Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 35

 பூங்கொடி நடுங்கும் கரங்களோடு அந்த அறையின் கதவை திறந்தாள். இத்தோடு முழுதாய் மூன்று நாட்கள் ஆகிவிட்டது அலெக்ஸ் மயங்கி விழுந்து. இப்போதுதான் மயக்கம் தெளிந்திருந்தது. பூங்கொடி இனி அவரை பார்க்கலாம் என்று சொல்லி சென்றிருந்தாள் செவிலியை.


கண்ணீரும் கம்பலையுமாக வந்த மனைவியை கண்டு தலையை ஆட்டினார் அலெக்ஸ்.


அருகே வந்து அமர்ந்தவள் ஓசையில்லாமல் அழுதாள்.


"ஐ யம் நாட் டெட். ப்ளீஸ் டோன்ட் க்ரை.." என்றார் சிறு எரிச்சலோடு.


அப்போதும் விம்மினாள். அவரின் முகத்தை பார்க்க பார்க்க அழுகைதான் கூடியது.


"ரொம்ப வலிக்குதா அலெக்ஸ்? நான் சண்டை போட்டுட்டே இருந்ததாலதான் இப்படி ஆச்சா? சாரி அலெக்ஸ்.. இனி நான் சண்டை போட மாட்டேன்.." என்றாள் அழுகையின் இடையே.


அவரால் தனது இடது கையை அசைக்க முடியவில்லை. வலது கையிலும் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. இல்லையேல் நெற்றியில் அடித்துக் கொண்டிருந்திருப்பார்.


"டார்லிங்.. ஐ யம் பைன்.." 


இல்லையென தலையசைத்தவளுக்கு அழுகை நிற்கவேயில்லை. அவளின் ஓயாத சண்டையை பற்றி அறிந்திருப்பவருக்கு அவளின் காதலை பற்றியும் தெரியும். கார் ஆக்ஸிடென்டில் நெற்றியில் சிறு காயம் பட்டு வந்ததற்கே ஒரு வாரம் அழுது தீர்த்தவள். அனைத்தையும் சிறப்பாகதான் முடிவெடுப்பாள். ஆனால் அழுகையைதான் அடக்க கற்றுக் கொள்ளாமல் போனாள்.


"சின்ன புள்ளையா நீ? இப்படி அழற.. பேஷண்ட் பக்கத்துல உட்கார்ந்தா தைரியம் சொல்லணும். முடியலன்னா அமைதியா இருக்கணும். இப்படி அழுதா எப்படி? நான் இதுக்கு மயங்கியே கிடக்கலாம்.." என்றவரை ஆச்சரியத்தோடு பார்த்தாள் பூங்கொடி. அவளின் கண்ணீர் நின்ற விழிகளை பார்த்த பிறகு அவருக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவளின் ஆச்சரியத்தின் காரணம் புரிந்து உள்ளுக்குள் சிரிப்பு வந்தது.


"உங்களுக்கு தமிழ் தெரியுமா அலெக்ஸ்?" என்றாள் அடக்கவியலாத ஆச்சரியத்தோடு.


"இப்ப நான் என்ன இங்கிலீஸிலா பேசினேன்?"


"ஆனா நீங்க ஏன் இத்தனை நாளா என்கிட்ட பேசல? நீங்க எப்படி பேச கத்துக்கிட்டிங்க?" குழப்பத்தோடு கேட்டாள்.


"இருபத்தி நாலு மணி நேரமும்‌ நீ தமிழ்லயே கத்திட்டு இருந்ததுல உன்னை கல்யாணம் செஞ்ச முதல் வருசமே தமிழ்ல பேச கத்துக்கிட்டேன்.." என்றார் சிரிப்போடு.


பூங்கொடியின் ஆச்சரியம் கூடியது.


"ஆனா நீங்க ஏன் பேசல?"


"அவசியம் வரல டார்லிங்.. இப்ப அழறியேன்னு உன் மைன்ட் டைவர்ட் பண்ண பேசினேன்.. எனக்கு ஒன்னும் ஆகல.. இந்த ஹாஸ்பிட்டல் ரொம்பவும் அட்வான்ஸ் லெவல். சீக்கிரம் என்னை குணப்படுத்திடுவாங்க.. நீ அழாம இரு. எனக்கு பார்க்க சகிக்கல.." என்றார் புலம்பலாக.


உதடு சுழித்தவள் "நான் எவ்வளவு பயந்திருக்கேன் தெரியுமா?" எனக் கேட்டாள்.


"நீ பயந்தா நான் நல்லாகிடுவேனா? போய் சூர்யாவை வர சொல்லு.." என்றார்.


எழுந்து நின்றவளிடம் "ப்ளீஸ் டார்லிங்.. அழாதே. உன் கண்ணீரே என்னை சாகடிச்சிடும். கொஞ்சமாவது மனுசன் பீலிங்கை புரிஞ்சிக்க.." என்றார்.


"ம்ம்.." என்றவள் வெளியே நடந்தாள்.


"என்ன பொண்ணோ? அழறது, சண்டை போடுறது, கத்துறது இதை தவிர வேற ஏதாவது இவளுக்கு தெரியுதா?" என திட்டினார்.


சற்று நேரத்திற்கு பிறகு சூர்யா உள்ளே வந்தான். முகம் அதிகமாய் சோர்ந்திருந்தது. இரண்டு நாட்களாக உணவை துறந்திருந்ததால் கண்களில் ஒளியும் கூட குறைந்திருந்தது.


மனைவியிடம் தைரியமாக பேசி விட்டாலும் கூட மகனை பார்க்கையில் கொஞ்சம் தைரியம் குறைந்து போனது அவருக்கு. ஆனால் அதை முகத்தில் காட்டாமல் வழக்கம் போல மகனை பார்த்து புன்னகைத்தார்.


அருகில் வந்தமர்ந்து அவரின் கையை பற்றினான்.


"நான் நல்லாகிடுவேன் சூர்யா.." என்றவரிடம் ஆமென தலையசைத்தான். அவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.


"சாரி.." என்றவரை குழப்பமாக பார்த்தான்.


"என்னாலதான் நீ இந்தியா போக முடியல.." 


"பரவால்ல டேட்.. உங்க உடம்பு இப்போது ரொம்ப முக்கியம்.. நீங்க சீக்கிரம் குணமாகிடுவிங்க.." என்று தைரியம் சொன்னான்.


"உன் அம்மாவை அழ விடாதே.. அவளுக்கு பிடிச்ச மெரூன் கலர்ல சேரி வாங்கி கொடு. நிறைய சாக்லேட்ஸ் வாங்கி கொடு.." என்றவர் தயக்கத்தோடு "பிசினஸ்.?" என்றார்.


தலை குனிந்தான் சூர்யா.


"இந்த மூனு நாள்ல பத்து சதவீதம் தொழில் வளர்ச்சி கீழே இறங்கிடுச்சி டேட்.. ரொம்ப மோசமா போயிடுச்சி.." என்றான் கவலையோடு.


"ப்ளீஸ்.. பிலீவ் யுவர் செல்ஃப்.. உன்னால முடியும்.. நான் முழு பொறுப்பை தரேன். நீ என்ன செஞ்சாலும் சம்மதம். உன்னால ஜெயிக்க முடியும்.." என்றார்.


சரியென்று தலையசைத்தான். 


ஒரு வாரம் விடுமுறை கேட்டு கிளம்பிய குந்தவி ஒரு நாள் முன்பே வீடு வந்து சேர்ந்தாள். வீடே சோகத்தில் இருந்தது. யஷ்வந்தும் அவனது சித்தப்பா பெரியப்பாவும் சூர்யாவின் தந்தையை பார்க்க கிளம்பியிருந்தார்கள்.


ஷைனிங் வேர்ல்டின் பிரசிடென்ட் அலெக்ஸ் ஸ்ட்ரோக் வந்து படுத்து விட்டார் என்ற செய்தியை காலையில்தான் பேப்பரில் படித்திருந்தாள் குந்தவி. செய்தியை படித்த உடனே மனமுடைந்து போனாள். சூர்யாவின் நிலை அவளுக்கு கவலையை தந்தது.


அவனிடமிருந்து விலகி ஓடியவள் இப்போது அவனின் நிலை கண்டு கலங்கினாள்.


இரண்டு நாட்கள் முடிந்த பிறகே யஷ்வந்தும் மற்றவர்களும் வந்தார்கள். அங்கே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்க துடித்தாள் குந்தவி.


அவளின் தயக்கம் காரணமாக முன்னால் கூட வரவில்லை. ஆனால் அவள் இருக்கும்போதே "அவர் நல்லாருக்காரு. சீக்கிரம் முழுசா குணமாகிடுவார். சூர்யாதான் இனி நிறுவனத்துக்கு தலைமை ஏற்க போறான். அதனால அவனால கொஞ்ச வருசத்துக்கு எங்கேயும் போகவோ, வரவோ முடியாது.." என்றான்.


குந்தவியின் இதயம் இம்முறையும் பாரமானது. அவனை இனி சில வருடங்களுக்கு தன்னால் பார்க்கவே முடியாது என்று புரிந்து கலங்கினாள். அதே சமயம் அவன் ஏற்க இருக்கும் பொறுப்பு கண்டு அவனை மனதுக்குள் வாழ்த்தினாள்.


குந்தவியின் முகம் பார்த்த யஷ்வந்துக்கு சூர்யா தன்னிடம் பேசியதுதான் நினைவுக்கு வந்தது.


"அவளை நீ பார்க்க வர மாட்டியா?" அவன் தனியாய் கிடைத்த நேரத்தில் கேட்டான் யஷ்வந்த்.


"இப்போதைக்கு முடியாது யஷூ.. எப்படியாவது இந்த நிறுவனத்தோட நஷ்டத்தை நிறுத்தணும். லாபத்தை கொண்டு வரணும். கடன்காரனா வந்து என் தேவதையோட கை பிடிக்க முடியாது என்னால. இது எனக்கு நானே போட்டுக்கற எல்லை கோடு. அவளை பார்க்க வரணும். அதுக்கு முன்னாடி என் பொறுப்பில் ஜெயிக்கணும்.. அப்பதான் என் மைன்ட் கிளியர் ஆகும்.." என்றவன் நண்பனின் கையை பற்றினான்.


"அவளுக்கு பிரச்சனை யஷூ.. பேமிலியை அழிச்சிட்டதா சொன்னா. தப்பான முடிவெடுத்துட்டேன்னு சொன்னா.. அவளை நேர்ல பார்த்து பேச நினைச்சேன். ஆனா முடியாம போச்சி. நீயாவது அவளை பக்கத்துல இருந்து பார்த்துக்க.. அவளோட கஷ்டம் கேட்டு சரி பண்ணி வை. நான் உனக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்.. அவ என்னோடு பேச விரும்பலன்னா பரவால்ல.. நான் மறுபடி அங்கே வரும்போது அவளை சந்திச்சிக்கிறேன்.. மறக்காம அவ போட்டோஸ் அனுப்பு. அவளை கொஞ்சம் நல்லா பார்த்துக்க.. அவ என்னை பத்தி ஏதாவது உன்கிட்ட வந்து விசாரிச்சா மறக்காம என்கிட்ட அதை சொல்லு.." என்று சொல்லியிருந்தான்.


குந்தவியின் வாடிய முகம் கண்டு பெருமூச்சு விட்ட யஷ்வந்த் 'உன் குழப்பம் தீரும் நாள் என்னைக்கோ?' என்று யோசித்தான் கவலையோடு.


ஆதீரன் நீட்டிய ரோஜாக்களை பேராவலோடு பெற்றுக் கொண்ட சங்கவி அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.


ஆச்சரியத்தோடு அவளை பார்த்தவன் ரோஜாக்களை பார்த்து விட்டு சிறு குறும்போடு "பூக்களின் எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி முத்தம் கொடு.." என்றான்.


அதிர்ச்சியோடு நிமிர்ந்தவள் அவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் மீண்டும் தலை குனிந்தாள். பூக்களை பார்த்தாள். இருபதுக்கும் மேல் இருந்தது.


"அவ்வளவு யோசனையா? இல்லன்னா பூவிதழ்களின் எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி கொடு.." 


மீண்டும் அதிர்ந்து நிமிர்ந்தாள். அவளின் முகம் கண்டு அவனுக்கு சிரிப்பாக வந்தது. கன்னங்களை பற்றியவன் அவளின் இதழில் தன் இதழ் பதித்தான். சிறு முத்தம். சில நொடிகள் கூட தொடராத முத்தம். மென்மையான மேகம் தொட்டு போனது போல ஒரு முத்தம்.


"நீ ரொம்ப க்யூட்டா இருக்க.." என்றான் அவளின் கண்களை பார்த்து. 


அவனின் விழிகளை பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தாள். நகர்ந்தவள் இரண்டு எட்டுக்களுக்கு மேல் எடுத்த வைக்க முடியாமல் திரும்பிப் பார்த்தாள். அவளின் முந்தானையை தன் கையில் வைத்திருந்தான் ஆதீரன்.


முந்தானையை முகத்தின் மீது போட்டுக் கொண்டான்.


"உன் வாசம் ஏன் எப்பவும் என்னை மயக்கி நிற்க வைக்குது?" முந்தானையின் திரையை தாண்டி தெரிந்த அவளின் முகம் பார்த்துக் கேட்டான்.


சங்கவி சிவந்த முகத்தோடு தரையை பார்த்தாள். அவளின் வெட்கம் ஒவ்வொரு முறையும் அவனை அருகே வர சொல்லி இழுத்தது. சங்கவி அவனின் அருகே வந்தாள். அவனுடைய முகத்தை மூடியிருந்த தனது முந்தானையை எடுத்துக் கொண்டாள். 


"ம்ம்.. நான் இந்த பூக்களை வச்சிட்டு வரேன்.." என்று அறையை விட்டு வெளியே நடந்தாள்.


சட்டென்று அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன் அவளை தன்னருகே இழுத்தான். அவளின் முதுகோடு அணைத்தவன் அவளின் தோளில் முகம் புதைத்தான். 


"சங்கவி.." 


அவளின் கழுத்தை சுற்றி மறுபக்க தோளில் வந்து நின்றது அவனின் வலது கரம். அவனின் நெஞ்சில் சாய்ந்தபடி அண்ணாந்து பார்த்தாள். அவளது கீழுதட்டை சுட்டு விரலால் வருடினான். நடுக்கம் தானாய் உருவானது அவளுக்கு. ஆனால் முன்பு போல இல்லாமல் இந்த நடுக்கம் கூட அவளுக்கு பிடித்திருந்தது.


"நீ வேணும் சங்கவி.. எனக்கு வெட்கமோ, சொரணையோ இல்லன்னு கூட நினைச்சிக்க.. ஆனா என்னை வேணாம்ன்னு தள்ளி விட்டுடாத.. உன்னை பார்க்கும் போதெல்லாம் ஏதாவது செய்யுது. உன்னை கட்டியணைக்க தோணுது. ஓயாம முத்தம் தர தோணுது. உன் வெட்க முகத்தை பார்த்துட்டே இருக்கணும்ன்னு தோணுது‌‌.." என்றான் ஏக்க குரலில்.


"நா.. நான் தள்ளி விடல.." என்று அவள் சொல்லி முடித்த வினாடியில் அவளின் கழுத்தில் பதிந்தது அவனின் உதடுகள்.


குந்தவி தனது அறையில் சாய்த்து அமர்ந்திருந்தாள். சூர்யாவின் புகைப்படம் பார்த்தபடி இருந்தாள். அவனின் முகத்தை வருடினாள். 


எதுவும் தோன்றவில்லை. அவனின் முகம் பார்த்தால் போதும். எதுவும் தோன்றுவதே இல்லை.‌ நேர் கொண்டு பார்க்காமலேயே அவளை தியானியாக்கினான். ஒற்றை வார்த்தை பேசாமலேயே அவளை மட்டும் மௌனியாக்கினான். மனதிற்கு அமைதி தந்தான். மனதுக்குள் ஒரு இன்பத்தை சுகிக்க தந்தான். கை தீண்டாமலேயே சுற்றும் காற்றில் சுகந்தத்தை உணர வைத்தான். நேரில் கூட சந்திக்காமல் புகைப்படத்திலேயே நம்பிக்கை ஒன்றை தந்தான். அவனுடைய நிழல் மேல் வந்து விழாமலேயே அவளின் உள்ள நெருப்பிற்கு குளிர்ச்சி தந்தான்.


"குந்தவி.." யஷ்வந்தின் குரல் கேட்டு அவசரமாக தனது போனில் இருந்த சூர்யாவின் புகைப்படத்தை மறைத்தாள்.


அவளின் அருகே வந்து அமர்ந்தான் யஷ்வந்த்.


"நான் உங்ககிட்ட பேசணும்.."


"பே.. பேசுங்க.." என்றாள்‌ தயக்கமாக.


"உனக்கு சூர்யா யாருன்னு தெரியுமா?"


திகைத்தவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். பயம் அப்பட்டமாக அவளின் முகத்தில் தெரிந்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments