Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 41

 தேயிலை தோட்டத்தின் மத்தியில் தேடிக் கொண்டிருந்தார் காத்தவராயன். அவரின் மயிலை கன்று எங்கே போனதென்று தேடிப்பார்த்துக் கொண்டிருந்தார்.


மாலை இருள் நெருங்கிக் கொண்டிருந்தது. தோட்டத்தில் வேலை பார்த்தவர்கள் கூட அங்கிருந்து போய் விட்டார்கள். ஆனால் அவளை காணவில்லை.


"எங்கே போன மதி.? குளிருது.. வா வீட்டுக்கு போகலாம்.." என்றவர் செடிகளின் இடை புகுந்து நடந்தார். காந்திமதியை எங்கேயும் காணவில்லை. போட்டுக் கொண்டிருந்த ஸ்வெட்டரை மீறி குளிர் தொட்டது.


"இவ எங்கே போய் தொலைஞ்சா.? குளிருல எங்காவது விழுந்து செத்துட்டாளா.?" என கோபமாக திட்டியபடி நடந்தார்.


தோட்டத்தின் கடைசி வரை சென்றார். அதற்கு மேல் பள்ளத்தாக்குதான் இருந்தது. தயக்கமாக நெருங்கினார். பாறை ஒன்றின் மீது அமர்ந்தபடி பள்ளத்தாக்கினை ரசித்துக் கொண்டிருந்தாள் காந்திமதி.


"இங்கே என்ன செய்ற.?" கோபமாக கேட்டபடி அவளின் அருகே வந்தார்.


"அழகா இருக்கு‌ இடம்.." என்றவளை அப்படியே தள்ளி விட்டுவிட தோன்றியது அவருக்கு.


"நான் இங்கிருந்து குதிக்க விரும்பினா நீயும் என் கைப்பிடிச்சி குதிப்பியா காத்தவராயா.?" தலைசாய்த்து அவர் புறம் திரும்பி கேட்டாள்.


"மாட்டேன்.. நேரா போய் உன் பையனை கொன்னுட்டு வந்துடுவேன்.." 


அவரை எரிச்சலோடு பார்த்தார்.


"உனக்கு எப்பதான் ரொமான்டிக் வரும்.?" என்றவளை இரு கைகளிலும் ஏந்தினார். கீழே விழ பிடிக்காமல் அவரின் தோளை வளைத்தது அவளின் கரங்கள்.


திரும்பி நடந்தார். "என்னை விடு.. நான் இன்னும் கொஞ்ச நேரம் அந்த இடத்தை ரசிச்சிட்டு‌ வரேன்.." என்றவளின் முகம் பார்த்தவர் "நீ ரசிக்க இந்த நேரமும் இடமும்தான் கிடைச்சதா.?" என்று காட்டமாக கேட்டார்.


அவள் பதில் பேசாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்தாள்.


காந்திமதியை ஜீப்பில் அமர வைத்தார். வீடு நோக்கி ஜீப்பை ஓட்டினார்.


"குளிருது.." என்றவளின் பொடனியில் அடித்தார்.


"இந்த நேரத்துக்கு காக்கா குருவி கூட‌ கூட்டுக்கு போயிருக்கும். நீ வெளியே திரிஞ்சா குளிராமலா இருக்கும்.?" என்று கேட்டு திட்டினார்.


"நீ என்னை ரொம்ப திட்டுற.. என்னை விடு. நான் என் பையன்கிட்டயே போறேன்.." என்றவள் ஜீப்பின் வேகம் கண்டு அதிர்ந்தாள். 


"என்ன செய்ற.?" 


"ஆக்ஸிடென்ட் பண்ண போறேன்.." என்றவரை பயத்தோடு பார்த்தவள் "ஆனா ஏன்.?" எனக் கேட்டாள்.


"உன்னை உன் மகன்கிட்ட அனுப்புவதை விட உன்னை என்னோடு சேர்த்து சாகடிக்கறது பிடிச்சிருக்கு.." என்றார் அவர்.


அவசரமாக அவளின் கையை பற்றினாள்.


"ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன். அதுக்காக நீ என்னை பரலோகம் கூட்டி போகாதே.. எனக்கு உன்னோடு சேர்ந்து நூறு வருசம் வாழ ஆசை.." என்றாள் அவசரமாக.


"இப்படியேதான் நீயும் ஏமாத்திட்டு இருக்க.. ஆனா இன்னைக்கு நான் ஏமாறுவதா இல்ல.." என்றவர் அடுத்து வந்த வளைவில் வேகமாக ஜீப்பை வளைத்தார். ஜீப்பின் வேகம் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. மண் சாலையில் வளைந்து நெளிந்து ஓடியது. 


"காத்தவராயா நிஜமாவே சாக போறோம் நாம.." காந்திமதி பயத்தில் அலறிய நேரத்தில் அருகே இருந்த பள்ளம் ஒன்றில் பாய்ந்தது ஜீப். 


"நான் நினைக்கல.. ஆனா ஜீப்தான் கட்டுப்பாட்டை இழந்துடுச்சி மதி.. சாரி.." என்றவர் ஜீப்பின் பிரேக்கை விடாமல் மிதித்தார். ஆனாலும் ஜீப் பள்ளத்தின் ஆழம் தாண்டி கடைசியில் பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது. ஸ்டியரிங்கை விட்டுவிட்டு காந்திமதியை அணைத்துக் கொண்டார்.


"சாரி மதி.. இப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கல.." என்றார் விழிகள் கலங்க.


"கடைசி வரை உன்னோடு நான் வாழவே முடியாதா காத்தவராயா.?" அழுகையோடு அவள் கேட்கவும் சப்தநாடிகள் ஒடுங்கி போனது அவருக்கு. 


"எங்க இரண்டு பேரையும் காப்பாத்துங்க ஆண்டவரே.." என்றவரின் கரங்கள் அவளை இன்னும் கொஞ்சமாக இறுக்கியது.


இருள் சூழ்ந்த பிறகு வீட்டிற்கு வந்தனர் யஷ்வந்தும் குந்தவியும். வீட்டிற்கு வரவே மாட்டேன் என்றவனை அவள்தான் அடம்பிடித்து அழைத்து வந்திருந்தாள்.


வீட்டிலிருந்த மொத்த பேரும் அவன் வந்ததும் வட்டம் கட்டினர்.


குந்தவி நழுவ முயன்றாள். அவளின் கையை பிடித்து தன்னருகே நிறுத்திக் கொண்டான் அவன்.


"தைரியத்துக்காவது கூட இரு குந்தவி.. என்ன இருந்தாலும் நாம பிரெண்ட்ஸ் இல்லையா.?" அவளின் காதோரம் கிசுகிசுப்பாக கேட்டான்.


'சரியான சில்லறை‌‌..' மனதுக்குள் திட்டியவள் அமைதியாக நின்றாள்.


கல்கத்தாவில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் பெரிய அண்ணனும், ஹைதராபாத்தில் வேலை புரியும் சித்தப்பாவின் மகனான சின்ன அண்ணனும் மனைவிமார்களோடு வந்திருந்தார்கள். 


"யாரை கேட்டு கல்யாணம் செஞ்ச.?" பெரிய அண்ணன் கத்தலாக கேட்டான்.


குந்தவியின் கையை முறிக்க நினைப்பவன் போல கையை இறுக்கியவன் "நான் கேட்டேன். அப்பா ஒத்துக்கல. அதனால்தான் நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.." என்றான்.


"உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா.? அந்தஸ்து கௌரவம் இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா.?" சின்ன அண்ணன் திட்டினான்.


இடது கையால் நெற்றியை கீறி கொண்ட யஷ்வந்த் "அந்தஸ்து கௌரவம் கண்டிப்பா காதலுக்கு இல்ல.. வருசம் முழுக்க வாழ போறவன் நான். யார் எனக்கு துணையா இருக்கணும்ன்னு நான்தான் முடிவு செய்வேன்.." தைரியமாக பேசுவதாக நம்பினான்.


"அவ பணத்துக்காக உன்னை வளைச்சி போட்டிருக்கா.." பெரிய அண்ணி குற்றம் சுமத்தினாள்.


"நீங்க எப்படி வேணாலும் நினைச்சிக்கங்க.. ஆனா எனக்கு அவளை பிடிச்சிருக்கு.." என்றவன் குந்தவியை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.


"இவ யாரு.?" சின்ன அண்ணி எரிச்சலாக கேட்டாள்.


திரும்பியவன் குந்தவியின் தோளில் கை போட்டான்.


"என் பிரெண்ட்.. குந்தவி.." என்றான்.


"கேர்ள் பிரெண்டா.?" பெரிய அண்ணன் சிடுசிடுப்பாக கேட்டான்.


பற்களை கடித்தான் யஷ்வந்த். "உன்னை மாதிரியே என்னையும் நினைக்காத அண்ணா. இவ வெறும் பிரெண்ட்தான். நியாயமான நிஜமான பிரெண்ட்.." என்றவன் ஹாலை தாண்டி நடந்தான்.


வராண்டாவிற்க்கு வந்ததும் நெஞ்சில் கையை வைத்தபடி சுவரில் சாய்ந்தான்.


"எல்.கே.ஜி பையனை நிற்க வச்சி கஙச சொல்ல சொல்லுற மாதிரி கொடுமை பண்றாங்க.." என்று புலம்பினான்.


"நான் என் ரூமுக்கு போறேன்.." குந்தவி தயங்கியபடி விலகி நடந்தாள்.


யஷ்வந்த் பத்து நிமிடத்திற்கும் மேல் தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டு தனது அறையின் கதவை திறந்தான். அறை இருட்டாக இருந்தது. 


'அப்படியே இருந்திருந்தா கூட யாராவது ஒரு வேலைக்காரங்க லைட்டை போட்டிருப்பாங்க. பொண்டாட்டி வந்தாலும் வந்தா. முதல் நாளே ரூம் இருட்டு..' தனக்குள் புலம்பியபடியே லைட் ஸ்விட்சை போட்டான்.


சோபாவில் முட்டிக்காலை கட்டியபடி அமர்ந்திருந்தாள் தாரணி. காலையில் அவன் வைத்து விட்டு குங்குமத்தில் கொஞ்சத்தை யவனா துடைத்து விட்டது போக மீதி இடத்தில் இருப்பது அப்படியே இருந்தது. காலையில் எப்படி பார்த்து சென்றானோ அதே முகத்தோடு அமர்ந்திருந்தாள்.


"தாரணி.." அவளுக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவளின் கையை பற்றினான். சட்டென்று கையை பின்னால் இழுத்துக் கொண்டாள்.


"கோபமா‌.?" அவளின் தாடையை பற்றிக் கேட்டான்.


"தெரியல.." என்றவள் அவனின் பிடியிலிருந்து விலக முயன்றாள். 


மெள்ள எழுந்து அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவளுடைய தோளை அணைத்தான்.


"சாரி பேபி.. எங்க அப்பாக்கிட்ட நானும் அனுமதி கேட்டுட்டேதான் இருந்தேன்.." என்றவனின் கையை தட்டி விட்டவள் "நான் வீட்டை விட்டு வந்த மாதிரி நீங்களும் வர வேண்டியதுதானே.?" என்றாள்.


முறைத்தான் அவளை. 


"உன்னோடு வந்து என்ன செய்வது.? பிச்சை எடுக்க முடியாது என்னால.. எனக்கு நிறைய சாதிக்கணும்.. பத்து பைசாவை வச்சி பில்லியனா மாத்துறது கதைகளில் ஈசியா இருக்கலாம். ஆனா எனக்கு கஷ்டம்தான். எல்லாத்தையும் உதறிட்டு வந்து உன்னை வாடகை வீட்டுல குடி வைக்க முடியாது.." என்று பொரிந்தான்.


அமைதியாக தலை குனிந்தவள் மௌனமாக கண்ணீர் சிந்தினாள். 


"பேபி.." அவளின் முகத்தை அள்ளினான். அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.


"என் அப்பா பேசியதை மனசுல வச்சிக்காத.. மன்னிப்பை நானே கேட்கிறேன்.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.


"சாரி பேபி.. கல்யாணத்தை பத்தி உனக்குன்னு பல கனவுகள் இருந்திருக்கும்.. நான் ரொம்ப சிம்பிளா முடிச்சிட்டேன்.. சாரி.." என்றான்.


அவனின் முதுகை சுற்றி கைகளை பின்னியவள் "ஐ ரியலி மிஸ் யூ.." என்றாள் அழுகை குரலில். 


"ஐ யம் சாரி.." என்றவன் அவளின் முதுகை வருடி தந்தான்.


"நீங்க தினம் வருவிங்கன்னு நான் எங்க வீட்டு வாசல் பார்த்து இருந்தேன்.." குலுங்கி அழுதபடி சொன்னவளை பரிவோடு பார்த்தான். இவளிடம் கூட சொல்லாமல் சர்ப்ரைஸாக போய் நிற்போம் என்று எண்ணி காத்திருந்து விட்டாளே என்று வருத்தமாக இருந்தது. 


"சாரி.." என்றவன் அவளை சமாதானம் செய்ய முயன்றான். அவளின் அழுகைதான் நிற்கவேயில்லை.


"நான் போன் பண்ணா கூட நீங்க எடுக்கவேயில்ல.." 


பெருமூச்சு விட்டுக் கொண்டவன் அவளை விலக்கி அமர வைத்தான்.  எழுந்து நின்று சட்டையை கழட்ட ஆரம்பித்தான். அவசரமாக தனது கண்களை பொத்திக் கொண்டாள் தாரணி.


அவளின் செய்கை கண்டு அதிர்ந்தவன் "இன்னைக்கு நைட் நமக்கு பர்ஸ்ட் நைட்ன்னு நினைச்சேன் நான்.." என்றான் அப்பாவியாக.


ஒற்றை கையை இறக்கியவள் அதிர்ச்சியோடு அவன் முகம் பார்த்தாள். பயத்தில் முகம் வெளுத்து விட்டது அவளுக்கு.


'என்கிட்ட மட்டும் இந்த வாய் பேசுறா.. ராட்சசி..' என்று நினைத்தவன் "ஆனா நான் பர்ஸ்ட் நைட்க்கு சட்டையை கழட்டல.." என்றான்.


அவள் குழம்பி அமர்ந்திருக்கும் போதே தனது சட்டையையும் பனியனையும் கழட்டி வீசினான். 


அவள் முன்னால் திரும்பினான். கையிலும் வலது நெஞ்சிலும் இருந்த தழும்புகளை காட்டினான்.


"ஏழெட்டு வாரம் முன்னாடி என்னை சிலர் வெட்டிட்டாங்க தாரு.. இரண்டு வாரத்துக்கும் மேல ஹாஸ்பிட்டல்லதான் இருந்தேன்.." என்றவனை கவலையோடு பார்த்தாள். கண்கள் கலங்கி கன்னத்தில் நீர் வழிந்தது.


"அதனால்தான் என்னால போன் எடுக்க முடியல.. அப்புறம் சில வேலைகள். ரெஸ்ட் எடுக்க கூட டைம் இல்ல.. எங்க மாமாவுக்கு  ஸ்ட்ரோக் வந்து படுத்துட்டார். அவரை பார்க்க‌ போயிட்டேன்.. என் போன் நாட் ரீச்சபிள், பிசின்னு வர இதான் காரணம்.." என்றான் தெளிவாக.


முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள் தாரணி.


"சாரிங்க.. நான் உங்களை கஷ்டப்படுத்தணும்ன்னு நினைக்கல.." 


இடம் வலமாக தலையசைத்தபடி அவளருகே வந்து அமர்ந்தான். அவளின் முதுகை வருடினான்.


"கல்யாணமான முதல் நாளும் அதுவுமா அழாதே தாரணி.." 


அவனின் கழுத்தை கட்டிக் கொண்டவள் "அழுகைதான் வருது.." என்றாள்.


"இதுக்கு மேல உன் இஷ்டம்.. என்னை கொஞ்சம் விடுறியா, நான் போய் பிரெஸ்ஸாகிட்டு வரேன். பசிக்குது. போய் சாப்பிடலாம்.. உன்னை பார்த்தா காலையிலிருந்து‌ விரதம் இருக்கற மாதிரி தோணுது.."


அவள் பதில் சொல்லவில்லை. அவன் குளித்து விட்டு வந்தபோது அவள் கண்ணாடியின் முன் நின்று தனது கழுத்தில் இருந்த மங்கள் சூத்ராவை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.


"நமக்கு நிஜமா மேரேஜ் ஆயிடுச்சா.?" எனக் கேட்டாள் சந்தேகமாக.


"சுத்தம்.." முனகியவன் "ஆச்சி தாரணி.. அது தாலிதான். நான்தான் கட்டியிருக்கேன். யூ ஆர் மை வொய்ப் நவ்.." என்றவன் அவளின் முதுகை அணைத்து அவளின் கழுத்தில் முகம் பதித்தான்.


துள்ளி விழுந்தவள் அவசரமாக முன்னால் நகர்ந்தாள்.


"அடிப்பாவி வீராவேசமா அஞ்சி நிமிசத்துல கல்யாணத்தை முடிச்சேன். நீ ஓடி ஒண்டுறதை பார்த்தா கல்யாணத்துக்கு பிறகும் பேச்சுலர் பாயா வாழ விட்டுடுவ போல.." என்று வருத்தமாக முனகினான் அவன்.


"தப்பு தப்பா பேசாதிங்க.." என்று அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் "நான் எங்க வீட்டுல யாருக்கும் சொல்லாம வந்துட்டேன். நான் காணாம போயிட்டேன்னு இன்னேரம் போலிஸ்க்கு கம்ப்ளைண்ட் போயிருக்கும்.." என்றாள்.


நெற்றியில் அடித்துக் கொண்டான் யஷ்வந்த்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments