Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 26

 சங்கவி கை கால்கள் நடுங்க கதவை துணையாக பிடித்து நின்றிருந்தாள். 


'ஏன் இவன் இப்படி செய்றான்? இன்னும் சில நிமிசங்கள் பார்க்காம விட்டிருந்தா செத்திருப்பான். இந்த விதியோட கோர போராட்டத்துல சிக்கி சாகறேன் நானும்..' உள்ளுக்குள் கலங்கிக் கொண்டிருந்தாள்‌. உண்மையில் இதயமும் நடுங்கியது அவளுக்கு. அவனை கொல்ல வேண்டும் என்று தோன்றிய அதே நேரத்தில் அவனின் மரணத்தையும் வெறுத்தாள். 


"தண்ணியை குடி‌. இல்லன்னா உன்னை அடிச்சே கொன்னுடுவேன்.." ஆதீரனை மிரட்டி தண்ணீரை தந்தான் வருண்.


"என்னை சாக விடுடா.." என்றவனின் கன்னத்தில் விசையாய் ஒரு அறையை தந்தான்.


"செய்றதெல்லாம் தப்பே. ஒரு முடிவு ஒழுங்கா எடுக்க தெரியுதா? வில்லன் மாதிரி திரிஞ்சா மட்டும் போதாது. கொஞ்சமாவது அறிவை யூஸ் பண்ணணும்.." திட்டியபடியே அவனுக்கு தண்ணீரை குடிக்க தந்தான். வலுக்கட்டாயமாக குடிக்க செய்தான்.


"இந்த சேலையை நெருப்பு வச்சிடுங்க அக்கா‌‌.." என்றவன் கூரையை பார்க்க, "ஐயோ வேணாம். அது குந்தவியோடது.." என்று பதறினான் ஆதீரன்.


வருண் சகோதரனை முறைத்தான்.


"சாகடிச்சிடுவேன் பார்த்துக்க.. இந்த மாதிரி யூஸ் பண்ணதை வீட்டுல வைக்க கூடாது. ஆகாது.." என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.


ஆதீரனை தாங்கி பிடித்து விழுந்ததில் அவனின் இடுப்பு பகுதி பிடித்துக் கொண்டது. ஒற்றை கையால் இடுப்பை பற்றியவன் சகோதரனுக்கு கை தந்தான்.


தயக்கத்தோடு எழுந்து நின்றான். இருக்கையில் அமர்ந்த வேளையில் எதேச்சையாக பார்த்தான். கன்னம் நிறைந்த கண்ணீரோடு வாசற்படியில் நின்றிருந்தாள் சங்கவி.


முகத்தை மூடிக் கொண்டான். 


வருண் சங்கவியை திரும்பிப் பார்த்தான்.


"செஞ்ச தப்பையோ, முடிஞ்ச நேரத்தையோ எப்பவுமே திருப்ப முடியாது. தயவு செஞ்சி இருக்கும் நேரத்தை பாருங்க. இப்படி சாகாதிங்க. கூட இருப்பவங்களையும் சாகடிக்காதிங்க. யாராவது சாகறது மூலமா செத்து போன இன்னொருத்தரை திரும்ப கொண்டு வர முடியும்ன்னா சொல்லுங்க.. நானே உங்களை சாக விடுறேன்.." என்று திட்டினான்.


வருண் சொன்னது சங்கவியின் காதுகளில் ஏறவே இல்லை. அவளின் பார்வை முழுக்க ஆதீரனின் கழுத்தை சுற்றிய காயத்தின் மீதே இருந்தது. மரணத்தை தொட்டு வந்த அவனின் குற்ற உணர்வின் மீதே இருந்தது.


நாற்காலியில் ஏறி மீதி புடவையையும் அவிழ்த்தான் வருண். 


புடவையை வெறித்தாள் சங்கவி. அக்காவின் புடவை. தேர்ந்தெடுத்தது இவள்தான். 


புடவை துண்டுகளை பவளத்திடம் நீட்டினான் வருண்.


சூழ்நிலையே ஒரு மாதிரி இருந்தது. சங்கவியால் அங்கே நிற்க முடியவில்லை. நொண்டியபடி தனது அறைக்கு வந்து விட்டாள். படுக்கையில் ஏறி தலை சாய்ந்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு விசயமும் மனதில் சரியாய் நிற்கவில்லை.


அக்காவின் மரணத்திற்கு இவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் சுக்கல் சுக்கலாக சிதறிக் கொண்டிருந்தது. 


'அவசரத்தில் முடிவெடுத்து உன் கழுத்தில் தாலியை கட்டி விட்டான். முட்டாள்தனமாக முடிவெடுத்து விட்டான். ஆனால் உன் அக்காவின் மீது அவன் வைத்த காதல் உண்மை..' என்று அவளிடமே திருப்பி பேசியது மனசாட்சி.


தான் அக்கா வேண்டுமென்று கேட்டால்தான் அவன் இப்படியொரு முடிவு எடுத்தானா என்று குழம்பினாள். அவனை தூண்டி விட்டதற்காக தன் மீதே கோபம் வந்தது. தன் மனதின் நிலைப்பாடு அவளுக்கே புரியவில்லை.


தலைக்குள் கேட்கும் சத்தம் ஓயாமல் இருந்தது. விழிகளை மூடினாள். இதயத்தின் மீது நான்கைந்து யானைகள் ஏறி நிற்பது போலிருந்தது.


வருண் அன்று முழுக்க ஆதீரனின் அருகிலேயேதான் இருந்தான். சங்கவியை நினைத்தும் அவனுக்கு பயமாக இருந்தது. பவளத்தை அவளுக்கு துணையாக அனுப்பி வைத்திருந்தான். 


ஆதீரன் இரும்பு முகமாய் இருந்தான். தலையணையில் தலை வைத்திருந்தவனுக்கு விழிகளை கூட அசைக்க பிடிக்கவில்லை. அருகில் அமர்ந்திருந்த வருண் அவனை யோசனையோடு பார்த்தான்.


"இது தப்பு.."


"ஆனா என்னால அவளை மறக்க முடியல வருண். ரொம்ப பெரிய தப்பு.."


"பண்ணிட்ட‌‌.. யார் இல்லன்னுதான். அதையே திருப்பி சொல்லாத.. உனக்கு இப்ப ஒரு பொண்டாட்டி இருக்கா. அவளை நினைச்சி பாரு. உன் மாமனார் ஹாஸ்பிட்டல்ல சீரியஸா இருக்காரு. உன் காதலியை கொல்லும் அளவுக்கு போன உன் அம்மா ஜெயில்ல இருந்தபடியே கூட சங்கவிக்கு டார்ச்சர் தர நினைக்கலாம். இவ்வளவு குழப்பத்தை வச்சிக்கிட்டு உனக்கு எப்படி சாக தோணுது? நீ செத்துட்டா உன் மாமனாரும் செத்துடுவாரு. உன் அம்மா ஜெயிலை விட்டு வெளியே வந்ததும் இந்த பொண்ணையும் கொன்னுடுவாங்க. இதான் நீ ஆசைப்படுறியா?"


ஆதீரன் மறுப்பாக தலையசைத்தான்.


"இப்படி சொல்றதுக்கு சாரி ஆதி. எனக்கே சொல்ல பிடிக்கலதான். ஆனா இந்த பிரச்சனைக்கு வேற வழி இல்லன்னுதான் சொல்றேன். சங்கவியை ஏத்துக்கோ. குந்தவியோட காதலை இவளுக்கு கொடு. அக்கா இல்லாம அம்மா இல்லாம உடைஞ்சி போயிருக்கா. நீயும் போதுங்கற அளவுக்கு டார்ச்சர் பண்ணிட்ட. அவளுக்கு கொஞ்சம் பாசத்தை கொடு. ரொம்ப நொந்துப் போயிருக்கா. உங்களுக்கு நீங்களே துணை நின்னாதான் உங்களோட பிரச்சனையிலிருந்து வெளியே வர முடியும். புரிஞ்சிக்க டிரை பண்ணு. உனக்கு இது கஷ்டம்ன்னு தெரியும். ஆனாலும் டிரை பண்ணு.." என்றவன் அவனின் கழுத்தின் வீக்கத்திற்கு மருந்தை தடவி விட்டான்.


இரவு சகோதரனோடு தூங்கினான் வருண். அப்போதும் கூட நம்பிக்கை இல்லாமல் அவனின் காலை கட்டிலோடு கட்டி விட்டுதான் படுத்தான்.


இரவெல்லாம் குந்தவி குந்தவியென்றே மனதுக்குள் குரல் கேட்டது ஆதீரனுக்கு.


மறுநாள் காலையில் தன் அறையின் ஜன்னலருகே அமர்ந்து வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் ஆதீரன். வருண் சற்று முன்தான் குளித்து வருகிறேன் என்று சென்றிருந்தான்.


அரவம் கேட்டு திரும்பினான் ஆதீரன். தயங்கியபடியே அவனது அறைக்குள் வந்தாள் சங்கவி. 


அவளோடு பேசும் சக்தியற்று அவளின் முகம் பார்த்தான். நொண்டியபடி அவனின் அருகே வந்து நின்றவள் "பவளம் அக்காவுக்கு போன் பண்ணி தரிங்களா?" எனக் கேட்டாள். 


இயல்பாய் புருவம் சுருக்கினான். 


தயங்கியவள் "அவங்க காய்கறி மார்க்கெட் போயிருக்காங்க.. எப்ப வருவாங்கன்னு கேட்கணும்.." என்றாள் தரையை பார்த்தபடி.


மேஜையை பார்த்தான். திரும்பி பார்த்தாள். அவனின் போன் இருந்தது. போனை எடுத்து வந்து தந்தாள். அவள் மேஜையை தொட்டு திரும்பும் வரை அவளின் பாதத்திலேயே கண்ணாக இருந்தான் அவன்.


பவளத்திற்கு அழைத்து அவளிடம் தந்தாள். இடது கையால் வாங்கிக் கொண்டாள்.


"அக்கா எப்ப வருவிங்க?"


"இல்ல.. சீக்கிரம் வந்திங்கன்னா ஆகும்ன்னு பார்த்தேன்.."


"இல்ல.. அவங்க வேணாம். நீங்க பொறுமையா கூட வாங்க. நான் வெயிட் பண்றேன்.." 


போனை இவனிடமே திருப்பி தந்தாள். அங்கிருந்து வெளியே நடந்தாள்.


"ஏதாவது ஹெல்ப் வேணுமா?" பேசும் போது தொண்டை வலித்தது. சிரமத்தோடு பேசினான்.


திரும்பி பார்த்தவள் மறுப்பாக தலையசைத்தாள்.


"பரவால்ல சொல்லு.." என்றவன் எழுந்தான். அவளை நெருங்கி வந்தான்.


தடுமாறி பின்னால் நகர்ந்து நின்றாள். இவன் மீண்டும் அவளை நெருங்கவில்லை.


"குளிக்கணும்.. அக்கா வந்தா ஹெல்பா இருக்கும். நேத்தும் குளிக்கல. டிரெஸ் எப்படி மாத்துறதுன்னு தெரியல. கையை அசைக்கவே முடியல.." தரையை பார்த்தபடி சொன்னவள் தயக்கத்தோடு நிமிர்ந்தாள்.


"எ.. என் அக்காவோடு டிரெஸ் கொண்டு வந்து வச்சிருக்கிங்க.. அது போல எங்க அப்பாவோடதும் வச்சிருக்கிங்களா?"


கண்களை உருட்டினான் அவன்.


"சாரி.. கேனத்தனமான கேள்வின்னு தெரியும்.." என்றவள் முகம் சிவக்க தலை குனிந்தாள்.


"ஏதாவது வேணுமா? நா.. நான் வேணா குளிக்க வைக்கட்டா.?" கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு வியர்த்து விட்டது.


அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள். அவசரமாக மறுத்து தலையசைத்தாள்.


"என் அப்பாவோட சட்டை மட்டும் போதும்.."


குழப்பமாக இருந்தது அவனுக்கு.


"பிளவுஸ்‍, சுடிதார் எதையும் இந்த கையில் போட முடியாது. அப்பா சட்டை கொஞ்சம் லூசா இருக்கும்.." அவளே விளக்கம் சொன்னாள்.


புரிந்து கொண்டவன் யோசித்தான். தனது சட்டை ஒன்றை எடுத்து வந்து நீட்டினான்.‌ அவளின் உருவத்திற்கு இந்த சட்டை தொளதொளப்பாக இருக்கும் என்று புரிந்தது. 


தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள். "தேங்க்ஸ்‌.." என்றவளிடம் தலையசைத்தான்.


திரும்பி நடந்தவள் இரண்டெட்டு வைத்ததும் தயங்கி நின்றாள்.


"என்ன?" அருகே வந்து கேட்டான்.


திரும்பி பார்த்தாள். விழிகள் கலங்கி இருந்தது. 


"சா.. சாரி.. நான் இனி என் அக்காவை கேட்க மாட்டேன்.. இனி இப்படி ஏதும் செய்யாதிங்க.." அழுகை குரலில் சொன்னாள்.


அவனுக்கு உலகமே நின்று போனது போலிருந்தது. அவள் நிலையில் தான் இருந்திருந்தால் இறந்தாலும் இப்படி சொல்லி இருக்க மாட்டோம் என்று அவனுக்கு தெரியும். குத்தி காட்டி, சொல்லி காட்டியே கொன்னிருப்போம் என்று நம்பினான்.


அவன் சிலையாய் நின்ற வேளையில் அங்கிருந்து சென்று விட்டாள் அவள்.


முகத்தை பிடித்தபடி தரையில் அமர்ந்தான். தங்கையை பற்றி ஓயாமல் சொல்லும் குந்தவியின் உரையாடல்கள் நினைவுக்கு வந்தது.


இரண்டு மணி நேரங்கள் அப்படியேதான் அமர்ந்திருந்தான். நிறைய யோசித்தான். 


"சாரி குந்தவி.." என்று மனதோடு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டான். 


"ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?" வருணின் சத்தத்தில் கைகளை விலக்கிக் கொண்டு சத்தம் வந்த திசையில் திரும்பி பார்த்தான். வருண் இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.


"அரை மணி நேரமா இங்கே இருக்கேன். நான் வந்தது கூட தெரியாம அப்படியென்ன யோசனை?"


"சும்மாதான்.." என்றவன் எழுந்து நின்றான். மணியை பார்த்தவன் அவசரமாக தயாராகி கொண்டு அலுவலகம் கிளம்பினான்.


வருண் சங்கவியை தேடி வந்தான். ஆதீரனின் சட்டையை அணிந்தபடி படுத்திருந்தவள் இவனை கண்டதும் எழுந்தாள்.


"சங்கவி எனக்கு உன் ஹெல்ப் வேணும்.."


அவள் பதில் பேசாமல் அவனின் முகம் பார்த்தாள்.


"இப்படியே போனா குற்ற உணர்ச்சியிலேயே ஆதி செத்துடுவான். தப்பு பண்ணிட்டான். அவனுக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு. ஆனா இப்படி அவனை அவனே கொன்னுக்கற மாதிரி தராதே.. உன் அக்காவை மலையளவு நேசிக்கிறான். இப்படியே போனா சீக்கிரம் பைத்தியமாகி செத்து போயிடுவான். தயவுசெஞ்சி அவனுக்கு ஹெல்ப் பண்ணு. ஜஸ்ட் பிரெண்டா இரு போதும். நீ அவனை மன்னிச்சிட்டாவே அவனுக்கு பாதி குற்ற உணர்வு குறைஞ்சிடும்.‌."


சங்கவி யோசித்தாள். 


"நீ பொறுமையா முடிவெடு. அவன் உன் அக்கா மேல வச்ச நேசத்துக்கு பதில் கூலி கேட்கல நான். சாதாரண மானிட பண்போடு அவனோட தப்பை திருத்திக்க சந்தர்ப்பம் கொடுன்னு கேட்கிறேன்.." என்றவன் அங்கிருந்து சென்று‌ விட்டான்.


சங்கவி யோசித்தாள். நிறைய யோசித்த பிறகு அவளுக்கு மனம் இளகுவது போலதான் இருந்தது. அவன் கையை அறுத்துக் கொண்ட காட்சியும், தூக்கில் இருந்த காட்சியும் நினைவில் பயத்தை தந்தன.


அவனை தான் மன்னிப்பதால் அவனின் குற்ற உணர்வு குறையுமென்றால் அதை செய்ய தயாராய் இருந்தாள். 


இப்போது தான் எடுத்த முடிவு தனது வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய சிக்கலை கொண்டு வர போகிறது என்று அறியாமல் போய் விட்டாள் அவள். வருணின் நல் யோசனை எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கும் என்பதையும் அவள் அறியவில்லை.


சகோதரனையும், அவனின் மனைவியையும் மனதளவில் தேற்றி விடலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்த வருண் எதிர்காலத்தை அறிந்திருந்தால் நிச்சயம் இந்த முடிவிற்கு வந்திருக்கவே மாட்டான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments