Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 25

 தன் முன் வந்து நின்ற குந்தவியை நிமிர்ந்து பார்த்தாள் வரவேற்பு மேஜையின் அந்த புறம் நின்றிருந்த பெண். அவளின் நெஞ்சில் குத்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டையில் தியா என்று பெயர் இருந்தது.

"என்ன வேணும்?"

"இங்கே ஏதாவது வேலை கிடைக்குமா?" தயக்கத்தோடு கேட்டாள் குந்தவி.

தியா இல்லையென தலையசைத்தாள்.

"ஏதாவது வேலை காலியான விளம்பரம் தருவோம்‌.  அப்ப வந்து கலந்துக்கோங்க.." 

குந்தவி ஏக்கமாக அந்த நிறுவனத்தை பார்த்தாள். கணினி உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் அது. இங்கே ஏதாவது ஒரு சாதாரண வேலையாவது வாங்கி விட வேண்டும் என்று தோன்றியது. அதே சமயத்தில் இருக்கும் பணத்தை நான்கு, நாற்பது மடங்காக மாற்ற வேண்டும் என்றும் தோன்றியது‌.‌ குழப்பத்தோடுதான் வந்து கேட்டிருந்தாள். வேலையும் இல்லாமல் போய் விட்டது.

"தேங்க்ஸ்.." என்று விட்டு வெளியே வந்தாள்.

மீண்டும் அந்த நிறுவனத்தை ஏக்கமாக பார்த்தாள்.

ஹோட்டல் நோக்கி நடந்தாள். ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு தேவையான வாடகை பணத்தை செலுத்தி விட்டுதான் சென்றிருந்தான் அவன். அதனால் இன்னும் சில நாட்களுக்கு தங்கும் பிரச்சனை இல்லை.

கையிலிருக்கும் கடிதத்தை அவ்வபோது எடுத்து பார்த்தாள். அந்த எண்ணுக்கு அழைக்கலாமா என்று யோசித்தாள். தவறென்று நினைத்து மீண்டும் அதை வைத்துக் கொண்டாள்.

தினம் இப்படிதான் போய் கொண்டிருக்கிறது. 

யோசித்துப் பார்த்தாள். அவளிடம் ஆதாரமென்று எந்த காகிதமும் இல்லை. ஒரு சாதாரண வோட்டர் ஐடி கூட இல்லை. எப்படி என்ன செய்வது என்று புரியவில்லை. போலிஸ் நிறுத்தி கேட்டால் கூட பதில் சொல்ல முடியாது. அந்த நிலையில்தான் இருந்தாள்.

ஹோட்டலுக்கு செல்ல இருக்கும் குறுக்கு வழிப்பாதையில் நடந்தாள். இந்த நிறுவனத்தை தினமும் வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். இன்றேதான் உள்ளே நுழைந்திருந்தாள். 

சிறு காற்று வந்து முகத்தை மோதியது. அருகே இருந்த பழைய பேக்டரி ஒன்றிலிருந்து சுண்ணாம்பின் வாசனை வந்துக் கொண்டிருந்தது.

'பைனான்ஸ்..' என்ற சொல் மனதுக்குள் வட்டம் அடித்துக் கொண்டிருந்தது. 

யோசனையோடு நடந்தவள் தன்னை யாரோ மோதியது கண்டு திரும்பினாள்.. இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். பின்னால் திரும்பி பார்த்தான். பின்னர் இவளை பார்த்து "சாரி.." என்று சொல்லிவிட்டு இவளுக்கும் முன்னால் ஓடினான்.

குந்தவி திரும்ப இருந்த நேரத்தில் கையில் வெட்டுக் கத்திக்களோடு சிலர் ஓடி வருவது கண்டு பயந்து போனாள். அவளை தாண்டிக் கொண்டு ஓடினார்கள் அவர்களும். குழப்பத்தோடு முன்னால் திரும்பிப் பார்த்தாள். இவளை மோதிய அந்த இளைஞன் தன்னை துரத்திய கூட்டத்தை கண்டு விட்டு பயந்து ஓடிக் கொண்டிருந்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். முற்பகல் வேளை. ஆங்காங்கே இருந்த ஒரு சிலர் தங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல இருந்தார்கள்.

தனக்கும் கூட சம்பந்தம் இல்லை என்று நினைத்துக் கொண்டவள் நடந்தாள். முப்பதடி நடந்திருப்பாள். பாதை வளைந்தது. திரும்பினாள். வெட்டுக் கத்தி, உருட்டு கட்டையோடு இருந்த நால்வரும் அந்த இளைஞனை சராமரியாக வெட்டிக் கொண்டிருந்தனர்.

அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் குந்தவி. அந்த பாதையில் ஒருவரும் இல்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று ஏற்கனவே இடத்தை காலி செய்து வைத்திருந்தார்களோ என்னவோ.?

ரத்த வெள்ளத்தில் அவன் மயங்கிய பிறகு அவர்கள் நால்வரும் இவளின் புறம் பார்த்தனர். கேலியாக நகைத்தபடி அருகே இருந்த தொழிற்சாலை ஒன்றின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து ஓடினர்.

குந்தவி என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள். அவனை கடந்து போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் தன் கண் முன் உயிர் ஒன்று போக கிடப்பதை கண்ட பிறகும் அவளால் அமைதி காக்க முடியவில்லை. நொடி நேரம் யோசித்தாள். தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு அவனை நோக்கி ஓடினாள்.

தோளிலும், வயிற்றிலும், கால்களிலும் வெட்டுக் காயங்கள் இருந்தது. உருட்டு கட்டையால் அடிக்கப்பட்டதால் தலையிலிருந்தும் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.

"ஹலோ.." என்றாள் அவனருகில் சென்று அமர்ந்து.

"ப்ளீஸ்.. ஸ்டே வித் மீ.." தலையிலிருந்து சொட்டிய ரத்தம் அவனின் இமைகளை தாண்டி வழிந்தது. அரை கண்களை திறந்து கொண்டிருந்தவன் இவளை பார்வையால் கெஞ்சினான்.

"நான்.. ஐ கால் த ஆம்புலன்ஸ்.." என்றவள் பிறகுதான் யோசனை வந்தவளாக நிமிர்ந்தாள். "சாரி.. ஐ டோன்ட் ஹேவ் போன்.. ஐ யம் கோயிங் டூ லுக் பார் த போன்.." என்றவள் அங்கிருந்து நகர நினைத்து எழுந்தாள்.

அவள் செல்லும் முன் அவளின் கையை பற்றினான் அவன். திரும்பி பார்த்தாள்.

"தேவையில்ல.. கொஞ்ச நேரம் கூட இரு.. ப்ளீஸ்.. கொஞ்சம் நிமிசங்கள்.." திக்கி திணறி பேசியவனை கண்டு குழம்பாமல் இருக்க முடியவில்லை அவளால்.

"ஆ.. ஆனா நீங்க செத்துட்டு இருக்கிங்க.."

"ஐ நோ‌.." என்றவன் ரத்தம் வழியும் தோளை பற்றினான். குந்தவி தயக்கத்தோடு தனது துப்பட்டாவை நீட்டினாள்.

"தேங்க் யூ‌.‌." என்றவன் அவளின் துப்பட்டாவை வாங்கி தோளில் அழுத்தி பிடித்தான். ஆனால் மற்ற இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டுதான் இருந்தது‌.

"உங்ககிட்ட போன் இருந்தா அதையாவது கொடுங்க.. ஆம்புலன்ஸ்க்கு போன் பண்றேன்.. சீக்கிரம் உங்களை காப்பாத்தியாகணும்.. இல்லன்னா இறந்து போவிங்க.."

இடம் வலமாக தலையசைத்தவன் பதில் சொல்லும் முன் இரண்டு கார்களும், ஆம்புலன்ஸ் ஒன்றும் அங்கே வந்து நின்றது. சீருடை அணிந்த ஆட்கள் சிலர் இறங்கி வந்தனர்‌. 

"பாஸ்.." என்றவர்கள் அவனை ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

"சாரி.. பாஸ்.. லேட்டா வந்துட்டோம்.." 

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டவன் கதவு சாத்தப்படும் முன் இவளை பார்த்தான். புன்னகைத்தான். இவள் சிலையாய் நின்றாள். "தேங்க் யூ.." என்றான் உதடசைத்து.

"மேடம், டூ வாண்ட் எனி ஹெல்ப்.?" சீருடை அணிந்தவர்களில் ஒருவன் கேட்டான்.

மறுப்பாக தலையசைத்தாள் குந்தவி.

"தேங்க் யூ மேம்.." என்றவன் காரில் ஏறினான். சற்று நேரத்தில் அந்த இடத்திலிருந்து காரும், ஆம்புலன்ஸும் கிளம்பி போனது.

குந்தவி தனது இடது கரத்தினை பார்த்தாள். ரத்த கறையோடு அவன் பற்றியிருந்த இடம் தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரையும் காணவில்லை.

பெருமூச்சு விட்டபடி ஹோட்டல் இருந்த இடம் நோக்கி நடந்தாள்.

***

சங்கவி தனது அறையில் அமர்ந்திருந்தாள். ஒற்றை கையால் மாத்திரையை பிரித்தாள். தண்ணீரையும் மாத்திரையையும் மாறி மாறி பார்த்தவள் பவளத்தை அழைக்க எண்ணிய நேரத்தில் உள்ளே வந்தான் ஆதீரன்.

அவளின் நிலை கண்டவன் அருகே வந்து மாத்திரையையும் தண்ணீரையும் வாங்கினான். அவனே அவளுக்கு மாத்திரையை போட்டு விட்டு தண்ணீரை தந்தான். அவளுக்கு அக்காவின் நினைவுதான் வந்தது. அவள் எப்போதும் இப்படிதான் கவனித்துக் கொள்வாள். காய்ச்சல் சளி என்றால் கூட துடித்து போவாள். தங்கையை விட்டு பிரியாமல் இருக்க முயல்வாள்.

"என் காய்ச்சல் உனக்கும் வந்துடும் அக்கா.." என்று இவள் சொன்னால் "பரவால்ல.." என்றபடி இவளை அணைத்துக் கொண்டு உறங்குவாள்.

சங்கவியின் முகம் மாறியது கண்ட ஆதீரன் "கை ரொம்ப வலிக்குதா சங்கவி?" என விசாரித்தான்.

"உடம்பே முழுக்கதான் வலிக்குது.." என்று முனகியவள் "இல்ல‌‌.." என்றாள் அவனிடம். ஆனால் அவள் முனகியது அவனுக்கும் கேட்டு விட்டது. 

"நீ படுத்துக்க சங்கவி.." என்றவன் அவளுக்காய் தலையணையை எடுத்து சரியாய் வைத்தான்.

"எனக்கு என் அக்கா வேணும்.." இதழ் கடித்தபடி தலை குனிந்து சொன்னாள்.

அவன் உணர்ச்சிகளற்று அவளை பார்த்தான். 

"தெரியும்.. ரொம்ப சில்லறைதனமா இருக்குன்னு.. ஆனா முடியல. என் அக்கா செத்திருக்க மாட்டாளோன்னு தோணுது. அவ என்னை மாதிரி இல்ல. ரொம்ப தைரியசாலி. என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு தெரிஞ்ச பிறகு அவளால சாக முடியாது. என்னை மீட்கதான் ஓடி வருவா.. அதையும் மீறி.." என்று தயங்கியவள் "அதையும் மீறி அப்படியொரு முடிவை அவ எடுத்திருந்தா அவளுக்கு எந்த திசையிலுமே வழியில்லன்னு அர்த்தம்.. அவளுக்கு அப்படியொரு நிலையை நீங்கதான் உருவாக்கி தந்திங்க.. இதுக்கு பதிலா நீங்க என்னை கூட கொன்னு போட்டிருக்கலாமே.." என்று நிமிர்ந்தாள்.

அவளை சற்று அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

"அன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருக்கலாம். என்னை கொன்னு இருக்கலாம். அவ நிச்சயம் திரும்பி வந்திருப்பா.. அவ செத்திருக்க மாட்டா.." என்றவளின் கண்ணீரை கண்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அவள் விலக முயன்றாள்.

"சாரி சங்கவி.." என்றவன் அவளின் உச்சந்தலையில் தன் முகம் புதைத்தான்.

"அவ இப்படி செய்வான்னு தெரியாது.. அவ திரும்பி வருவான்னுதான் நினைச்சேன் நானும். அவ செத்து போவான்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் இப்படி பண்ணியிருக்க மாட்டேன். நானே கூட செத்து போயிருப்பேன். ஆனா அவளை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன்.." என்றவனின் குரலில் லேசாக கரகரப்பு இருந்தது.

அவளை விலக்கி விட்டுவிட்டு தள்ளி அமர்ந்தான். அவளின் கையை பற்றினான்.

"சாரி.." என்றான்.

அவனின் கையிலிருந்த கட்டு கண்டு உள்ளம் நெருடியது அவளுக்கு. 

"நீ தூங்கு.." என்றவன் அவளை அறையில் விட்டுவிட்டு வெளியே வந்தான்.

தனது அறைக்குள் வந்தவன் அலமாரியை திறந்தான். குந்தவியின் உடைகளை அவளின் வீட்டிலிருந்து எடுத்து வந்து வைத்திருந்தான். அவளின் புடவைகள் இருந்த வரிசையிலிருந்து ஒரு புடவையை உருவினான். அந்த புடவையில் முகம் புதைத்து சற்று நேரம் அழுதான்.

அழுது முடித்தவன் யோசிக்கவேயில்லை. நாற்காலியில் ஏறினான். மின்விசிறியில் சேலையை தூக்கி எறிந்தான். சேலையை முடிச்சிட்டான். அதே நேரத்தில் சங்கவிக்கு ஏதாவது தேவையா என கேட்க நினைத்து நடந்த பவளம் இவனின் அறையில் நாற்காலி விழும் சத்தம் கேட்டு குழம்பினாள். கதவை தள்ளினாள்.

"தம்பி.." என்று அழைத்தாள். ஒரு சத்தமும் வரவில்லை. உள்ளம் ஏனோ அடித்துக் கொண்டது.

"தம்பி.." கதவை படபடவென தட்டினாள்.

காந்திமதியின் அறையிலிருந்து வெளியே ஓடி வந்தான் வருண். சித்திக்கு தனக்கு எதிராக வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறாளா என தேடி கொண்டிருந்தவன் இவளின் குரலில் வந்திருந்தான்.

"என்னாச்சிக்கா?"

"என்னவோ விழுந்த சத்தம் கேட்டது.. ஆனா கதவு திறக்க மாட்டேங்கிறாரு.. பயமா இருக்கு.."

பவளத்தின் கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்த சங்கவி ஒன்றும் புரியாமல் நின்றாள்.

வருண் அவசரமாக கதவை தள்ளினான். காந்திமதியின் அறைக்கு சென்று சாவிகளை எடுத்து வந்தான். இந்த அறையினை திறந்தான். 

உள்ளே அவன் இருந்த நிலை கண்டவன் நெற்றியில் அடித்துக் கொண்டு ஓடினான். அவனை தூக்கி பிடித்தான். பவளம் அழுதாள்.

அறையின் வாசலில் நின்றிருந்த சங்கவிக்கு உடம்பு நடுங்கியது.

"இந்த சேலையை கொஞ்சம் கட் பண்ணி விடுங்க அக்கா‌.." 

சகோதரனின் பாரம் தாங்க முடியாமல் சொன்னான் வருண்.

சுற்றும் முற்றும் பார்த்த பவளம் மேஜை மேல் இருந்த கத்தியை எடுத்து வந்தாள். நாற்காலியை போட்டு ஏறி துணியை தன்னால் முடிந்த அளவு வேகமாக அறுத்து எறிந்தாள்.

சகோதரனோடு வருணும் சேர்ந்து கீழே விழுந்தான். அவனின் கழுத்திலிருந்த சேலையை உருவி எறிந்தான். கழுத்தை சுற்றி காயமாகி ரத்தம் கொஞ்சம் கசிந்துக் கொண்டிருந்தது.

"தண்ணீர்.." வருண் கேட்டதும் எடுத்து வந்து தந்தாள் பவளம்.

சகோதரனுக்கு தண்ணீரை தந்தான். மறுப்பாக தலையசைத்தான் அவன். அவனின் கன்னத்தில் ஒரு அறையை விட்டான் வருண்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments