Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 66

 அழுதவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான் சூர்யா.


"சூர்யா அங்கிள்.." என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு விம்மி அழுதாள். சூர்யா தன் சகோதரனை பரிதாபமாக பார்த்தான்.


"செல்லா.. அழாதே. உனக்கு தம்பிப் பாப்பா இல்லன்னா என்ன? நான் உனக்கு இன்னும் பத்து கரடி பொம்மை வாங்கி தரேன்.." என சொன்னான் சூர்யா. அழுகையை மறந்து அவனை வியப்போடு பார்த்தவள் "தேங்க்ஸ் சூர்யா அங்கிள்.." என்றபடி அவளின் கழுத்தை கட்டிகொண்டாள். அவளின் முதுகை வருடி விட்டான் சூர்யா.


ஒரு இன்பமான நரகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அவனின் செல்லா, அவனின் உயிர் அவனை மறந்து விட்டாள். தலையில் அடிபட்டதன் காரணமாக ஒன்பது வயது சிறுமியின் மன நிலைக்கு சென்று விட்டாள். இப்போது அவள் அவனின் காதலி அல்ல. வெறும் குழந்தை. அவனை இம்சித்துக் கொண்டிருக்கும் குழந்தை.


விரைவில் குணமாகி விடுவாள் என்று மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள். அவள் அருகில் இருப்பதே போதும் என்னும் அளவிற்கு நிம்மதியாக இருந்தான் சூர்யா. முதல் ஒரு மாதம் மயக்கத்திலும் மருத்துவமனையிலும் இருந்தவள் இந்த இரண்டு மாதங்களாகதான் நடமாடிக் கொண்டிருக்கிறாள்.


ஒன்பது வயது குழந்தை என்பதாலும், அவளுக்கு பழையவை எதுவும் நினைவில் இல்லை என்பதாலும் அவளாகவே சூர்யாவையும் ஜார்ஜையும் அங்கிள் என்றும், ஜேம்ஸையும் அலெக்ஸையும் தாத்தா என்று அழைக்க ஆரம்பித்து விட்டாள். அப்பா அம்மா வேண்டுமென்று அழுதவள் தன்னை அப்பாவென அழைக்காமல் போனாளே என்று நிம்மதியாக இருந்தது சூர்யாவுக்கு.


"எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்" என்றபடி அங்கிருந்து நழுவினான் ஜார்ஜ்.


செல்லா தன்னுடைய கரடி பொம்மையை கட்டிப்பிடித்தபடி சூர்யாவின் அலுவலக அறையை நோக்கி நடந்தாள்.


"செல்லா.." பின்னால் ஓடி வந்தான் சூர்யா. ஜேம்ஸ் நிம்மதி பெருமூச்சோடு அவர்களை கடந்து போனார். தம்பி பெற்று வைத்திருக்கும் ஒற்றை புதல்வனின் முகத்தில் தெரியும் நிம்மதிக்காக எவ்வளவு புண்ணியம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.


சூர்யாவின் அறையிலிருந்த சோஃபாவில் விழுந்தாள் செல்லா. 


"எனக்கு ஐஸ்கிரீம் வேணும் அங்கிள்.." என்றவள் தன் காலிலிருந்த வெள்ளை ஷூவையும் சாக்ஸையும் கழட்டி எறிந்தாள். அதே அறையில் பிரிட்ஜ் ஒன்றையும் வைத்திருந்தான் சூர்யா. அவளுக்காக மட்டுமே அது‌. சாக்லேட் ஐஸ்கிரீம் கப் ஒன்றை எடுத்து வந்து நீட்டினான்.


"ரொம்ப சாப்பிட கூடாது செல்லா.. அப்புறம் காய்ச்சல் வந்துடும்.." என்றான்.


"நோ அங்கிள்.. ஸ்வீட் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.." என்றவள் ஐஸ்கிரீமை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.


"குணமாகும் முன்னாடி எத்தனை சொத்தை பல் வர போகுதோ.?" என்று புலம்பியவன் அவளின் அருகில் அமர்ந்தான்.


"சாப்பிட்டு ஹோம் வொர்க் செய்யணும் சரியா.?" அவளது ஹோம் வொர்க் நோட்டை எடுத்து டீப்பாய் மீது வைத்தபடியே சொன்னான். சும்மா இருந்தால் ஏதாவது செய்துக் கொண்டே இருக்கிறாள். அவனை வேலை செய்ய விட மறுத்தாள்.‌ அவளும் ஏதாவது வம்பு இழுத்து வைத்தாள். அதற்காகவே வீட்டிலேயே அவளுக்கு பாடம் எடுக்க ஒரு ஆசிரியையை ஏற்பாடு செய்திருந்தான் சூர்யா.


"நீ சின்ன வயசுல சுட்டி பொண்ணா இருந்திருப்ப செல்லா.." என முனகியபடியே சென்று தனது இருக்கையில் அமர்ந்தான். தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். ஐஸ்க்ரீம் சாப்பிட்டு முடித்ததும் கப்பை கொண்டு சென்று குப்பை தொட்டியில் பொறுப்பாக போட்டு விட்டு வந்த செல்லா நோட்டை எடுத்து வைத்து எழுத ஆரம்பித்தாள்.


சூர்யா படபடவென்று கணினியில் தட்டிக் கொண்டிருந்தான்.


"அங்கிள்.." அவனின் வேகத்தை குறைப்பது போல அழைத்தாள்.


"சொல்லு செல்லா.." 


"ஏழும் எட்டும் பதினைஞ்சிதானே?" எனக் கேட்டாள்.


திரும்பிப் பார்த்து முறைத்தான்.


"டவுட்டு அங்கிள்.." என்று பற்களை காட்டினாள்.


"உனக்கு டவுட் வந்தா டேபிள்ஸ் புக் எடுத்து பாரு.." என்றவனை அடுத்த நான்காவது நிமிடத்திலேயே "அங்கிள் நாலும் ஏழும் பதினொன்னு. இது கரெக்ட்தானே?" எனக் கேட்டாள்.


விழிகளை சுழற்றியவன் "நீ போடும் கணக்குகள் சரிதான் செல்லா. தப்பா இருந்தா உன் மிஸ் கரெக்ட் பண்ணி தருவாங்க.‌" என்றான்.


அதன் பிறகு அவள் ஏதும் தொந்தரவு செய்யவில்லை.


நேரம் கடந்தது. சத்தம் வராதது கண்டு திரும்பிப் பார்த்தான் சூர்யா. உறங்கிக் கொண்டிருந்தாள் செல்லா. எழுந்து வந்தான்.


கால் பாதத்தை தாண்டிய கவுனை அணிந்திருந்தாள். ஆரம்பத்தில் யாருடனும் சேராமல் இருந்தவள் இவனோடு மட்டும்தான் நெருங்க ஆரம்பித்தாள். அதனாலேயே தினமும் அதிகமான நேரத்தை இவனோடு செலவு செய்வாள்.


அவளின் தோளில் அருவியாக வழியும் கூந்தலை ஓரம் ஒதுக்கி விட்டான். புருவத்தின் மத்தியில் சிறு தழும்பு இருந்தது. அவள் உயிரோடு கிடைத்ததே போதும் என்று எண்ணியவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். இந்த நெருக்கத்தில் அவனுக்கான ஒரே பிரச்சனை அவளின் மேனியாகதான் இருந்தது. பார்த்தாலே அணைத்துக் கொள்ள சொல்லியது ஆசை. ஒன்பது வயது சிறுமியை காதலாய் பார்ப்பது கூட தவறு என்று புரிந்து வைத்திருந்தவனுக்கு அவளுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் சர்க்கரை தடவிய தண்டனையாக இருந்தது.


போர்வையை கொண்டு வந்து அவளின் கழுத்து வரை போர்த்தி விட்டான். அவளின் உதடுகளையும், கழுத்தையும், கன்னத்தையும், காதுகளையும் தன்னை மறந்து ரசித்தவன் தானாகவே சுய சிந்தனைக்கு வந்து அவளை விட்டு விலகினான்.


"அங்கிள்.." உறக்கத்தில் முனகினாள் செல்லா. "தூங்கு செல்லா.." என்று அவளின் தலையை வருடி விட்டவன் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.


தாரணி தன் வீட்டின் மொட்டை மாடியில் நின்றபடி வானத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கையில் இருந்த போனை ஒருமுறை பார்த்தாள். யஷ்வந்த் ஒருமுறை அழைக்கலாம் என்று தோன்றியது. எத்தனை முறைதான் இவளும் முயற்சிப்பது. எத்தனை நாட்கள்தான் முயற்சிப்பது? அவனிடமிருந்து பதிலே வரவில்லை. அவன் போனை எடுக்கவும் இல்லை.


சில முறைகள் அவனது வீடு தேடியும் சென்றாள். ஆனால் அவன்தான் வீட்டில் இல்லை. அவன் தந்த தண்டனையில் இருந்த நியாயம் அநியாயம் புரிந்ததோ இல்லையோ ஆனால் அவன் தந்த தண்டனை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று என்று மட்டும் புரிந்துக் கொண்டாள். 


ஒரு வார்த்தை பேச மாட்டானா என்று ஏங்கி போயிருந்தாள். போனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து திரிந்தாள். 


வாகனங்கள் உற்பத்தி பிசினஸ்களை செய்து வரும் நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்தான் யஷ்வந்த். வானத்து வெளியை கண்ட நொடியில் போனை எடுத்து அழைத்தான்.


"சார்.." என்றான் எதிர் முனையிலிருந்தவன். மனைவிக்கு பாதுகாப்பு வேண்டுமென்று அவளுக்கே தெரியாமல் இவன் அனுப்பி வைத்த பாடிகார்ட் அவன். தினமும் பத்து முறையாவது அழைத்து அவளின் நலனை பற்றி சொல்லி விடுவான்.


"எப்படி இருக்கா?" அவளின் நினைவில் மெழுகாய் உருகிக் கொண்டு இருந்தான். அவளைத் தேடி ஓடி விடச் சொல்லும் காதலுக்கும், அவளை வெறுத்து விட சொல்லும் கோபத்துக்கும் இடையில் நின்று கரைந்துக் கொண்டிருந்தான். 


"மொட்டை மாடியில் நின்னுட்டு இருக்காங்க சார். வெயில் இல்ல. மதியம் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தாங்க. என்ன விசயம்ன்னு ஹாஸ்பிட்டல்ல விசாரிச்சேன். பிரகனென்டா இருப்பதா டாக்டர் சொன்னாங்க.‌." என்று படபடவென்று சொன்னான் எதிரில் இருந்தவன்.


தடுமாறி நின்றான் யஷ்வந்த்.


"நிஜமா.?" என்றான் அவனுக்கே அன்னியமாகிப் போனதொரு குரலில்.


"யெஸ் சார் கன்பார்ம்.." 


யஷ்வந்த் அருகே இருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தான். போனை வைத்து விட்டு முகத்தை பற்றிக் கொண்டான். இதயம் இரட்டை வேகத்தில் துடித்தது. ஓடிச் சென்று அவளை ஏந்திக் கொள்ள வேண்டும் போல ஆசை வந்தது.


போனை எடுத்து காதில் வைத்தான்.


"பத்திரமா பார்த்துங்க சுரேஷ். அவ எங்கே வெளியே போனாலும் கூடவே போங்க.. என் அப்பா பெயில்ல வெளியே வர போறாரு. கேஸ் திசை திரும்பிடுச்சி. அவளுக்கு ஆபத்து அதிகம். அதனால எப்பவும் அவளை பின்தொடருங்க. அடிக்கடி போன் பண்ணுங்க.." என்றவன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டான். 


சூர்யாவுக்கு அழைத்தான். சில நொடிகளுக்கு பிறகு எடுத்தான் அவன்.


"செல்லா எப்படி இருக்கா?" என்றான் எடுத்தவுடனே.


"தூங்கிட்டு இருக்கா.." என்ற சூர்யா "உன் குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு?" என்று விசாரித்தான்.


"நான் அப்பா ஆக போறேன்.." எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் சொன்னான்.


சூர்யா ஆனந்த அதிர்ச்சியடைந்தான்.


"வாவ். கன்கிராட்ஸ் யஸ்வேந்த்.. அவளை போய் கூட்டி வந்துடு.." என்றான்.


"அது தப்பு சூர்யா. அவளோட எண்ணங்கள் சீர்படாம அவளை என்னால கூட்டி வர முடியாது. அவ திருந்தணும்.." 


"பேபி உண்டாகி இருக்கு. நீ என்னப்பா இப்படி சொல்ற? என்ன இருந்தாலும் உன் பாப்பா இல்லையா? போய் அவளை பாரு. செல்லா சீக்கிரம் குணமாகிடுவா.."


சூர்யா என்ன சொன்னாலும் இவன் மனம் இளகாது என்பதுதான் உண்மை.


"அவ எழுந்த பிறகு கால் பண்ணி கொடு. நான் பேசறேன்.." என்றுவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் யஷ்வந்த். அப்பாவும் மனைவியும் செய்த தவறுக்கு இவனும் குழந்தையும் தண்டனையை அனுபவிக்கிறார்களே என்று பரிதாபமாக இருந்தது சூர்யாவுக்கு.


சுரேஷ் மூங்கில் தோட்டத்தின் நிழலில் நின்றபடி மாடியில் இருந்தவளை கவனித்துக் கொண்டிருந்தான்.


மொட்டை மாடிக்கு வந்தான் வருண். தங்கையின் அருகே வந்தவன் தேனீர் டம்ளரை டொம்மென்று வைத்தான்.


தயக்கத்தோடு எடுத்துக் கொண்டாள். இந்த மூன்று மாதத்தில் அண்ணனும் அம்மாவும் அவ்வளவாக அவளோடு பேசுவதில்லை. மகள் செய்த காரியம் அறிந்த பிறகு 'நீயும் உன் தந்தையை போலதான்' என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள் அம்மா. சொந்த வீட்டிலிருந்தும் அனாதை போலதான் இருந்தது அவளுக்கு.


"எனக்கு டீ வேணாம் அண்ணா.." அவள் சொன்னதும் டம்ளரை எடுத்தவன் டீயை காற்றோடு வீசினான். காற்றில் சிதறிய தேனீர் துளிகள் மண்ணில் சேர்ந்தன. டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே நடந்தான்.


"அண்ணா.." அழைத்தவளின் குரலில் நின்றான்.


அருகில் போனாள்.


"நான் தெரியாம பண்ணிட்டேன் அண்ணா.." என்றாள் கண்ணீரோடு.


"ஒரு பொண்ணை கொல்ல நினைக்கிறது தெரியாம பண்ற விசயமா?" நக்கலோடு கேட்டான்.


"நீ அவர்கிட்ட பேசு ப்ளீஸ்.. இந்த மூனு மாசமும் பைத்தியம் பிடிக்கற மாதிரியே இருக்கு.." என்றவளை கண்டுக் கொள்ளாதவன் போல நகர முயன்றான்.


"பிரகனென்டா இருக்கேன் அண்ணா.." 


சட்டென்று நின்றவன் அவளின் முகத்தைப் பார்த்தான்‌. அழுத விழிகள் பொய் சொல்லவில்லை என்றுப் புரிந்தது.


"இந்த குழந்தையாவது உன் புத்தியா இல்லாம இருக்கணும்.." என்றவன் விடுவிடுவென்று கீழே நடந்தான்.


"அண்ணா.." அழைத்தவளை கண்டுக் கொள்ளவில்லை அவன்.


தாரணிக்கு விழிகள் கலங்கியது. அனைவரும் வெறுத்தால் யாரிடம்தான் பேசுவாள் அவளும்?


"அங்கிள்.." என்றபடியே தூக்கத்திலிருந்து எழுந்தாள் செல்லா.


"குட் ஈவினிங்.." என்றவனை பார்த்து பற்களை காட்டினாள். எழுந்தோடி வந்து அவனின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டவளின் முதுகை வருடி விட்டான்.


தூங்கி எழுந்தாலும் கூட சில நிமிடங்களுக்கு அவள் அப்படி அரை தூக்கத்தில்தான் இருப்பாள். அங்கிளை அணைத்தபடி அரை தூக்கம் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு தெரியாது தன்னை அணைத்துக் கொண்டிருந்தவனின் கரங்களில் இருந்த நேர்மையும், அவனின் மனதில் இருந்த பரிசுத்தமும்.


"அங்கிள்.." 


"சொல்லும்மா.."


"என் அப்பா அம்மா யாரு அங்கிள்.?" இந்த கேள்வியை கேட்க கூடாது என்று அவளை நிறைய முறை கண்டித்து உள்ளான். ஆனாலும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.


"உன்னை ஒரு அனாதை ஆசிரமத்துல இருந்து வாங்கி வந்து வளர்த்திட்டு இருக்கேன்.." இனிமேல் இந்த கேள்வி வர கூடாது என நினைத்துச் சொன்னான்.


"ஒன்பது வயசு குழந்தைங்க எல்லோரும் குட்டியா இருக்கும்போது நான் மட்டும் எப்படி அங்கிள் இவ்வளவு உயரமா இருக்கேன்.?" அவளின் அடுத்த கேள்வியில் அவனே அதிர்ந்து விட்டான்.


"ஒன்பது வயசுன்னு மனசுல பதிஞ்சிருக்கு. ஆனா மூளை இருபது வயசு பொண்ணோடது போல வேலை செய்யுது. நான்தான் பாவம்.." என்று முனகினான்.


அவன் பதில் சொல்லும் முன் "தாத்தா.." என்று எழுந்து ஓடினாள் செல்லா.


ஜேம்ஸ் சாக்லேட்ஸை கைகள் நிறைய எடுத்துக் கொண்டு வந்திருந்தார் அங்கே.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. (சூர்யாவும் குட்டி செல்லாவும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை படிக்க யாரெல்லாம் தயார் இங்கே?)



Post a Comment

1 Comments