Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 57

 சூர்யா உடைந்துப் போய் அமர்ந்திருந்தான். அவனின் கையிலிருந்த இரண்டு போன்களும் நழுவி தரையில் விழுந்திருந்தது. ஆறாய் பெருகும் கண்ணீரோடு ரத்தத்தில் நனைந்து கிடந்த தன் காதலியை வெறித்துக் கொண்டிருந்தான். ஒரு உணர்வும் இல்லை அவனிடம். இவளை இந்நிலையில் பார்ப்பதை காட்டிலும், தன்னுயிர் தன் கண் முன் சென்றும் கூட ஏதும் செய்ய இயலாத நிலையில் இருப்பதை காட்டிலும் மரணத்தை தழுவுவது சிறந்ததென்று தோன்றியது அவனுக்கு.


பூங்கொடி தனது போனை கையில் எடுத்தாள்.


"அண்ணா இது கொஞ்சமும் சரி கிடையாது.." என்றாள்.


மனோகர் குழப்பத்தோடு சுற்றிலும் பார்த்தார்.


"இது உனக்கு எப்படி தெரியும்.?" எனக் கேட்டார்.


"எப்படி தெரிஞ்சா என்ன.? அவ என் மருமக. என் மக. அவளை கொல்ல உங்களுக்கேது உரிமை.? சொத்துக்காக இப்படியெல்லாம் கூட செய்விங்களா.? சொத்துக்காக இன்னைக்கு என் மருமகளை அடிச்ச நீங்க நாளைக்கு என்னையும் என் புருசனையும் கொல்ல மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்.?" எனக் கேட்டாள்.


மயங்கி கிடந்த மருமகளை காணுகையில் கண்ணீர் தானாய் இறங்கியது பூங்கொடிக்கு. சில முறை போனில் மட்டுமே பேசிய உறவு. ஆனாலும் தன் எதிர்காலத்தை அவளை வைத்துதான் கோட்டை கட்டியிருந்தாள் பூங்கொடி. தனது மகளாய் இருக்க போகும் அவளை எப்படியெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூட மனதில் வரைந்து வைத்திருந்தாள்.


மனோகர் நெற்றியை தேய்த்தார். மருமகன் சின்ன பையன்.‌ அவனை சமாளித்து விடலாம் என்று நினைத்தார். தங்கைக்கும் இந்த விசயம் தெரியுமென்று நினைக்கவில்லை.


"பூங்கொடி.." என அழைத்தவரிடம் "இனி என்னை கூப்பிடாதிங்க அண்ணா.. என் மருமக எனக்கு உயிரோடு வேணும். அவளை எப்படியாவது காப்பாத்தி கொடுங்க.. இல்லன்னா நான் உங்களுக்கு நல்லவளா இருக்கவே மாட்டேன்.." என்று மிரட்டினாள்.


அலெக்ஸால் விசயத்தை முழுதாய் புரிந்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட தன் மருமகளுக்கு ஏதோ பிரச்சனை என்று யூகிக்க முடிந்தது. மனோகர் மீது கோபம் வந்தது. அன்று தெளிவாக சொல்லியும் இப்படி செய்து விட்டாரே என்று மனம் வருந்தினார். 


மனோகர் வெளிறிப் போன முகத்தோடு அந்த அறையின் கூரையையும் சுவர்களையும் பார்த்தார். 'எங்கேயாவது கேமரா பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்களா.? எப்படி பார்த்தாங்க.?' என்று குழம்பினார்.


அவரின் பாடிகார்டில் ஒருவன் குந்தவியின் அருகே மண்டியிட்டான். அவளின் மூக்கின் அருகே கை வைத்து பார்த்தான்‌. ஒழுங்கில்லாமல் மூச்சு வந்துக் கொண்டிருந்தது.


"உயிரோடு இருக்காங்க சார்.." என்றான்.


சூர்யாவின் இதயம் கொஞ்சமாய் சீர்பட்டது. ஆனாலும் முழு உயிர் வந்துச் சேர்ந்திருக்கவில்லை.


"தயவுசெஞ்சி என் மருமகளை ஹாஸ்பிட்டல் அனுப்பி வை அண்ணா.." என்றாள் பூங்கொடி.


சூர்யா நடுங்கும் கரங்களோடு தரையில் கிடந்த‌ தன் போனை எடுத்தான். திரையெங்கும் அவனின் கண்ணீர் கொட்டியது. பார்த்த அலெக்ஸ்க்கு நெஞ்சிலிருந்து ரத்தம் வழியாத குறை.


"என் செல்லாவை விட்டுடுங்க மாமா.. அவளை ஹாஸ்பிட்டல் அனுப்பி வைங்க. ப்ளீஸ்.." பூங்கொடியின் கையிலிருந்த போனில் கெஞ்சினான்.


மனோகர் நெற்றியை கீறினார். யோசித்துப் பார்த்தார்.


"சாரி மாப்ளை.. அப்படி பண்ண முடியாது.." 


"அண்ணா.." கோபத்தில் அலறினாள் பூங்கொடி.


"நான் இவளை கொலை பண்ணிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரிஞ்சிப் போச்சி. இனி நான் இவளை ஹாஸ்பிட்டல் அனுப்பினாலும் கூட எதுவும் மாறாது. இவளை கொன்னாலாவது என் தோல்விக்கு சிறு மருந்தாவாவது இருக்கும்.." என்றார்.


சூர்யா மறுப்பாக தலையசைத்தான்.


"அவளை திருப்பி கொடுத்துடுங்க.. நான் உங்களை எதுவும் செய்ய மாட்டேன்.." என்றான்.


"மாப்ளை உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது. இங்கே தேவை உண்மை கிடையாது. சாட்சி. இவளை நான் கொன்னுட்டு இருப்பதுக்கு எந்த சாட்சியும் கிடையாது. அப்படியிருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். தோற்பதுக்கு பதிலா ஜெயிலுக்கு போவேன் நான்.."


பூங்கொடி நெற்றியில் அடித்துக் கொண்டாள்.


"என் பேர்ல இருக்கும் எல்லா சொத்தையும் உனக்கு எழுதி தந்திடுறேன் அண்ணா.. என் மகளை கொடுத்திடு.." என்றாள்.


மனோகர் மறுப்பாக தலையசைத்தபடி கையிலிருந்த உருட்டுக்கட்டையை பார்த்தார். குந்தவியை நோக்கி நடந்தார்.


"நீங்க சொல்ற எல்லாத்தையும் கேட்கிறேன் மாமா.. தர்ஷினியை மேரேஜ் பண்ணிக்கிறேன். உங்க வீட்டுல அடிமையா கூட இருக்கேன். என் உயிரை கூட தரேன். தயவு செஞ்சி அவளை உயிரோடு விட்டுடுங்க.. என்னை.. நான் காதலிச்ச, என் கண்ணுல விழுந்த ஒரே ஒரு பாவத்துக்காக அவ சாக வேணாம்.." என்றுக் கெஞ்சலாக சொன்னான்.


அலெக்ஸ் விழிகள் கலங்க மகனை பார்த்தார். மகன் எப்படியொரு வலியோடு இதை சொல்கிறான் என்பதை அவரால் புரிந்துக் கொள்ள முடிந்தது. தனக்கு உடலில் இந்த பிரச்சனை வராமல் இருந்திருந்தால் இன்று அவன் அழுதிருக்க மாட்டான், அன்னியமான ஒரு உறவிடம் கெஞ்சியிருக்க மாட்டான் என்று எண்ணி உள்ளுக்குள் உடைந்துப் போனார். தனக்கு வந்த நோயை வெறுத்தார். 


மனோகர் யோசனையோடு உருட்டு கட்டையைப் பார்த்தார்.


"ஓகே.." என்றார்.


"தேங்க்ஸ் மாமா.." கண்ணீர் மல்க போனிலேயே கையெடுத்து கும்பிட்டான். தன் வாழ்நாளில் இதை விட கோழைத்தனமாக தான் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அவனுக்கும் தெரியும். குந்தவி இறந்துக் கொண்டிருந்த நேரத்தில் கோபம், ரோசம், வேகம் எதுவும் முன்னே வரவில்லை. அவளை எப்படியாவது உயிரோடு காப்பாற்றி விட வேண்டும் என்று மட்டும்தான் தோன்றியது.


"நான் இவளை ஹாஸ்பிட்டல் அனுப்புறேன். ஆனா உன்கிட்ட வருவான்னு கனவுல கூட நினைக்காத.." என்றார்.


"அவ பிழைச்சா போதும். அவ எங்கிருந்தாலும் எனக்கு சம்மதம்.. நான் அவளை விட்டுடுறேன். முழுசா விட்டுடுறேன்.." உடைந்த குரலோடு சொன்னான்.


"டேய் இவளை ஹாஸ்பிட்டல் கொண்டுப் போய் சேர்த்துங்க.." மனோகர் சொன்னவுடன் பாடிகார்ட்ஸ் இருவர் அவளை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தனர்.


வழியிலிருந்த வேலையாட்களும் வீட்டிலிருந்த மற்றவர்களும் அதிர்ச்சியோடு குந்தவியை பார்த்தனர்.


"என்னாச்சி.?" என விசாரித்தாள் யவனா. 


"பின் வாசல்ல இருந்தபோது யாரோ இவங்களை அடிச்சி போட்டுட்டு போயிட்டாங்க.." என்று பொய்யை சொல்லிவிட்டு முன்னேறி நடந்தார்கள் அவர்கள்.


"நீங்க தண்ணீர் குடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க மாப்ளை.. நான் அப்புறம் கூப்பிட்டு என்ன பண்ணணும்ன்னு சொல்றேன்.." என்று போன் இணைப்பை துண்டித்தவர் "இந்த ரத்தத்தை சுத்தம் பண்ணுங்க.. இங்கே எங்கேயே கேமரா இருக்கு.. அதை கண்டுபிடிச்சி எடுத்து உடைங்க.." என்று சொல்லிவிட்டு வெளியே நடந்தார்.


ஒருவன் ரத்தத்தை சுத்தம் செய்தான். மற்றொருவன் அந்த அறையை சுற்றி பார்த்தான். மேஜை மேல் இருந்த செல்போனை கண்டெடுத்ததும் எடுத்துப் போட்டு உடைத்தான்.


சூர்யா பேச்சு மூச்சின்றி அமர்ந்திருந்தான். பூங்கொடி மூக்கை உறிஞ்சியபடி சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்.


"குடி சூர்யா.." என்றாள்.


மறுப்பாக தலையசைத்தவன் "என் செல்லா செத்துடுவாளாம்மா.?" எனக் கேட்டான். அமைதியாக உணர்வே இல்லாத குரலில் கேட்டிருந்தான். ஆனாலும் கண்ணீர் மட்டும் வழிந்தது.


"அவ என் கண்ணுல விழுந்தா. அதை தவிர எதுவும் செய்யலம்மா.. சாக இருந்தாளாம். நான் கூப்பிடவும் என்னோடு வந்துட்டா. எனக்கு தெரியாமலேயே அன்னைக்கு அவ சாவை நான் துரத்தியடிச்சேன். ஆனா இன்னைக்கு என்னாலயே அவ செத்துட்டு இருக்காம்மா. அப்படியே விட்டிருந்தா கூட நல்ல சாவா செத்திருப்பா.. இப்ப இவ்வளவு கொடூரமா.." தலையை பிடித்துக் கொண்டான். 


"சூர்யா.." அப்பா அழைத்தார்.


நிமிர்ந்தவனுக்கு கண்ணீர்தான் கொட்டியது.


"உங்க பையனா நான் எதிலும் ஜெயிக்கலப்பா. பிசினஸ் முழுசா லாஸ்.. சொந்தமாக வேண்டியவளை கூட சாக கொடுத்துட்டு இருக்கேன். உதவாக்கரை நான், மாமா சொன்னது போலவே.."


"டோன்ட் டாக் லைக் தட். நீ சூர்யா. உன்னால எதுவும் முடியும். கை மீறி உன்னை தாண்டி எங்கோ நடக்கும் ஒரு சம்பவத்துக்கு நீ பொறுப்பாக முடியாது. உனக்கு பழி போடணும்ன்னா என் மேல போடு. எனக்கு இப்படி ஆகாம இருந்திருந்தா நீ இன்னேரம் செல்லாவை இங்கே கூட்டி வந்திருப்ப.. இட்ஸ் மை பால்ட். அவளுக்கு எதுவும் ஆகாது. இங்கே எதுவும் இடிஞ்சி விழுந்துடல. நீ நம்பிக்கையா இரு. அவ உனக்குன்னு இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. எமனாலும் முடியாது. உன் மாமனுக்கு நேரம் சரியில்ல. அதுக்கு யார் எதுவும் செய்ய முடியாது.." என்றார்.


பூங்கொடி வலுக்கட்டாயமாக தண்ணீரை குடிக்க செய்தாள். எந்த தண்ணீராலும் சூர்யாவின் மன சோகத்தை தீர்க்க முடியவில்லை.


யவனா தன் அண்ணனுக்கு அழைத்தாள். குந்தவியை பார்த்துக் கொள்ள பாதி பாடிகார்ட்ஸை கூட நிறுத்தி விட்டு போனவன் இப்போது விசயம் அறிந்தால் என்ன செய்வானோ என்று கலங்கினாள். 


அவனது போனின் இணைப்பு வேலை செய்யவில்லை. அவனுக்கு அழைத்து சலித்துப் போனாள்.


"இந்த வீட்டுக்குள்ள ரவுடிங்க வந்திருப்பாங்கன்னு நம்பவே முடியல. பயமா இருக்கு.." என்று புலம்பினாள் சுபிக்ஷா.


மனோகர் தன் சட்டை காலரை சரி செய்தபடி ஹாலுக்கு வந்தார்.


"போய் உங்க வேலையை பாருங்க.." என்று அதட்டினார்.


"பெரியப்பா.. யஷூ அண்ணா போன் எடுக்க மாட்டேங்குது.." என்று கவலையோடு சொன்னாள் யவனா.


"அவனுக்கு ஏன் கால் பண்ற.?" என அதட்டினார். கொஞ்சமாக பயந்து விட்டாள் யவனா.


"குந்தவி சிஸ்டருக்கு இப்படி ஆச்சின்னு சொல்ல வேணாமா.?" தயங்கியபடி கேட்டவளிடம் "அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவனே ஹனிமூன் போயிருக்கான். டிஸ்டர்ப் பண்ணாத.. அவனா வந்து தெரிஞ்சிக்கட்டும்.." என்றார்.


யவனாவுக்கும் மற்றவர்களும் ஏதோ போல இருந்தது. தர்ஷினிக்கு தன் தந்தை செய்த வேலையா இது என்று சந்தேகம் வந்தது. அண்ணனுக்கு பிரச்சனையில்லை. இவள் மட்டும்தான் அடிப்பட்டிருக்கிறாள். இனி சூர்யா தனக்குதான் என்ற சந்தோசத்தில் இருந்தாள் அவள்.


யஷ்வந்தின் போனை அணைத்து வைத்திருந்தாள் தாரணி. அவனுக்கு யாரும் அழைக்க கூடாது. யாரும் குந்தவியின் மரணத்தை பற்றி அவனுக்கு தெரிவிக்க கூடாது என்று நினைத்தாள்.‌ குந்தவியின் மரண செய்தி மட்டுமே தன்னை நிம்மதியாக வாழ விடும் என்று நினைத்தாள்.


யஷ்வந்தின் அணைப்பில் இருந்தவள் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தைப் பார்த்தாள். அவனின் தாடையில் முத்தமிட்டாள். தைரியம் இப்போது கொஞ்சம் வந்திருந்தது. அவள் பயந்தது போல எதுவும் இருக்கவில்லை. மென்மையாகதான் அவளை நெருங்கியிருந்தான்‌. எந்த நொடியிலும் அவளை சங்கடப்படுத்தவில்லை.


அவனை பிடித்திருந்தது. ஆசையோடு அணைத்துக் கொண்டாள். 


'இனி யஷூ என்னோடு மட்டும்தான் இருப்பாரு.' என்று மகிழ்ந்தவள் நினைத்தே இருக்க மாட்டாள் தனது திட்டம் தன்னையே பழி வாங்கும் என்பதை.


பாம்பிடம் நல்லவர் கெட்டவர் என்று சொல்லி புரிய வைக்க முடியாது. மனோகரும் அப்படிப்பட்டவர்தான் என்பதை அவள்தான் அறியாமல் போய் விட்டாள்.


ஒரு மணி நேரம் கடந்த பிறகு கண் விழித்தான் யஷ்வந்த். அழகு மனைவி அருகில் இல்லை.


"தாரு.." என்றபடி எழுந்து அமர்ந்தவன் கொட்டாவி விட்டபடியே சுற்றும் முற்றும் அவளை தேடினான்.


அவளோ ஹோட்டலின் பின்னாலிருந்த பனிக்காடு ஒன்றினுள் ஓடிக் கொண்டிருந்தாள். அவளை துரத்தி வந்த ஆட்கள் நால்வர் கையிலும் கத்தியும் கம்பும் இருந்தன.


கணவனுக்கு போனை செய்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் இவள் அணைத்து வைத்த போன்தானே? இவள் அழைத்தும் அதே ஸ்விட்ச் ஆஃப் என்றேதான் வந்தது.


பனியில் புதைந்து இருந்த மரம் ஒன்று தடுக்கி கீழே விழுந்தாள் தாரணி. நிமிர்ந்துப் பார்த்தாள். நால்வரும் அவளை நெருங்கி விட்டிருந்தனர்.


அதே நேரத்தில் தன் போனை தேடி எடுத்த யஷ்வந்த் போன் அணைந்திருப்பது கண்டு உயிர்ப்பித்தான். உயிர் கொண்ட போனில் அழைத்தாள் யவனா குந்தவியை பற்றிய விசயத்தை சொல்ல.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. 



Post a Comment

0 Comments