Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 43

 சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள் சங்கவி. சாரி.. பவளம் சமைக்க இவள் உதவி செய்துக் கொண்டிருந்தாள்.


"பாப்பா.. இந்த குழம்பை கிளறி விட்டுட்டு இருக்கிங்களா.? நான் போய் கறிவேப்பிலை கொத்தமல்லி பறிச்சிட்டு வரேன்.." என்று கேட்டாள் பவளம்.


"சரிக்கா.." என்றவள் துள்ளியபடி அடுப்பின் முன்னால் வந்து நின்றாள். குழம்பை கிளறி விட ஆரம்பித்தாள். 


பவளம் அந்த பக்கம் நகர்ந்ததும் இந்த பக்கம் வந்த ஆதீரன் மனைவியை அணைத்துக் கொண்டான்.


இடது கையை உயர்த்தி அவனின் முன்னந்தலையை வருடி தந்தாள்.


"பவளம் அக்கா வந்துடுவாங்க மாமா.." என்றாள்.


"அவங்க வரும் வரைக்கும்.." என்றவன் அவளின் கூந்தலில் முகம் புதைத்து நின்றான்.


எவ்வளவு நேரம் நெருங்கியிருந்தாலும் ஆசை தீரவேயில்லை. தனக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று கூட பயந்து போனான் ஆதீரன். எப்படி இவளிடம் விழுந்தோம் என்று அவனுக்கு புரியவில்லை.


அவளின் அணைப்பில் கட்டுண்டுக் கிடக்கவும், அவளின் அரவணைப்பில் சேயாய் மாறி உலகம் மறந்து கிடக்கவும் விரும்பினான். 


"அக்கா வந்துடுவாங்க.." என்றவளின் கன்னத்தில் சிறு முத்தம் பதித்தவன் விலகிக் கொண்டான்.


அவன் விலகியதும் அவளின் தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்திலிருந்து பூக்கள் சில உதிர்ந்து தரையில் விழுந்தன.


"அக்கா வந்தா தப்பா நினைப்பாங்க.." சிணுங்கியவளை கண்டு சிரித்தவன் "என் சொந்த பொண்டாட்டி நீ.. யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க.." என்றான்.


அவளை பார்த்தபடியே வந்து டைனிங் ஹாலில் அமர்ந்தான். அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.


காந்திமதி மரத்தில் பூத்திருந்த காட்டுப் பூ ஒன்றை கண்டுவிட்டு மரமேற முயன்றாள்.


"ஏய் கிழவி.." காத்தவராயன் கடுப்போடு அழைத்தார்.


திரும்பிப் பார்த்தவள் "அந்த பூ வேணும் காத்தவராயா.." என்றாள்.


"அதுக்கு நீ ஏற போறியா.? வயசான காலத்துல இடுப்பை உடைச்சி வச்சிக்காத.." என்றவர் மேலே எம்பி அந்த பூவை பறித்துத் தந்தார். 


காந்திமதி பூவை வாங்கிக் கொண்டு நடந்தாள். அவளின் நீண்ட பின்னலின் நுனியை பற்றினார் காத்தவராயன். அவளை தன்னருகே இழுத்தார். அவரின் நெஞ்சில் வந்து விழுந்தாள் காந்திமதி.


"ஏன் காத்தவராயா.?" நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டவளின் கையிலிருந்த பூவை வாங்கியவர் அவளின் தலையில் சூட்டி விட்டார்.


"உன்னை எப்படியெல்லாம் பார்த்துக்கணும்ன்னு ஆசைப்பட்டேன் தெரியுமா.?" எனக் கேட்டார்.


திரும்பியவள் அவரின் நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டாள்.


"சாரி.." என்றாள் சிறு குரலில்.


"நரகத்தையே கடந்துட்டேன் உன்னை பிரிஞ்சி இருந்து.."


அவர் சொல்லிவிட்டார். அவளால் சொல்ல முடியவில்லை. 


"நான் உன் பையனை என் பையனா ஏத்துக்க கூட சம்மதம் சொன்னேன்.." வருத்தமாக சொன்னார்.


மனபாரத்தோடு விம்மினாள் காந்திமதி. 


"ஏன் மதி என்னை எப்பவும் விலக்கி தள்ளின.? நான் உன் காதலன் இல்லையா.?"


அவரின் முதுகை சுற்றி கையை வளைத்துக் கொண்டாள். நிமிர்ந்துப் பார்த்தாள். "நாம எங்காவது போயிடலாமா காத்தவராயா.?" எனக் கேட்டாள்.


அவளின் கண்களை துடைத்து விட்டார். "இங்கிருந்து போகாம இருந்துடலாமா.?" என்று திருத்தினார்.


காந்திமதிக்கு மீண்டும் கண்கள் கலங்கியது. 


"யார் அவன் காந்திமதி.?" 


மறுப்பாக தலையசைத்தாள். 


"அவனை அவ்வளவு பிடிக்குமா.? இன்னமும் உன்னை வந்து பார்ப்பானா.?" கரகரப்பாக கேட்டார்.


கண்களை மூடியவள் இல்லையென தலையசைத்தாள். 


"என்கிட்ட இதை பத்தி கேட்காத.. நான் செத்து போவேன்.." என்றாள் அழுகையாக.


இடது கையை அவளின் பின்னந்தலை மீது பதித்தவர் அவரின் நெஞ்சோடு அவளின் முகத்தை புதைக்க பார்த்தார். அவளின் கண்ணீர் அனைத்தும் அவரின் ஸ்வெட்டரோடு மறைந்துக் கொண்டிருந்தது.


"நான் கேட்கல.. அழாதே.. சத்தியமா கேட்க மாட்டேன்.." என்றவர் வலது கையால் அவளின் முதுகை வருடி விட்டார்.


மறுபடியும் கேட்பார் அவர். அவன் யாரென்று அறிய வேண்டும். ஆசை காதலியின் கள்ளக்காதலன் யாரென்று அறிந்துக் கொள்ள வேண்டும். அவனிடம் மயங்கி ஒரு குழந்தை கூட பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது என்று அறிந்துக் கொள்ள வேண்டும்.


காந்திமதி அழுது தீர்த்துவிட்டு விலகி நின்றாள்.


"இங்கேயே இருக்க போறோமா.?" என்றுக் கேட்டாள் சந்தேகமாக‌


"குளிருல செத்துடுவ.. மிருகம் வந்து இரண்டு பேரையும் கொன்னுடும்.." என்றவர் அவளின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு பாதையில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.


"நாம சரியான பாதையில் போறோமா.?" சந்தேகமாக கேட்டாள்.


"நடந்து பார்க்காத வரை அது சரியான பாதையா இல்லையான்னு நமக்கு எப்படி தெரியும்.?" எனக் கேட்டார்.


காந்திமதி பதில் பேசாமல் நடந்தாள். அவளின் கையை இறுக்கியிருந்த அவரின் கரம் கொஞ்சமும் தளரவில்லை.


அலுவலகம் புறப்பட்டான் ஆதீரன். சங்கவி அவனோடு கிளம்பினாள்.


"அவரை வீட்டுக்கு மாத்திடலாமா.?" தயக்கமாக கேட்டாள்.


"ஏன்.?"


"இல்ல பீஸ் ரொம்ப ஆகுது.. வீட்டுல நானே கூட பார்த்துப்பேன்.." என்றவளின் கையை பற்றினான்.


"அங்கே அவருக்கு முழு பாதுகாப்பு இருக்கு.. செகண்ட் கூட லேட் பண்ணாம அவருக்கு ஊசி மருந்து கிடைக்கும் அங்கே.. பீஸ் எவ்வளவு ஆனாலும் பரவால்ல.. நான்தானே தப்பு செஞ்சேன். நான்தானே செலவு பண்ணியாகணும்.." என்றான்.


"நான் வேலைக்கு போய் சம்பாதிச்சி கொடுத்துடுறேன் மாமா.." 


ஹாஸ்பிட்டல் முன்பு காரை நிறுத்தியவன் அவளை திரும்பிப் பார்த்தான். அவளின் கன்னங்களை அள்ளினான்.


"நமக்குள்ள கணக்கு பார்க்காத சங்கவி.. நீ சம்பாதிச்சி கொடுக்க ஒன்னும் இல்ல.. உன் காதல் போதும்.." என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.


"ஈவினிங் பார்க்கலாம்.. போன் பண்ணு.. பத்திரமா இரு.." 


இறங்கினாள். அவனுக்கு கையசைத்து விடைதந்தாள். திரும்பி நடந்தவள் படியை கவனிக்காமல் கால் மோதி கீழே விழுந்தாள். காரிலிருந்து அவசரமாக இறங்கி ஓடிவந்தான் ஆதீரன்.


"சங்கவி.." என்றவன் அவளை தூக்கி நிறுத்தினான். 


"எங்காவது வலிக்குதா.?" பதட்டமாக கேட்டான்.


"முட்டியில்.." என்றவளை பரிவோடு பார்த்தவன் காருக்கு அழைத்து வந்து கதவை சாத்திவிட்டு முட்டியை பார்த்தான். லேசான சிராய்ப்பு இருந்தது. ஊதி விட்டான்.


"பத்திரமா இருன்னு சொன்னேன்.. ஆனா நான் நகரும் முன்னாடி விழுந்து வாருற நீ.." என்றவன் அவளின் கால் முட்டியில் இதழ் பதித்தான்.


"வலி போச்சா.?" என்றுக் கேட்டான்.


அவளுக்கு சிரிப்பாக வந்தது. இல்லையென்று தலையசைத்தாள். 


"நல்லாகிடும் சங்கவி.." அவளை அணைத்தபடி ஆறுதல் சொன்னான். அவனின் அக்கறையும் பரிதவிப்பையும் கண்டவளுக்கு மற்றொரு முட்டியையும் கூட உடைத்துக் கொள்ளலாம் என்று முட்டாள்தனமாக எண்ணம் தோன்றியது.


அவளை அவள் தந்தை படுத்திருக்கும் அறை வரை அழைத்து வந்து விட்டு போனான் ஆதீரன்.


இந்த காதல் காலம் முழுக்க வேண்டும் என்று கேட்டாள் சங்கவி. அக்கா காட்டிய அக்கறையை போலதான் இருந்தது. ஆனால் அக்காவை விட ஆயிரம் மடங்கு நெஞ்சில் நெருங்கி விட்டான் இவன். அவள் ரத்த சம்பந்தம் உடையவள் அதனால் அது கடமை என்று யோசித்தாளோ என்னவோ இவனின் பாசத்தை அக்காவின் பாசத்தை விட ஒருபடி மேல் வைத்துதான் பார்த்தாள்.


குணவதியின் கன்னத்தில் அடுத்தடுத்து விழுந்தது சில அறைகள். மௌனமாக நின்றாள் அவள்.


"வயசு பொண்ணு எங்கே போறா எங்கே வரான்னு கூட கவனிக்காம என்னடி பண்ற நீ.?" என்று கத்தினார் தனபால்


வருண் ஓரமாக நின்றுக் கொண்டிருந்தான். அவரிடம் பேச முயன்றால் அம்மாவின் அறை தனக்கு விழுமென்று அறிவான் அவன்.


அறை வாங்க கூட பயமில்லை. தான் குறுக்கில் புகுந்த பிறகு அம்மாவுக்கு அடிகள் அதிகம் விழும். அதனால் அமைதி காத்தான். எதிர்த்து தாக்கும் அளவிற்கு இன்னும் ஏனோ தைரியம் வந்திருக்கவில்லை.


"அப்பா போலிஸ்க்கு போகலாமா.?" தயக்கமாக கேட்டான் வருண்.


தலையை கோதிக் கொண்டவர் "அவ லாஸ்ட் நாள் போட்டிருந்த டிரெஸ் கலர் என்ன.?" என்றுக் கேட்டார் மனைவியிடம்.


"க.. கவனிக்கல.." என்றவளின் கன்னத்தில் பளீரென விழுந்தது அறை. தடுமாறி விழுந்தவள் அருகே இருந்த சுவரில் மோதி தலையை இடித்துக் கொண்டாள். 


"அம்மா.." அருகில் வந்து தூக்கினான் வருண். தலையிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது அவளுக்கு. அவசரமாக கர்ச்சீப்பை எடுத்து காயத்தின் மீது வைத்தான்.


"பொம்பள புள்ளையை பெத்தா மட்டும் போதாது.. அவ எங்கே போறா எங்கே வரான்னு பார்க்கணும்.. புள்ளை போட்டிருக்கும் டிரெஸ் எதுன்னு கூட தெரியாம நீ ஏன்டி வீட்டுல இருக்க.? கவனம் வீட்டுல இருக்கணும்டி.. எவன் கிடைப்பான்னு வெளியே பார்த்துட்டு இருந்தா இப்படிதான் ஆகும்.." என்றார் ஆத்திரத்தோடு.


அவளை மறுபடியும் உதைக்க போனார். அதே வேளையில் வெளியே காரும் ஜீப் ஒன்றும் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. மனைவியை பார்வையால் எரித்து விட்டு வெளியே நடந்தார்.


வாசலில் இருந்த ஜீப்பிலிருந்து பாடிகார்ட்ஸ் ஏழெட்டு பேர் கீழே குதித்து இறங்கினார்கள். குழப்பமாக அவர்களை பார்த்தார் தனபால்.


வருணும் குணவதியும் கதவருகே வந்து நின்றனர்.


காரிலிருந்து இறங்கினான் யஷ்வந்த். யஷூ நிறுவனத்தின் சின்ன முதலாளி என்று தனபாலுக்கும் வருணுக்கும் அடையாளம் பிடிப்பட்டது. இவன் ஏன் இங்கே வந்திருக்கிறான் என்று அவர்கள் குழம்பி நின்றிருந்த நேரத்தில் தர்ஷினியும் யவனாவும் இறங்கினார்கள். காரின் மறுபக்கம் வந்து மனைவிக்காக கதவை திறந்து விட்டான் யஷ்வந்த்.


"வா.."


"மாட்டேன்..‌ பயமா இருக்கு.." என்றவளை முறைத்தவன் அவளின் கையை பற்றி வெளியே இழுத்தான்.


தயங்கி‌ தடுமாறி யஷ்வந்தின் கையை இறுக்க பிடித்தபடி கீழே இறங்கி நின்றாள் தாரணி.


அப்பா பற்களை அரைத்த சத்தம் அவளுக்கு இங்கே வரை கேட்டது.  இப்படியே ஓடிவிட்டால் நலமென்று தோன்றியது.


தாரணியின் நெற்றியிலிருந்த குங்குமமும் கழுத்திலிருந்த மங்கள் சூத்ராவும் சந்தேகத்தை தந்தது அவர்களுக்கு.


"சொல்லாம ஓடி வந்துட்டா.. இவ சார்ப்பா நான் சாரி கேட்டுக்கறேன்.. ரொம்ப நாள் முன்னாடியே பொண்ணு கேட்டு வர இருந்தேன். ஆனா வீட்டுல அனுமதி கிடைக்கல.. சாரி.. நேத்து ஒரு பிரச்சனை. அவசரத்துல மேரே‌ஜ் பண்ணிட்டேன். ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கூட பதிஞ்சாச்சி.. உங்ககிட்ட சொல்லாம இருப்பது தப்புன்னு பட்டுச்சி. அதான் கூட்டி வந்துட்டேன்.." என்றான் யஷ்வந்த்.


"உன்னை இத்தனை வருசம் பாராட்டி சீராட்டி வளர்த்தி மட்டும் என்ன புண்ணியம் தாரணி.? சொந்த அப்பாவுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வந்திருக்க.. அவன் பணக்காரன்னு ஓடி போனியா.? நான் உனக்கு இந்த வீட்டுல என்ன குறை வச்சேன்.?" கோபமாக கேட்டார் தனபால்.


தரையை பார்த்தபடி கண்ணீர் சிந்திய தாரணி "சாரிப்பா.." என்றாள்.


"என்னை மதிக்காம போனவளுக்கு இங்கே என்ன வேலை.? மரியாதையா கிளம்பு.. என் மூஞ்சிலேயே விழிக்காத.." என்றவர் வீட்டுக்குள் திரும்பி நடந்தார்.


தாரணி அழுதபடி நிமிர்ந்தாள். 


"அந்த ஆன்டி தலையில இருந்து ரத்தம் வருது.." என்று குணவதியை நோக்கி செல்ல முயன்றாள் யவனா. அவளின் கையை பிடித்து நிறுத்தினாள் தர்ஷினி.


"வேணாம்.." என்று எச்சரித்தாள்.


வருண் அவர்களை அனைவரையுமே எரிப்பது போல பார்த்தான். 


"அதுதான் அவரே சொல்லிட்டாரு இல்ல.. போய் தொலைய வேண்டியதுதானே.?" எனக் கத்தினான். அவர்கள் இங்கே நின்று, அதற்கு அவனின் அப்பா வந்து மகளை அடித்து வைத்துவிட்டால் பிறகு புகுந்த வீட்டில் அவளுக்கு சரியான அளவில் மரியாதை கிடைக்கும் போய் விடுமோ என்று பயந்தான் அவன்.


"சாரி அண்ணா.."


"ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்.. நேத்து காலையிலிருந்து சோறு தண்ணி இல்லாம உன்னை தேடி அலைஞ்சோம்.." என்ற வருண் எரிச்சலோடு முகத்தை திருப்பிக் கொண்டான்.


"சாரி.." என்றான் யஷ்வந்த்.


வருண் கடுப்போடு திரும்பினான். "தயவுசெஞ்சி அவளை கூட்டிட்டு கிளம்புங்க.." என்றவன் அம்மாவை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தான். கதவை அறைந்து சாத்தினான்.


அதே நேரத்தில் வனத்தின் நடுவே மயங்கி விழுந்தார் காத்தவராயன்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments