Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 32

 குந்தவியை அந்த வீட்டிலிருந்த அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். அவளிடம் அன்பாக பேசினார்கள். சிலர் பேசிய மராத்தி அவளுக்கு புரியவில்லை. அப்போதெல்லாம் யஷ்வந்த் மொழிபெயர்த்து சொன்னான்.

இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்டார்கள். யஸ்வந்தின் தந்தை இவளை பற்றி விசாரித்தார். யஷ்வந்த் சொன்னதை கேட்ட பிறகு வேறு எதுவும் கேட்கவில்லை அவர்.

அனைவரும் கலகலப்பாக இருந்தார்கள். குந்தவிக்கு கொஞ்சம் மனம் அமைதிப்பட்டது.

யஷ்வந்தின் போன் ஒலித்தது. எடுத்தவன் சாப்பாட்டு மேஜையை விட்டு நகர்ந்தான்.

"சொல்லு சூர்யா.." தூரமாக வந்த பிறகு பேச ஆரம்பித்தான்.

"ஸீ இஸ் ப்யூட்டிபுல்.."

சற்று முன்னர்தான் சூர்யாவின் தொல்லை தாங்காமல் குந்தவியின் புகைப்படம் ஒன்றை எடுத்து அவனுக்கு அனுப்பி வைத்திருந்தான் யஷ்வந்த்.

"நான் வேணா அவகிட்ட போனை தரேன். நீயே சொல்லிக்கிறாயா?" 

"நோ.. நோ.. ஐ வில் கம் இன் எ வீக். இட்ஸ் எ சர்ப்ரைஸ் பார் ஹேர்.." என்று மகிழ்ச்சியோடு சொன்னான் சூர்யா.

"என்ன சர்ப்ரைஸோ? சரி நீயாச்சி அவளாச்சி. நான் என்னால முடிஞ்ச அளவுக்கு அவளோட பேக்கிரவுண்ட் விசாரிச்சி வைக்கிறேன்.." என்றவன் அணைப்பை துண்டித்தான்.

சூர்யா தனது போனில் இருந்த புகைப்படத்தை ஆசை தீர பார்த்தான். ஆனால் ஆசைதான் தீராமல் இருந்தது.

"யூ ஆர் கார்ஜியஸ் செல்லா.." என்றவன் திரைக்கு முத்தம் கொடுத்தான். ஒன்று இரண்டு என்று அப்படியே பல நிமிடங்களை முத்தங்களாலேயே கடந்தான்.

அவனின் பக்கத்தில் இருந்த தமிழ் கற்கும் புத்தகம் அது பாட்டுக்கு கிடந்தது.

"குந்டவி.." என்று சொல்லிப் பார்த்தான். அவளின் பெயர் பிடித்திருந்தது.

சங்கவி காலை நேரத்திலேயே குளித்து தயாராகி வழக்கம் போல சமையலறைக்கு வந்தாள்.

"நீங்க போங்க பாப்பா. நான் சமைச்சிட்டு கூப்பிடுறேன்.." என்றாள் பவளம்.

"இல்லக்கா. நானும் கத்துக்கறேன்.." என்றவள் தனது வழக்கமான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

"ஓய்.." காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தவள்‌ வருணின் அழைப்பில் திரும்பினாள்.

பேக்கை மாட்டியபடி நின்றிருந்தான்.

"ஊருக்கு போறேன்.." என்றான் வாசல்படியில் சாய்ந்து நின்றபடி.

"ஓ.. ஆனா ஏன்?" என்றவளுக்கு அவனின் திடீர் புறப்பாடு கொஞ்சம் வருத்தத்தை தந்தது.

"எங்க அப்பா கூப்பிட்டுடாரு சங்கவி. மறுபடியும் வந்துடுவேன். ஒரு மாசம்.. அப்புறம் வந்துடுவேன். அதுவரைக்கும் என்னை நீ மிஸ் பண்ணவெல்லாம் வேணாம். என் நம்பருக்கு கால் பண்ணு. நிறைய பேசலாம்‌‌.." என்றான் கண்ணடித்து.

கையிலிருந்த கத்தியை தூக்கிக் காட்டியவள் "இப்படியெல்லாம் சேட்டை பண்ணா கண்ணை நோண்டிடுவேன்.." என்றாள் மிரட்டலாக.

பயந்தது போல முகத்தை மாற்றியவன் "மறக்காம போன் பண்ணு சங்கவி. நான் பண்ணாலும் எடு.." என்றுவிட்டு கிளம்பினான்.

இரண்டு நாட்கள் நகர்ந்து போனது.

சங்கவிக்கு தினமும் ரோஜாக்களை வாங்கி வந்துக் கொண்டிருந்த ஆதீரன் அன்று மல்லிகையையும் சேர்த்து வாங்கி வந்திருந்தான்.

குழப்பத்தோடு பார்த்தவளிடம் "பூக்கடைக்கார அக்கா யாருக்கு பூவுன்னு கேட்டாங்க. என் வொய்ப்க்குன்னு சொன்னேன். ரோஜாவா தினமும் வாங்கி போறிங்களே.. பொண்டாட்டிக்கு மல்லிகைதானே வாங்கி போகணும்ன்னு சொன்னாங்க. அவங்களே கட்டியும் கொடுத்துட்டாங்க.." என்றான் வெட்க குரலில்.

சங்கவி அமைதியாக பூவை வாங்கிக் கொண்டாள். கூந்தலிலும் சூட்டிக் கொண்டாள். மல்லிகையை வைத்துக் கொண்ட பிறகு அவள் இன்னும் கூடுதல் அழகு பெற்றது போல தோன்றியது அவனுக்கு.

தினமும் மல்லிகையையும் வாங்கி வர வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"உங்க அப்பா எப்படி இருக்காரு?" விசாரிக்க ஆரம்பித்தான். அவள் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"ஏதோ முன்னேறியிருக்காருன்னு சொன்னாங்க. ஆனா எனக்குதான் ஒரு வித்தியாசமும் தெரியல. அவர் கண் விழிச்சாதான் எனக்கு முன்னேற்றமே!" என்றாள்.

அவளின் கையை பற்றினான் ஆதீரன். நிமிர்ந்து பார்த்தாள்.

"நம்பு சங்கவி. அவர் குணமாகிடுவாரு.." என்றான் புன்னகைத்தபடி.

சரியென்று தலையசைத்தவளின் கையை பார்த்தான். மிருதுவாக இருந்தது. மறுகையால் அவளின் புறங்கையை வருடினான். பிடித்திருந்தது. கையை வருடுவது கூட புது விளையாட்டு போல இருந்தது.

சங்கவி கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

"சாரி‌.." என்றான் அவசரமாக.

"இல்ல.. பரவால்ல சாரி தேவையில்ல.." என்றவள் சிவந்த கன்னங்களோடு தலை குனிந்தாள்.

அவளை பார்க்க பிடித்திருந்தது. நெருங்க சொன்னது மூளை. தன்னை மறந்து அவளின் கன்னங்களை அள்ளினான்.

"நீ அழகா இருக்க சங்கவி.." 

"ம்ம்.. தேங்க்ஸ்.." என்றவள் அவனின் முகத்தை நேர்கொண்டு பார்க்கவில்லை.

"சங்கவி உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" ஏக்கமாக கேட்டான்.

"தெ.. தெரியல.." என்றவளின் கன்னங்களும் கூட மிருதுவாக இருந்தது.

நெருங்கி அவளின் இதழில் தன் இதழ் பதித்தான். 

சங்கவி கொஞ்சம் தடுமாறினாள். ஆனால் அன்று போல இல்லை. இது உண்மையில் ஒரு முத்தமாக இருந்தது. அவள் ரசிக்கும்படி இருந்தது. பிடித்திருந்தது. முத்தத்தை மென்மையாக தந்தான். பூவின் இதழை ஒற்றி எடுப்பது போல தந்தான். 

இதழில் இருந்த தன் உதடுகளை சற்று கீழே நகர்த்தினான். தாடையில் சிறு முத்தமிட்டு கழுத்திற்கு வந்தான்.

இவனுக்கு ஏன் எப்போதும் தன் கழுத்தில் ஆசை என்று குழம்பினாள் சங்கவி. அன்று நடுங்கியவள் இன்று தன்னை மறந்து அவனின் முத்தத்திற்கு கரைந்தாள். கழுத்து கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் நகர்ந்தது.

முழு முகத்தையும் அவளின் கழுத்தில் குடி வைத்தான் அவன். முத்தத்தின் ஈரம் சாரல் மழையால் அவளின் கழுத்தை நனைக்க ஆரம்பித்தது. அவளின் பின்னங்கழுத்தை தேடி ஓடியது அவனின் வலது கரம். பின்னங் கழுத்தை வருடியது அவனின் கரம். 

"மாமா.." முத்தத்தின் பிரதியாய் தன்னையும் மீறி வார்த்தையை முனகலாக உச்சரித்தாள்.

அவனின் செயல்பாடுகள் ஒரு நொடி நின்றது. தனது முத்தங்கள் அவளுக்கு பிடித்திருக்கிறது என்பது அவனுக்கு சிறு நிம்மதியை தந்தது. பெரும் மகிழ்ச்சியையும் தந்தது. மூன்று ஆண்டுகள் காதலில் அணைத்ததை தவிர வேறு ஏதும் முயற்சித்து இருக்காதவனுக்கு இவளுடனான நெருக்கம் இயல்பு போல இருந்தது. 

அவளின் மாமா என்ற வார்த்தை கொஞ்சம் அதிக உத்வேகத்தை தந்து விட்டது. உரிமையும், நம்பிக்கையையும், அவனுக்கான இடத்தையும் தந்து விட்டது. பூஞ்சாரலாய் முத்தத்தை தெளித்துக் கொண்டிருந்தவன் அவளின் மாமாவிற்கு பிறகு அழுத்தமாக தர ஆரம்பித்தான்.

விழிகளை மூடியிருந்தவளால் தனக்குள் ஏற்படும் நிகழ்வுகளை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இவனோடு ஏன் இந்த பிடிப்பு என்று புரியவில்லை‌. பித்து போல பிடித்திருந்தது. அவனின் முத்தங்கள் அத்தனையும் அவளை வேற்று உலகில் குடியேற்றியது. விண்வெளியின் வாசத்தை போல அவள் இதுவரை அறியாத புது உணர்வுகள் அவளுக்குள் மெள்ள குடியேற ஆரம்பித்தது.

காதலா காமமா என்று தெரியவில்லை. அவனை விலக்கி தள்ள தோன்றவில்லை. 

மெள்ள நகர்ந்துக் கொண்டிருந்த ஆதீரன் சட்டென்று நின்றான். அவளின் கழுத்தில் இருந்த சங்கிலியை பார்த்தான். குந்தவி அணிந்திருந்தது போன்ற அதே மாடல் செயின். 

இதயத்துக்குள் என்னவோ செய்தது. எரிமலையின் மீது வானமளவு ஐஸ்கட்டிகளை கொட்டியது போல மொத்த உணர்ச்சிகளும் செத்து போய் விட்டது அவனுக்கு.

அவனின் விலகல் கண்டு நேராய் எழுந்து அமர்ந்தாள். அவனின் குழப்ப முகம் கண்டு அவளும் குழம்பினாள்.

"சா.. சாரி சங்கவி.." என்றவன் அவசரமாக எழுந்து ஓட்டமாக வெளியே நடந்தான்.

வெளியே வந்ததும் தலையை கோதி விட்டுக் கொண்டான்.

சங்கவி எழுந்து நின்றாள். அவனின் திடீர் விலகல் அவளுக்கு புரியவில்லை. வெளியே வந்து பார்த்தாள்.

தரை தளத்தில் இவளுக்கு நேர் கீழே இருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தான் ஆதீரன். அவனுக்கு முன்னால் குந்தவியின் புகைப்படம் மாலையோடு இருந்தது.

கலங்கும் விழிகளோடு குந்தவியின் புகைப்படத்தை பார்த்தான். "சாரி குந்தவி.." என்றவன் முகத்தை பொத்தியபடி தரையில் விழுந்தான். 

சங்கவியினுடனான முத்தங்கள் அத்தனையும் இப்போது தவறெனப்பட்டது. துரோகம் போல தோன்றியது.

"சாரி குந்தவி.. நான் உனக்கு துரோகம் செய்ய நினைக்கல.." அழுகையோடு முனகினான்.

சங்கவி தன் பின்னால் இருந்த சுவரில் சாய்ந்தாள். இதயம் வெட்டுப்பட்டது போலிருந்தது.

'என்ன உறவு இது?' என நினைத்தவளுக்கு தானும் அக்காவுக்கு துரோகம் செய்து விட்டோமோ என்று கூட யோசித்து விட்டாள். ஆனால் சட்டென்று தலையை உதறிக் கொண்டாள்.

'சாரி அக்கா. ஐ லவ் யூ.. ஆனா இது துரோகம்ன்னு எனக்கு தோணல.. அப்படி உனக்கு தோணினா தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடு!' என்று இதயத்தோடு கேட்டுக் கொண்டாள்.

அழுதுக் கொண்டிருந்த ஆதீரனின் தோளில் பதிந்தது கரமொன்று. நிமிர்ந்தான். சங்கவி நின்றிருந்தாள்.

"சாப்பிடலாம். டைம் ஆச்சி.." என்றாள் எதுவும் நடக்காதது போல.

அவன் குழப்பத்தோடு அதே நிலையில் அமர்ந்திருந்தான். சங்கவி அவனை தாண்டி நடந்தாள். அவளின் கையை பற்றினான் ஆதீரன்.

"சாரி.." என்றவனை உணர்ச்சிகளற்று பார்த்தாள் அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments