Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 9

 கீழே கிடந்த பணத்தை வெறித்த குந்தவி குழப்பத்தோடு கடிதத்தை பிரித்தாள்.

'ஹாய் செல்லா.. ஐ ஹேவ் வெரி அர்ஜென்ட் வொர்க். சோ ஐ லீவ் திஸ் கன்ட்ரி. யுவர் வால்யூ இஸ் மோர் தென் திஸ் யுனிவர்ஸ். பட் ஐ டோன்ட் வோன் திஸ் யுனிவர்ஸ். சோ ஐ கிவ் திஸ் மணி. ஐ கெஸ் யூ ஹேவ் சம் ப்ராப்ளம்ஸ்.. ப்ளீஸ் பிலிவ் யுவர் செல்ப். யூ கேன் டூ எனிதிங். சோ ப்ளீஸ் டோன்ட் கோ ரோட் சைட் அகெய்ன். டோன்ட் மேக் யுவர் பாடி ஆஸ் எ சேல்ஸ் ஐட்டம்.. அன்ட் ப்ளீஸ் கால் திஸ் நம்பர். ஐ வாண்ட் டூ டாக் வித் யூ. டோன்ட் பர்கெட் மீ. வீ வில் மீட் சூன்.. சியர்அப் செல்லா..'

அவசரமாக கிறுக்கி வைத்திருந்தான். ஆனாலும் அவளுக்கு தெளிவாக புரிந்திருந்தது. இந்த செல்லா என்ற வார்த்தையின் அர்த்தம்தான் புரியவில்லை.

கடிதத்தை கையில் கசக்கியபடி கட்டிலில் சோர்ந்து அமர்ந்தாள் குந்தவி. 

சுருண்டு படுத்தாள்‌. முகத்தை மூடிக் கொண்டு அழுது தீர்த்தாள்.

பத்து நாட்களுக்கு முன்பு; 

குந்தவி தனது ஆசை காதலன் ஆதீரனுடனாட தனது எதிர்கால வாழ்க்கையை நினைத்து கனவில் மிதந்துக் கொண்டிருந்தாள். நாளெல்லாம் சர்க்கரையாய், கேட்கும் சொற்கள் யாவும் மங்களமாய், காணும் சம்பவங்கள் அனைத்தும் ஆசீர்வாதமாக, பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் புன்னகை கலந்து மகிழ்ந்துக் கொண்டிருந்தாள்.

காதலனை நினைத்தபடி தங்கைக்கு தலைவாரி விட்டுக் கொண்டிருந்த குந்தவி கைபேசி ஒலிக்கவும் எழுந்து ஓடினாள். 

ஆதீரனைதான் எதிர்பார்த்தாள். ஆனால் அழைத்தது காந்திமதி. 

அழைப்பை ஏற்க சற்று தயக்கமாக இருந்தது. காந்திமதிக்கு இவளை பிடிக்காது. அது இவளும் அறிந்ததே. மகனின் முன்பு ஒரு மாதிரியும், மகன் இல்லாதபோது வேறு மாதிரியும் பேசுவாள் அவள்‌. 

வருங்கால மாமியாரின் இரட்டை வேடம் புரிந்திருந்தாலும் கூட அதை ஆதீரனிடம் சொல்லியதில்லை அவள். வீட்டிற்கு மருமகளாக செல்லும் முன்பே கோள்மூட்டி என்ற பெயரையும், தாயையும் மகனையும் பிரித்தாள் என்ற ஏச்சையும் வாங்க விரும்பவில்லை அவள். திருமணம் வரை முகத்தை காட்டினாலும் திருமணம் முடிந்த பிறகு மாமியார் தன்னை முழுதாக ஏற்றுக் கொள்வாள் என்று நம்பினாள். அதுதான் அவள் செய்த மிக பெரிய தவறு. 

இப்போதும் கூட பெரிய யோசனைக்கு பிறகுதான் அழைப்பேற்று கைபேசியை காதில் வைத்தாள்.

"ஹலோ.." 

"என்னடி மருமகளே! ரொம்ப சந்தோசமா இருக்க போல.." காந்திமதியின் குத்தல் பேச்சால் இவளுக்கு அடிவயிறு கலங்கியது.

"அ.. அத்தை.." இவள் பேச ஆரம்பிக்கும் முன்பே "ச்சீ.. அத்தைன்னு சொல்லாத பிச்சைக்கார நாயே! அந்தஸ்து, அழகு, படிப்புன்னு என்னடி இருக்கு உனக்கு?" என்று பொரிந்தாள் அவள்.

குந்தவி கட்டியிருந்த புடவையின் முந்தானையை இடது கையினால் இறுக்கிக் கொண்டாள். இதயம் மோட்டார் படகை போல சத்தமிட்டது.

குந்தவிக்கும் அந்தஸ்து இருந்தது. ஆனால் தன் அந்தஸ்தை விட சற்று மேல் மட்டத்தில் இருப்பவனை காதலித்து விட்டாள். அழகானவள்தான் இவளும். ஆனால் அதை காண ரசிக்கும் திறன் எதிராளிக்கும் கொஞ்சமாவது மனதில் வேண்டும். ஒற்றை டிகிரி முடித்திருந்தாள் குந்தவி. மேலே படிக்க ஆசைதான். ஆனால் அப்போதைய வீட்டின் சூழ்நிலை. பெற்றோரை சிரமப்படுத்த கூடாது என்றெண்ணி வேலைக்கு கிளம்பிவிட்டாள். மேற்படிப்புக்கு தொலைதூர கல்வியாய் தொடர்ந்திருக்கலாம்தான். ஆனால் ஓய்வெடுக்க கூட நேரமில்லாத வேலையை தந்தான் ஆதீரன். அது மட்டுமல்லாது அவனது காதல் அக்கப்போர். பின்தொடர்ந்துக் கொண்டிருந்தவனிடமிருந்து தப்பிக்க நேரம் தேடியதிலும், அவனின் காதலில் விழுந்த பிறகு நேரமே இல்லாமல் போனதாலும் அவளின் மேற்படிப்பு அப்படியே நின்றுப் போய் விட்டது.

"என்னடி சத்தமே இல்ல?" எதிரில் இருந்தவள் நக்கலாக கேட்க, "சொல்லுங்க அத்தை.." என்றாள் இவள் தயக்கமாக.

"எவ்வளவு சொன்னாலும் உனக்கு ஏறவே ஏறாதா? நீ அத்தைன்னு கூப்பிட்டா எனக்கு அசிங்கமா இருக்கு.."

"இதை ஏன் நீங்க ஆதிக்கிட்ட சொல்ல கூடாது?" இவ்வளவு நாள் வரை இந்த தைரியம் இல்லை. ஆனால் இப்போது இவளின் பொறுமை முழுக்க எல்லை மீறி விட்டது‌.

"என்னடி கிண்டலா? என்னையும் என் பையனையும் பிரிக்க ஆசைப்படுறியா? இங்கே நான் நினைச்சது மட்டும்தான் எப்பவும் நடக்கும். அதை நீ சீக்கிரமே புரிஞ்சிப்ப.." என்றவள் நீண்டதாக பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு "உன் வீட்டுக்கு வெளியே பாருடி.!" என்றாள்.

குந்தவி அருகே இருந்த ஜன்னலருகே வந்து நின்றாள். வெளியே பார்த்தாள். எதுவும் தெரியவில்லை.

"உங்க வீட்டு எதிர்ல இருக்கும் மொட்டை மாடியை பாருடி.!" 

காந்திமதி சொன்ன இடத்தில் பார்த்தாள்.

கருப்பு சட்டை அணிந்திருந்த இளைஞன் ஒருவன் துப்பாக்கியோடு இருந்தான். அவனின் துப்பாக்கி வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருந்த சங்கவியை நோக்கி இருந்தது.

கைகள் நடுங்கியது குந்தவிக்கு. வியர்த்த முகத்தை துடைக்க முடியவில்லை. ஒற்றை கையால் நெற்றியை பிடித்தவள் ஜன்னல் கம்பியை பிடித்தபடி தரையில் அமர்ந்தாள்.

"இவ்வளவு நாள் நான் பேசியது எல்லாத்தையும் ஈசியா நினைச்சிட்ட இல்ல?" என கேட்ட காந்திமதி கொடூர மிருகம் போல தோன்றினாள் குந்தவிக்கு.

"நான் இப்ப ஓகே சொன்னா உன் தங்கச்சி தலை சிதறி செத்துப் போவா.. வசதி எப்படி?" பற்களை கடித்தபடி கேட்டாள் காந்திமதி.

வாயை பொத்தியபடி மௌனமாய் அழுத குந்தவி "ப்ளீஸ் வேணாம்.." என்றாள் கெஞ்சலாக.

"பொறுத்து பார்த்து சலிச்சிட்டேன். என் மகனோட மனசை மாத்த முடியல. கடைசியா உன்கிட்ட சொன்னேன். ஆனா நீ என்னை மனுசியாவே மதிக்கல.. எனக்கு பிடிக்காத இந்த கல்யாணம் எப்பவும் நடக்கவே கூடாது. என் பையன் இதை நிறுத்த மாட்டான். நீதான் நிறுத்தணும். இப்பவே போய் அவனை பாரு. இந்த கல்யாணத்தை நிறுத்து. இல்லன்னு சொன்னா, இப்பவே சொல்லு.. உன் தங்கச்சியோட பிணத்தை எரிக்கிற நெருப்பையே உங்களோட கல்யாண மேடை அக்னியா மாத்திப்ப.." 

வேண்டாமென்று தலையசைத்த குந்தவிக்கு மூச்சே வரவில்லை. சிரமப்பட்டு மிடறு விழுங்கினாள்.

கைபேசியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தவள் "நீ.. நீங்க சொல்றதை கேட்கிறேன்.. என் தங்கச்சியை எதுவும் செஞ்சிடாதிங்க.." என்றாள் அழுகையோடு.

காந்திமதி சிரித்தாள். அந்த சிரிப்பு இவளுக்கோ பீதியை தந்தது.

"அப்படின்னா நான் சொல்றதை செய்றியா?"

"நான் அந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துறேன். என் தங்கச்சியை விட்டுடுங்க.!" 

"அப்படின்னா இப்பவே போய் அவனை பாரு.. அப்புறம் ஒரு முக்கியமான விசயம். நான்தான் உன்கிட்ட இப்படி சொன்னேன்னு நீ என் மகன்கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா.? நான் என் மொத்த சொரூபத்தையும் உன்கிட்ட காட்ட வேண்டி வரும். உன் குடும்பத்துல ஒருத்தர் கூட உயிரோடு இருக்கவே முடியாது. உன் அம்மா அப்பாவோட பிணம் ஏரியில மிதக்கும். உன் தங்கச்சியை எவ்வளவு கொடூரமா கொல்ல முடியுமோ அவ்வளவு கொடூரமா கொல்வேன்! அதை ரொம்ப நல்லா ஞாபகம் வச்சிக்க.." என்றாள்.

அழுகை சத்தம் தங்கை வரை கேட்டு விடக் கூடாது என்பதற்காக சிரமப்பட்டுக் கொண்டிருந்த குந்தவி "ப்ளீஸ் வேணாம்.. நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுறேன்.." என்றாள்.

"சொல்லிட்டே இருக்கியே தவிர செய்யணும்ன்னு ஒரு முயற்சியும் எடுக்கலையே நீ.." 

"பத்து நிமிசம்.." என்றவள் அவசரமாக முந்தானையால் முகம் துடைத்தாள். வெளியே நடந்தாள். பாதி பின்னப்பட்ட ஜடையை இவள் எங்கே விட்டாளோ அதே இடத்தில் பிடித்துக் கொண்டிருந்த சங்கவி மறுகையில் இருந்த வார இதழில் சிந்தனையை தொலைத்து விட்டிருந்தாள்.

குந்தவி வாசலில் கிடந்த செருப்பை மாட்டும்போதுதான் சங்கவி நிமிர்ந்தாள்.

"அக்கா.."

"அவசரமா ஒரு வேலை.. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன் சவி.. தரையில ரப்பர் பேண்ட் இருக்கு பாரு.. எடுத்து போட்டுக்கோ.. அக்கா அப்புறம் வந்து மீதி ஜடையை பின்னி விடுறேன்.!" என்ற குந்தவி தங்கையின் பதிலை கூட எதிர் பார்க்காமல் சாலையில் இறங்கினாள்.

திருமண அழைப்பிதழ் தர சென்றிருந்த அம்மாவும் அப்பாவும் வந்து இறங்கிய அதே ஆட்டோவில் ஏறினாள்.

"அடியேய் எங்கடி கிளம்பிட்ட?" அம்மா மகளை நிறுத்தி கேட்டாள்.

"பக்கத்துலதான்ம்மா.. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்!" என்றுச் சொல்லியவள் ஆட்டோ அலுவலகத்தை வந்து சேர்ந்ததும் அவசரமா இறங்கி உள்ளே ஓடினாள்.

நிறுவனத்தில் கடன் பெற வந்திருந்த பலரும் இவளின் ஓட்டம் கண்டு விசித்திரமாக பார்த்தனர்.

மூன்றாம் தளத்தில் இருந்த ஆதீரனின் அறையை அடைந்தபோது இவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

திருமண அழைப்பிதழை ரசித்துக் கொண்டிருந்தவன் இவளை கண்டதும் எழுந்து நின்றான்.

"குந்தவி.. இப்பதான் உன்னை பத்தி நினைச்சிட்டு இருந்தேன்.!" என்றபடி அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

"ஓடி வந்தியா.. மூச்சு வாங்குது.!" என்றவன் அவளை அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான்.

"என்னாச்சி குந்தவி?" எனக் கேட்டபடி அவளின் கன்னங்களை பற்றினான். காதின் நுனிகளை மிருதுவாக தேய்த்து விட்டான். 

"நீன்னா எனக்கு எவ்வளவு இஷ்டம் தெரியுமா?" எனக் கேட்டவன் தனது வழக்கமான காதல் மொழிகளை பேச ஆரம்பித்தான்.

எப்போதும் ரசிப்பவள்தான். ஆனால் இப்போது முடியவில்லை.

"ரொம்ப அர்ஜென்டா உன்கிட்ட பேசணும் ஆதீ.." 

"பேசு குந்தவி.. என்கிட்ட பேச கேட்கணுமா நீ?" 

வார்த்தைகள் சட்டென்று வாயிலிருந்து வர மறுத்தது. பார்த்து பார்த்து பழகி, உருகி வந்த காதல் ஆயிற்றே! 

இவள் வார்த்தைகள் வர திணறிக் கொண்டிருக்க, அவனோ இவளின் பிரச்சனை புரியாதவனாக "உனக்கு ஒன்னு காட்டணும்ன்னு நினைச்சிட்டே இருந்தேன்.. உன்னை பார்த்ததும் மறந்துட்டேன்.!" என்று எழுந்து சென்றான்.

கையடக்க பெட்டியோடு திரும்பி வந்தான். வெல்வெட் பெட்டிக்குள் இருந்த தங்க தாலியை எடுத்துக் காட்டினான்.

"உன் கழுத்துக்காகவே செஞ்சது.. எவ்வளவு பொருத்தம் இல்ல?" எனக் கேட்டபடி அவளின் கழுத்து முன்னால் அழகு பொருள் போல வைத்துப் பார்த்தான்.

"என் மொத்த உயிரும் உன்கிட்ட இருக்கு குந்தவி. இந்த கல்யாண நாளுக்காக எத்தனை நாள் நான் காத்து கிடந்தேன் தெரியுமா?" எனக் கேட்டபடி தாலியை மீண்டும் பெட்டிக்குள் வைத்தான்.

"என் உயிரே நீதான். நீ இல்லன்னா நான் வாழ்றதுல அர்த்தமே இல்ல.. செத்துடுவேன் குந்தவி!" என்றான் குரல் உடைந்து.

சிலையாய் அமர்ந்திருந்தவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவனோடு கொண்ட காதல் சுழலாய் பிடித்து இழுத்தது. அவளை யோசிக்க விடாமல் செய்தது. அவளின் மொத்த முயற்சியையும் மக்கி போக செய்தது.

அவன் கொண்ட காதல் பற்றி அறிந்திருந்தவள் தங்கையையும் குடும்பத்தையும் காப்பாற்ற வந்த முயற்சியில் தோற்று எழுந்து நின்றாள்.

"ஏன் கிளம்பிட்ட குந்தவி? நம்மோட ஹனிமூனுக்கு எங்கே போறோம்ன்னு உனக்கு தெரிய வேண்டாமா?" 

அழுகையை மனதுக்குள் புதைத்தபடி நிமிர்ந்தவள் அவனின் முகம் பற்றினாள்.

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதீ. என் ஜீவன் நீ. என் உலகம் நீ. உன் காதலும் என் காதலும் உண்மைதான். இது எந்த அளவுக்கு நம்மை காப்பாத்தும்ன்னு எனக்கு தெரியல. ஆனா நான் எப்பவும் உன்னை காதலிப்பேன்.." என்றாள்.

"அதுதான் தெரியுமே குந்தவி.." என்றவன் அவளின் இடை பற்ற முயல, "இல்ல நான் கிளம்பறேன்.. கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவள் அவசரமாக அவனிடமிருந்து நகர்ந்து அங்கிருந்து கிளம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments