!" என்றவள் அழைப்பேற்று பேசினாள்.

"எங்கே இருக்கிங்க?"

"வந்துட்டோம்க்கா. ஹாஸ்பிட்டல் முன்னாடிதான் இருக்கோம்.. சங்கவி எப்படி இருக்கா?" விசாரித்தாள் ருக்மணி.

"ஊசி போட்டாங்க. இரண்டு குளுக்கோஸ் இறங்கியிருக்கு.. பேசாமலேயே உட்கார்ந்திருக்கா.. நீ வா.. அப்பவாவது பேசுவாளா பார்க்கலாம்.!" என்றாள்.

"ம்ம்.!" என்றவள் கைபேசியை அணைத்து கைப்பையில் வைத்தாள்.

"போலாம்ங்க.." என்று நிமிர்ந்தவள் மோகனின் கையை பற்றியபடி சாலையில் இறங்கினாள்.

தூரத்திலிருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றில் பன்னிரெண்டு பத்து என்று மணி காண்பித்தது கடிகாரம்.

ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் சென்றுக் கொண்டிருந்த சாலை அது. ஆனால் மோகனும் ருக்மணியும் அச்சாலையை கடந்துக் கொண்டிருக்கையில் வேகமாக வந்தது ஒரு கார். கண்ணிமைக்கும் நேரம். இருவரையும் தூக்கி வீசியது. ஆளுக்கொரு திசையில் பறந்துச் சென்று விழுந்தனர்.

சங்கவி எழுந்து நின்றாள். முகத்தை துடைத்தாள். கழுத்தில் மட்டுமல்ல உடம்பிலும் கூட அவ்வளவாக வலி இல்லை. அவளுக்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் சக்தியை பிடித்திருந்தது. அவள் நிச்சயம் தனது அக்காவை தேடி தருவாள் என்று நம்பிக் கொண்டிருந்தாள்.

மேஜையின் மேல் இருந்த போன் ஒலித்தது. பெரியம்மாவுடையது. பாத்ரூமுக்கு சென்றிருக்கிறாள் அவள். 

போனை கையில் எடுத்த சங்கவி அம்மாவின் எண்ணை கண்டுவிட்டு போனை காதில் வைத்தாள்.

"ஹலோ.." என்றாள்.

"இங்கே இரண்டு ஆக்ஸிடென்ட்ங்க.. இந்த போனை வச்சிருந்தவங்களும் இன்னொரு பெரியவரும். நீங்க சொந்தக்காரங்களா இருந்தா சீக்கிரம் இந்த நரேன் ஹாஸ்பிட்டல் முன்னாடி வர முடியுமா?" எனக் கேட்டான் எதிரில் இருந்தவன்.

உலகம் சுழலுவதை கண்டு அருகே இருந்த சுவரை பற்றினாள். 

"பெரியம்மா.." அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. பாதி பார்வை மங்கி விட்டது.

"சங்கவி.." அறையின் கதவை திறந்து உள்ளே வந்த பெரியம்மா "ஏன் எழுந்து நின்னிருக்க? உட்கார்ந்து ரெஸ்ட் எடு.!" என்றாள்.

"அம்மா.. அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட்.." அழுகையோடு திக்கி திணறிச் சொன்னாள்.

பெரியம்மாவுக்கும் அதிர்ச்சி. "என்னடி சொல்ற?" எனக் கேட்டாள்.

"போன் வந்தது.. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆக்சிடென்டாம்.. வா போலாம்.. ஹாஸ்பிட்டல் முன்னாடிதான் ஆக்ஸிடென்டாம்.!" என்றவள் பெரியம்மாவின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

அந்த பெரிய மருத்துவமனையில் அவள் இருந்த அறையிலிருந்து வரவேற்பறைக்கு வருவதற்கே ஐந்து நிமிடங்கள் ஆகி விட்டது.

அவள் வரவேற்பறையை தாண்ட இருந்த அதே நேரத்தில் இரண்டு ஸ்டெச்சர்கள் உள்ளே வந்தன.

"வழி விடுங்க.." என்றார்கள் ஸ்டெச்சரை தள்ளி வந்தவர்கள்.

"அம்மா.." படுத்து கிடந்தவளின் அருகே ஓடி வந்தாள் சங்கவி. அப்போதுதான் ரத்த கறை படிந்த சட்டையோடு இருந்த ஆதீரனை பார்த்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments