Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 7

 அம்மாவின் நெஞ்சில் விழுந்தாள் சங்கவி. "அம்மா எழும்மா.." என்று அழுதாள். பெரியம்மாவுக்கு பேச்சே வரவில்லை. தங்கையை இப்படியொரு நிலையில் பார்ப்போம் என்று கனவிலும் நினைக்காத அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். 

சங்கவியின் தோளை பற்றி தூர இழுத்தான் ஆதீரன். "பைத்தியமா நீ? இவங்களை ஒரேடியா கொல்ல போறியா நீ?" என்றான் அதட்டலாக.

அவனின் மிரட்டல் கண்டு அவளுக்கு அழுகை அப்படியே நின்றுப் போனது. கொஞ்சமாக விம்மினாள். "அம்மா.." என்று கண்ணீர் விட்டாள்.

"தள்ளு.." என்றவன் அவளை நகர்த்தி விட்டு ஸ்டெச்சர்களை உள்ளே அனுப்பினான்.

"அம்மா.. அப்பா.." என்றவள் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றாள். அக்கா பிரிந்த சோகமே இன்னும் மனதை விட்டு முழுதாய் மறையாமல் இருந்தது. அதற்குள் இப்படியொரு விபத்தா என்று அழுதாள். 

அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்ற இரு ஸ்டெச்சர்களில் ஒன்று திரும்பி வந்தது. வேறொரு பாதையில் சென்றது.

"இவங்களோட சொந்தக்காரங்க யாராவது இருக்கிங்களா?" எனக் கேட்டபடி வந்தாள் ஒரு நர்ஸ்.

சுவரில் சாய்ந்திருந்த சங்கவி எழும் முன் நர்ஸின் முன்னால் வந்து நின்றான் ஆதீரன்.

"நான்.. அவங்களோட சன் இன் லா!" என்றான்.

"அந்த அம்மா இறந்துட்டாங்க.." நர்ஸ் சொன்ன நொடியில் "அம்மா.!" என்று பெருங்குரலில் கத்திய சங்கவி அப்படியே மயங்கி விழுந்து விட்டாள்.

விழுந்தவளை ஓடிச் சென்று பிடித்தான் ஆதீரன். பெரியம்மா வாயில் துணியை பொத்தியபடி அழுதாள். தலையில் அடித்துக் கொண்டாள்.

நர்ஸ் அவசரமாக வந்து சங்கவியை சோதித்தாள். "பெட்க்கு தூக்கிட்டு போகணும்.. ஸ்டெச்சர் ஒன்னு எடுத்துட்டு வாங்க.." என்று அங்கிருந்த பணியாளர்களை பார்த்து குரல் தந்தாள்.

"நானே தூக்கி வரேன்!" என்று அவளை கையில் ஏந்திய ஆதீரன் அவளை நர்ஸ் காட்டிய அறைக்கு தூக்கிச் சென்றான். 

"இங்கே படுக்க வைங்க.." என்ற நர்ஸ் மருத்துவரை அழைத்து வர ஓடினாள். போர்வை ஒன்றை எடுத்து அவளின் கழுத்து வரை போர்த்தி விட்டான் ஆதீரன். அவளின் கழுத்தில் இருந்த மருந்து கொஞ்சமாக அழிந்துப் போயிருந்தது. அவ்விடத்தில் சிவந்திருந்தது மேனி. 

"என் தங்கச்சியை ரொம்ப நல்லா பார்த்துப்பியா ஆதீ? அவ எனக்கு குட்டி டெடி பியர் மாதிரி. அவ இல்லாம நான் எதையும் யோசிச்சதே இல்லை.. ஒருமுறை எங்க பக்கத்து வீட்டு பையன் அவளை அடிச்சிட்டான். அந்த பையனை பின்னியெடுத்துட்டேன் நான். அதுக்கு அப்பா என்னை பின்னியெடுத்துட்டாரு. அப்பா எவ்வளவு அடிச்சாலும் சரி. நான் அதைதான் செய்வேன். ஏனா அவ என் லிட்டில் ஏஞ்சல்!" குந்தவி தன்னிடம் சொன்னது நினைவுக்கு வரவும் பற்களை கடித்தபடி தன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

குந்தவி இருந்திருந்தால் நடப்பது அனைத்தும் வேறு விதமாக இருந்திருக்கும். இவளை எதிரியை போல பார்க்காமல் தங்கையை போல பார்த்திருப்பானோ என்னவோ? திருமணத்திற்கு முன்பு அவ்வளவாக இவளிடம் பழகவில்லை அவன். அவனுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. குந்தவியுடனான உறவே பொக்கிஷமாக இருந்ததால் புது உறவை ஆழமாக ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. 

மருத்துவர் வந்ததும் அவனை வெளியே அனுப்பினர்‌‌. சங்கவிக்கு சிகிச்சை ஆரம்பமானது. வெளியே வந்து நின்றவன் தலையை பற்றியபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

நேரம் கடந்துக் கொண்டிருந்தது. ஒருபுறம் மோகனுக்கும் மறுபுறம் சங்கவிக்கும் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது. 

காந்திமதியும் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்து விட்டாள்.

"என்னாச்சி?" என்றவளிடம் விபத்தை பற்றிச் சொன்னான் ஆதீரன்.

"செத்தா சாகட்டும்ன்னு விட்டு வராம இங்கே எதுக்கு காவல் காத்துக்கிட்டு உட்கார்ந்திருக்க? இவங்கதான் உன்னை போலிஸ் ஸ்டேசன் போக வச்சாங்க.. மறந்துட்டியா?" என்று காய்ந்தாள்.

காதில் எந்த சொற்களுமே விழாதது போல அமர்ந்திருந்தவன் காந்திமதி அடுத்த பாடம் ஆரம்பிப்பது கண்டு "இவங்க குந்தவியோட பேரண்ட்ஸ்.. இவ குந்தவியோட தங்கச்சி!" என்றான்.

காந்திமதி மகனை முறைத்தாள். 

"அந்த கழிசடையை மறக்கும் யோசனையே இல்லையா உனக்கு?" என்று எரிந்து விழுந்தாள்.

சட்டையிலிருந்த ரத்த கரைகளையும், கையிலிருந்த ரத்த கரைகளையும் மாறி மாறி பார்த்தவன் "அவ என் தேவதை!" என்றான். காந்திமதி நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு.. எப்படியோ போ.. நான் வீட்டுக்கு போறேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல போலிஸ் ஸ்டேசன்ல இருந்து ஒருத்தி வருவா.. மறுபடியும் அவ உன்னை கூட்டிப் போனா நிச்சயம் நான் பெயில் எடுக்க வர மாட்டேன்!" என்றாள்.

ஆதீரன் பதில் பேசாமல் இருக்கவும் பற்களை கடித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

பெரியம்மா இவனருகே வந்து அமர்ந்தாள்.

"ஏன் தம்பி இப்படி எங்க பாப்பாவை கொடுமை செய்றிங்க?" என்றுக் கேட்டாள்.

ஆதீரன் மௌனமாய் இருந்தாள். 

"என் தங்கச்சி நடந்ததை சொன்னா.. ஓடி போனவளுக்கு என்ன பிரச்சனையோ?" என்று தயங்கியவள் "ஒருவேளை அவ உங்களை உண்மையா நேசிக்காம கூட இருந்திருக்கலாம்!" என்றாள். அவனுக்கு இதயமே உடைவது போலிருந்தது.

"அவ ஏமாத்திட்டா.. ஆனா அதுக்கு இவ எப்படி பொறுப்பாவா? இவ அப்பாவி தம்பி. இவளை நீங்க கழுத்தை நெரிக்காம இருந்திருந்தா ஹாஸ்பிட்டல் சேர்த்திருக்க வேணாம். இப்ப இப்படி ஒரு விபத்து நடந்து, என் தங்கச்சி செத்திருக்கவும் வேணாம்.." என்று மூக்கை துடைத்துக் கொண்டாள்.

"உங்களுக்கும் எங்க குந்தவிக்கும் நடுவுல என்ன பிரச்சனைன்னு தெரியல. உங்களோடு பழகிய அவளுக்குதான் விசயம் தெரியும். என்ன நடந்திருந்தாலும் சரி உங்களுக்கும் சங்கவிக்கும் நடுவுல கல்யாணம் நடந்திருக்கவே கூடாது. அவ நல்லா வாழ வேண்டிய பொண்ணு. பச்சை குழந்தை அவ." என்றாள்.

ஆதீரன் எந்த சொற்களையும் உதிர்க்கவில்லை. அவனுக்கும் கூட அப்படிதான் தோன்றியது. ஆனால் குந்தவி இங்கே இல்லையென்ற சோகம் அவனின் யோசனையை தடை செய்தது.

"தயவு செஞ்சி இவளை விட்டுடுங்க.." என்றவனுக்கு போலிஸ் ஸ்டேசனில் இருந்து விட்ட நினைவு வந்தது.

"அமைதியா எழுந்து போயிடுங்க. இல்லன்னா இவளையும், அவங்க அப்பனையும் என் கையாலயே கொன்னு போட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்!" என்றான் அவன்.

பெரியம்மாவுக்கு முகம் செத்து விட்டது. எதையும் புரிந்துக் கொள்ளாதவனிடம் என்ன பேசுவதென்று நினைத்தாள்.

"நீ விளங்கவே மாட்டா.. என் வயிறு எரிய சொல்றேன், உனக்கு நல்ல சாவே வராது!" என்றவள் முந்தானையால் வாயை பொத்தியபடியே அங்கிருந்துச் சென்றாள். 

மணி நள்ளிரவு இரண்டை கடந்து விட்டிருந்தது. 

கண்களை விழித்த சங்கவிக்கு அம்மாவின் நினைவு பேரலையாக வந்துத் தாக்கியது. அம்மா இனி திரும்பி வரவே மாட்டாள் என்ற உண்மை புரிந்து விம்மினாள்.

"அழுதது போதும். எழுந்து வரியா? ஹாஸ்பிட்டல் பார்ம்ல நீதான் கையெழுத்து போடணும்.." என்ற ஆதீரனின் குரலில் துள்ளி விழுந்தவள் அவசரமாக எழுந்து அமர்ந்தாள். முகத்தை எத்தனை முறை துடைத்தும் கண்ணீர் நிற்கவே இல்லை.

"என் அம்மா உண்மையிலேயே இறந்துட்டாங்களா?" கண்களில் நீர் தளும்ப கேட்டவளை காணும்போது அவனுக்கும் துக்கம் நெஞ்சில் சேர்வது போலவே இருந்தது. தனது எண்ணத்திற்காக தன்னையே திட்டிக் கொண்டவன் "செத்துட்டாங்க.." என்றான் இரும்பில் அடித்த முகத்தோடு.

"எழுந்து வா!" என்றான். 

சங்கவி அழுதபடியே வந்து கையெழுத்திட்டாள்.

அதே நேரத்தில் அங்கே போலிஸ் இன்ஸ்பெக்டர் சக்தி வந்தாள். ஆக்ஸிடென்ட் பற்றி விசாரித்து விட்டு உள்ளே வந்தவள் சங்கவிக்கு ஆறுதல் சொன்னாள்.

சங்கவியின் அருகே நின்றிருந்த ஆதீரனை முறைத்தாள். "நீ இங்கே என்ன செய்ற?" என்றுக் கேட்டாள்.

விழிகளை சுழற்றியவன் "என் மாமனார் மாமியாருக்கு ஆக்ஸிடென்ட்ன்னு வந்தேன்.." என்றான்.

"அவ்வளவு நல்லவனா நீ?" சக்தி கேட்டது அவனுக்கு கோபத்தை தந்தது.

சங்கவியிடம் திரும்பியவன் "அந்த தாலியை கழட்டி கொடு!" என்றான்.

சங்கவி அதிர்ந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை.

"உன்னை நான் கல்யாணம் செஞ்சது தப்புதான்.. பட்டுட்டேன்.‌ திருந்திட்டேன்.. தாலியை கொடு. இந்த அம்மாவோடு போ.. உனக்கு தேவையான எல்லாம் செஞ்சி தருவாங்க.." என்றவனின் வார்த்தையிலிருந்த வெறுப்பு அவளை நெருப்பாக சுட்டது.

அவன் தன் கழுத்தை நெரித்ததை நினைத்துப் பார்த்தாள். உதட்டை கடித்தபடி கழுத்திலிருந்த சங்கிலியை கழட்டி தந்தாள். 

குந்தவிக்காக ஆசையோடு செய்தது. தாலியை கனத்த நெஞ்சோடு பெற்றுக் கொண்டான். அவள் இருந்திருந்தால் எல்லாமே சரியாய் இருந்திருக்கும் என்று நினைத்தான்.

தாலியை பார்க்கும் போது அவன் கண்கள் பனித்ததை கண்டு சக்திக்கும் சங்கவிக்கும் ஆச்சரியமாக இருந்தது.

மார்போரம் இருந்த பாக்கெட்டில் தாலியை போட்டுக் கொண்டவன் சங்கவியை திரும்பி கூட பார்க்காமல் கிளம்பினான். நான்கடி நடந்தவன் நின்றான். இவள் புறம் திரும்பினான். ஆனால் இவளைப் பார்க்காமல் இவளுக்கு பின்னால் இருந்த சுவற்றை வெறித்தான்.

"ஒருவேளை உன் அக்கா திரும்பி வந்தா கண்டிப்பா என்னை வந்து பார்க்க சொல்லு!" என்றான்.

சங்கவி சிலையாய் நின்றாள். அவன் கிளம்பி விட்டான். 

"அவனால இனி உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்!" என்ற சக்தியிடம் "ஆனா என் அம்மா இறந்துட்டாங்க மேடம்!" என்றாள் அழுகையோடு.

"உனக்கு ஆறுதல் சொல்ல காலத்தால மட்டும்தான் முடியும். தைரியமா இரு.." என்றாள்.

"நான் விடியற்காலை ப்ளைட்ல டெல்லி போறேன். ஒரு வாரத்துல திரும்பிடுவேன். உன் எக்ஸ் ஹஸ்பண்ட் உன்கிட்ட ஏதாவது பிரச்சனை செஞ்சான்னா நீ உடனே எங்க ஸ்டேசன் வனஜாவுக்கு போன் பண்ணு. அவன் மேல இருக்கும் கேஸ் கோர்ட்டுக்கு வந்ததும்‌ உங்களோட வீடு திரும்ப கிடைச்சிடும்!" என்றாள்.

சரியென்று தலையசைத்தாள் சங்கவி. சக்தி தன்னால் முடிந்த அளவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.

அதிகாலை மணி ஐந்து..

தாயை நினைத்து ஒரு மூலையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த சங்கவியின் முன்னால் வந்து நின்றாள் ஒரு நர்ஸ்.

"எங்க அப்பா குணமாகிட்டாரா?" ஆர்வத்தோடு கேட்டவளை வருத்தமாக பார்த்த செவிலியை "உங்களை டாக்டர் கூப்பிடுறாரு.. வாங்கம்மா!" என்றழைத்தாள்.

மருத்துவரிடமும் அதே கேள்வியை கேட்டாள் சங்கவி.

"இல்லம்மா.. அதுக்கு இன்னும் நிறைய நாள் ஆகலாம்.. அவருக்கு உள்ளுடம்புல நிறைய காயம். தலையிலேயும் அடிப்பட்டிருக்கு. தலையில் செய்ய வேண்டிய ஆபரேசன் ரொம்ப கிரிட்டிக்கலானது. இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கும் யாராலும் முடியாது.. ஹைதராபாத்ல இருந்துதான் டாக்டரை வர சொல்லணும். அது மட்டுமில்ல இந்த ஆபரேசனுக்கு நிறைய செலவாகும்.." என்றார் அவர்.

சங்கவியின் முகத்தில் இருந்த ஜீவன் செத்து விட்டது.

"எவ்வளவு டாக்டர் ஆகும்.!" 

"மினிமம் நாற்பது லட்சம் ஆகும்.. ஆனா மத்த செலவுகளையும் நாம பார்த்தாகணும். எப்படி பார்த்தாலும் உங்ககிட்ட ஐம்பது அறுபது லட்சம் இருந்தா சிக்கனமா இந்த ஆபரேசனை செஞ்சி முடிச்சிடலாம்!" என்றார் அவர்.

அதிர்ந்துப் போன சங்கவிக்கு அப்பாவை எப்படி பிழைக்க வைப்பது என்று யோசனையாக வந்தது. 

"பணத்தை ஏற்பாடு பண்ணி கவுண்டர்ல கட்டிட்டு சொல்லுங்க.. நாங்க ஆபரேஷனுக்கு ஏற்பாடு செஞ்சிடுறோம்!" என்றார்.

அவ்வளவு பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்ற கவலையோடு வெளியே வந்தவளிடம் என்னவென்று கேட்டாள் பெரியம்மா. விசயத்தை சொன்னாள் இவள். பெரியம்மாவுக்கும் கவலை பிடித்துக் கொண்டது.

பொழுது விடிந்து சிறிது நேரம்தான் ஆகியிருந்தது. ஆதீரனின் வீட்டின் முன்னால் வந்து நின்றாள் சங்கவி

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments