Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 64

 சங்கவியின் கால் காயத்தை பரிசோதித்துக் கொண்டிருந்தான் ஆதீரன். 


"எனக்கு வலிக்கல விடுங்க.." கோபத்தோடு காலை பின்னால் இழுத்தாள்.


"அடி பிச்சிடுவேன் சங்கவி.. இங்கே வந்ததுல இருந்தே ரொம்ப ஓவராதான் பண்ணிட்டு இருக்க.. எப்ப பார்த்தாலும் முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்க.. எப்படி இருக்கு உனக்கு?" என்று அதட்டினான்.


"என் பூனைக்குட்டியை நீங்கதானே கொன்னிங்க.." என்றவளுக்கு அதன் நினைவில் அழுகை பொங்கியது.


நெற்றியில் அடித்துக் கொண்டான்.


"என்னை விட அந்த பூனைக்குட்டி முக்கியமா? அந்த பூனைக்குட்டியை காப்பாத்த போறேன்னு சாக திரிஞ்ச.. காப்பாத்தி‌ விட்டேன் இல்லையா? அந்த கொழுப்பு உனக்கு.." என்றவன் அவளின் காலை இடித்து விட்டு எழுந்து போனான். காயம் பட்ட கால் அவன் கோபத்தில் இடிக்கவும் அதிகமாக வலித்தது.


"அம்மா.." என கத்தியவளை திரும்பிப் பார்த்து முறைத்தான்.


"அந்த வாயில இருந்து ஒரு சவுண்ட் வர கூடாது.." என்றான் விரல் நீட்டி.


"ரொம்ப மிரட்டுறிங்க நீங்க.." என்றவளின் அருகே நெருங்கினான். அவன் வந்த தோரணை கண்டு உள்ளுக்குள் உதறியது அவளுக்கு‌.


இந்த இரண்டு நாட்களாகதான் அழுகையை மறந்து சாப்பிட ஆரம்பித்து இருக்கிறாள். அவளை விட்டுவிட்டு விட மனமில்லை அவனுக்கு.


"நான் சொல்வதை நீ கேட்கலன்னா மிரட்டறது மட்டுமில்ல. அதுக்கு மேலேயும் செய்வேன்.." என்றவன் அவளை மொத்தமாக பார்த்தான். 


"ஹனிமூனுக்கு வந்தும் சும்மாவே இருந்துட்டு போறவங்க நாமாதான் இருப்போம். போய் ரெடியாகிட்டு வா. எங்கேயாவது போய் சுத்தி பார்த்துட்டு வரலாம்.." என்று அழைத்தான்.


நொண்டியபடியே எழுந்து நின்றவள் "அதுக்கு நானா காரணம்? அபார்ஷன் ஆன பொண்ணை ஹனிமூனுக்கு கூட்டி வந்துட்டு பழியையும் என் மேலயே தூக்கி போடுறிங்க.." என்று சீறினாள்.


"ஆமா.. இல்லன்னா மட்டும் மேடம் என்னை மன்மதனா மாத்துற அளவுக்கு ரதி தேவி வேலை பார்ப்பிங்க பாரு.." என்று அவள் மீது தலையணையை தூக்கி வீசினான்.


"அனாவசியமா பேச வேணாம்.. மனுசனைதான் மன்மதனா மாத்த முடியும். அரக்கர்களை அப்படி மாத்த முடியாது.." என்றவளின் அருகே வந்து அவளின் தாடையை பற்றியவன் "என்னைப் பார்த்தா அப்படியா தோணுது?" எனக் கேட்டான் மிரட்டலாக.


'வாய் ஓவராதான் போயிடுச்சி போல..' என்று பயந்தவள் "சா.. சாரி.." என்றாள்.


உடல் நல குறைவால் வறண்டு கிடந்த அவளின் உதடுகளை தன் இதழ்களால் உரசி விட்டு நகர்ந்தவன் "அமைதியா போய் ரெடியாகு. ரொம்ப பேசாத. உன் உடம்புக்கு பேசினா கூட ஆகாது.." என்றான் மென்மையாக.


'எப்ப எப்படி நடந்துப்பார்ன்னு யூகிக்கவே முடியல..' சோகமாக நினைத்தபடி அவனை விட்டு விலகினாள்.


அவளின் காலை வெறித்துக் கொண்டிருந்தவனை கவனம் ஈர்த்தது கதவு தட்டும் யோசனை.


ஹோட்டலின் சேவகர்கள் அதற்குள் சுத்தம் செய்ய வந்து விட்டார்களா என்ற யோசனையோடு சென்று கதவை திறந்தான். 


வெளியே காத்தவராயன் நின்றிருந்தார்.


"என்ன வேணும்?" புருவத்தை நெரித்தபடி கேட்டான். அவரை பிடிக்கவேயில்லை.


"உன்னையும் உன் வொய்ப்பையும் விருந்துக்கு அழைக்க வந்தேன்.." என்றவர் அவனை விலக்கி நிறுத்தி விட்டு உள்ளே வந்தார்.


"நாங்க விருந்துக்கு வரல. நீங்க வெளியே போங்க‌‌.." 


அவன் சொன்னதை காதில் வாங்காதவர் உள்ளே வந்து அறையை சுற்றிப் பார்த்தார். 


"வசதியான ஹோட்டல்தான்.." என்றார்.


தலையை வார இருந்த சங்கவி இவரை கண்டதும் தயங்கியபடி படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். 


"என் வீட்டுல இன்னைக்கு நைட் உங்களுக்கு விருந்து ஏற்பாடு செஞ்சிருக்கேன்ம்மா. நீயும் உன் புருசனும் கண்டிப்பா வரணும்.." என்றார்.


சங்கவி திகைப்போடு தன் கணவனைப் பார்த்தாள். காத்தவராயன் ஆதீரனை நோக்கி துப்பாக்கியை நீட்டிய காட்சிதான் இப்போதும் கூட கண் முன் வந்துப் போனது.


"நீங்க வெளியே போறிங்களா? இல்ல நான் ஹோட்டல் செக்யூரிட்டிஸை கூப்பிடட்டுமா?" எனக் கேட்டான் ஆதீரன் ஆத்திரத்தோடு.


"இவ்வளவு கோபம் ஆகாது ஆதீ.. நான் என்ன உன்னோடு சண்டை போடவா வந்திருக்கேன்? விருந்துக்குதானே அழைக்க வந்திருக்கேன்?" என்றவரை முறைத்தவன் "என் அம்மாவோட கள்ள காதலன் நீங்க. உங்க வீட்டு விருந்துக்கு நான் ஏன் வரணும்?" என்று திருப்பிக் கேட்டான்.


காத்தவராயனின் முகம் வாடிப் போனது. அவனின் கோபத்தைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.


"நான் கள்ள காதலன் இல்ல. அவளோட ஒரிஜினல் காதலன்.. இரண்டு மணி நேரம் கழிச்சிட்டு வரேன். இரண்டு பேரும் தயாராகி இருங்க.. நீங்களா வரலன்னாலும் நானா கூட்டிப் போவேன். என்னை கெட்டவனா மாத்த மாட்டிங்கன்னு நம்புறேன்.." என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.


சங்கவி பயத்தோடு ஆதீரனின் அருகே வந்தாள். அவனின் கையைப் பற்றிக் கொண்டாள்.


"இவர் ஏன் நம்மை விடாம தொல்லை பண்றாரு?" எனக் கேட்டாள்.


"நீ இவனை விட்டுடு.."


"ஐயோ.. அவர் வீட்டுல பெரிய சைஸ் துப்பாக்கியை மாட்டி வச்சிருந்தாரே பார்க்கலையா? நாம போகலன்னா அதை தூக்கிட்டு வந்து சுட்டுடுவாரு.." என்றாள் பயம் தீராமல்.


"அப்படியெல்லாம் யாரையும் சட்டுன்னு சுட்டுட முடியாது. அந்த ஆள் சும்மா மிரட்டுறான். நீ பயப்படாதே.." 


ஆனால் அவனுக்கு வேறு கவலையாக‌ இருந்தது. தான் விருந்துக்கு போகாவிட்டால் அம்மாவை கொடுமை செய்வானோ என்று கலங்கினான். தனது கலக்கம் கண்டு அவனுக்கே‌ விந்தையாக இருந்தது.


"பயப்படாம எப்படி இருப்பது? அந்த ஆள் அன்னைக்கு உங்க நெத்திக்கு இல்ல துப்பாக்கியை நீட்டினாரு.!?" என்றவளை குறுகுறுவென பார்த்தவன் "லவ்ஸா?" எனக் கேட்டான்.


அவனின் தோளில் அடித்தவள் "நீங்க ரொம்ப கிண்டல் பண்றிங்க." என்றாள்.


அவளின் கன்னங்கள் அள்ளி காது மடலில் முத்தமிட்டவன் "நீ என்னை காதலிக்கறதா எப்போதும் சொல்லிட்டு இருக்கணும்.. நான் அதை கேட்டுட்டே இருக்கணும். உனக்கடுத்து திகட்டாத ஒரு விசயம் இந்த காதலாதான் இருக்கும்.." என்றான்.


சங்கவி முகம் சிவந்தபடி அவனை பார்த்து புன்னகைத்தாள். அவனின் மீசையை திருகினாள். அவனோடு எப்போதும் இதே காதலோடு இருக்க‌ வேண்டும் என்று ஆசைக் கொண்டாள். மீசையை தொட்டுக் கொண்டிருந்த அவளின் கையை பற்றி முத்தமிட்டவன் "லைஃப் லாங்கும் நீ என்னோடு இருப்பியா சங்கவி?" எனக் கேட்டான்.


அவனை மூக்கு சிவக்க முறைத்தாள். "இல்ல.. அடுத்த வாரம் வேற யார் கூடவாவது போகலாம்ன்னு இரு.." மேலே சொல்லும் முன் கன்னத்தில் அறைந்து விட்டான். 


அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.


"கொன்னுடுவேன்‌. காமெடிக்கு கூட அப்படி சொல்லாதே.." என்றவன் அவளை தூர தள்ளி விட்டுவிட்டு வெளியே நடந்தான். 


ஹோட்டலின் வரவேற்பறையின் முன்னால் இருந்த ரெஸ்டாரன்டிற்கு வந்தவன் சூடாக டீயை பருகினான். கையை கருக்கிக் கொள்ளலாம் போலிருந்தது. அவளை அடித்திருக்க கூடாது. அதுவும் இது போன்ற உடல் நிலையோடு இருப்பவளை எந்தவொரு சூழ்நிலையிலும் அடித்திருக்க கூடாது. தன் கோபத்தின் மீதே கோபம் வந்தது அவனுக்கு. 


கால் மணி நேரம் கடந்த பிறகு அறைக்கு திரும்பி வந்தான். அவன் எங்கே விட்டுச் சென்றிருந்தானோ அதே இடத்தில் சிலை போல நின்றிருந்தாள்.


"சங்கவி.." ஓடி வந்தவன் அவளை இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தான்.


"சாரி.." என்றான் அவளின் கன்னத்தை வருடியபடி. 


பதில் சொல்லாமல் அவனை அணைத்துக் கொண்டாள். ஆதீரனுக்கு இப்போதுதான் அதிகமாக வலித்தது. அவளின் தலையை வருடி விட்டான்.


இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஹோட்டலுக்கு வந்தார் காத்தவராயன்.


ஆதீரனும் சங்கவியும் தயாராகி இருந்தார்கள். அவனை அவள்தான் சம்மதிக்க வைத்திருந்தாள். வாங்கிய அறைக்கு இதுதான் பதில் செய்கை என்று சொல்லிவிட்டாலும் கூட அவனை துப்பாக்கிக்கு பலி தர பிடிக்காமல்தான் கட்டாயப்படுத்தி தயாராக வைத்திருந்தாள்.


"போகலாமா?" எனக் கேட்டுவிட்டு முன்னால் நடந்தார் அவர். சங்கவி ஆதீரனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.


அவன் தனது கார் இருக்கும் திசையில் நடக்க "இதுலயே போகலாம்.." என்றார் தனது காரை காட்டி.


விருப்பமே இல்லாமல் அவரின் காரின் ஏறினான். எதுவும் தீங்கு நடந்து விட கூடாது என்று வேண்டிக் கொண்டே கிளம்பினாள் சங்கவி.


காந்திமதி ஒரே குழப்பத்தில் இருந்தாள். உணவு மேஜையில் அடுக்கப்படும் உணவுகள் யாருக்காக என்று அவளுக்கு புரியவில்லை.


இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதீரனை இங்கே பார்த்ததிலிருந்தே அவளுக்கு மனதில் நெருடல்தான். நெஞ்சம் குறுகுறுத்தது. 


காத்தவராயனின் கார் ஹாரன் சத்தத்தில் எட்டிப் பார்த்தாள்.


காத்தவராயனும் மற்ற இருவரும் வீட்டுக்குள் வந்தனர். இருவரையும் பார்த்து திகைத்தாள் அவள்.


வீட்டின் வேலைக்காரி பூங்கொத்து இரண்டை கொண்டு வந்து காத்தவராயனிடம் நீட்டினாள். காத்தவராயன் பூங்கொத்துகளில் ஒன்றை ஆதீரனிடம் நீட்டினார்.


பற்களை அரைத்தபடியே வாங்கிக் கொண்டான். சங்கவியிடம் மற்றதை நீட்டினார்.


"வெல்கம்.." என்றார் புன்னகையோடு.


தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள் அவள். அவளின் கையிலிருந்த பூவை பிடுங்கிக் கொண்டான் ஆதீரன்.


"ஆதீ.." என்று ஆரம்பித்தவரின் முன்னால் பூங்கொத்து இருந்த கையை நீட்டி தடுத்தவன் "அவளுக்கு ரோஜாக்கள் அலர்ஜி.." என்றான்.


காந்திமதி‌ உதடு சுளித்தாள். அதை மற்ற மூவருமே பார்த்து விட்டனர். காத்தவராயன் அவளை முறைத்தார்.


"சாரிம்மா.." என்றார் சங்கவியிடம்.


அவள் காந்திமதியின் நக்கல் பார்வை கண்டு பயந்து ஆதீரனை ஒண்டினாள்.


"இப்படி வாங்க.." என்று உணவு மேஜைக்கு அவர்களை அழைத்துப் போனார்.


தரமான விருந்தாக இருந்தது.


"வா மதி.. சாப்பிடலாம்.." என்று நின்றிருந்தவளை அழைத்தார்.


பல நாட்களுக்கு பிறகு அன்பாக அழைத்திருந்தார். அதற்காகவே ஓடிப் போய் அமர்ந்தாள்.


உணவு பரிமாறப்பட்டது. இந்த வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கு பதிலாக கொஞ்சமாக விஷம் சாப்பிடலாம் என்று நினைத்தான் ஆதீரன்.


நால்வருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அனைத்தையும் கவனமெடுத்து சமைத்திருந்தது உண்ணும்போது தெரிந்தது.


மாமியாரின் முகத்தைப் பார்த்த பிறகு சங்கவிக்கு சாப்பாடே இறங்கவில்லை. கடமைக்கு கொத்திக் கொண்டிருந்தாள்.


'கம்பல் பண்ணி கூட்டி வந்த இல்ல? நல்லா அனுபவி..' என நினைத்த ஆதீரன் அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தபடியே உண்டான்.


உணவு முடியும் வரை இறுக்கமாகவே இருந்தது அங்கே.


நால்வரும் உண்டு முடித்தனர். எழ இருந்தாள் சங்கவி.


"உட்காரும்மா. டெஸர்ட் வந்துடட்டும்.." என்று அமர வைத்தார் காத்தவாரயன்.


சற்று நேரத்தில்‌‌ பழங்களால் செய்யப்பட்ட இனிப்பு கொண்டு வந்து வைக்கப்பட்டது.


இனிப்பிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்த காந்திமதி முதல் வாயை உண்டாள்.


"மதி, இவன் யார் மகன்?" காத்தவராயன் இனிப்பை உண்டபடியே கேட்டார்.


ஆதீரனுக்கு முகம் சிவந்துப் போனது. 


காந்திமதி தலை குனிந்தாள்.


"இவன் என் மகனா இல்லையா.?" பொறுமையாக கேட்டார் அவர்.


ஆதீரன் அதிர்ச்சியோடு அவரின் முகம் பார்த்தான். அவரின் கேள்வி அவனுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தது.


"எத்தனை முறை சொல்வது காத்தவராயா? இவன் உன் மகன் இல்.." அவள் கத்தாத குறையாக சொல்லி‌ முடிக்கும் முன் தன் ஸ்வெட்டருக்குள் இருந்த காகிதத்தை எடுத்து அவளின் முகத்தில் வீசினார் அவர்.


காகிதத்தை பிரித்து படித்தாள். குழப்பம் முகம் முழுக்க பீடித்தது. அதிர்ச்சியில் முகம் வெளுக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில் மகிழ்ச்சியில் கண்கள் மின்னவும் ஆரம்பித்தது. 


கலங்கும் விழிகளோடு காதலனை பார்த்தாள்‌.


"இவன் உன் மகன்தான்.." என்றாள் வாயை பொத்தி அழுதபடி.


ஆதீரன் காகிதத்தை பிடுங்கினான். டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்ட் அது. காத்தவராயனுக்கும் ஆதீரனுக்கும் இடையில் உள்ள உறவை தெளிவாக சொல்லப்பட்டிருந்தது அதில்.


"அப்படின்னா நீங்கதான் என் அப்பாவா?" அதிர்ச்சியோடு கேட்ட ஆதீரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 


"இந்த இருபத்தியெட்டு வருசத்துல நான் இந்த கேள்வியை கோடி முறை கேட்டிருப்பேன்.." என்றபடி எழுந்து நின்றார் காத்தவராயன்.


காந்திமதி விம்மினாள்.


"நான் நினைக்கல காத்தவராயா.." என்றாள் எழுந்து நின்றபடி.


டிஸ்யூ பேப்பரை எடுத்துக் கையை துடைத்துக் கொண்டவர் "உன் கண்ணுக்கு நான் அவ்வளவு முட்டாளா தெரிஞ்சிருக்கேன்.. அவனை என் தத்து மகனா ஏத்துக்கறேன்னு கேட்டபோது கூட நீ ஒத்துக்க கிடையாது. உன் வீட்டு பக்கமே என்னை நெருங்க விடல. இவன் பக்கத்திலும் நெருங்க விடல. இவன் என் மகன் இல்லன்னு நீ சொன்னதும் அதை முழுசா நம்பினேன்.." என்றார். அவரின் அமைதியான பேச்சை கண்டே அவளுக்கு இதயம் நடுங்கியது.


"ஐயோ காத்தவராயா.. நான் நினைக்கல.." என்றவள் அவரின் காலை பிடிக்க போனாள். அவளின் தலை முடியை பிடித்து நேராய் நிறுத்தியவர் "இந்த நடிப்பை இன்னொரு முறை என்கிட்ட காட்டினா நான் பொல்லாதவன் ஆகிடுவேன்.." என்று எச்சரித்தார். எச்சரித்தாலும் கூட அவரின் குரலில் அமைதிதான் இருந்தது.


"என்னை ஏன் பழி வாங்கின மதி?" என்றார் அவளின் அழுத முகத்தைப் பார்த்தபடி.


இல்லையென தலையசைத்தவள் "சத்தியமா இல்ல. அவன் உன் மகன் இல்லன்னு நான் அவனைதான் பழி வாங்கினேன். கனவுல கூட நான் உன்னை பழி வாங்க நினைக்கல காத்தவராயா.." என்றாள்.


டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்டை பார்த்து கலங்கிக் கொண்டிருந்தவன் அம்மாவின் ஒப்புதலில் அதிர்ந்துப் போனான்.


அவள் முன்னால் சொன்னதை கண்டுக் கொள்ளவில்லை காத்தவராயன்.


"பழி வாங்கலன்னா ஏன்டி என்னை என் பையன்கிட்ட இருந்து பிரிச்சி வச்ச?" என்றார் கத்தலாக. முதல் முறையாக கத்தி இருந்தார். குளிர் ஜூரம் வந்தது போல நடுங்கினாள் காந்திமதி.


"இவன் உன் பையன்னு நினைக்கல. என்னை ரேப் பண்ணவனோட.."


மேலே பேசும் முன் அவளின் கன்னத்தில் பளீரென்று ஒரு அறையை விட்டார். அறைந்த சத்தம் அந்த அறை முழுக்க எதிரொலித்தது. 


வாங்கிய அறையில் தலை சுற்றியது காந்திமதிக்கு. 


"உன்னை எவனும் ரேப் பண்ணல.. பொய் சொல்லாத இனி.." என்று எச்சரித்தார். 


ஆதீரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. காந்திமதியின் நிலை அதை விட மோசமாக இருந்தது. 


காத்தவராயன் தன் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்தார். காந்திமதியின் முகத்திற்கு நேரே நீட்டினார்.


"எதுக்காக என்னை பழி வாங்கின?" எனக் கேட்டார் இரும்பில் வார்க்கப்பட்ட குரலில்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. காந்திமதி ஆதீரனை பழி வாங்கினேன்னு சொன்னாளே.. அந்த விசயத்துல உங்க யாருக்காவது பொறி தட்டுதா நட்புக்களே.? 


இந்த எபி பிடிச்சிருந்தா லைக் பண்ணி கமெண்ட் பண்ணுங்கப்பா..😁




Post a Comment

0 Comments