Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 69

 பொழுது கூட முழுதாக விடியாத இந்த நேரத்தில் யார் இவள் என குழம்பியபடி முன்னால் வந்தான் வருண்.


"யாரை பார்க்கணும்.? யார் நீங்க.?" எனக் கேட்டான் சந்தேகமாக.


"நான்தான்ங்க யவனா.."


'அந்த வாயாடியா இது? போன்லயே கொடூரமா டார்ச்சர் பண்ணுவாளே.. இப்ப ஏன் இங்கே வந்திருக்கா.?' குழப்பத்தோடு யோசித்தவன் "ஏன் வந்திருக்கிங்கன்னு தெரிஞ்சிக்கலாமா.?" எனக் கேட்டான்.


"என்னங்க நீங்க.? மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்திருக்கேன். விழுந்து விழுந்து கவனிப்பிங்கன்னு பார்த்தா ஏன் வந்த எதுக்கு வந்தன்னு கேட்கறிங்க.?" என்றாள் அரை சிரிப்பும் அரை கோபமுமாக.


"அது வந்து.." தலையை சொறிந்துக் கொண்டவன் "அவங்களே பிரிஞ்சி இருக்காங்க. இந்த டைம்ல நீங்க ஏன் இங்கே வரணும்ன்னு சந்தேகம்தான்.." என்றான்.


"அவங்களை சேர்த்து வைக்கதான் நான் வந்திருக்கேன்.." என்றவளை யோசனையோடு பார்த்தான்.


அந்த கண்களிலிருக்கும் சோடாபுட்டியை கழட்டி‌விட்டால் பள்ளிக்கூட சிறுமியை போலவே இருப்பாள் என்று நினைத்தான்.


"என் அண்ணன் வந்து தாரணி அண்ணியை கூட்டிப் போகும் வரை நானும் இனி இங்கேதான் இருக்க போறேன்.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தவன் அதன் பிறகே அவளின் காலடியில் கிடந்த பயண பையை பார்த்தான்.


"ஒரு முடிவாதான் வந்திருக்கா போல.." முணுமுணுத்தவன் "வயசு பொண்ணுங்க‌ நீங்க. அழகா வேற இருக்கிங்க. அடுத்தவங்க வீட்டுல தங்க கூடாது. அமைதியா திரும்பி போங்க. புருசன் பொண்டாட்டின்னா சண்டை வரதான் செய்யும். அவங்களா ஒருநாளைக்கு சமாதானம் ஆகிப்பாங்க.. நீங்க போங்க.." என்றான்.


"என்னங்க நீங்க.? வாய் நிறைய கூப்பிட்டு வயிறு நிறைய சாப்பாட்டு போட்டு மனசு நிறைய பேசுவிங்கன்னு பார்த்தா ஊரான் வீட்டு நாய் குட்டியை விரட்டி விடுற மாதிரி போ போன்னு விரட்டி விடுறிங்க.? இனி எனக்கும் உங்களுக்கும் எதுக்கு பேச்சு.? நான் நேரா என் அண்ணியோடு டீல் பண்ணிக்கிறேன். நீங்க நகருங்க. காலங்காத்தால ஆளை பாரு. குல்லாவும் ஸ்வெட்டருமா கூர்க்கா வேலைக்கு போய்ட்டு திரும்பி வந்த ஆசாமியை போல.." என்று பின் சொன்ன வார்த்தைகளை மட்டும் முணுமுணுத்தபடி அவனை விட்டு முன்னால் நகர்ந்தாள்.


கதவை தட்ட கையை ஓங்கினாள். அவனே கதவை திறந்து விட்டான்.


"கதவு பூட்டல. அம்மா தூங்கிட்டு இருக்காங்க. சத்தம் போட்டு எழுப்பி விடாதிங்க.." என்றவன் அவளை அழைத்துப் போய் சோபாவில் அமர வைத்தான்.


"இருங்க டீ கொண்டு வரேன்.." என்று சமையலறைக்கு சென்றவன் பாலை அடுப்பில் ஏற்றிய நேரத்தில் அங்கே வந்தாள் யவனா.


"உங்களுக்கு டீ கூட போட தெரியுங்களா.?" எனக் கேட்டாள் ஆச்சரியத்தோடு.


"ம்.." என்றவன் தன் பெருமையை தானே வெளியே சொல்ல கூடாது என நினைத்த நேரத்தில் "அப்படின்னா டீக்கு பதிலா பூஸ்ட் கலந்து கொடுங்க.." என்றாள் அவள்.


'வந்த உடனே சமையல்காரனாக்கி விட்டுட்டா..' என மனதுக்குள் புலம்பியபடி அவள் கேட்ட பூஸ்டையே கலந்து தந்தான்.


"பர்பெக்டுங்க. சர்க்கரை கூட சரியா இருக்கு.." என்றவள் குடித்து முடித்ததும் கோப்பையை அவனிடமே நீட்டினாள். 


'தலையெழுத்து' என நினைத்தபடி கோப்பையை சிங்கில் வைத்தான்.


"என் அண்ணியோட ரூம் எதுங்க.?" எனக் கேட்டாள் கொட்டாவியை விட்டபடி.


"ஏன்.?" எனக் கேட்டவனை விசித்திரமாக பார்த்தவள் "தூங்கணுங்க.. ராத்திரி வரை விழிச்சிருந்து என் வீட்டுல இருந்த எல்லோரும் தூங்கிய பிறகு காம்பவுண்ட் கேட்டை ஜம்ப் பண்ணி ஓடி வந்திருக்கேன். பஸ்ல வரும்போது கூட தூங்கவே இல்ல.. இப்ப தூக்கமா வருது.." என்றாள் கொட்டாவி விட்டபடியே.


அவளை பார்க்க பார்க்க வியப்பாக இருந்தது அவனுக்கு. செய்து வைத்த பொம்மையை போலவே இருந்தாள்.


தங்கையின் அறையை அவளுக்கு காட்டலாம் என நினைத்த நேரத்தில் அந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. அப்பா அதற்குள் வந்து விட்டாரா என்ற குழப்பத்தோடு சென்று கதவை திறந்தான். 


பைத்தியமாடா நீ என கேட்க வைக்கும் அளவிற்கு அதிகாலை நேரத்திலேயே கூலிங் கிளாஸ் சகிதமாக நின்றிருந்தான் ஆறடி ஆள் ஒருவன்.


எங்கோ பார்த்தது போலவே இருக்கிறதே என்று யோசித்த யவனா அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள். அவன் யஷ்வந்தின் முக்கிய பாடிகார்டுகளில் ஒருவனான காமேஷ். 


சுரேஷ் பகல் டியூட்டி முடித்து ஓய்வெடுக்க சென்றிருந்த நேரத்தில் இரவு டியூட்டிக்கு வந்திருந்தான் இந்த காமேஷ். யவனா இங்கே வந்ததை கண்டதும் குழம்பிப் போய் விட்டான்.


"யார் நீங்க.?" வருண் கேட்ட அதே நேரத்தில் "நீங்க இங்கே என்ன பண்றிங்க.?" எனக் கேட்டாள் யவனா.


"இது யார்ன்னு தெரியுமா.?" சந்தோஷமாக கேட்டான் வருண்.


"ம். என் யஷூ அண்ணாவோட பாடிகார்ட்.." 


காதில் இருந்த ப்ளூடூத்தின் பட்டனை அழுத்தியபடியே யவனாவை பார்த்த காமேஷ் "மேம் நான் தாரணி மேம்க்கு பாடிகார்டா இருக்க வந்திருக்கேன். நீங்க இங்கே என்ன பண்றிங்க.?" எனக் கேட்டான்.


வருண் அதிர்ந்தான்.


"அடப்பாவி யஷூ.. அண்ணியை விரட்டி விட்டுட்டு கூடவே பாடிகார்டையும் அனுப்பி வச்சிருக்கியா.?" உரத்த குரலில் முனகியவளிடம் போனை நீட்டினான் அவன்.


"யஷூ சார் லைன்ல இருக்காரு.." என்றான்.


'இந்த வேலையை எந்த கேப்ல பார்த்த.?' என்று நினைத்தபடி போனை வாங்கி காதில் வைத்தாள்.


"யவனா முட்டாள்.. அங்கே என்ன பண்ற.?" எனக் கேட்டான் கோபத்தோடு.


"வர வர நீங்களே ஒரு ஆன்டி ஹீரோ ரேஞ்ச்க்கு கத்திட்டு இருக்கிங்க பிரதர்.. நான் என் மாப்ளையை பார்க்க வந்தேன்.." 


வருண் புருவம் சுருக்கினான்.


"வாட் மாப்பிள்ளை.?" எதிர்முனையில் கத்தியவனின் குரல் வருணின் காதுகள் வரை கேட்டது.


"உங்க மகன் எனக்கு மாப்ளைதானே.? அதான் அவனை பார்க்க வந்தேன்.. அவன் நம்ம வீட்டுக்கு வரும்வரை நானும் அங்கே வர மாட்டேன்.." 


கடுப்பில் விழிகளை சுழற்றினான் வருண்.


"லூசு‌ மாதிரி பண்ணாத யவனா. அவ என் செல்லாவை சாகடிக்க பார்த்தா. கொலை முயற்சிக்கு ஜெயில்ல கூட ஏழாண்டு சிறை. ஆனா நான் அவ திருந்தும் வரை இருக்கட்டும்ன்னு அனுப்பி வச்சிருக்கேன்.." எதிர் முனையில் கத்தி தீர்த்தான் யஷ்வந்த்.


"நீ கத்தி கத்தி எனக்கு காது வலிக்குது. அண்ணி அங்கே வராம நானும் அங்கே வர மாட்டேன். நீ சட்டுன்னு மனசை மாத்திக்க பாரு. நான் தூங்க போறேன்.." என்றவள் இணைப்பை துண்டித்து காமேஷிடம் நீட்டினாள்.


"ரொம்ப நல்ல பாடிகார்ட் நீங்க. இப்ப போய் உங்க வேலையை பாருங்க.." என்றவள் வருணின் புறம் திரும்பினாள்.


"அண்ணி ரூம்.." அவள் கேட்ட நேரத்தில் தனது அறையிலிருந்து வெளியே வந்தாள் தாரணி.


"அண்ணி.." ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.


"யவனா.?" நம்பவே முடியவில்லை அவளால். சிறு உதவியாவது கிடைக்காதா என்ற நப்பாசையில்தான் இவளுக்கு விசயத்தை சொல்லி இருந்தாள். ஆனால் யவனா தனக்காக இவ்வளவு தூரம் வருவாள் என்று யோசிக்கவே இல்லை அவள். 


"அண்ணி.. நீங்க எதுக்கும் கவலைப்படாதிங்க. அண்ணன் உங்களை சீக்கிரம் கூட்டி போவான்.. அதுக்கு நான் கேரண்டி. இப்ப தூக்கம் வருது. நான் போய் தூங்கறேன்.." என்றவள் உள்ளே ஓடி கட்டிலில் விழுந்தாள்.


அண்ணனை பார்த்தாள் தாரணி. அவன் ஜாக்கிங்கிற்கு கிளம்பி விட்டான். பொறாமையில் செய்த தவறு எத்தனை சொந்தங்களை இழக்க செய்து விட்டது என்று புரிந்து உள்ளுக்குள் நொந்துப் போனாள்.


"ஜெனிடிக் டிஸ்ஸாஸ்டராம். அதான் இப்படி கிழவியாகியும் இளமையா இருக்கேனாம்.." என்று இழுத்த செல்லாவை கண்டு விழிகள் சுழற்றிய சூர்யா "அது டிஸ்ஸாஸ்டர் இல்ல. டிஸ்ஸார்டர்.." என்றான். 


"இரண்டும் ஒன்னுதானே பேரான்டி.?" என்றவள் தன் முன் நின்றிருந்த இரு இளம் பெண்களையும் மாறி மாறி பார்த்தாள்.


"நல்ல புள்ளைங்களா இருக்கிங்க.. இவன் என் பேரன்தான். சூர்யா பேரு. இன்னும் கல்யாணம் ஆகல. உங்களை மாதிரி நல்ல புள்ளைங்களா பார்த்தா எனக்கு எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா அவன் நான் வேற புள்ளையை லவ் பண்றேன் அப்புச்சின்னு சொல்றான். அதுக்கு மேல நான் என்ன சொல்றது?" என்று தாடையில் கையை வைத்தாள்.


"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் வாங்க.." அவளை இழுத்துக் கொண்டு அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரை விட்டு வெளியே வந்தான் சூர்யா. 


வெளியே கூட்டி வந்தால் அவளுக்கும் சிறு மாறுதலாக இருக்கும் என்று அவளை கடைக்கு அழைத்து வந்திருந்தான். இப்போது ஏன் அழைத்து வந்தோம் என்றோம் அவனுக்கே தோன்றி விட்டது.


"அந்த சிவப்பு பாவாடை போட்டிருந்த புள்ளை நல்ல லட்சணம்டா பேரான்டி.." என்றவளை காரில் தள்ளினான்.


"வயசானவளை இப்படி புடிச்சி தள்ளுறியே கூறு கெட்டவனே.. இடுப்பு கிடுப்பு போச்சின்னா யாருடா என்னை பார்த்துப்பா.?" கையிலிருந்த தடியால் ஒரு அடியை விட்டாள்.


"இவளுக்கு பழைய நினைப்பு வரும் முன்னாடி நான் கிழவனாகிடுவேன்.." புலம்பியபடியே காரை ஓட்டினான்.


வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தாள் செல்லா. இவனுக்கு காதை எங்காவது வாடகைக்கு விட்டு விடலாமா என்றே தோன்றி விட்டது.


வீட்டிற்கு வந்தபிறகு நேரத்தை பார்த்தான்.‌ பன்னிரெண்டுக்கு கொஞ்ச நேரம்தான் இருந்தது. 


"கிழவியே பரவாயில்லைன்னு நினைக்கும் அளவுக்கு அந்த குட்டிச் சாத்தான் டார்ச்சர் பண்ண போகுது.." புலம்பியபடியே காரை விட்டு இறங்கினான். 


அவள் மயங்கி விட்டிருந்தாள். பன்னிரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அவளின் மூளை தூங்கி எழுந்துக் கொண்டிருந்தது.


வீட்டிற்குள் வந்தவன் கூரையை பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்த அம்மாவின் அருகே வந்து அமர்ந்தான்.


"என்ன யோசனைம்மா?" என்றான் முன்னால் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தபடி.


"உனக்கு தெரியுமா? எனக்கு மாமியார் கொடுமை செய்றது எப்படின்னே இவ்வளவு நாளா தெரியாது. ஆனா அப்படி செய்ய ஆசை. செல்லாவால் கொடுமை செய்ய நல்லா கத்துக்கிட்டேன்.." என்று பெருமையோடு சொன்னவள் "சீக்கிரம் அவளை சரியாக சொல்லுடா.. அவ என்னை இம்சை செஞ்ச மாதிரியே எனக்கு அவளை இம்சை செய்ய ஆசையா இருக்கு.." என்றாள்.


நெற்றியில் அடித்தபடி எழுந்து நின்றான் சூர்யா.


"நீங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டிங்க.. அமைதியா போய் வேலையை பாருங்க. நான் அவளை கூட்டிக்கிட்டு பெரியப்பா வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.." என்றான்.


ரெஸ்ட் ரூமில் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த செல்லாவை கண்டுவிட்டு "அம்மா.." என்று கத்தினான்.


பூங்கொடி ஓடி வந்தாள்.


"என்னடா.?" 


"இது என்ன டிரெஸ்ஸு.?" என்றான் செல்லாவை கை காட்டி.


நெஞ்சில் பாதிதான் மறைந்திருந்தது. தொடையில் எதுவுமே மறையவில்லை. 


"இவளுக்கு எதுக்கு இந்த குட்டி சைஸ் டிரெஸ்.?" எனக் கேட்டான் கோபத்தோடு.


"குழந்தைடா.." என்ற அம்மாவை முறைத்தவன் "ஆனா நான் குழந்தை இல்லையே. அம்மா நான் மனுசன். அதுவும் அவளை வெறித்தனமா லவ் பண்ற சாதாரண ஹீயூமன். அவ மனசுல கள்ளம் இல்லங்கறதுக்காக என் மனசுலயும் கள்ளம் வர கூடாதுன்னு எதிர் பார்ப்பது தப்பு.. எனக்கும் ஒரு லிமிட் இருக்கு. என் லிமிட்டுக்கும் கூட ஒரு லிமிட் இருக்கு.." என்றான்.


பூங்கொடி இருதலைக் கொள்ளி எறும்பானாள்.


"இந்த டிரெஸ்ஸை நீதான் வாங்கி வந்து வச்சிருந்த. அவ எடுத்து மாட்டிக்கிட்டா. நடுவுல ஏன்டா என்கிட்ட காயுற.?" பரிதாபமாக கேட்டாள்.


தலையை கீறிக் கொண்டான்.


"அவ நார்மலா இருக்கும்போது போடட்டுமேன்னு இதையெல்லாம் ஆசைப்பட்டு வாங்கிட்டு வந்து வச்சேன். அவ குணமாகும் வரை இதையெல்லாம் கண்ணுல காட்டாதிங்கம்மா.. இவளை கூட்டிப் போய் முழுசா கவர் பண்ற டிரெஸ்ஸா போட்டு கூட்டி வாங்க.." என்று கெஞ்சாக குறையாக சொன்னான்.


பூங்கொடி பரிதாபத்தோடு உச்சுக் கொட்டியபடியே செல்லாவை அங்கிருந்து கூட்டிப் போனாள்.


அவன் சொன்னது போலவே முழுதாய் மறைக்கும்படியான உடையை அணிவித்து அழைத்து வந்தாள். அந்த கேப்பில் நான்கு கப் ஐஸ்கிரீமை தின்று விட்டிருந்தாள் அவள்.


ஜேம்ஸின் வீட்டிற்குள் நுழைந்ததும் ஆன்டி என்று அழைத்தபடியே சென்று சல்மாவை கட்டிக் கொண்டாள் செல்லா.


"சிஸ்டர் இன் லாவை கூட ஆன்டின்னு கூப்பிடுறா உன் செல்லா.." புலம்பினான் ஜார்ஜ்.


"கொஞ்ச நாள்.. அப்புறம் சரியாகிடுவா.." என்று சூர்யா சொல்லிக் கொண்டிருந்த வேளையிலேயே அவனிடம் ஓடி வந்த செல்லா "அங்கிள் வாங்க நாம போய் ஊஞ்சல் ஆடலாம்.." என்று அவனை இழுத்துப் போனாள்.


தோட்டத்திலிருந்த ஊஞ்சலில் அவள் அமர்ந்து கொண்டதும் கை வலிக்க ஆட்டி விட்டான் சூர்யா.


"போதுமா?" பத்து நிமிடத்திற்கு ஒருமுறை இதையே கேட்டுக் கொண்டிருந்தான்.


"இன்னும்.." அவளும் இதை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள்.


"சார் பைல் கொண்டு வர சொன்னிங்களா.?" என்றபடி அவனின் ஊஞ்சலாட்டத்தை நிறுத்தினான் நிறுவனத்தில் இணை இயக்குனராய் பணிபுரியும்

ஷேர்கான்.


"ஆமாம் ப்ரோ.." என்றபடி பைலை வாங்கி பிரித்தான்.


"ஒரு அர்ஜென்ட் வொர்க். உங்களுக்கு தொந்தரவு தந்துட்டதுக்கு சாரி.." என்றவன் மறுகையால் ஊஞ்சலை ஆட்டி விட்டுக் கொண்டுதான் இருந்தான்.


ஷேர்கான் செல்லாவை ஏற்ற இறக்கமாக பார்த்தான். அவளின் பிரச்சனையை பற்றி அறிந்திருந்தான் அவனும். ஆனால் அவளின் இப்போதைய இயலாமையும், அவளின் வனப்பும் அவனுக்குள் வேறு வித ஆசைகளை தூண்டி விட்டது.


'தனியா கிடைக்கட்டும்..' என்று நினைத்தபடியே அங்கிருந்துப் போனான்.


"அங்கிள் போதும்.." 


"அப்பா.. அதிசயம் ஆனால் உண்மைங்கற மாதிரி அவளே போதும்ன்னு சொல்லிட்டா.." சட்டென்று ஊஞ்சலை நிறுத்தினான்.


கீழே இறங்கிய செல்லா அவசரமாக அந்த தோட்டத்தின் மூலைக்கு ஓடினாள். வாந்தி எடுத்தாள்.


"பத்து கப் ஐஸ்கிரீம் சாப்பிட்டு ஊஞ்சல் ஆடினா எந்த கொம்பனுக்கா இருந்தாலும் வாந்தி வரும்.." என்று தலையில் அடித்துக் கொண்டான் சூர்யா.


இவர்களை வேடிக்கை பார்த்து நின்றிருந்த அந்த வீட்டின் தாதி பெண் செல்லாவுக்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.


"சூர்யா அங்கிள் மயக்கம் வருது.‌."


அவள் மயங்கும் முன்பே கைகளில் அவளை தூக்கி‌ விட்டான்.


"நல்லா வாய்ச்ச எனக்குன்னு.." அவளை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான். தாதி பெண் தந்த தண்ணீரை அவளின் முகத்தில் தெளித்து குடிக்க செய்தான்.


ஐந்து நிமிடங்களுக்கு பிறகு எழுந்தவள் "பசிக்குது. ஐஸ்கிரீம் வேணும்.." என்றாள்.


சல்மா பயத்தோடு ஜார்ஜை பார்த்தாள்.


"நமக்கு பேபி வேணுமா டார்லிங்.?" எனக் கேட்டாள் பயத்தோடு.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. செல்லா குணமான பிறகு அவ தன் மாமியாரை இம்சை செய்வாளா? இல்ல பூங்கொடி மருமகளை இம்சை செய்வாளா? உங்களுக்கு ஏதாவது தோணுதா மக்களே?




Post a Comment

0 Comments