Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 38

 மடியில் படுத்திருந்தவனின் தலையை மென்மையாக வருடி விட்டாள் சங்கவி. ஆதீரன் அவளுடைய புடவையை வாசம் பிடித்தபடி‌ தூக்கத்தில் இருந்தான். அவன் முகத்தின் மீதிருந்த தனது புடவையை மெள்ள விலக்கினாள். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.


முகத்தை சற்று நேரம் ரசித்தாள். அவனின் நெற்றியை வருடி விட்டாள். குனிந்து சிறு முத்தம் பதித்தாள். அவனது புருவங்களை நீவி விட்டாள். அவனின் இதழ்களில் இருந்த ரேகைகளை எண்ணிப் பார்த்தாள். மீசையின் அடர்த்தியை சோதித்தாள். 


அவனுக்கும் தனக்கும் இடையில் நடந்த கசப்பான அனுபவங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம் என்று ஆசைப்பட்டாள். சாதாரணமாய் பழகினால் மிகவும் நல்லவனாக தெரியும் அவனேதான் கோபத்தில் கொடூரனாக தெரிகிறான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது இதயம். 


இறந்த காலத்தை முழுதாக மறக்க நினைத்தாள். அவனின் இதழில் மென்மையாக இதழ் பதித்தாள். காலம் முழுக்க இப்படியே வாழ ஆசை கொண்டாள்.


"நீ இவ்வளவு நேரம் சைட் அடிச்சா நான் நிஜமா கரைஞ்சிடுவேன்.." விழிகளை மூடியபடி சிரிப்போடு சொன்னான் ஆதீரன்.


வெட்கத்தில் வேறு திசை பார்த்தவள் "தூங்கிட்டு இருக்கிங்கன்னு நினைச்சேன்.." என்றாள் சிறு குரலில்.


"நீதான் என் முகத்தை ஆராய்ச்சி செஞ்சி எழுப்பி விட்டுட்ட.." என்றான் விழிகளை திறந்தபடி.


"சாரி.." அவசரமாய் சொன்னவளை சிரிப்போடு பார்த்தான். அவனின் கண்களின் மீது அசைந்தாடிக் கொண்டிருந்தது அவளின் தாலி.‌ தாலியை பற்றியவன் தன் இதழில் பதித்து எடுத்தான்.


சங்கவி மேலும் வெட்கப்பட்டாள்.


"உன் முகத்தை பார்த்துட்டே இருக்கலாம்.." என்றவன்‌ எழுந்தமர்ந்தான். அவளின் கன்னங்கள் பற்றி நெற்றியில் முத்தமிட்டான். 


"நீ என் வரம்.." என்றான். "உன் பக்கத்துல இருந்தா மனசு லேசா இருக்கு‌ சங்கவி.." என்றான் விழிகளை மூடி. அணைத்தலை கூட முழு மனதோடு‌ அனுபவித்தான்.


அவனின் வார்த்தைகள் கேட்டு மகிழ்ந்தாள் அவள். 


"இத்தனை நாள்ல நீ எதுவுமே கேட்கல சங்கவி.. உனக்கு ஏதாவது தேவைப்படுதா.?" என்றுக் கேட்டான்.


மறுப்பாக தலையசைத்தவள் "போதும். எனக்கு தேவையான எல்லாமே இந்த வீட்டுல இருக்கு.." என்றாள் புன்னகையோடு.


இதழ் விரித்தவன் அவளின் வலது கை விரல்களை எடுத்து சொடக்கு எடுத்தான். 


"எதுவும் வேணாமா? புடவை, நகை.?"


"வேணாம்.." 


"கிஸ்.. ஹக்.."


பதில் பேசாமல் இருந்தவளை நிமிர்ந்து பார்த்தான். அவளின் சுண்டு விரலை பற்றி மெள்ள இழுத்தவன் சடக்கென்று சத்தம் வந்ததும் விரலை விடுவித்தான்.


அவள் தலை குனிந்து இருந்தாள்.


"பதில் வரல.."


"உங்க இஷ்டம்.." 


கலகலவென சிரித்தவன் அவளின் முகத்தை அள்ளினான்.


"நீ வேற ரகம் சங்கவி.." என்றபடி அவளின் கன்னத்தில் தன் கன்னம் வைத்து தேய்த்தான்.


ஒற்றைக் கையால் அவளை அணைத்துக் கொண்டவன் சங்கவி எனும் பெயர் குந்தவியாய் மாறி வெளியேறி விட கூடாது என்றும், இவளின் அருகில் அவளின் நினைவு வந்து விட கூடாது என்றும் வெகுவாக போராடினான்.


மறுநாள் தோட்டக்காரரிடம் சொல்லி நிறைய சிவப்பு ரோஜா செடிகளை தோட்டத்தில் நட வைத்தான். சங்கவியின் கண்களை கட்டி அழைத்துச் சென்றான். கண் கட்டை அவிழ்த்து விட்டு செடிகளை காட்டினான்.


"வாவ்.. அழகா இருக்கு மாமா.." என்றவள் கன்னங்களில் கை பதித்தபடி அந்த இடத்தை முழுதாய் சுற்றி பார்த்தாள். நூறு செடிகளுக்கும் மேல் இருக்கும். அனைத்தும் சிவப்பு. 


"நிறைய பூக்கள் பூக்கும்.. அக்காவுக்கு ரொம்ப பிடிக்கும்.." என்றவள் ஆசையோடு செடிகளின் இடையே புகுந்து ஓட முயன்றாள். சட்டென்று அவளின் கைப்பற்றி நிறுத்தினான் ஆதீரன்.


அதிர்ச்சியோடு அவளின் முகம் பார்த்தவன் "என்ன சொன்ன இப்ப.?" என அதட்டலாக கேட்டான்.


என்ன சொன்னோம் என்பது அவளுக்கு நினைவுக்கு வர மறுத்தது. அவனின் அதட்டல் கொஞ்சமாக பயமுறுத்தியது.


அவள் விழிப்பதை கண்டு எரிச்சலடைந்தவன் "சிவப்பு ரோஜாக்கள் உன் அக்காவுக்குதான் பிடிக்குமா.? உனக்கு இந்த பூக்கள் பிடிக்காதா.?" எனக் கேட்டான்.


மௌனமாய் இருந்தவளை முறைத்தவன் "கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு சங்கவி.." என்றான் மீண்டும் அதட்டலாக.


தரை பார்த்தவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான். 


"உனக்கு பிடிக்காதா சங்கவி.?" அடிப்பட்டவன் போல கேட்டான்.


"பி.. பிடிக்கும்.." என்றவளை முறைத்தவன் "என்கிட்ட கூட பொய் சொல்வியா?" எனக் கேட்டான் கவலையோடு.


அவனின் விழிகளில் இருந்த வலி தவறு செய்து விட்டோமோ என்ற பயத்தோடு இருந்தது.


"ரோ.. ரோஜாக்கள் எனக்கு அவ்வளவா பிடிக்காது மாமா. கொஞ்சமா அலர்ஜி மாதிரி.." என்றாள் தயக்கமாக.


"ஆனா நீ ஏன் இவ்வளவு நாளா இதை சொல்லல?" அதிர்ச்சியோடு கேட்டான்.


"ஏனா நீங்க வாங்கி தந்திங்க.. நீங்க வாங்கி‌ தருவதை எப்படி பிடிக்கலன்னு சொல்ல முடியும்?" அப்பாவியாய் கேட்டவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளின் முதுகை வருடி தந்தான்.


இத்தனை நாளாய் இவளின் விருப்பம் கூட கேட்காமல் இருந்து விட்டோமே என்று வருந்தியவன் அவளின் கன்னங்களை அள்ளினான். 


"சாரி சங்கவி.." என்றான் மனதார.


"பரவால்ல மாமா.." என்றவளின் மூக்கின் மீது இதழ் பதித்தான்.


இவளின் காதலை பெற என்ன தவம் செய்தோமோ என்றிருந்தது அவனுக்கு. 


"உனக்கு என்ன பூ பிடிக்கும்?" 


"ரோஜாவை தவிர மீதி எல்லாமே பிடிக்கும்.." தயக்கமாக சொன்னவள் மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது மல்லிகை, சாமந்தி, டிசம்பர், டேரா, கனகாம்பரம் போன்ற நிறைய பூச்செடிகள் புதிதாக இருந்தன.


ஆதீரனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. அனைத்து செடிகளையும் ஆசையோடு பார்த்தாள். அவளின் முகத்திலிருந்த ஆவலை தனது அறையின் ஜன்னலருகே நின்றபடி பார்த்தான் ஆதீரன். அவளை அள்ளிக் கொள்ள சொன்னது இதயம்.


அவன் தனக்காய் வளர்க்க சொல்லியிருக்கும் பூச்செடிகளை ஆசை தீர பார்த்து முடித்தவள் அதன் பிறகுதான் கவனித்தாள். அந்த இடத்தில் ரோஜா செடிகள் ஒன்று கூட இல்லை. பழைய செடிகள் கூட இல்லை. குழப்பத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். தூரத்தில் சருகு கொட்டும் இடத்தில் காய்ந்துக் கொண்டு இருந்தன ரோஜா செடிகள்.


அதிர்ச்சியோடு செடியின் அருகே ஓடினாள். தோட்டக்காரரை அழைத்தாள்.


"ஏன் தாத்தா இந்த செடிகளை பிடுங்கி போட்டிங்க?" கவலையோடு கேட்டாள்.


"ஆதீரன் தம்பிதான்ம்மா ரோஜா செடி ஒன்னு கூட இருக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு. அவர் சொல்லிதான் செடிகளை நான் பிடுங்கினேன்.." என்றார் அவர். 


சங்கவிக்கு ஒன்றும் புரியவில்லை. அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். மாடியின் கடைசி படியில் ஏறி இரண்டெட்டு வைத்திருப்பாள். எதிர்கொண்டு வந்து அவளை தூக்கினான் ஆதீரன்.


பயத்தோடு அவனின் தோளை பற்றினாள். நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தவன் "என்னை தேடி வந்தியா?" எனக் கேட்டான்.


"பயமா இருக்கு. கீழே இறக்கி விடுங்க.." என்றவளிடம் "நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே.." என்றான்.


"தலை சுத்துற மாதிரி இருக்கு. நிஜமா பயமா இருக்கு.." 


"நான் விட்டுடுவேன்னு பயப்படுறியா?"


இல்லையென தலையசைத்தாள்.


"அப்புறம் ஏன் இந்த பயம்.?" என்றவன் மெள்ள அவளை கீழிறக்கினான். ஆனால் முழுதாய் தரையில் நிறுத்தாமல் தன் இதழுக்கு நேராக அவளின் சிவந்த இதழ்கள் வந்ததும் மென்மையாக முத்தமிட்டான்.


சிவந்த கன்னங்களை மறைக்கும் வழி தெரியவில்லை அவளுக்கு. அவளை தூக்கிக் கொண்டு அருகே இருந்த அறையை நோக்கி நடந்தான்.


விழிகளை மூடி இருந்தவள் அவனின் காதலில் வெளிச்சம் கண்டு அதில் தன் ஜீவனை எரிக்க ஆசை கொண்டாள்.


திகட்டாத காதலை‌ தந்தான். அக்காவின் காதலன் என்று நினைக்க இப்போதெல்லாம் உறுத்தலாக இருந்தது. 


"லவ் யூ சங்கவி‌.." என்று நாளுக்கு நூறு முறை அவன் சொன்னாலும் கூட அவளுக்கு போதாதது போலதான் இருந்தது.


குணவதி புகைப்படம் ஒன்றை மகளின் கையில் திணித்தாள்.


"இந்த பையன் எப்படி இருக்கான்னு பாரு.." என்றாள்.


தாரணி புகைப்படத்தை பார்க்காமல் தரையில் தூக்கி எறிந்தாள். "சாரிம்மா என்னால ஒரு போட்டோவை பார்த்தெல்லாம் ஒருத்தனை கல்யாணம் பண்ணி போக முடியாது.." என்றாள்.


குணவதி ஓங்கி ஒன்று விட்டதில் கன்னத்தை பிடித்தாள் தாரணி.


"எதிர்த்து பேசும் பழக்கமெல்லாம் எங்கே கத்துக்கிட்ட.?" என்றாள் கோபமாக.


தாரணி கலங்கும் விழிகளோடு தனது அறைக்கு ஓடினாள்.


வெளியே சென்றிருந்த மகன் வீட்டிற்கு வந்ததும் விசயத்தை சொன்னாள் குணவதி.


"மெள்ள பேசலாம் அம்மா.. சின்ன பொண்ணு.. அதனாலதான் பயப்படுறா.." என்றவன் தங்கையை தேடி போனான்.


அறையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தவளின் அருகே சென்று அமர்ந்தான்.


"எதுக்கு இந்த அழுகை? இந்த பையனை பிடிக்கலன்னா விடு.." என்றான்.


"எனக்கு கல்யாணமே பிடிக்கல. எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க வேணாம்.." கத்தாத குறையாக சொன்னாள்.


சப்பென்று ஒரு அறையை விட்டவன் "எதுவா இருந்தாலும் பொறுமையா சொல்லு. எதுக்கு இந்த கத்தல்.? வாய்ல ஒரு பல் கூட இருக்காது. முழுசா உடைச்சிடுவேன்.. உனக்கு ஏன் கல்யாணம் வேணாம்.? வேலைக்கு போக போறியா.? அப்பா கம்பெனிக்கு போறியா.?" என்றுக் கேட்டான்.


மறுப்பாக தலையசைத்தவள் இரு பக்க கன்னங்களையும் பிடித்தபடி தரையை பார்த்தாள்.


"எனக்கு எங்கேயும் போக வேணாம். நான் சமைக்க கத்துக்க போறேன்.." என்றாள் சிறு குரலில்.


வருண் அவளை குழப்பத்தோடு பார்த்து விட்டு எழுந்து நின்றான்.


"உன் இஷ்டபடி விட்டு ரொம்ப கெட்டுப் போயிட்ட.. படிக்க உன்னை வெளியூர் அனுப்பியதே தப்புதான் போல.." என்றவன் அவள் அறையின் கதவை அறைந்து சாத்தி விட்டு போனான்.


தாரணி அவசரமாக தனது போனை எடுத்தாள். தனது காதலனுக்கு அழைத்தாள்.


"எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஆனா நீங்க வந்து இன்னும் பேசல.." குற்றம் சாட்டினாள்.


"வேலை அதிகம் தாரு.. நான் இன்னும் என் வீட்டுல பேசல.‌ கொஞ்சம் டைம் கொடு.."


"எத்தனை நாள் டைம் வேணும்.? எங்க‌‌ வீட்டுல எனக்கு மேரேஜ் பண்ணி வச்ச பிறகு சொல்ல போறிங்களா.?"


"தாரணி ஒரு வாரம் பொறு.. நாங்க உன் வீடு வரோம்.."


"நான் இனியும் உங்களை நம்ப மாட்டேன்.. நான் வீட்டுக்கு வந்து நாலு மாசம் ஆச்சி. ஆனா நீங்க இன்னும் வரல. அதுக்குள்ள அங்கே வேற பெண்ணை பிடிச்சிட்டிங்களா.?" என்றாள் ஆத்திரத்தோடு.


"உன் எண்ணம் ஏன்தான் எப்பவும் இப்படி சீப்பாவே இருக்கோ? ஐ ரியலி லவ் யூ.. உன்னை கழட்டி விட நினைச்சிருந்தா இப்ப உட்கார்ந்து உனக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்க மாட்டேன்.. நான் வீட்டுல பேசுறேன்னு சொன்னேன். உன் வீடு மாதிரி இல்ல இங்கே. எல்லார் சம்மதமும் அனுமதியும் முக்கியம்.." என்று தெளிவாய் எடுத்துச் சொன்னான். "உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா.? இல்லையா.? அதை மட்டும் நீ சொல்லு.." காரமாக கேட்டான்.


பதிலை சொல்லாமல் அழைப்பை துண்டித்தாள் தாரணி. காதலன் சொன்னது எதுவும் காதில் ஏறவேயில்லை. உள்ளங்கையில் முகம் புதைத்து அழுதாள். அம்மாவின் கையிற்கு வந்த புகைப்படம் அப்பாவிடம் சென்றால் பிறகு தனக்கு திருமணம் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று புரிந்து அழுதாள். பயமாக இருந்தது.


"உங்களை காதலிச்சது என் தப்புதான்.." போனை பார்த்து திட்டியவள் எழுந்து நின்றாள். தூரத்தில் மூங்கில் காடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருந்த ரயிலின் சத்தம் கேட்டது.


"வர கோபத்துக்கு ரயில்ல பாய தோணுது.." என்று‌ புலம்பினாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments