Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 40

 யஷ்வந்த் தன் காதலியை முறைத்தான். அனார்கலி சுடிதார் ஒன்றை அணிந்தபடி கையில் பர்ஸை கூட எடுக்காமல் ஓடி வந்து விட்டவளை திட்ட தோன்றியது அவனுக்கு.


"அதுக்காக திருட்டு கல்யாணம் பண்ணிக்க சொல்றியா.?" எனக் கேட்டான் காட்டமாக. அவளின் பெற்றோர் சம்மதமும் தனது பெற்றோர் சம்மதமும் பெற நினைத்தான்.


"ஆனா நான் அதுக்காக மனசுல உங்களை வச்சிக்கிட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்க முடியுமா.?" அதே காட்டத்தோடு அவளும் கேட்டாள்.


"என்ன சத்தம்.?" என்றுக் கேட்டபடி ஹாலுக்கு வந்தார் மனோகர்.


யஷ்வந்த் தன் அப்பாவை கண்டதும் நெற்றியை தேய்த்தான்.


"யார் இந்த பொண்ணு.?" என்றவர் தாரணியை தலை முதல் கால் வரை அளந்தார்.


"இவதான் தாரணி. நான் லவ் பண்ற பொண்ணுன்னு சொல்லி இருந்தேனே.." என்றவனை முறைத்தார் அவர்.


"எத்தனை முறை சொன்னாலும் உனக்கு அறிவே வராதா.? ஒரு சாதாரண‌ விளம்பர ஏஜென்ஸி நடத்தும் ஒருத்தரோட பொண்ணை என் வீட்டு மருமகளா என்னால ஏத்துக்க முடியாது.. உனக்கு வேணும்ன்னா இவளை உன் கேர்ள் பிரெண்டா வச்சிக்க.. ஆனா மேரேஜ் கனவுல கூட நடக்காது.. நான் சொல்ற பொண்ணைதான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாகணும்.. இந்த‌‌ வீட்டுக்கு வர போற மருமகளுக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு. கௌரவம் இருக்கு." என்றவர் தன் கையிலிருந்த சூட்கேஸை தனது பாடிகார்டிடம் தந்தார்.


"போகலாமா சார்.?" என கேட்டவனிடம் தலையசைத்து விட்டு நடந்தார்.


யஷ்வந்த் கறுத்து போன முகத்தோடு தந்தையை வெறித்தான். அவனும் கடந்த நான்கு மாதங்களாக இவரிடம் சம்மதம் பெற போராடிக் கொண்டிருக்கிறான். முடியாது என்று மறுத்துக் கொண்டிருப்பவரை சம்மதிக்க வைக்க நேரம் தேடி கொண்டிருக்கிறான்.‌ தனது காதலை வார்த்தையால் எவ்வளவோ முறை சொல்லி விட்டான். அவன் தன் காதலை சொன்னது பற்றி கேட்டிருந்தால் கல்லும் கரைந்திருக்கும். ஆனால் மனோகரோ கொஞ்சமும் மனம் இறங்காமல் இருந்தார். 


தந்தையே இன்னும் அனுமதி தராத நிலையில் காதலி தேடி வந்து விடவும் அவனுக்கு இயலாமையின் காரணமாக கோபம்தான் வந்து சேர்ந்தது.


தாரணியின் முகம் பார்த்தான். தலை குனிந்து நின்றிருந்தவளின் விழிகள் கலங்கி இருந்தது. அவள் இப்படி அவமானப்பட்டு விட கூடாது என்றுதான் அவன் சிரமப்பட்டான்.


தாரணி இன்னும் இரண்டு மாதம் பொறுத்து இருந்திருந்தால் கம்பெனியிலிருந்து வர வேண்டிய தனக்கான ஷேர்ஸை தன் பெயருக்கே மாற்றி கொண்டிருந்திருப்பான். பிறகு தைரியமாக தந்தையை எதிர்த்து இவளை திருமணம் செய்திருப்பான். ஆனால் இப்போது முழுதாய் கெட்டு விட்டது. தாரணியும் அவனின் பேச்சை கேட்கவில்லை. தந்தையும் அவனை மதிக்கவில்லை.


"அப்பா ஒரு நிமிசம்.." யஷ்வந்தின் அழைப்பில் நின்றவர் திரும்பி பார்த்தார்.


தண்ணீரை எடுத்து உணவு இருந்த தட்டிலேயே கையை கழுவினான். அம்மா அதிர்ந்தாள்.


தாரணியின் அருகே வந்தவன் அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கடவுள் சிலை இருக்கும் திசையில் நடந்தான்.


"யஷு.." மனோகர் அவனின் செய்கை புரியாமல் குழம்பினார்.


வீட்டுக்குள் இருந்த காளி சிலையின் முன்னால் வந்து நின்றான் யஷ்வந்த். தாரணி குனிந்த தலை நிமிரவில்லை. இங்கே வந்திருக்க வேண்டாம் என்று நினைத்தாள். 


காளியின் சிலையில் இருந்த மங்கள் சூத்ராவை கையில் எடுத்தான். 


"தாரணி என்னை பாரு.." என்றவன் சுற்றி இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொள்ளும் முன்பே அவளின் கழுத்தில் மங்கள் சூத்ராவை அணிவித்து விட்டான். தாரணி அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்.


"என்ன பண்ணியிருக்க.?" மனோகர் கோபத்தோடு கேட்டார்.


தந்தையின் புறம் திரும்பவில்லை அவன்.


"தமிழ்நாட்டு தாலி கிடைக்கல தாரு.. ஆனா இதுவும் தாலிதான்.." என்றவன் காளியின் காலடியில் கிடந்த குங்கும தட்டை கையில் எடுத்தான். ஐந்து விரலிலும் குங்குமத்தை எடுத்தவன் அவளின் நெற்றியில் வைத்தான். அவன் அள்ளி வைத்த குங்குமம் அவளின் முகத்தை பாதி நிறைத்து விட்டது. கண்களில் விழுந்த குங்குமம் அவளின் கண்ணீரை அதிகரிக்க செய்தது. ஆனால் அவனோ அதை கண்டுக் கொள்ளாதவனாக அவளை வெறித்தான்.


"இதுதானே கேட்ட.? மேரேஜ்.. அதுவும் எனக்கு வெறும் ஒரு வார டைம் கூட குடுக்க முடியாத ஒரு மேரேஜ். இந்த அந்த மேரேஜ் முடிஞ்சது. போதுமா.?" எனக் கர்ஜனையாக கேட்டவன் அவளின் கையை இறுக்க பற்றியபடி தந்தையின் புறம் திரும்பினான்.


"உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதையும் அன்பும் இருக்கு. அதனால்தான் என் கல்யாணத்துக்கு உங்ககிட்ட அனுமதி கேட்டு காத்திருந்தேன் நான். நீங்க அந்த மரியாதையை காப்பாத்திக்கல. இதுக்கு மேல நான் பொறுத்து போக முடியாது. இவ என் லவ்வர்.. இப்ப என் வொய்ப்.. இவளுக்கு கண்டிப்பா நிறைய அந்தஸ்து தேவைதான். ஆனா அந்த அந்தஸ்தை நான்தான் உருவாக்கி தருவேன். ஏனா இவ என் வொய்ப்." என்றான் தாரணியை தன் தோளோடு அணைத்தபடி.


விழிகள் கலங்க நின்றிருந்தவளை கண்டவன் "இதுக்கு மேல நீ என் முன்னாடி அழுதா நடக்கறதே வேறையா போயிடும்.. காதலனையே நம்பாதவளுக்கு இந்த நீலி கண்ணீர் எதுக்கு.?" என்று திட்டினான். அவளை தன்னிடமிருந்து விலக்கி தள்ளினான். ஓரடி தள்ளிச் சென்று நின்றாள் அவள்.


தர்ஷினியும் யவனாவும் பரிதாபமாக அவளை பார்த்தனர்.


தன்னிடம் புன்னகை மாறாமல் பேசும் யஷ்வந்த் அவனுடைய காதலியிடம் இப்படி நடந்துக் கொண்டது கண்டு ஆச்சரியப்பட்டாள் குந்தவி.


மனோகர் ஆத்திரத்தோடு மகனை முறைத்து நின்றார். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சத்தமும் வரவில்லை யாரிடமிருந்தும்.


அம்மாவின் புறம் திரும்பினான்.


"இவதான் என் வொய்ப்ம்மா.. தாரணி.. அட்வர்டைஸிங் மேனேஜ்மென்ட்ல எம்.பி.ஏ முடிச்சிருக்கா. சமைக்க தெரியாது.." என்றவன் மனைவியின் புறம் சந்தேகத்தோடு திரும்பினான்.


"சமைக்க கத்துக்கிட்டியா?" எனக் கேட்டான். மறுப்பாக தலையசைத்தாள் தாரணி. வாய் திறக்கும் தெம்பில்லை அவளிடம்.


"சமைக்க தெரியாது. ஆனா நல்லா சாப்பிடுவா.. வாய் ரொம்ப ரொம்ப அதிகம். நீங்க மரியாதை தரலன்னா இவளும் தர மாட்டா.. அவ்வளவுதான் இவளை பத்தி.. எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சி.‌ நான் கிளம்பறேன்.." என்றவன் யோசனையோடு தர்ஷினியை பார்த்தான்.


"இவளுக்கு என் ரூமை காட்டு. மறக்காம சாப்பாடு கொடுத்துடு.." என்றான்.


தாரணி கடைசி வரை நிமிரவேயில்லை. 


"டைம் ஆச்சி.. குந்தவி சாப்பிட்டியா.? ஆபிஸ் கிளம்பலாமா?" எனக் கேட்டான்.


"ஆச்சி சார்.." என்றவள் தனது கைப்பையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள். 


தன் கையை பார்த்தான் யஷ்வந்த். செந்தூரத்தால் கை முழுக்க சிவப்பாய் மாறி இருந்தது. அருகில் இருந்த தாரணியின் துப்பட்டாவை பிடுங்கி கையை துடைத்தவன் துப்பட்டாவை அவள் முகத்தின் மீது தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் எறிந்த துப்பட்டா அவளின் மேல் விழுந்து நழுவி காலடியில் தஞ்சம் புகுந்தது.


சிலையாய், கோபமாய் நின்றிருந்த தந்தையை கடந்தவன் ஒரு நிமிடம் நின்றான்.


"அவ என் வொய்ப்.. உங்களின் காரணமா அவ மேல தூசு கூட விழ கூடாது.. என்கிட்டயிருந்து இவளை பிரிக்கறதுல உங்க பிசினஸ் மைன்டை காட்டிடாதிங்க. இவளுக்கு ஏதாவது ஆச்சின்னா அப்புறம் உங்க முதல் எதிரியும் கடைசி எதிரியும் நானாதான் இருப்பேன்.." எச்சரித்து விட்டு நகர்ந்தான்.


இங்கே இப்படி பேசியவன்தான் காரில் ஏறிய இரண்டாம் நிமிடம் "என்னை இப்படி ஒரு சிக்கல்ல மாட்டி விட்டுட்டாளே இந்த ராட்சசி.." என்று குந்தவியிடம் புலம்பினான்.


"அஞ்சே நிமிசத்துல மேரேஜ் முடிஞ்சிடுச்சி.." ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.


"நீயும் கிண்டல் பண்றியா குந்தவி.? ஒரு வாரம் டைம் கேட்டேன். அவ வீட்டுல மட்டும் இரண்டே நாள்ல மாப்பிளை பார்த்து கட்டி வச்சிட போறாங்களா.? என் மேல நம்பிக்கை இல்ல அவளுக்கு. அதனாலதான் நான் சொன்னதையும் மீறி கிளம்பி வந்திருக்கா.." என்றவன் தலையை பிடித்தபடி குனிந்தான்.


"எங்க அப்பா இனி பார்க்கும் இடத்துலயெல்லாம் முறைக்க போறாரு.. ஜேம்ஸ் மாமாவோட பொண்ணை எனக்கு கட்டி வச்சி அவரோட சொத்துல பாதியை இவர் சுருட்டலாம்ன்னு இருந்தாரு.. என்னால போச்சின்னு காண்டாக போறாரு.. என்னை இனி வச்சி செய்ய போறாரு.." என்று புலம்பினான்.


அவனை பார்க்கையில் உண்மையிலேயே அவளுக்கு பரிதாபமாக இருந்தது.


"விடுங்க பரவாயில்ல.. எல்லாம் நல்லதுக்குன்னே நினைக்கலாம்.." என்று தைரியம் சொன்னாள் குந்தவி.


"ரோசத்திலயும் கோபத்திலயும் அவ கழுத்துல தாலியை கட்டிட்டேன்.. இனி என்ன நடக்க போகுதோன்னு நினைச்சாலே பக்குன்னு இருக்கு.." 


அவனின் புலம்பல் இன்னும் சில வாரத்திற்கு தீராது என்பதையும் அவனின் புலம்பல் சரக்கிற்கு மாட்டிய அப்பாவி ஊறுகாய் தான்தான் என்பதையும் சுலபமாக புரிந்துக் கொண்டாள் குந்தவி.


மனோகர் தன் புது மருமகளை ஏற இறங்க பார்த்தார். தான் பெற்ற மகனை மனதுக்குள் பலவித கெட்ட வார்த்தைகளால் திட்டினார். 


'இந்த கல்யாணம் எப்படி நிலைக்குதுன்னு நானும் பார்க்கறேன்..' என நினைத்தபடி வெளியே நடந்தார்.


"வந்த முதல் நாளே அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நடுவுல சண்டையை மூட்டி விட்டுட்டா.." என்று சாடையாக திட்டினாள் தர்ஷினி.


யவனா தாரணியின் அருகே சென்றாள். தரையில் கிடந்த துப்பட்டாவை எடுத்து அவளின் தோளில் போட்டு விட்டாள்.


"அண்ணன் டென்சன்ல பேசிட்டான். எதையும் மனசுல வச்சிக்காதிங்க.." என்றாள். தனது துப்பட்டாவால் அவளின் முகத்தை துடைத்து விட்டாள்.


"பைத்தியக்காரன் முகம் முழுக்க குங்குமத்தை கொட்டி வச்சிட்டான்.." என்று திட்டினாள்.


ரூபிகாவும், சுவிக்ஷாவும் அருகில் வந்தனர்.


"இந்த பையன் மேரேஜை முடிச்சிட்டான்னு நம்பவே முடியல.. பல கோடி ரூபா செலவு பண்ணியிருக்க வேண்டியது.. காளியோட மங்கள் சூத்ராவை வச்சி முடிச்சிட்டான்.." என்று ஆச்சரியமடைந்தாள் சுவிக்ஷா.


"ஆசிர்வாதம் கூட வாங்காம நிக்கறா.." அம்மாவின் காதில் கிசுகிசுத்தாள் தர்ஷினி.


தாரணி மாமியாரின் முன் வந்து நின்றாள். காலை தொட்டாள்.


"நல்லா இரும்மா.." மருமகளின் தோளை தொட்டவள் அவசரமாக பின்னால் நகர்ந்துக் கொண்டாள்.


சின்ன மாமியாரிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடித்தாள்.


"அழகா இருக்கிங்க நீங்க.." யவனா சொன்னாள்.


பதிலுக்கு புன்னகை கூட புரியவில்லை அவள்.


"சரியான சிடுமூஞ்சி.." என்று முனகிய தர்ஷினி அங்கே நிற்க பிடிக்காமல் கிளம்பி போனாள்.


"சாப்பிடுவிங்க வாங்க அண்ணி.." யவனாதான் அழைத்தாள்.


வேண்டாமென தலையசைத்தாள் அவள். இரண்டு மூன்று முறை அழைத்து பார்த்தவள் பிறகு அவளை கூட்டிச் சென்று யஷ்வந்தின் அறைக்குள் விட்டு வந்தாள்.


அன்று மாலை வரையிலும் குந்தவியின் அருகில் அமர்ந்துதான் புலம்பிக் கொண்டிருந்தான் யஷ்வந்த். அவளுக்கு தன் காதுகள் செவிடாகிவிடுமோ என்று பயமாக இருந்தது.


"முடிஞ்சதை விடுங்களேன்.." என்றாள் ஒரு கட்டத்திற்கு மேல் அவன் புலம்பலை காது கொடுத்து கேட்க முடியாதவளாக.


"எப்படி விடட்டும்.? அவ வாயை பத்தி உனக்கு தெரியாது குந்தவி.. எதிர்காலத்துல எங்க அப்பாவுக்கும் அவளுக்கும் நடுவுல எத்தனை சண்டை வர போகுதோன்னு நினைச்சாவே எனக்கு பயமா இருக்கு. அவ பிடிக்கற அடம் கூட தனி ரகம்தான். நினைச்சா அதை உடனே முடிக்கணும் அவளுக்கு. முன்கோபத்தை பத்தியெல்லாம் சொல்லவே தேவையில்ல. முன்னாடி இருக்கற மனுசனோட சூழ்நிலையை புரிஞ்சிக்க கொஞ்சமும் டிரை பண்ண மாட்டா.. அவ சொல்லிட்டா சூரியன் கூட மேற்குலதான் உதிக்கணும்.. அவ்வளவு பிடிவாதம்.." என்றான் மேஜையின் மீது கையை ஊன்றி உள்ளங்கைகளில் தாடையை பதித்தபடி.


அவன் சொல்வதை கேட்ட பிறகு அவளுக்கு கொஞ்சம் பயமாகவும் பரிதாபமுமாகதான் இருந்தது. ஆனால் அந்த பிடிவாதகாரி தனது வாழ்க்கைக்கும் கூட எதிரியாக போகிறாள் என்பதைதான் அறியாமல் போய் விட்டாள் குந்தவி.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments