Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 20

 மகனின் அழைப்பில் தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் காந்திமதி. வீட்டிலிருந்த மொத்த பேருமே கூட வந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.

"என்னடா அதுக்குள்ள வந்துட்ட. உங்க வேலை இல்லையா.?" என கேட்டபடி வந்தாள் காந்திமதி. தன் அம்மாவை நெருங்கினான் ஆதீரன்.

அம்மாவின் கழுத்தை பற்ற நினைத்து கையை உயர்த்தினான். பின்னர் கையை கீழே இறங்கினான். பற்களைக் கடித்தான். கோபத்தோடு அம்மாவை முறைத்தான்.

"குந்தவி எங்கே.?" எனக் கேட்டான் ஆத்திரத்தோடு.

அவனின் கேள்வி கண்டு திகைத்தாள் காந்திமதி. சங்கவியும் எதுவும் புரியாதவளாய் குழம்பி நின்றாள். 

"என் குந்தவி எங்கே.?" கோபத்தோடு கத்தினான் ஆதீரன்.

"அந்த ஓடுகாலி எங்கே போனாளோ, எனக்கு எப்படி தெரியும்.?" என்று கேட்ட அம்மாவின் கழுத்தை இறுக்கினான்.

வருண் வேகமாக ஓடிவந்து ஆதீரனை பிடித்து பின்னால் தள்ளினான். காந்திமதி தனது கழுத்தை நீவியபடி ஓரடி பின்னால் தள்ளி நின்றாள். தனது மகன்தானா இவன் என்று குழப்பமாக இருந்தது.

"பைத்தியமா உனக்கு.? இவங்க‌ உன் அம்மா.." என்றான் கோபமாய்.

"அம்மாவா.? இவங்களா.? என் குந்தவியை எங்கிட்ட இருந்து பிரிச்சவங்க இவங்க.." என்றான் பைத்தியம் பிடித்தவன் போல.

"என்னடா உளறிட்டு இருக்க.?" என்ற வருணிடம் "இவங்க  குந்தவியை பிளாக்மெயில் பண்ணி இந்த ஊரை விட்டே ஓட வச்சி இருக்காங்க.." என்றான். 

காந்திமதி அதிர்ச்சியில் உறைந்தாள். இந்த விசயம் இவனுக்கு எப்படி தெரிந்திருக்கும் என்று யோசித்தாள். குந்தவி போன் செய்து இருப்பாளோ என்று கேள்வி எழுந்தது. குந்தவியை விரட்டியதற்கு பதிலாக கொன்று இருக்கலாம் என்று இப்போது தோன்றியது.

"என் குந்தவி எனக்கு இப்பவே வேணும்.." என்றான் தன் அம்மாவின் புறம் திரும்பி. அவனின் வார்த்தையில் இருந்த அடம் கண்டு சங்கவிக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் அவ்விடத்தில் தன் அக்காவிற்கு சாதகமாக அவன் பேசி கொண்டிருந்ததால் அவனை வெறுக்காமல் இருக்க முயன்றாள்.

"யாரோ உன்கிட்ட பொய் சொல்லி இருக்காங்க. அந்த ஓடுகாலி இந்த ஊரை விட்டு போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.." என்று காந்திமதி சொல்லவும் கை விரல்களை இறுக்கியபடி "அம்மா.." என்று கத்தினான். 

"அன்னைக்கு நீங்க செஞ்ச தப்பால நான் அவ குடும்பத்தை பழி வாங்கினேன். அதனால என் குந்தவி தற்கொலை பண்ணிக்கிட்டா அம்மா.. எனக்கு அவ வேணும். இல்லைன்னா நான் செத்துடுவேன்." என்றான் தலையை பிடித்தபடி.

ஓரமாக நின்றிருந்த சங்கவி இவன் சொன்னது கேட்டு உலகம் நின்று போனது போல உணர்ந்தாள்.

"என்ன சொன்னிங்க.?" குரல் கம்ம இவன் அருகே வந்து கேட்டாள். இவளைக் கண்டதும் மேலும் உடைந்தது அவனது உள்ளம். தலையை பிடித்தபடியே தரையில் மண்டியிட்டு விட்டான்.

"நான் என்ன செஞ்சிட்டேன்!? என் வாழ்க்கையை நானே அழிச்சிட்டேன். என் குந்தவியை நானே கொன்னுட்டேன். என் அம்மா பண்ண தப்பை கூட கண்டுபிடிக்காம அநியாயமா என் குந்தவியோட சாவுக்கு நானே காரணம் ஆயிட்டேன்.." என்று முகத்தை மூடியபடி அழுதான்.

முன்னால் நின்றபடி அவனை பார்த்துக் கொண்டிருந்த காந்திமதிக்கு இரண்டான் கெட்டான் நிலையானது.

"இனி என்ன செய்வேன் நான்.? என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சி.." என்று புலம்பிக் கொண்டிருந்தவனின் முன்னால் வந்து மண்டியிட்டாள் சங்கவி.

"தயவு செய்து சொல்லுங்க.. என் அக்காவுக்கு என்ன ஆச்சி.?" என கேட்டாள் கண்ணீரோடு.

அவளது முகத்தையும், கலங்கிக் கொண்டிருந்த அவளது கண்களையும் பார்த்த ஆதிரன் அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.

"சாரி சங்கவி.. உன் அக்கா நம்மை விட்டு போய்ட்டா.." என்றான் கதறலாக.

சங்கவியின் கண்களில் இருந்து புறப்பட்டது கண்ணீர். அக்கா வருவாள், பிரச்சனை தீரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தவளுக்கு இப்படி ஒரு துக்க செய்தி கிடைக்கும் என்று யார் கண்டது?

"எல்லாமே என்னாலதான். என்னாலதான் உங்க அக்கா செத்துப் போனா. தயவு செஞ்சு என்னை நீயே கொன்னுடு சங்கவி.." என்று அவளின் கையை பிடித்து கொண்டு கதறினான். 

ஆனால் அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. அவளின் சிந்தனைத் திறனே முழுதாய் அறுபட்டு போனது.

அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தவளுக்கு என்ன பேசுவது, என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.

"ஏன் சித்தி இப்படி பண்ணிங்க.?" என்று காந்திமதியை பார்த்து கேட்டான் வருண். காந்திமதி மௌன சாமியாரிணியாய் நின்றுக் கொண்டிருந்தாள்.

"அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க.‌ அவங்களுக்கு என்னை கொல்லணும்.." என்று நிமிர்ந்து பார்த்து கத்திய ஆதீரன், "உங்களுக்கு என்னை கொல்லணும்ன்னா என்னை நேராவே கொன்னு இருக்கலாமே.. ஏன் என் உயிருக்கு உயிரான குந்தவியை என்கிட்ட இருந்து பிரிச்சிங்க.?" என்று கேட்டான் அடக்க இயலாத கண்ணீரோடு.

அவனின் கண்ணீரையும் அவனின் கதறலையும் கண்டு சங்கவிக்கு மனதை பிசைந்தது. அவன் தனது அக்காவை காதலித்து உள்ளான் என்பதை அறிந்திருந்த சங்கவியாலும் கூட அவனின் காதலின் பாரத்தை இப்போது தாங்க முடியவில்லை.

"ஏன்மா இப்படி செஞ்சிங்க.?" இப்போதாவது அம்மா பதில் சொல்ல மாட்டாளா என்ற ஏக்கத்தோடு கேட்டான்.

"எனக்கு அவளை பிடிக்கல.." மகனின் அழுகையை காண முடியாமல் சொன்னாள் காந்திமதி.

"ஏன்ம்மா?" அவனால் நம்பவே முடியவில்லை அம்மா சொன்னதை.

"ஏனா எனக்கு மருமகளா வர அவளுக்கு எந்த தகுதியும் இல்ல.. பிச்சைக்காரிக்கு இந்த வீட்டுல இடம் தர முடியாது என்னால.. அதனாலதான் அவளை உன்கிட்ட இருந்து பிரிச்சேன். ஆனா நீ இந்த நாதாரியை கட்டிக்கிட்டு வந்துட்ட.. நீ நிஜமா என் மகன்தானா? தகுதி தராதரம் பார்க்காம எப்படி உன்னால காதலிக்க முடியுது? எப்படி உன்னால கல்யாணம் செய்ய முடியுது?" கோபத்தோடு கேட்டாள். 

காந்திமதியின் வெறுப்பு கொண்ட முகத்தை காண்கையில் சங்கவிக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் அதை விட முக்கியமாக இயலாமை தோன்றியது. பணமிருந்தால் இப்படியெல்லாம் பேச தோன்றுகிறதா என்று கத்தலாக கேட்க தோன்றியது.

"அவ என்னுடையவ. அவளை வெறுக்க உங்களுக்கு என்ன ரூல்ஸ் இருக்கு? அவ என்னுடைய மகா ராணி. அவளை பிச்சைக்காரின்னு சொல்றிங்க.." என்றவன் எழுந்து நின்றான்.

சிவந்த கண்களிலிருந்து சிந்திய கண்ணீரை துடைத்தான்.

"வருண் போலிஸ்க்கு போன் பண்ணு.." என்றான்.

காந்திமதி தன் மகனை நக்கலாக பார்த்தாள்.

"போலிசா? நான் தப்பு செஞ்சேன்ங்கறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?" எனக் கேட்டாள்.

"இவளோட அக்கா வந்து சாட்சி சொல்ல போறாளா? அப்படியே சொன்னாலும் அதுல என்ன குற்றம் இருக்கு? ஆதாரம் இருக்கு? அவளை யார் என் பேச்சை கேட்டு ஓடி போக சொன்னது?" தனது கழுத்தை தடவி விட்டுக் கொண்டு சொன்னாள்‌ காந்தமதி.

"செய்றதையும் செஞ்சிட்டு அகங்காரமா பேசுறிங்களா?" எனக் கேட்ட ஆதீரன் அம்மாவை அடிக்க பாய்ந்தான். நடுவில் வந்து புகுந்து நின்ற வருண் "எதுவா இருந்தாலும் பேசிக்கலாம். அம்மாவை அடிக்காதே. ப்ளீஸ்.." என்றுக் கெஞ்சினான்.

"அம்மாவெனும் உயர்ந்த பதவியில் இருப்பவங்ககிட்ட கோபத்தை காட்ட முடியாது இல்ல.?" கசப்பாக சிரித்தபடி கேட்டான் ஆதீரன்.

சித்தியின் கை பற்றினான் வருண். 

"நீங்க செஞ்ச தப்பு சின்ன தப்பு கிடையாது சித்தி. ரொம்ப மோசமா நடந்திருக்கிங்க நீங்க. ஆனா நீங்க இப்ப இங்கே இருந்தா இவன் நிச்சயம் கை நீட்டிடுவான். இங்கிருந்து போங்க. உங்களுக்கு இழப்பு என்னன்னு புரிஞ்ச பிறகு நீங்களே இவனை தேடி வந்து மன்னிப்பு கேட்பிங்க.." என்று சொன்னான்.

"அவங்களை அப்படியெல்லாம் அனுப்ப முடியாது. எனக்கு இப்பவே இங்கேயே குந்தவி வந்தாகணும். இல்லன்னா நான் செத்து போவேன்.." குழந்தையை போல அடர் பிடித்தான் ஆதீரன்.

வருண் பொறுக்க முடியாமல் ஒரு அறையை தந்தான் அவனுக்கு.

"அவ ஓடி போனதும் அவளை கண்டுபிடிக்க டைம் தேடாம, அவளோட தங்கச்சியை கல்யாணம் பண்ணி வந்தது நீ. உன் அம்மா இதுல செஞ்ச தப்பு வெறும் ஒரு சதவீதம். ஆனா மீதி தொண்ணூத்தியொன்பது சதவீத தப்பை நீ செஞ்சி இருக்க.. உன் மேல இருக்கும் தப்புக்கு முதல்ல உனக்கு நீயே தண்டனை கொடு. அப்புறம் சித்திக்கு தண்டனை தருவ.." என்ற வருண் காந்திமதியின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ஆதீரன் தனது தலைமுடியை பிடித்து இழுத்தான். பற்களை கடித்தபடி கோபத்தையும் கண்ணீரையும் அடக்க முயன்றான். 

"சங்கவி பாப்பா.." பவளத்தின் குரல் கேட்டு திரும்பி பார்த்தான்.

கேவி கேவி அழுதுக் கொண்டிருந்த சங்கவியின் முகம் வேறு மாதிரி இருந்தது. மூச்சடைத்தது போல முகம் சிவந்து போயிருந்தாள். அமர்ந்திருந்தவளின் கண்கள் மட்டும் சாய்வாக மூடியிருந்தது.

அவசரமாக அவளருகே மண்டியிட்ட ஆதீரன் "சங்கவி..‌ சங்கவி.." என்று அவளின் கன்னங்களை தட்டினான்.

"சங்கவி உனக்கு என்னாச்சி?" 

வாய் பேச முடியவில்லை அவளால். ஆதீரனின் குரலில் காந்திமதியின் அறையிலிருந்து ஓடி வந்தான் வருண்.

"என்னாச்சி அவளுக்கு?" அருகில் வந்து அவள் நிலை கண்டவன் "பவளமக்கா போய் தண்ணீர் கொண்டு வாங்க.." என்று அவசரப்படுத்தினான்.

சங்கவியை நெஞ்சில் சாய்த்தபடி அவளின் கன்னங்களை தட்டிக் கொண்டிருந்த ஆதீரனுக்கு பயமாக இருந்தது. இவளையும் இழந்து விடுவோமோ என்ற கேள்வி மனதுக்குள் உண்டாகி அவனை நிலை தடுமாற செய்தது.

பவளம் கொண்டு வந்து தந்த தண்ணீரை இவளின் முகத்தில் தெளித்தான் வருண். தண்ணீரை அவளுக்கு குடிக்க தந்தான்.

தண்ணீர் மட்டும்தான் கீழிறங்கியதே தவிர வார்த்தை ஒன்று கூட வெளி வரவில்லை.

"ஹாஸ்பிடல் போலாம்.." என்று வருண் சொன்ன அடுத்த நொடி சங்கவியை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தான் ஆதீரன்.

மருத்துவமனையில் அவளை சோதித்த‌ மருத்துவர் அதிர்ச்சி தாக்கி மயங்கி விட்டாள் என்று சொன்னார்.

நிலையில்லாமல் மனம் தடுமாறிக் கொண்டிருந்தான் ஆதீரன். அவன் செய்த தவறின் காரணமாக அவன் மீது ஆத்திரம் வந்தது வருணுக்கு. ஆனால் அவன் தனக்குள் உடைவதை கண்ட பிறகு ஏதோவென்று விட முடியவில்லை.

"விடு.. மனசுக்குள்ள போட்டு ரொம்ப குழம்பாத.. யோசிச்சி செய்யலாம் எதுவா இருந்தாலும். அவசரத்துல, கோபத்துல மறுபடியும் தப்பான முடிவு எடுத்துடாதே.!" என்றான்.

ஆனால் சங்கவி கண் விழித்தபோது தன் அருகில் இருக்கும் ஆதீரன் கையை அறுத்தபடி அமர்ந்திருப்பது கண்டு அதிர்ந்து போனாள்.

அதே வேளையில் மும்பையில்.. 

சந்தோஷின் முன்னால் அமர்ந்திருந்த குந்தவி "நீங்க செஞ்ச உதவிக்கு தேங்க்ஸ்.." என்றாள்.

"பரவாயில்லைங்க.. அம்மாவும் மகனும் சேர்ந்து ஒரு குடும்பத்தையே நாசம் பண்ணி இருக்காங்க.. நீங்க வெறும் ஒரே ஒரு பொய்தானே சேர்த்து சொல்ல சொன்னிங்க?" என கேட்டபடி எழுந்து நின்றான் சந்தோஷ்.

"சரிங்க நான் கிளம்பறேன். உங்க பாடியை நானே எரிச்சிட்டதா சொல்லிடுறேன்.. அவன் இதுக்கு மேலாவது திருந்துவான்னு நம்புவோம்.." என்ற சந்தோஷ் அங்கிருந்து கிளம்பி போனான்.

குந்தவி மேஜை மேல் இருந்த தேனீரை எடுத்து பருகினாள்‌.

"அவனை அணு அணுவா துடிக்க வச்சி சாகடிக்க போறேன். என் காதலை சிதைச்ச அவங்க அம்மாவும், என் குடும்பத்தை சிதைச்ச அவனும் இனி நிம்மதியா வாழவே முடியாது.." என்றாள் வன்மத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments