Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 36

 "நான் என்ன பேய் பிசாசை தெரியுமான்னா கேட்டேன்.? எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?" புருவம் உயர்த்திக் கேட்டான் யஷ்வந்த்.


நெஞ்சின் தடுமாற்றம் முகத்தில் தெரிவது உணர்ந்து அவசரமாக தலை குனிந்துக் கொண்ட குந்தவி "எ.. எந்த சூர்யா?" என்றாள். கேட்பதற்குள் தொண்டை வறண்டு போனது அவளுக்கு. 


"என் அத்தை மகன். ஷைனிங் வேர்ல்டின் பிரசிடென்ட் ஆக போறவன்.." 


குந்தவி தனக்குள் நடுங்கினாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை.


"ஏ.. ஏன் கேட்கறிங்க?" என்றவளின் கையை பற்றினான் அவன்.‌ நிமிர்ந்து பார்த்தாள் குந்தவி.


"எனக்கு தெரியும் குந்தவி.." என அவன் சொன்னதும் அவளின் முகத்திலிருந்த மொத்த ரத்தமும் வடிந்து போனது‌.


"எதுக்கு பயப்படுறன்னு எனக்கு புரியவேயில்ல.." சலித்துக் கொண்டவன் "இப்ப அவன் ரொம்ப டிப்ரஷன்ல இருக்கான். அவனோட அத்தனை கஷ்டத்திலும் அவனை உயிர்ப்போடு வச்சிக்க உதவுறது உன் நினைப்புதான்னு சொல்றான்.. நீ அவனை தவிர்க்க பார்க்கற. உன்னை பார்க்கதான் அவன் போன வாரத்துல இங்கே வர இருந்தான். ஆனா அதுக்குள்ள அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சி‌‌.." என்று விளக்கினான்.


குந்தவி எழுந்து நின்றாள்.


"நா.. நான் போறேன்.." என்று அங்கிருந்து ஓட முயன்றாள். சட்டென்று அவளின் கைப்பிடித்த யஷ்வந்த் அவளை இழுத்து தன் முன்னே அமர வைத்தான்.


"இன்னும் நான் பேசி முடிக்கல.." 


"நீங்க சொல்றது எனக்கு புரியல.."


"நடிச்சது போதும் குந்தவி.." அவன் காரமாக சொல்லவும் அவளுக்கு முகம் மேலும் வெளுத்துப் போனது.


"ஏன் இந்த கண்ணாமூச்சி.? உனக்கு என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே தெரியும்? அவன் உன் நினைப்புல அங்கே சாகறான். தினமும் போன்ல உன்னை பத்தி புலம்பி என்னையும் சாகடிக்கிறான்.  தயவுசெஞ்சி அவனுக்கு போன் பண்ணி பேசு. உன் தயக்கம் பயத்தை பத்தி அவன்கிட்ட சொல்லு.. இது உங்க பிரச்சனை. உன் பிரச்சனை. நீதான் களத்துல இருக்கணும். அட்லீஸ்ட் ஏன் அவனை அவாய்ட் பண்றனாவது அவன்கிட்டயே சொல்லிடு.." என்றவன் அவளின் புறங்கையில் கட்டை விரலை வைத்து தேய்த்தான்.


"உன்கிட்ட எதையும் கேட்க கூடாது சொல்ல கூடாதுன்னு சொல்லி இருந்தான் அவன். ஆனா நான்தான் அவன் மேல பரிதாபப்பட்டு உன்கிட்ட பேசுறேன். எங்கேயும் ஓடி போயிடாதே. உனக்கு இஷ்டமா இருக்கும்போது அவனோடு பேசு. இல்லன்னா எப்பவும் பேசாதே. விட்டுடு. நான் கம்பல் பண்ணல.." என்றவன் எழுந்தான். அந்த அறையை விட்டு வெளியே போக எண்ணி நடந்தவன் தயக்கத்தோடு அவளை திரும்பிப் பார்த்தான்.


"அவன் உன்னை லவ் பண்றான் குந்தவி.." என்றான்.


அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள். அவன் பெருமூச்சோடு விட்டபடி அங்கிருந்து‌ போனான்.


குந்தவி குழப்பத்தோடு படுக்கையில் சாய்ந்தாள். நெற்றியின் ஓரத்தை பிடித்தபடி கண்களை மூடினாள். கால்கள் வருடப்படுவது போலிருந்தது. பாதத்திலிருந்து மெள்ள மேலேறியது விரல்கள். 


கண்களை திறந்தாள். எதிரில் யாரும் இல்லை. தலையணையை அணைத்தபடி மீண்டும் கண்களை மூடினாள்.


'காதல்? எப்படி? என்னன்னு நம்புவது? என்னையே, என் மனசையே நம்ப முடியாத சூழல்ல இருக்கேன் நான்..' மனதுக்குள் புலம்பியவள் அவனை மறக்க நினைத்தாள்.


காலை பொழுது விடிந்தது உணர்ந்து கண்களை திறந்தாள் சங்கவி. ஆதீரனின் கையணைப்பில் இருந்தவளுக்கு திடீர் வெட்கம் சூழ்ந்துக் கொண்டது. நேற்றைய இரவை அவளால் எப்போதுமே மறக்க முடியாது. இந்த ராட்சசன் இவ்வளவு மென்மையாக தன்னிடம் நெருங்குவான் என்று நினைக்கவேயில்லை அவள்‌. தூரத்திலிருந்து பார்க்கையில் உறுத்துகின்ற அதே உறவுதான். ஆனால் நேற்று இரவில் நடந்த கூடலில் ஒரு உறுத்தலும் தெரியவில்லை. தனக்காகவே அவன் படைக்கப்பட்டதை போல உணர்ந்தாள். 


"என்னை மனதார கணவனாய் ஏற்றுக் கொள்கிறாயா?" என்று கடைசி நேரத்திலும் கேட்டு விட்டுதான் இந்த புது உறவுக்குள் அடியெடுத்து வைத்தான் அவன். 


அவள் மனதாரதான் அவனை ஏற்றுக் கொண்டாள். 


அவனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவள் இந்த வாழ்வில் இன்பம் மட்டும் துணை வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டாள்.


ஆடையிழந்து விட்ட அவளின் முதுகை வருடியது அவனின் கரங்கள். கண் விழித்து பார்த்தவன் அவளின் உச்சந்தலையில் முத்தம் பதித்தான்.


"உன்னை பிடிச்சிருக்கு சங்கவி.." என்றான். புன்னகையும் வெட்கமும் சரிபாதியாய் அவளின் முகத்தை ஆட்கொண்டது. 


அவளை அணைத்திருக்கையில் உள்ளம் நெகிழ்ந்தது அவனுக்கு. இதயம் பரவசத்தை உணர்ந்தது. மகிழ்ச்சி மனதை முழுதாய் ஆக்கிரமித்தது. நேற்றைய நாளும் நாளைய நாளும் மூளையை விட்டு அகன்றது. வாழும் நிமிடங்கள் சொர்க்கம் போல் தோன்றியது.


அவிழ்ந்திருந்த அவளின் கூந்தலில் பாதி அவளின் முகத்தினை மறைத்துக் கொண்டிருந்தது. ஒற்றை கையால் அவளின் கூந்தலை விலக்கி விட்டான். 


"நைசா இருக்கு உன் கன்னம்.." அவன் சொன்னது கேட்டு அவனின் நெஞ்சிலேயே முகம் மறைத்தாள். 


கன்னம் வருடியவன் "நிஜமாவே உனக்கு என்னை பிடிச்சிருக்கா சங்கவி?" என்றுக் கேட்டான் தயக்கமாக.


இதே அறையின் கதவில் சாய்ந்து அன்று அவள் அழுதது இன்றும் அவனுக்கு நினைவில் இருந்தது. அன்றும் அவனேதான் தீண்டினான். இன்றும் அவனேதான் ஆட்கொண்டான். சகித்து கொண்டாளோ, கருணையால் இடம் தந்தாளோ என்று பயமாக இருந்தது அவனுக்கு.


நிமிர்ந்து அவன் கண்களை கண்டவள் "நிஜமா பிடிச்சிருக்கு மாமா‌‌.." என்றாள்.


அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் "தேங்க்ஸ் சங்கவி.." என்றான். விழிகள் ஏனோ கலங்கியது அவனுக்கு. 


தேயிலை தோட்டத்தின் இருந்த சிறு குடிலில் அமர்ந்திருந்தாள் காந்திமதி. தேயிலை பறிப்போரை பார்த்தபடி குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தார் காத்தவராயன்.


"நான் வீட்டுக்கு போகணும்.." காந்திமதி சொன்னது கேட்டு எழுந்தார்.


"போகலாம்.." என்றார் பாக்கெட்டிலிருந்த ஜீப்பின் சாவியை கையில் எடுத்தபடி.


"நான் என் பையன்கிட்ட போகணும்.."


இருந்த இடத்திலேயே அமர்ந்துக் கொண்டவர் "சமையல்காரியை மாத்தலாம்ன்னு நினைக்கிறேன். சாப்பாடு டேஸ்டாவே இல்ல.." என்றார்.


"காத்தவராயா நான் என் பையன்கிட்ட போகணும்.." காந்திமதி மீண்டும் சொன்னாள்.


கோபத்தோடு திரும்பிப் பார்த்தார் அவர். அவரின் முறைப்புக்கு பயப்படுபவளா அவள்?


"அங்கே நீ போக கூடாது. ஒன்னு என் பிணத்தை தாண்டி போ. இல்லன்னா நீ பிணமா போ.." என்றார் கர்ஜனையாக.


காந்திமதி எழுந்து நின்றாள்.


கோபத்தோடு அவரை முறைத்தவள் "செத்து தொலை.." என்று விட்டு வெளியே நடந்தாள்.


"என்ன நேரத்துல இவன்கிட்ட விழுந்தேனோ?" என்று புலம்பிக் கொண்டு நடந்தவளை "காந்திமதி.." என அழைத்து நிறுத்தினார் அவர்.


"என்ன?" எரிச்சலோடு திரும்பியவள் அவரின் கையிலிருந்த துப்பாக்கி கண்டு அதிர்ந்து போனாள். தனது நெற்றிக்கே குறி வைத்திருந்தார் அவர்.


"வேணாம் காத்தவராயா.." குரல் நடுங்கியது அவளுக்கு.


"நீதானே சாக சொன்ன?" முகத்தை சாய்த்துக் கேட்டார்.


நெற்றியில் அடித்துக் கொண்டாள் காந்திமதி.


"அது கோபத்துல சொன்னது. அர்த்தமற்ற வார்த்தை. தயவுசெஞ்சி அந்த துப்பாக்கியை தூரம் வை.." படபடத்த நெஞ்சை மறைக்கும் வழி தெரியாமல் கெஞ்சினாள்.


"நான் சாகறேன்.."


"ஐயோ.." இரு கைகளாலும் முகத்தில் அடித்துக் கொண்டாள்.


"தெரியாம சொல்லிட்டேன். என்னை கூட கொல்லு.. ப்ளீஸ்.." என்றாள். பயத்தில் எச்சில் விழுங்கினாள். அந்த துப்பாக்கி நகருமா என்று பார்த்து நின்றாள்.


"உன் பையன்.?" 


"சத்தியமா வேணாம். நீ போதும். அந்த கருமத்தை தூர வை.." கையை தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டு கேட்டாள்.


காத்தவராயன் கேலி புன்னகையோடு துப்பாக்கியை பேண்டின் பின்பக்கம் சொருகினார்.


அருகில் ஓடி வந்தவள் அமர்ந்திருந்தவரின் முன்னால் மண்டியிட்டாள். அதே வேகத்தில் அவரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டாள்.


"இப்படி முட்டாள்தனம் செய்யாதே காத்தவராயா.." என்றாள் கோபத்தோடு.


அவளின் கழுத்தை சுற்றி கைகளை பின்னியவர் "விட்டு போகாதே!" என்றார் அவளின் கண்களை பார்த்து.


"மாட்டேன்.." 


"நிஜமா.."


"என் மேல.."


"உன் பையன் மேல பண்ணு.." 


மிடறு விழுங்கியவள் "என் பையன் மேல சத்தியமா உன்னை விட்டு போக மாட்டேன்.." என்றாள்.


"தட்ஸ் குட்.." என்றவர் அவளின் நெற்றியில் தன் நெற்றி மோதினார். 


"யாராவது பார்க்க போறாங்க.. என்னை விடு.." என்றவளை நக்கலாக பார்த்தவர் "யார் பார்த்தா எனக்கென்ன?" என்றுக் கேட்டார்.


ஆங்காங்கே தெரிந்த வெள்ளிக் கம்பி முடிகளை வருடி விட்டவள் "வேணாம் என்னை விடு.. யாராவது பார்த்தா கிண்டல் பண்ணுவாங்க.. வயசான காலத்துல கூட கட்டி புரண்டுட்டு இருக்குதுங்கன்னு சொல்வாங்க.." என்றாள் தயக்கமாக.


"வயசானா ஆசை வராதா? அதுவும் உன் மேல.?" அவரின் கேள்வி கண்டு கன்னங்கள் இரண்டும் சிவந்து போனது அவளுக்கு.


பெங்களூரை விட்டு வெளியே இருந்த சிறு நகரம் அது. மும்பையையும் பெங்களூரையும் இணைத்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த நகரம். நகரத்தின் எல்லையிலிருந்த மூங்கில் தோட்டத்தின் நடுவே இருந்தது ஒரு அழகிய வீடு. அந்த வீட்டின் மொட்டைமாடியில் நின்றபடி காப்பியை அருந்திக் கொண்டிருந்தான் வருண். சுற்றியிருந்த மூங்கில் தோட்டங்கள் அவர்களது வீட்டை அந்த தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மறைத்துக் கொண்டிருந்தன. காலை நேர காற்றில் சலசலக்கும் மூங்கில்களின் சத்தம் கீதம் போல ஒலித்தது அவனுக்கு.


"காப்பி எப்படிண்ணா இருக்கு?" தங்கை தாரணியின் கேள்வியில் திரும்பியவன் "சர்க்கரை கம்மி. காப்பி பொடி அதிகம்.. கொஞ்சம் கசக்குது.. பால் நல்லா கொதிக்கலன்னு நினைக்கிறேன்.. பச்சை வாசம் வருது.." என்றான்.


கோபத்தோடு அவனை வெறித்தவள் "பொய்யாவாவது நல்லாருக்குன்னு சொல்லியிருக்கலாம்.." என்றாள்.


"அப்புறம் எப்படி அடுத்த முறை டேஸ்டா காப்பி போடுவ?" அவனது குறுக்கு கேள்வியை யோசித்தாள்.


"நான் என் மாமியார் வீடு போன பிறகு காப்பி போட கத்துப்பேன்.." என்றாள்.


உதடு நெளித்து சிரித்தவன் "போய் முதல்ல சுடுதண்ணி ஒழுங்கா கொதிக்க வைக்க கத்துக்க.." என்று விரட்டினான்.


நீல வானம் பார்த்திருந்தவனை அடுத்த பத்தாம் நிமிடத்தில் கலைத்தது தாயின் காலடியோசை.


திரும்பிப் பார்த்தான். குணவதி தட்டில் இருந்த வத்தலோடு மாடிக்கு வந்தாள். அவனை விட்டு ஏழெட்டு அடி தள்ளி அமர்ந்து வத்தல் தட்டை தரையில் வைத்தாள்.


காந்திமதியின் இரட்டை பிறவி குணவதி. இருவரும் ஒரே மாதிரியான முக அமைப்பை கொண்டவர்கள். காந்திமதி உயரத்தில் மட்டும் சில அங்குலம் கூடி விட்டவள். பத்து நிமிடம் முன்னால் பிறந்தவள் குணவதி. 


அம்மாவின் முன்னால் வந்து அமர்ந்தவன் தட்டிலிருந்த வத்தல்களை பரப்பி வைக்க ஆரம்பித்தான்.


"அடிக்கடி அந்த வீட்டுக்கு போகாத வருண்.." மகனின் முகம் பார்த்து எச்சரித்தாள்.


"போகணும்மா.. இல்லன்னா ஆதீ பைத்தியம் ஆகிடுவான். உன் தங்கச்சி சைக்கோ பேர்வழியா இருக்கா.. ஆதீயும் ஒரு சைக்கோதான்.." என்றவன் யோசனை வந்தவனாக அம்மாவை பார்த்தான்.


"உங்க தங்கைக்கு லவ்வர் இருக்கானா அம்மா? இதுவரைக்கும் எனக்கு தெரியாது.." 


மகன் சொன்னது கேட்டு நிமிர்ந்த குணவதி "என்ன லவ்வர்?" என்றாள் அதிர்ச்சியோடு.


"காத்தவராயன்.." 


குணவதிக்கு முகம் மேலும் உறைந்து போனது.


"கா.. காத்தவராயனா.?" என்றவளுக்கு பேச்சு வர மறுத்தது.


"ம்ம்.. உங்களுக்கு அவரை தெரியுமா?" 


அவசரமாக மறுத்து தலையசைத்தாள். ஆனாலும் "அக்கா என் லவ்வர் செத்து போயிட்டான்.." என்று பல‌ வருடங்களுக்கு முன்னால் சொன்ன காந்திமதியின் வார்த்தைகள் அவளின் காதுகளில் எதிரொலித்தது.


'ஏன் காந்திமதி இப்படியொரு பொய்யை சொன்ன? உன்னை போய் நம்பினேனே..' தலையில் அடித்துக் கொள்ள தோன்றியது அவளுக்கு.


'எதெதுல பொய் சொல்லணும்ன்னு வரைமுறை இல்லையா உனக்கு?' என்று மனதோடு திட்டியவள் தங்கைக்கு போனிலாவது ஒரு அர்ச்சனையை வழங்க வேண்டும் என்று எழுந்து நின்றாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments