Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 14

 'ரொம்பதான் விரும்பினா.. என்னை விடவும் அதிகமா விரும்பினா.. ஆனா விட்டுப் போயிட்டாளே!' என்று மனதுக்குள் புலம்பிய ஆதீரன் "பழசை விடு வரு.." என்றான்.

வருண் அடுத்த கேள்வியை கேட்கும் முன் அங்கிருந்து நகர்ந்துப் போனான். "அவன் போனா போறான்.. நீங்க சொல்லுங்க.. உங்க பேர் என்ன?" எனக் கேட்டபடி இவள் புறம் திரும்பினான்.

"என் பேர் உங்களுக்கு தேவையில்லன்னு நினைக்கிறேன்.!" என்றவள் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

'பட்டாசா பொரியறா..' என்று நினைத்தபடி வெளியே வந்தான்.

அம்மாவின் அருகே அமர்ந்திருந்த ஆதிரன் தனது போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

சங்கவி மூன்று தட்டுகளில் வடைகளையும், காப்பியையும் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றாள்.

"சம்திங் ராங்.. இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நேரா கூட பார்க்க மாட்டேங்கிறாங்க.. இந்த பொண்ணை வேலைக்காரின்னு பெரியம்மா சொன்னாங்க.. ஆனா இவன் குந்தவியோட தங்கச்சி இவன்னு சொன்னான். முகத்துல கல்யாண களையும் இல்ல.. சந்தோசம், ஆனந்தம், பூரிப்புன்னு ஒரு உணர்ச்சியையும் பார்க்கவும் முடியல.. கடத்திட்டு வந்துட்டானா இவன்?' என்று யோசித்துக் குழம்பினான் வருண்.

இரவு உணவின் போது கவனித்தான். காந்திமதி அவளை அசல் வேலைக்காரியாகதான் நடத்தினாள். ஆதீரனோ மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.

இதில் உள்ள தகராறை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்று இரவு வேலையாட்கள் உறங்கும் அறைக்கு கிளம்பினான் வருண்.

அப்போதுதான் கதவில்லாத அந்த குட்டி அறையில் கால்களை மடக்கியபடி படுத்திருந்த சங்கவியை கண்டான். பார்க்கும்போதே ஏதோ போலாகி விட்டது. குளிர் தாங்காமல் சுருண்டு படுத்திருந்தவளின் முகத்தை கண்டவாறே அருகில் வந்தான்.  பரிதாபமாக இருந்தது.

'என்னடா நடக்குது இங்கே? புது கல்யாண பொண்ணை இப்படி வெறும் தரையில் படுக்க வச்சிருக்காங்க..' என்று வருத்தப்பட்டான். 

காந்திமதியின் மீதும் ஆதீரன் மீதும் கோபமாக வந்தது அவனுக்கு. இவளை அவர்கள் பழி வாங்குவது போல தோன்றியது. அப்பாவியாக இருக்கிறாள்‍, பிறகு ஏன் அக்காள் காதலித்த காதலனை கட்டிக் கொள்ள நினைத்தாள் என்றுப் புரியவில்லை.

இவளிடம் கேட்டால் ஒரு பதிலும் வராது என்று அறிந்திருந்தவன் வேலைக்காரர்கள் உறங்கும் அறை நோக்கி கிளம்பினான்.

மூடியிருந்த கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

"வீட்டுல இருப்பது மூனு பேரு.. ஆனா வேலையாட்கள் ஆறு பேரு.. கொடுமை.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டே சமையல்கார பவளத்தின் காலடியில் வந்து அமர்ந்தான். மற்ற பெண்களை விடுத்து இவள் மட்டும் தனியாய் வந்து சுவரோரம் ஒண்டிக் கொண்டுப் படுத்திருந்தாள். 

திறந்திருந்த ஜன்னல் வழியே வீசிய காற்றில் குளிரை உணர்ந்து தனது போர்வையை தலையோடு போர்த்திக் கொண்டாள் பவளம்.

'வேலைக்காரங்களுக்கு கூட இந்த வீட்டுல எல்லா வசதி இருக்கு. ஆனா வீட்டுக்கு வந்த மருமகளுக்கு எந்த வசதி செஞ்சி தராம கட்டாந்தரையில் படுக்க வச்சுட்டாங்களே.!' என்று கடுப்பாக இருந்தது அவனுக்கு. 'அட்லீஸ்ட் ஒரு போர்வை தந்திருக்க கூடாதா அவளுக்கு.?' என்ற ஆதீரன் மீது கோபப்பட்டான்.

உறங்கிக்கொண்டிருந்த பவளத்தின் பாதங்களைச் சுரண்டினான்.

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த பவளம் இவனைக் கண்டதும் "என்ன தம்பி..' என்று ஆரம்பித்தாள். ஆனால் அதற்குள் அவளின் வாயை பொத்திய இவன் "வெளிய வாங்க.." என்று கிசுகிசுப்பாக சொன்னான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அமைதியாக வெளியே நடந்தாள். ஓசையில்லாமல் பின் கதவை திறந்தவன் அங்கிருந்த தோட்டத்திற்குள் நுழைந்தான். அவனை பின் தொடர்ந்து வந்தவளிடம் கல் இருக்கை ஒன்றை கை காட்டினான்.

சுற்றுமுற்றும் பார்த்தபடி பவளம் அமர்ந்தாள். "என்ன தம்பி ஆச்சு.? எதுக்கு இங்க கூட்டி வந்து இருக்கீங்க.?" என்று குழப்பத்தோடு கேட்டாள்.

அவளின் அருகே அமர்ந்தவன் "அக்கா நீங்களாவது எனக்கு எல்லா உண்மையையும் சொல்லுங்க.. இந்த வீட்டுல என்னதான் நடக்குது? நான் இந்த வீட்டை விட்டு போய் வெறும் ஒரு மாசம்தான் ஆச்சு. திரும்பி வந்து பார்த்தா எல்லாமே மாறிப் போன மாதிரி இருக்கு. இந்த பொண்ணு ஏன் நம்ம வீட்ல இருக்கா? 

இவளை உண்மையாவே ஆதி கட்டிட்டு வந்தானா? இல்ல கடத்திட்டு ஏதும் வந்துட்டானா?"‌ என்றுக் கேட்டான்.

"என்ன தம்பி நீங்க.. வேலைக்காரிக்கிட்ட கேட்கிற கேள்வியா இதெல்லாம்? எனக்கு என்ன தெரியும்? என்னை தேவையில்லாத வம்புல மாட்டி விட்டுடாதீங்க.." என்றவள் எழுந்து நின்றாள். அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

அவளின் கை பிடித்து நிறுத்தினான் வருண்.

"அக்கா நான் உங்க மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். நீங்களும் என் மேல நிறைய அக்கறை காட்டுறிங்க.. நீங்க இது எங்கிட்ட சொன்னா நான் அதை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க என்ன முழுசா நம்பலாம். இதுவரைக்கும் நீங்க என்னை பார்த்துட்டுதானே இருக்கீங்க.? நான் கெட்ட பையனா ஒரு நாளாவது நடந்திருக்கேனா?" என்று கேட்டான்.

பவளத்திற்கு குழப்பமாக இருந்தது. தயக்கத்தோடு அவன் அருகே அமர்ந்தாள்.

"ஆதி தம்பிக்கு கல்யாணம் நடக்க இருந்த ஒரு வாரம் முன்னாடியே குந்தவியம்மா காணாம போயிட்டாங்க. அவங்களை தேடி தேடி பார்த்தாங்க தம்பி. ஆனாலும் கிடைக்கல. அப்போதான் போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க. குந்தவி வேற யாரோ ஒருத்தரோட கைய பிடிச்சிட்டு ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கிளம்பியதை ஏதோ ஒரு வீடியோவில் பார்த்தாங்க. குந்தவிம்மா தனக்கு துரோகம் செஞ்சதா நினைச்சு அவங்க குடும்பத்தை பழிவாங்க ஆரம்பிச்சுட்டார் ஆதி தம்பி. அதனாலதான் சங்கவி பாப்பாவை கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சங்கவி பாப்பா இந்த வீட்டுக்கு மருமகளா இல்ல. வேலைக்காரியாதான் இருக்காங்க நாங்க என்ன செய்ய முடியும்.? பீரோ நிறைய பட்டுப்புடவை வச்சிருக்காங்க காந்திமதிம்மா. ஆனா என்னோட பழைய சேலையை வாங்கி சங்கவிகிட்ட தந்திருக்காங்க. வயசு பொண்ணு இப்படி கிழிஞ்ச புடவை கட்டலாமா?" என்று ஆதங்கமாக கேட்டாள். அப்படியே கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டாள். 

நடந்த விசயங்கள் அனைத்தையும் இன்னும் விரிவாக எடுத்துச் சொன்னாள். சங்கவியின் பெற்றோருக்கு விபத்து நடந்ததையும் அதில் அவளின் அம்மா இறந்து விட்டதையும் சேர்த்துச் சொன்னாள்.

விசயங்களைக் கேட்கவும் வருணுக்கு கோபம் கோபமாக வந்தது.

"ஆதி நீ நிஜமாவே மனுசன்தானா? இந்தளவுக்கு மிருகமா மாறிட்டியே.!" என்று மனதுக்குள் பொரிந்து தீர்த்தான்.

"சரி பவளமக்கா நீங்க போய் தூங்குங்க‌.!" என்று அவளை அனுப்பி வைத்தான்.

சோகத்தோடு தனது அறைக்கு திரும்பினான். ஆதீரனை நினைத்து இவன் வியக்காத நாளே இல்லை. அவ்வளவு நல்லவன் அவன். அப்படிப்பட்டவன் ஏன் இந்த சிறு பெண்ணை துன்புறுத்த வேண்டும்.? என்று நினைத்த இவனுக்கு துக்கமாக இருந்தது.

மனம் பொறுக்கவில்லை. போர்வை ஒன்றை எடுத்துச் சென்று உறங்கிக்கொண்டிருந்த சங்கவியின் மீது போர்த்தி விட்டு வந்தான். 

அதே நேரத்தில்..

"மாம்மா ஐ வாண்ட் டூ டெல் யூ சம்திங்.." என்றபடி பூங்கொடியின் முந்தானையை பிடித்து இழுத்தான் அவன்.

சமையலை செய்து கொண்டிருந்தவள் இவனின் புறம் திரும்பினாள். "என்ன கண்ணா.?" என்றுக் கேட்டாள்.

தயங்கினான் இவன். கொஞ்சமாக வெட்கினான். 

"ஆக்சுவலி வென் ஐ வென்ட் டூ இன்டியா.." தயக்கத்தோடு இழுத்து அவனை வியப்பாகப் பார்த்தாள் பூங்கொடி. மகன் இப்படியெல்லாம் தயங்க மாட்டானே என்று சற்று குழப்பமாக இருந்தது அவளுக்கு.

"என்ன ஆச்சு சொல்லு. என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்.?" என்றுக் கேட்டாள் பூங்கொடி.

"ஐ சா எ கேர்ள்.." என்று தரையைப் பார்த்தபடி சொன்னான்.

மகனின் தாடையைப் பற்றி நிமிர்த்தினாள் பூங்கொடி.

"ஓகே ஒரு பொண்ணைப் பார்த்த.. வேற என்ன ஆச்சு.?" என்று ஆர்வத்தோடு கேட்டாள். அவளின் ஆர்வம் கண்டு இவனுக்கு நாணம் வந்து சேர்ந்தது.

"வாவ் ஏதோ ஒரு பொண்ணு உன் மனசை பிடிச்சிட்டான்னு நினைக்கிறேன். அதனாலதான் இவ்வளவு வெட்கம் சரியா.?" என்று தான் யூகித்ததை கேட்டாள்.

வெட்கத்தோடு ஆமென்று தலை அசைத்தான்.

"சரி சொல்லு யார் அந்த பொண்ணு?"

"ஷீ இஸ் எ ஏஞ்சல்.."

அவனின் பதில் கேட்டு அவளுக்கு சிரிப்பு வந்தது.

"ஓகே அவ பேர் என்ன?"

நெற்றி சுருக்கியவன் "ஐ டோன்ட் நோ மாமா.." என்றான்.

"சரி அவ ஊரையாவது சொல்லு. இந்தியாவுல இருக்கும் உங்க மாமாகிட்ட சொல்லி அவளை பத்தி விசாரிக்க சொல்றேன்.!" என்றாள்.

அதற்கும் இடம் வலமாக தலையசைத்தான்.

"என்ன பையன் நீ? அவ பேரும் தெரியாது. ஊரும் தெரியாது. சரி அவளை நீ எங்க மீட் பண்ணன்னு சொல்லு.."

தயங்கியவன் "ஐ மீட் ஹேர் ஆன் த ரோட்.." என்றான்.

"இப்படி சொன்னா எப்படி கண்டுபிடிக்கிறது அவளைப் பத்தி உனக்கு வேற என்ன தெரியும்.?" என்று விசாரித்தாள்.

"மாம்.." என்று இழுத்தவன் சுவர் பக்கம் பார்த்தான்.

'மாம் ஷீ இஸ் எ ப்ராஸ்டிடியூட்..' என்று மனதுக்குள் சொன்னான். இதை வெளியே சொல்ல தயக்கமாக இருந்தது. தனது அன்னை அவளை தவறாக நினைப்பாரோ என்ற கவலை ஒருபுறம், அவள் பெற்ற மகன் இப்படி எல்லாம் திரிய சென்றான் என்ற விஷயம் அறிந்த பிறகு அவளுக்கு தன் மீது வரும் கோபம் ஒருபுறம் என்று கலங்கினான்.

"பேபி பாய் நான் என்ன சொல்லுவேன்.? நீ யாரை காதலிச்சாலும் எனக்கு சம்மதம். நீ யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்கு சம்மதம்தான். ஆனா நீ அத்தனைக்கும் முன்னாடி சம்மதம் வாங்க வேண்டியது உங்க அப்பாகிட்ட இருந்துதான். நீ ஒரு இந்திய பெண்ணை காதலிச்சன்னு தெரிஞ்சா அவருக்கு கோபம்தான் வரும்.." என்று கவலையோடு சொன்னாள்.

அவள் சொன்னது என்னவோ நிஜம்தான். அலெக்ஸ்க்கு மட்டும் விசயம் தெரிந்தது என்றால் வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பார். 

"மாம்.. பட் ஐ லவ் ஹேர்.. ஐ நோ தட், ஷீ இஸ் மை ஒன்லி ஒன்.." 

"உன்னோட பீலிங்ஸை என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனா அதுக்கு முன்னாடி நீ உங்க அப்பாகிட்ட சம்மதம் வாங்க வேண்டி இருக்கு. முதல்ல நீ உன் அப்பாகிட்ட பேசு. அப்புறம் அந்த பொண்ணை கண்டுபிடிச்சு கூட்டி வா. எனக்கு நீ என்ன செஞ்சாலும் சம்மதம். நான் எப்பவும் உன் பக்கம்தான் இருப்பேன்.!" என்று நம்பிக்கை கூறினாள் பூங்கொடி.

எதிரில் இருந்த அவன் மகிழ்ச்சியோடு அவளை அணைத்துக் கொண்டான். அம்மா எப்போதும் தன் பக்கம் இருப்பாள் என்ற நம்பிக்கை அவனுக்கு எப்போதும் உண்டு. அப்பாவின் மீதும் அவனுக்கு நம்பிக்கை உண்டு. அப்பா அதிக கட்டுப்பாடுகளை உடையவர். ஆனால் அவரை வழிக்குக் கொண்டுவர இவனுக்கு தெரியும்.

தனது அறைக்கு வந்தவன் தனது கைபேசியை எடுத்தான். கைபேசி எண்ணை தந்து வந்தும் கூட அவள் ஏன் இன்னும் தனக்கு அழைக்கவில்லை என்ற சந்தேகத்தோடு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான்.

ஆனால் அவனின் இதயத்திற்குள் ஏதோ ஒரு மூலையில் சிறு நம்பிக்கை மட்டும் பிரகாசமாக இருந்தது. அவள் தனக்கானவள் என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர்விட்டு கொண்டே இருந்தது. அப்பா மட்டும் அவசரமாக வர சொல்லி அழைக்காமல் இருந்திருந்தால் அங்கேயே இருந்து அவளைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டு அறிந்திருக்கலாம் என்று நினைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Post a Comment

0 Comments