Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 68

 பூங்கொடி மகனை முறைத்தாள் "கதைதானே.? சொல்லுடா." என்றாள் கோபத்தோடு.


"எனக்குத் தெரிஞ்ச எல்லா கதையையும் சொல்லிட்டேன் அம்மா. இதுக்கு மேல எப்படி கதை சொல்ல முடியும்.?" சோகமாக கேட்டான் சூர்யா.


மகனை சமாதானம் செய்து செல்லாவையும் அவனோடு அனுப்பி வைத்தாள் பூங்கொடி.


சூர்யாவின் புஜத்தில் தலை சாய்ந்து படுத்துக் கொண்ட செல்லா "கதை சொல்லுங்க அங்கிள்.." என்றபடி அவனின் கன்னத்தை கிள்ள ஆரம்பித்தாள்.


"சொல்றேன் இரு செல்லா.." என்றவன் யோசித்துவிட்டு தேவதை கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தான்.


நேரம் துளித்துளியாக கரைந்தது. கண்களை மூடி உறங்கிப் போனாள் அவள்.


சூர்யா அவளை சரியாக படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டான். நகர்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள். பெருமூச்சோடு அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.


"நீ குணமாகும் முன்னாடி நான் வெந்தே செத்துடுவேன் செல்லா.." 


இரவு வெகுநேரம் வரை அவளின் முகத்தை பார்த்தபடியே அமர்ந்து கொண்டிருந்தான்.


அவளின் கன்னத்தை வருடினான். "நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்னை கண்டுபிடிச்ச உடனே இன்டியாவுக்கு ஓடி வந்திருக்கணும். உன்னை கூட்டி வந்திருக்கணும். பெரிய முட்டாள்தனம் பண்ணிட்டேன்.." என்று புலம்பினான் வழக்கம் போல.


சங்கவி புரண்டு படுத்தாள். "ஏய்.." ஆதீரனின் கத்தலில் பதறி எழுந்து அமர்ந்தாள்.


"என்னாச்சு மாமா.?" என்றவளை வெறிக்க வெறிக்க முறைத்தவன் "எதுக்கு நீ புரண்டு படுத்த.?" எனக் கேட்டான் கோபத்தோடு.


"தூக்கத்துல புரண்டுட்டேன் மாமா.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "இனி புரள கூடாது. எந்திரிச்சி உட்கார்ந்து திரும்பி படு. இல்லைன்னா புரளாம தூங்கு.." என்றுக் கட்டளையிட்டான். 


நெற்றியில் அடித்துக்கொண்டாள் சங்கவி. 


"நடுராத்திரியில் தூங்காம உங்களுக்கு என்ன வேலை.?" என கேட்டாள்.


"உன்னை கண்காணிச்சிட்டு இருக்கேன்.." என்றவனை லூஸோ என நினைத்துப் பார்த்தவள் ஓரமாக தலையணையில் படுத்துக் கொண்டாள். ஓரக்கண்ணால் அவனை கவனித்தாள். ராட்சசன் நல்லவனானால் இப்படிதானோ என்று குழம்பினாள்.


இரவு விளக்கொளியில் ஆதீரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சேலை நழுவிய அவளின் வயிற்றை பார்த்துக் கொண்டிருந்தான். 


இந்த குழந்தை பத்திரமாக பிறக்க வேண்டும். அவனுக்கான மகிழ்ச்சி முக்கியமில்லை. அவளின் நிம்மதி முக்கியம். 


அலெக்ஸின் முகத்தை துடைத்து விட்டாள் பூங்கொடி. அவருக்கான உடையை மாற்றி விட்டாள்.


"வேலைக்காரரை வர சொல்லலாமே.." தினமும் போல கேட்டார்.


"இல்ல இருக்கட்டும்.. இதுவும் செய்யலன்னா எனக்கு ரொம்ப விலகி போன மாதிரி இருக்கும்.." என்றுவிட்டு தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.


மனைவியின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அவளோடு போட்டுக் கொண்ட சண்டைகள் கூட காதலைதான் நினைவுக்கு தந்தன.


"அடியேய் பூங்கோடி.." காதில் வந்து விழுந்த உரத்த குரலில் கையிலிருந்த ஈர துண்டை ஒரு ஓரத்தில் எறிந்து விட்டு "இதோ வந்துட்டேன் அத்தை.." என்று பதறியடித்து ஓடினாள் பூங்கொடி.


மனைவியின் பயத்தையும் பதட்டத்தையும் கண்டு வயிறு வலிக்க சிரித்தார் அலெக்ஸ். தன் மனைவியை இந்த அளவிற்கு மிரட்ட ஒரு ஜீவன் இருக்குமென்று கனவில் கூட நினைத்ததில்லை அவர்.


பூங்கொடி ஹாலுக்கு வந்தாள். சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள் செல்லா.


"காப்பி எங்கேடி.?" எனக் கேட்டாள் அதட்டலாக.


"அத்தை இதோ.." என்று சமையலறைக்கு ஓடினாள் பூங்கொடி. கரங்கள் நடுங்கியது. அவசர அவசரமாக காப்பியை தயாரிக்க ஆரம்பித்தாள். கணவனை கவனித்துக் கொண்டதில் நேரத்தை கவனிக்க தவறிவிட்டாள். எப்போதும் இந்த நேரத்திற்கு காப்பியை தந்து விட வேண்டும் செல்லாவுக்கு.


காப்பியை கொண்டு வந்து பவ்வியமாக செல்லாவின் முன் வைத்தாள் பூங்கொடி.


காப்பியை எடுத்து குடித்துவிட்டு "என்னடி இது கழனி தண்ணி போலவே இருக்கு.?" எனக் கேட்டாள் அவள்.


விழி பிதுங்க நின்ற பூங்கொடி "நா.. நான் வேற காப்பி போட்டு எடுத்து வரட்டுமா அத்தை.?" எனக் கேட்டாள்.


"அதெல்லாம் வேணாம். உன்னை என் மகனுக்கு கட்டி வந்த பாவத்துக்கு இதையே குடிக்கிறேன் நான்.." என்றவள் "எங்கேடி என் கை தடி.?" எனக் கேட்டாள்.


ஓட்டமாய் ஓடிச் சென்று கைத் தடியை கண்டுபிடித்துக் கொண்டு வந்து தந்தாள் பூங்கொடி.


"என் மகன் எழுந்துட்டானா.?" எனக் கேட்டபடி படிகளில் ஏறினாள்.


"ம். எழுந்துட்டாரு அத்தை.." என்றவள் பின்னால் வர முயல, "நீ எங்கே வர.? போய் என் பேரனுக்கு சமைச்சி முடி.." என்று விரட்டினாள் கைத் தடியை பயன்படுத்தி.


பூங்கொடி சமையலறையை நோக்கி நடந்தாள்.


பகல் பன்னிரெண்டிலிருந்து இரவு பன்னிரெண்டு வரை அவள் குழந்தை செல்லா.  இரவு பன்னிரெண்டிலிருந்து பகல் பன்னிரெண்டு வரை அவள் செல்லம்மா. எண்பது வயது கிழவியின் முதிர்ச்சியை கொண்ட செல்லம்மா. அவளின் அடிப்பட்ட மூளை செல்லாவை இரு வேறு ஆளாக மாற்றி விட்டிருந்தது.


குழந்தை என்பதால் அனாதை, தத்து எடுத்து வந்தோம் என்று சொல்லி விட சுலபமாக இருந்தது. ஆனால் எண்பது வயது பாட்டி செல்லம்மாவை அப்படி ஏமாற்ற முடியவில்லை.


அலெக்ஸ் தனது மகன், பூங்கொடி தனது மருமகள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் செல்லம்மா. 


சீக்கிரத்தில் குணமாகி விடுவாள் என்பதால் யாரும் அதை மாற்றி சொல்லாமல் விட்டு விட்டனர். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் அவள் அநியாயத்திற்கு மாமியாராக இருந்தாள். பூங்கொடியை கொடுமை மட்டும்தான் செய்யவில்லை. ஆனால் இம்சைகளையே கொடுமை அளவுக்கு செய்தாள்.


அறைக்குள் வந்த செல்லாவை கண்டு புன்னகைத்தார் அலெக்ஸ்.


"என்ன பொண்ணு கட்டி வந்தியோ.? ஒரு சுறுசுறுப்பும் இல்ல.." சலித்துக் கொண்டபடி அலெக்ஸின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


"இந்த டாக்டருங்க சீக்கிரம் உன்னை நல்லா பண்ணிட்டாங்கன்னா ஆகும். உன்னை இப்படி படுத்த படுக்கையா பார்க்க கஷ்டமா இருக்குடா அலெக்ஸு.." என்றாள் விழிகளில் ஈரம் மின்ன.


பல வருடங்களுக்கு முன்பு இறந்த போன தாயாரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள் அவள்.


அவளின் அன்பில் உருகிக் கொண்டிருந்தார் அலெக்ஸ். 


"சீக்கிரம் நல்லாகிடுவேன் அம்மா.." என்றவரின் தலைமுடியை சீவி விட்டவள் "பேரனுக்கு வயசாகிக்கிட்டே போகுது. அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கலாமில்ல.?" எனக் கேட்டாள்.


அதிர்ந்துப் போனவர் "சூர்யாவுக்கா.?" எனக் கேட்டார்.


"அவனுக்குதான்.." என்று அவள் சொல்லிய அதே நேரத்தில் அறைக்குள் வந்தான் சூர்யா.


"எனக்கென்ன பாட்டி.?" எனக் கேட்டான் சந்தேகத்தோடு.‌ அவனுக்கு அந்த குட்டி செல்லாவை விட இந்த பாட்டி செல்லாவை பிடித்திருந்தது. அன்பாக கவனித்துக் கொண்டாள் அவனை.


"உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க சொல்றேன் உங்கப்பன்கிட்ட.. அவன் என்னவோ  சூர்யாவுக்கான்னு இழுக்குறான். இந்த வெள்ளைக்கார பொண்ணு ஒன்னை நீ இழுத்துட்டு வந்தா பாட்டி கல்யாணத்தை முடிச்சி வைப்பேன் இல்ல.? இந்த கிழடு கட்டையும் இன்னும் எத்தனை வருசத்துக்கு இருக்குமோ.?" என்றாள் சோகத்தோடு.


சூர்யாவுக்கு கோபமும் சோகமும் ஒன்றாக வந்தது.


'நல்லா வருவடி நீ.. குழந்தையா இருக்கும்போது என் பீலிங்ஸை சோதிக்கிற. இப்ப கிழவியாகி என் பொறுமையை சோதிக்கற. நீ குணமான பிறகுதான் உனக்கு கச்சேரி இருக்கு. உன்னை வச்சி செய்யப் போறேன் நான்.. நீ இப்ப பண்ற அத்தனை அலும்பலை சொல்லிக் காட்டி இம்சிக்க போறேன்..' என்று மனதில் நினைத்துக் கொண்டவன் "வெள்ளைக்காரி எதுக்கு பாட்டி.? வெள்ளைக்காரியை விடவும் ஒரு அற்புதமானவ இருக்கா. அப்படியே ஆயிரம் அம்சங்களோடு எனக்கு பொருந்தி போவா.." என்றான்.


செல்லா நாற்காலியிலிருந்து எழுந்து ஓடி வந்தாள். சூர்யாவின் கையை பிடித்தாள்.


"அவ்வளவு அற்புதமானவளா.? யாருடா சூர்யா அந்த பொண்ணு.? சொல்லு நான் பேசி கட்டி வைக்கிறேன்.."


செல்லாவின் கண்களில் தெரிந்த ஆவலை கண்டு நெஞ்சுக்குள் உருகியவன் "அவ படிக்க போயிருக்கா பாட்டி. இன்னும் ஒன்னு இரண்டு மாசத்துல திரும்பி வந்துடுவா.." என்றான்.


செல்லா அவனின் நெஞ்சின் மேல் கையை வைத்தாள். அந்த கையை கோடி ஆண்டுகள் ஆனாலும் கீழிறக்காமல் பிடித்து வைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.


"இரண்டு மூனு மாசம்தானே.? நல்லா சிறப்பா கல்யாணத்தை செய்யணும்டா சூர்யா. ரொம்ப பிடிச்சிருக்கா அவளை.?"


செல்லாவின் கண்களில் தொலைய முயன்றவன் "ரொம்ப பிடிக்கும். இந்த உலகமே அவதான் எனக்கு.." என்றான்.


செல்லா அவனின் இடுப்புக்கு நேரே ஒரு அடியை விட்டாள்.


"அப்பா அம்மா பாட்டியெல்லாம் குத்துகல்லு மாதிரி இருக்கும்போது அவ உனக்கு உலகமா.?" எனக் கேட்டாள். தடியால் அவனை மேலும் நாலு சாத்து சாத்தினாள்.


"அட டப்பா பாட்டி.." என்று மூக்கு சிவந்தவன் "போ‌. இனி நான் உன்னோடு கா.." என்றுவிட்டு வெளியே போனான்.


தாரணி யோசனையோடு அமர்ந்திருந்தாள். போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.


யாரிடம் கேட்டால் உதவி கிடைக்கும், யாரிடம் சொன்னால் தன்னை யஷ்வந்தோடு சேர்த்து வைப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


அந்த வீட்டிலிருந்த யாரோடும் அதிகமாக நெருங்கி பழகி விடவில்லை. அதற்குள் பிரிந்து வந்து விட்டாள்.


தர்ஷினியிடம் கேட்கலாமா என்று யோசித்துப் பார்த்தாள். ஆனால் அது சரி வரும் என்று தோன்றவில்லை. வில்லியாக இருந்து திருந்திய பிறகு மற்றொரு வில்லியை நினைத்து பயமாக இருந்தது.


வெகுநேரம் யோசித்துவிட்டு யவனாவிற்கு அழைத்தாள்.


"யவனா.."


"அண்ணி.." உண்மையான பாசம் இருந்தது அவளின் குரலில்.


நலம் விசாரித்து முடித்த பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் விசயத்தை சொன்னாள்.


"சந்தோசமா இருக்கு அண்ணி.." என்று மகிழ்ந்தவளிடம் "யவனா.. எப்படியாவது உன் அண்ணாகிட்ட பேசுறியா.? மூனு மாசமும் மூனு ஜென்ம நரகம் போலவே இருக்கு.. எப்படியாவது அவரோடு என்னை சேர்த்து வச்சிடு. நான் செஞ்ச எல்லாமே தப்புதான். இனி அப்படி எந்த தப்பையும் கனவுல கூட நினைக்க மாட்டேன்‌. ப்ளீஸ் உன் அண்ணாவோடு பேசு.. அவர் என் போனை அட்டென்ட் கூட பண்ண மாட்டேங்கிறாரு.." அழுதபடியே பேசி முடித்தாள்.


"அழாதிங்க அண்ணி.. அண்ணாகிட்ட நான் பேசறேன். ப்ளீஸ் ரிலாக்ஸா இருங்க. இந்த நேரத்துல சந்தோசம்தான் முக்கியம்.." என்றவள் அன்று மாலையில் யஷ்வந்த் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றாள். 


வீட்டில் கோபித்துக் கொண்டு இங்கே வந்து தங்கியிருந்தான்.


தங்கையை கண்டதும் அழைத்து வரவேற்று குளிர்பானத்தை தந்தான்.


"அண்ணி பிரகனென்டா இருக்காங்க.." 


"ம்.." என்றவனிடமிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை.


"உங்களுக்கு தெரிஞ்சிருந்தும் அவங்களை விலக்கி வச்சிருக்கிங்க ரைட்.?" என்றவளிடம் ஆமென தலையசைத்தவன் மடிகணினியை எடுத்து வேலையை பார்க்க ஆரம்பித்தான்.


"நம்ம வீட்டு வாரிசு அண்ணா.."


"அதுக்கு நான் என்ன செய்யட்டும் யவனா.? அவ என்ன செஞ்சான்னு மறந்துட்டியா.? செல்லா என் பிரெண்ட். அவளை கொல்ல டிரை பண்ணியிருக்கா.. செத்தாலும் அவளை மன்னிக்க முடியாது என்னால.." என்று கத்தினான்.


அவனுக்கு இவ்வளவு கோபம் வருவதை கண்டு பயந்தே விட்டாள் அவள். 


"ஆனா அண்ணா.." 


எழுந்து நின்றான் யஷ்வந்த்.


"அவளுக்காக பேச வந்திருந்தா தயவு செஞ்சி போயிடு யவனா. அவளை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா.?" கேட்டபடியே அருகே இருந்த கண்ணாடி டீப்பாயை எட்டி உதைத்தான். சில்லு சில்லாக உடைந்து விழுந்தது அந்த டீப்பாய்.


பயத்தில் நடுங்கி போனாள் யவனா.


"பைத்தியமா மாறிட்டேன் அவளால. அவ வேணும் யவனா. ஆனா அவ செஞ்ச தப்பை என்னால மன்னிக்க முடியல. ரோசம் கெட்டு அவ காலடியில் போய் விழுந்துட கூடாதேன்னு பல்லை கடிச்சிட்டு இருக்கேன்.. அவளை மறக்க முடியல. ஒவ்வொரு செகண்டும் அவ மேல நான் வச்சிருக்கும் காதலோடும் அவ எனக்கு செஞ்ச துரோகத்தோடும் வாழ்ந்துட்டு இருக்கேன். வெந்த புண்ணுல வேலை பாய்ச்சாத நீ.." என்றான் கெஞ்சலாக.


யவனாவால் எதுவும் பேசவே முடியவில்லை. நடுங்கும் மனதோடு அங்கிருந்து வெளியே நடந்தாள். அண்ணனின் மனநிலை புரிந்துதான் இருந்தது. ஆனால் கோபமும் வந்தது. அண்ணியின் நிலையை அவன் புரிந்துக் கொண்டு அவளின் தவறை மன்னித்து விட வேண்டும் என்று நினைத்தாள்.


மறுநாள் காலையில்..


மூங்கில் காட்டை சுற்றி ஜாக்கிங் போகலாம் என நினைத்து வீட்டின் கதவை திறந்த வருண் வீட்டின் வாசலில் நின்றிருந்த யவனாவை கண்டு புருவம் சுருக்கினான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. 




Post a Comment

0 Comments