Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 23

 குந்தவி இருள் நிறைந்த சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள். கைகளில் ஆயுதத்தோடு ரவுடிகள் நால்வர் அவளை துரத்தினர். 

"அம்மா.." கால் தடுக்கி கீழே விழுந்தவளின் நெற்றியில் துப்பாக்கியை பதித்தான் ஒருவன். டிரிக்கரை இழுத்தான். டம்மென்று சத்தம் கேட்டது.

"அக்கா.." என கத்தியபடி எழுந்தமர்ந்தாள் சங்கவி.

தலையை துவட்டியபடி குளியலறையை விட்டு வெளியே வந்த ஆதீரன், ‌மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, மொத்த உடம்பும் வியர்வையில் நனைந்திருக்க பதட்டமாய் அமர்ந்திருந்த சங்கவியை கண்டு அருகே ஓடி வந்தான்.

"என்னாச்சி சங்கவி.?" அக்கறையோடு கேட்டான்.

வியர்வையின் காரணமாக அவளது நெற்றியில் ஒட்டிக் கொண்டிருந்த கேசங்களை காதுகளின் பின்னால் நகர்த்தி விட்டான். அவள் இன்னும் அதிர்ச்சியில் அமர்ந்திருப்பதை கண்டு மேஜையில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து நீட்டினான்.

"இந்த தண்ணீரைக் குடி.."

ஒரு லிட்டர் தண்ணீரையும் முழுதாய் குடித்து முடித்தவள் இதழ்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள். எதிரே இருந்தவனைக் கண்டு புதிதாய் அதிர்ந்தாள்.

முகம் சிவந்து தலை குனிந்தவள் "சும்மா கனவு கண்டேன்.." என்றாள்.

"ஓ சரி.." என்றவன் அவளை விட்டு நகர்ந்தான். அதன் பிறகுதான் இடுப்பில் வெறும் துண்டை கட்டியபடி அவளை நெருங்கியதைப் புரிந்துக் கொண்டான். அவளை திரும்பிப் பார்த்தான். வெட்கத்தில் சிவந்த முகத்தோடு வேறு பக்கம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

குறும் புன்னகை ஒன்று அவனின் இதழில் தானாய் உருவானது.

இவளின் அருகிலிருந்தால் தனது கஷ்டங்கள் கூட மறந்து போய்விடுகிறது என்பதைப் புரிந்து கொண்டவன் அமைதியாய் சென்று உடைமாற்றி வந்தான். அவன் திரும்ப வந்தபோது சங்கவி அந்த அறையில் இல்லை.

தனக்காய் ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த சங்கவி கட்டிலில் சோகமாக அமர்ந்தாள்.

அக்கா எப்படி இறந்திருப்பாள், எப்படியெல்லாம் துடித்திருப்பாள், எவ்வளவு அழுதிருப்பாள் என்ற எண்ணம் நெஞ்சுக்குள் புகுந்து அவளை அலைகழித்தது.

ஒருவேளை தான் கனவில் கண்டது போலவே அக்காவை கொன்று இருப்பார்களோ என்று நினைத்து உள்ளமுடைந்தாள். 

"சங்கவிம்மா.." என அழைத்தபடி உள்ளே வந்த பவளம் தன் கைகளில் இருந்த புடவைகளையும் சுடிதார்களையும் கட்டிலின் மீது வைத்தாள்.

"ஆதீரன் தம்பி இதை உங்ககிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாங்க பாப்பா.." என்றாள்.

மொத்தமாக தலையசைத்தாள் சங்கவி. அவளை சோகமாக பார்த்தபடி வெளியே நடந்தாள் பவளம்.

நெஞ்சம் தீராத பாரத்தோடு சென்று குளித்து உடைமாற்றினாள். ஆதீரன் தந்திருந்த உடையை அணிந்து கொண்டபோது பிச்சைக்காரியை போலவே உணர்ந்தாள். 

சற்று நேரத்தில் "சங்கவி" என அழைத்தபடி அங்கு வந்தான் வருண்.

"உன்னை பார்க்க போலீஸ் வந்திருக்காங்க.." என்ற தகவல் சொன்னான்.

சங்கவி கீழே வந்தாள். நொண்டி நொண்டி வந்தவளை சந்தேகத்தோடு பார்த்த சக்தி "என்னம்மா ஆச்சி.?" என விசாரித்தாள்.

தனக்கு முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த தனது மாமியாரை ஓரக்கண்ணால் முறைத்து பார்த்த சங்கவி "காலை சுட்டுக்கிட்டேன் மேடம்.. தரையில் கிடந்த சூட்டு கரண்டியை பார்க்காம மிதிச்சிட்டேன்.." என்றாள்.

அமர்ந்திருந்த காந்திமதியையும் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த ஆதீரனையும் சந்தேகத்தோடு பார்த்து சக்தி "அன்னைக்கு நீயேதானே இவனை வேணாம்ன்னு சொல்லி தாலியை கழட்டி தந்த. பிறகு ஏன் இங்கே வந்திருக்க.?" என்று கேட்டாள்.

"யோசிச்சிப் பார்த்தேன் மேடம். இவரும் வந்து என்கிட்ட சாரி கேட்டாரு. என்னை பத்திரமா பார்த்துக்கறேன்னு சொன்னாரு. எனக்கும் இந்த வீட்டை விட்டு போக வேறு இடம் இல்லை. இவங்களை விட்டா வேற சொந்தமும் இல்லை.." என்றாள் சோகத்தோடு. அவளின் விழிகள் கலங்குவதை கண்டு ஆதீரனுக்கு கஷ்டமாக இருந்தது.

"பணத்துக்காக நீ இங்க திரும்பி வரல இல்லையா.? அப்படி பணம்தான் பிரச்சனைன்னா சொல்லு.. நான் கூட பணத்தை தரேன்.." என்றாள் சக்தி.

ஒரு வாரம் முன்பு தன் தாய் இறந்த அன்று இந்த ஒரு வார்த்தைக்காக எப்படியெல்லாம் கதறி அழுது இருப்போம் என்று நினைத்து பார்த்தவளுக்கு காலம் கடந்து கிடைத்த இந்த உதவி வருத்தத்தைதான் தந்தது. 

"இல்ல மேடம். பணம் பிரச்சனை இல்ல‌. நானே விருப்பப்பட்டுதான் இங்கே இருக்கேன்.."

ஆதிரனின் வாடிய முகம் சக்திக்கு வேறு ஏதோ செய்தியைச் சொன்னது. 

"இவங்க உன்னை மறுபடியும் கொடுமை செய்றாங்களா.?" சந்தேகத்தோடு கேட்ட சக்தியிடம் இல்லை என தலையசைத்தாள் சங்கவி.

சக்தி யோசனையோடு எழுந்து நின்றாள்.

"சரிம்மா நான் கிளம்பறேன். உனக்கு எந்த பிரச்சினையா இருந்தாலும் உடனே என்கிட்ட சொல்லு.. நான் உனக்கான உதவியை செய்றேன்.." என்று உறுதி கூறிவிட்டு கிளம்பினாள்.

"தேங்க்ஸ் சங்கவி.." என்ற ஆதீரன் தனது கைபேசி எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். டிடெக்டிவ் நண்பன் சந்தோஷுக்கு அழைத்தான்.

"நான் கிளம்பி வந்துட்டு இருக்கேன் சந்தோஷ். பாடி போஸ்ட் மார்டம் முடிஞ்சி வந்திடுச்சா.?" என கேட்டான்.

சாலையோரத்தில் இருந்த உணவகம் ஒன்றில் அமர்ந்து குளிர் பானத்தை குடித்து கொண்டு இருந்த சந்தோஷ் கையிலிருந்த கோப்பையைக் கீழே வைத்துவிட்டு போனை குழப்பத்தோடு பார்த்தான்.

இந்த விசயத்தை மறந்து விட்டோமே என நினைத்தவன் "இல்ல பரவால்ல ஆதி. நீ வர தேவையில்ல. நானே அவளுடைய பாடிய வாங்கி எரிச்சிட்டேன்.." என்றான்.

வாசல் படிகளில் நின்றிருந்த ஆதீரன் உடைந்து அமர்ந்தான்.

"கடைசியில் அவ முகத்தை கூட என்னால பாக்க முடியாம போச்சி. நீ சொன்ன உடனே நான் நேத்தே கிளம்பி வந்திருக்கணும் சந்தோஷ். நான்தான் தப்பு பண்ணிட்டேன். நான் செஞ்ச தப்பாலதான் குந்தவி செத்துப் போனான்னு நினைச்சி பீல் பண்ணிட்டு இருந்ததால அவளுக்கு கடைசி வார்த்தை சொல்லி இறுதிப்பயணம் அனுப்பி வைக்கணும்ங்கறதை கூட மறந்துட்டேன்.. கடைசி வரைக்கும் நான் ஒரு நல்ல காதலனா நடந்துக்கல சந்தோஷ்.." என்றான் வருத்தத்தோடு.

"நீ இப்படி ஃபீல் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் அவளுக்கு இறுதி சடங்கை நடத்தியிருக்க மாட்டேன் ஆதி.. மூனு நாள் முன்னாடியே இறந்துட்டா. பாடி அழுக ஆரம்பிச்சுடுச்சி. அதனாலதான் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சி வந்த உடனே அவசர அவசரமா மின்தகனம் பண்ணிட்டேன். சாரி.. ரியலி சாரி ஆதி.." 

"பரவால்ல விடு சந்தோஷ். நீ ஏன் சாரி கேக்கற.? எனக்கு உதவிதானே பண்ணியிருக்க.?" என்றவன் "அப்படியே சீக்கிரமா என்னோட மாமனார் மாமியாரை ஆக்சிடெண்ட்ல அடிச்சது யார்ன்னு கண்டுபிடிச்சி சொல்லு.." என்றுவிட்டு போனை வைத்தான்.

மூளையை செயல்படாமல் போனது போல இருந்தது ஆதீரனுக்கு.

சங்கவி தன் தந்தையை பார்க்க கிளம்பினாள். காலை நேரத்திலேயே கிளம்பியவள் மாலை வரையிலும் அவர் அறையின் வாசலிலேயேதான் அமர்ந்திருந்தாள்.

"அக்கா இறந்துட்டா அப்பா. அம்மாவும் இறந்துட்டாங்க. நீங்க கண் விழிச்ச பிறகு சொல்றதுக்கு என்கிட்ட இரண்டு துக்க செய்தி மட்டும்தான்ப்பா இருக்கு.." என்று மனதோடு சொல்லி அழுதாள்.

உணவை மறந்து சோகத்தில் அமர்ந்திருந்தவள் தன் தோளில் கரமொன்று படுவதை கண்டு நிமிர்ந்தாள். ஆதீரன் நின்று கொண்டிருந்தான்.

"மணி ஒன்பதாச்சி சங்கவி. இன்னும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்க.?" என கேட்டான். இருள் வந்ததையே அதன் பிறகுதான் அறிந்தாள் சங்கவி.

"சாரி.." என்றபடி எழுந்தவள் வெளியே நடந்தாள்.

காரை இயக்கினான். வந்து அமர்ந்தவள் இருளை வெறித்தாள்.

"உங்க அப்பா எப்படி இருக்காரு?" கனிவான குரலில் கேட்டான். இவனால் இவ்வளவு அன்பாக கூட பேச முடியும் என்பதையே இன்றுதான் தெரிந்து கொண்டாள் சங்கவி.

"டாக்டர்ஸ்க்கே தெரியல. அவர் எப்போது எழுவார்ன்னு தெரியல. ஆனா அவரோட உயிருக்கு பிரச்சனை இல்லன்னு சொல்லியிருக்காங்க.." 

அவளின் கையைப் பற்றியவன் "பயப்படாதே.. அவர் சீக்கிரம் குணமாகிடுவாரு.." என்றான்.

இருவரும் வீட்டிற்கு சேர்ந்து வந்ததை முறைத்தபடி பார்த்தாள் காந்திமதி‌. அவளின் கண்களை தோண்டி எடுக்க வேண்டும் போல கோபம் வந்தது சங்கவிக்கு.

சங்கவியை சாப்பிட வைத்து, மாத்திரை விழுங்க வைத்து, அவளது அறையில் விட்டுவிட்டு நடந்தான் ஆதீரன். 

"உங்க அம்மா மறுபடியும் வந்து என்னை தொல்லை செஞ்சா என்ன செய்றது.?" அவன் அந்த அறையை தாண்டும் முன் கேட்டாள் சங்கவி.

திரும்பி வந்து அவளின் அருகே அமர்ந்தான். அவளின் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.

"நீ எதுக்கும் பயப்பட தேவையில்லை. நான் செஞ்ச அத்தனையும் மறந்துடு. தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடு. என் அம்மா தேவையில்லாம உன்னை நெருங்கினாவோ, உன்னை ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலோ உடனே என்கிட்ட சொல்லு. நான் பார்த்துக்கிறேன்.." என்றான்.

சங்கவி சரியென்று தலையசைத்தாள். அவளின் தலையை வருடிவிட்டு எழுந்து நின்றவன் "சாரி.." என்று சிறு குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மறுநாள் மதியத்தில் வருணோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் சங்கவி.

"நீ ஆதியை மன்னிச்சிட்டியா சங்கவி.?"

நிமிர்ந்து அவனை பார்த்த சங்கவி மீண்டும் தலை குனிந்து கொண்டாள். 

மௌனமாய் இருந்தவளை குழப்பத்தோடு பார்த்தவன், "பரவாயில்லை என்கிட்ட சொல்லு. என் முழு சப்போர்ட்டும் உனக்கு மட்டும்தான் இருக்கும்.." என்றான்.

முன்பென்றால் கண்டிப்பாக சொல்லி இருப்பாள். ஆனால் இப்போது அனைத்தையும் இழந்த மனநிலையில் இருந்தவளுக்கு ரிஸ்க் எடுப்பதில் விருப்பமில்லை.

"உண்மையிலேயே நான் அவரை மன்னிச்சிட்டேன். ஏன்னா எனக்கு அதைத் தவிர வேறு ஆப்சன் இல்லை. எனக்கு ஏன் அப்பாவோட உயிர் மட்டும்தான் முக்கியம்.." அதே பழைய பல்லவியைப் பாடினாள்.

வருண் தனது சந்தேகத்தை கேட்கும் முன்பே "என் அப்பாவை குணப்படுத்த இன்னும் நிறைய பணம் செலவாகும். என்கிட்ட அவ்வளவு பணம் கூட இருக்கலாம். ஆனா அதையெல்லாம் தனியா நின்னு செய்யுற அளவுக்கு என்கிட்ட தைரியமும் தெம்பும் இல்ல. அவர் இந்த விசயத்துல எனக்கு உதவி செய்வார்ன்னு நம்புறேன்.." என்றாள்.

அவள் சொன்னது அவனுக்குப் புரிந்திருந்தது.

"பரவாயில்ல சங்கவி. நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே.." என்றான்.

அன்று மாலையில் ஆதிரன் வீடு திரும்பியிருந்தபோது ஹாலில் வேலைக்காரர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். குழப்பத்தோடு அருகே சென்று பார்த்தான். சங்கவி தன் வலது தோளை பற்றியபடி அமர்ந்திருந்தாள். கண்ணீர் ஆறாகப் பெருகி இருந்தது. வருண் என்ன நடந்தது என்று அவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தான். சங்கவி அழுதபடி சொல்ல முடியாது என்று தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். 

ஆதிரன் அவளருகே ஓடினான். 

"என்னாச்சி சங்கவி.?" என்றான் பதட்டத்தோடு.

அவனை நிமிர்ந்து பார்த்த சங்கவி அதிகமாக அழுதாள்.

"என்னாச்சிம்மா.?" என கேட்டவன் வேறு பக்கம் திசை மாறி இருந்த அவளது கரத்தை குழப்பத்தோடு பார்த்தான். வீங்கிப் போய் இருந்தது அந்த கை. நெற்றியிலும் வீங்கி இருந்தது. நெற்றியின் ஓரத்தில் கொஞ்சமாக ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.

"உன் கைக்கு என்னாச்சி.? உன் நெத்தியிலிருந்து ஏன் ரத்தம் வருது.?" என கேட்டவன் அவளின் நெற்றியில் இருந்த ரத்தத்தை துடைத்து விட்டான்.

"நாங்களும் இந்த இரண்டு நிமிசமா இதைதான் கேட்டுட்டு இருக்கோம். வாயை திறக்க மாட்டேங்கிறா.." என்று சொன்னான் வருண். 

இடது கையால் முகத்தை மூடியபடி அழுத சங்கவியின் முகத்தை நிமிர்த்தினான் ஆதீரன்.

"என்னாச்சி.?" என்றான் அதட்டல் குரலில்.

"உங்க அம்மா என்னை மாடிப் படியில் இருந்து தள்ளி விட்டுட்டாங்க.. கை பிசகிடுச்சி போல. ரொம்ப வலிக்குது.." என்றாள் விம்மியழுதபடி.

சட்டென்று அவளை பாய்ந்து தூக்கிக்கொண்ட ஆதீரன் "ஹாஸ்பிடல் போகலாம்.." என்றான் வருணின் புறம் திரும்பியவன் "போலிசுக்கு போன் பண்ணிடு வருண்.." என்றான்.

மாடியின் மேல் படியில் நின்றபடி மகன் சொன்னதை கேட்ட காந்திமதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. மகன் தன்னை உண்மையிலேயே போலிசில் பிடித்து‌ தந்து விடுவானோ என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு. 

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE 

COMMENT 

SHARE 

FOLLOW

Post a Comment

0 Comments