Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 70

 சல்மாவை புரியாமல் பார்த்த ஜார்ஜ் "ஏன் குழந்தை வேணுமான்னு கேட்கற?" எனக் கேட்டான்.


"இந்த பொண்ணுக்கு ஒன்பது வயது இப்ப. இவளே இவ்வளவு டார்ச்சர் பண்றான்னா நிஜமான குழந்தை எவ்வளவு டார்ச்சர் பண்ணுவா?" எனக் கேட்டாள் பயத்தோடு.


மானசீகமாக நெற்றியில் அடித்துக் கொண்ட ஜார்ஜ் 'இனி இவளை இங்கே கூட்டி வராதேன்னு சூர்யாகிட்ட சொல்லணும்..' என நினைத்தான்.


"பாப்பா மாசமா இருக்காளா?" என கேட்டபடி வந்தாள் ஜேம்ஸின் மனைவி ஏஞ்சலின்.


சூர்யா‌ தன் பெரியம்மாவை முறைத்துப் பார்த்தான்.


"அவளே பாப்பாவாதான் இருக்கா. இதுல அவளுக்கு பாப்பா இல்லாததுதான் குறையா?" 


"அப்படி இல்ல. என்ன இருந்தாலும் சின்ன சிறுசுங்க.. ஒரே இடத்துல வேற இருக்கிங்க.."


சூர்யாவுக்கு உண்மையிலேயே மனம் உடைந்துப் போனது‌. தன் இதயத்தின் தூய்மையை அவன் மட்டும்தான் அறிவான். காதல் எக்கச்சக்கமாக உண்டு. அத்தோடு ஆசையும் கலந்துதான் இருக்கிறது. அதற்காக குழந்தையின் குணமுள்ள ஒருத்தியிடம் எல்லை மீறி விடுவானா? பெரியம்மாவோடு இனி பேசவே கூடாது என்று சிறு குழந்தையாக மனம் யோசித்தது.


"சூர்யா அங்கிள் இந்த ஐஸ்கிரீமும் தீர்ந்து போச்சி.." என்று காலி பாக்ஸை இவனிடம் நீட்டினாள் செல்லா.


"ஆத்தா மகமாயி.. உன்னோடது வயிறா இல்ல ப்ளாக் ஹோல்லா? எத்தனை டப்பா ஐஸ்கிரீம்தான் காலியாகுமோ? நீ குணமாகும் முன்னாடி உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்தே நான் கடன்காரனாகிடுவேன் போல.. எழுந்து வா வீட்டுக்கு போகலாம்.." அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.


"ப்ரிட்ஜ்ல இன்னொரு ஐஸ்கிரீம் கூட.." பெரியம்மா முழுதாக சொல்லும் முன்பே திரும்பிப் பார்த்து முறைத்தான்.


"நோ.." என்றுவிட்டு நடந்தான்.


அலுவலகம் செல்லும் கணவனை கையசைத்து வழியனுப்பி வைத்தாள் சங்கவி. 


ஆதீரன் அந்த பக்கம் சென்ற பத்தாவது நிமிடத்தில் வந்துச் சேர்ந்தாள் காந்திமதி.


வாயிற் காப்போன் பெரிய முதலாளியம்மாவை மறிக்கும் அளவுக்கு தைரியம் இல்லாமல் விட்டு விட்டான். திறந்திருந்த கதவில் நுழைந்து வந்த மாமியாரை கண்டதும் சோபாவிலிருந்து அவசரமாக எழுந்து நின்றாள் சங்கவி.


"அ.. அத்தை.." தயங்கி அழைத்த மருமகளின் முன்னால் வந்து அமர்ந்தாள் காந்திமதி.


"வயித்து புள்ளைக்காரி.. உட்காரு.." என்று அவளின் கைப்பிடித்து அமர வைத்தாள்.


"நான் தப்பு மேல தப்பு பண்ணிட்டேன் சங்கவி. இல்லன்னு சொல்லல. உங்கக்காவுக்கு நான் செஞ்சது மாபெரும் துரோகம். உனக்கு செஞ்சதும் கொடுமைதான்.. புத்தியில்லாம போயிடுச்சி.." என்றவள் தான் ஏன் அப்படி செய்தேன் என்பதையும் அவளுக்கு விளக்கமாக சொன்னாள். 


தனக்கு கிடைக்காத காதல் மகனுக்கு கிடைக்க கூடாது என்று நினைத்திருக்க வேண்டாம்தான் இவள். தாயெனும் பதவியை தாண்டி மிகவும் நேர்மையாக உழைத்து விட்டது அவளின் மனம். அவளை தப்பு சொல்வது சரியென்று தோன்றவில்லை சங்கவிக்கு.


காதலித்த இருவரும் தங்களின் காதலின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இல்லையேல் அவள் ஓடி போகாமல் இதையே வேறுவிதமாக முயன்றிருக்கலாம். அவள் ஓடியதும் இவனும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணத்தை நடத்தியிருக்க கூடாது. அவளுக்காக காத்திருந்திருக்கலாம்.


தவறுகளை மன்னிக்கும் நிலையில்தான் இருந்தாள் சங்கவி. காந்திமதி கெஞ்சியதும் மனம் இளகி விட்டது.


"நான் மாமாகிட்ட பேசிட்டு உங்களுக்கு சொல்றேன் அத்தை.." என்றாள்.


கையெடுத்துக் கும்பிட்டாள் காந்திமதி.


"என் குலதெய்வம் நீ.." என்றபடியே அங்கிருந்து சென்றாள். தன் உள்ளங்காலை பார்த்தாள். தழும்பு இருந்தது. மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.


மனோகர் வீடு வந்து சேர்ந்தார். பணம் பாதாளத்தில் மட்டுமல்ல சட்டத்தின் அத்தனை மூலை முடுக்கிலும் பாயும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டது நீதி.


யஷ்வந்த் வீட்டை விட்டு போய் விட்டது ஜெயிலிலேயே அவருக்கு தெரியும். அவன் சென்றது பற்றிய தகவல் பத்திரிக்கையிலும் கொட்டை செய்தியாக வந்திருந்தது. யஷூ என்பது ப்ராண்ட் நேம். அவனின் விலகல் அவர்களின் தொழிலுக்கு பிரச்சனையை தந்து விட்டது. யஷூ நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த மற்ற நிறுவனங்கள் தங்களின் முதலீட்டை திருப்பிக் கொள்ளும் முயற்சியில் இருந்தன. மார்கெட்டிலும் யஷூ நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் விற்பனையாகாமல் தேங்க ஆரம்பித்தன.


யஷ்வந்தின் அண்ணன்கள் அவனை வீட்டிற்கு திரும்ப வர சொன்னார்கள்.


"பிசினஸ் முழுசா அழிஞ்சி போகணுமா?" என்று கூட கேட்டார்கள்.


"அது உங்க அப்பா தப்பு. நான் பிறந்த பிறகுதான் அவருக்கு பிசினஸில் லாபம் வந்துச்சி. அவர் அதுக்காக என் பெயரையே நிறுவனத்துக்கு வச்சிட்டாரு. என்னை கேட்டு என் பேரை வைக்கல. என்னை கேட்டு இந்த பேரையும் எனக்கு வைக்கல. அப்படி எனக்கு முக்கியத்துவம் இருக்குன்னு நினைச்சிருந்தா என் சந்தோசத்தை அழிக்க பார்த்திருக்க கூடாது. செல்லா என் பிரெண்ட். இன்னைக்கு நான் உயிரோடு இருக்க காரணம் அவ. ஆனா அவளை கொல்ல நினைச்சிருக்காரு. அப்புறம் என் மனைவி. என்னை நம்பி வந்தா அவ. அவளை மேரேஜ் பண்ண நாளிலேயே அவர்கிட்ட தெளிவா சொல்லியிருந்தேன், என் பொண்டாட்டிக்கு எதுவுமே ஆக கூடாதுன்னு! என் பேச்சை கேட்கல. இதுக்கு மேல நான் ஏன் அவர் உருவாக்கின பிசினஸ்க்காக பாவம் பார்க்கணும்? அவர் அடிச்சிக்கிட்டே இருப்பாரு. நான் முட்டாள் போல அடி வாங்கிக்கிட்டு இருப்பேனா?" எனக் கேட்டவன் கடைசி வரையிலுமே வீடு வருவதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.


மனோகருக்கு தங்கை மீதும், மகன் மீதும் கொலைவெறியே வந்தது. இருவருக்கும் சேதத்தை உண்டாக்க வேண்டும் என்று மனதுக்குள் திட்டம் தீட்டினார்.


இரவு வீடு வந்த கணவனுக்கு உணவை பரிமாறிய சங்கவி "இன்னைக்கு அத்தை வீட்டுக்கு வந்தாங்க.." என்றாள்.


கடுப்போடு பற்களை அரைத்தவன் அவளை இழுத்து தன் மடி மீது அமர வைத்தான். உணவை பிசைந்து அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.


"அவங்க பாவம் மாமா.." 


"அப்ப நான் பாவம் இல்லையா? நான் அவளை எவ்வளவு விரும்பினேன் தெரியுமா? கடைசியில் என் செய்கையாலேயே அவளை சாக வச்சிட்டாங்க. என்னால முடிய மாட்டேங்குது சங்கவி. எத்தனை கனவுகளோடு கல்யாணத்துக்கு தயாராகி இருப்பா? என்கிட்ட இருந்து அவளை பிரிச்சதுக்கு பதிலா அவங்க எனக்கு கூட விஷம் தந்திருக்கலாம்.." என்றவன் உணவின் ஓரத்திலிருந்த உருளை கிழங்கை அவளுக்கு ஊட்டி விட்டான்.


அவன் சொன்னதை கேட்ட பிறகு உணவு தொண்டைக்கு கீழே செல்ல மறுத்தது. இறந்தவளின் மீது பொறாமை இல்லை. ஆனால் தன் கணவன் தன்னை விட அவளை அதிகம் விரும்புகிறான் என்று விசயம் அவளுக்கு மன கலக்கத்தை தந்தது. 


அவன் ஊட்டிய உணவுகளை சிரமப்பட்டு உண்டு முடித்தாள்.


இரவில் அவனை விட்டு ஒதுங்கி படுத்துக் கொண்டாள். தன் மனதின் ஏக்கத்தை சொன்னால் பைத்தியம் என்று திட்டுவான். எதற்கு வம்பு என நினைத்தாள். ஆனால் உறங்க வந்தவன் ஓரத்தில் இருந்தவளை அள்ளி தூக்கினான்.


"மாமா.." பயத்தோடு அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள்.


"என்னாச்சின்னு இப்படி ஓரத்துல வந்து படுத்திருக்க.?" என கேட்டவன் கட்டிலின் நடுவில் அவளை அமர வைத்தான். தனது சட்டையை கழட்டி தூர எறிந்தான். பனியனோடு இருந்தவனை கண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். ஹார்மோன்ஸ் சில உயிர் பெற ஆரம்பித்திருந்தன. மருத்துவர் அதே பத்து நாள் கணக்கு சொல்லி தள்ளியிருக்க சொல்லியிருந்தார். இந்த முறை தானே விரும்பினாலும் கூட இவன் எதற்கும் இசைய மாட்டான் என்று அவளுக்கே தெளிவாக தெரியும்.


யோசனையில் இருந்தவளின் தோளோடு அணைத்தபடி தலையணையில் விழுந்தான்.


"என்ன யோசனை.?" அவளின் காதோரத்தில் வருடியபடி கேட்டான். 


அவன் பயன்படுத்தும் பெர்ப்யூமோடு கலந்து வந்த அவனின் வாசம் அவளை வேறு எங்கோ அழைக்க ஆரம்பித்திருந்தது.


"அத்தையையும் மாமாவையும் நம்ம கூட கூட்டிக்கலாமா?" பயத்தோடுதான் கேட்டாள்.


"ஏன் நான் உனக்கு என்ன குறை வச்சேன்.?" எனக் கேட்டவன் யோசனையோடு நகத்தை கடித்தான். பிறகு அவளை பார்த்தான். அவளின் கழுத்தில் கையை பதித்து இரு விரல்களால் தாடையில் நடை போட்டான்.


அவனின் கையை தட்டி விட்டவள் "ஒரு குறையும் இல்ல.. டச் பண்ணாதிங்க.." என்றாள்.


"அப்ப ஓகே.." தோள்களை குலுக்கியவனின் பனியனை பிடித்தபடி அவனின் முகத்தை பார்த்தவள் "எனக்கென்னவோ அத்தை திருந்திட்டாங்களோன்னு தோணுது மாமா. அவங்களை ஏத்தக்கலாம். அக்காவும் இல்ல. அம்மாவும் இல்ல. எனக்கு லோன்லியா பீல் ஆகுது.." என்றாள்.


"உன் பெரியம்மாவை வர சொல்லட்டா.?" என்றவனை கனல் விழிகளோடு முறைத்தவள் "நீங்க திட்டிய திட்டுல போனவங்க இனி சும்மா கூட இந்த ஏரியா பக்கம் வர மாட்டாங்க.." என்று திட்டினாள்.


"ஓ.. சரி நான் யோசிக்கிறேன். உனக்காக மட்டும்.." அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.


நடு இரவில் தனது கால்சட்டை நனையவும் தூக்கம் கலைந்து கண்களை விழித்தான் ஆதீரன். 


"மாமா.." கண்களை மூடியிருந்த சங்கவி பற்களை கடித்தபடி வலியோடு துடித்துக் கொண்டிருந்தாள்.


பதறி எழுந்தவன் விளக்கின் ஸ்விட்சை தட்டினான். படுக்கையில் தண்ணீரும் ரத்தமும் கலந்து பரவியிருந்தது. 


"மாமா வயிறு வலிக்குது.." 


அவளின் கன்னத்தை அள்ளியவன் "ஹாஸ்பிட்டல் போகலாம் சங்கவி. ஒன்னும் ஆகாது. பயப்படாதே.." என்றான். இதற்கு மேல் மருத்துவமனைக்கு போனாலும் பயனில்லை என்று அவனுக்கே புரிந்துதான் இருந்தது. அவளுக்காக அந்த சமாதான வார்த்தைகளை சொன்னான்.


"ரொம்ப அசதியா இருக்கு மாமா.." அப்படியே மயங்கி விட்டாள். தலையணையில் விழ இருந்தவளின் கன்னங்களை மெதுவாக விட்டான். அவளின் பின்னந்தலை தலையணையை தொட்டது. 


மூச்சு விட மறந்திருந்திருந்தவனின் விழிகள்தான் முதலில் சூழ்நிலையை உணர்ந்தது போலும். அவன் விழிகள் சிந்திய கண்ணீர் அவளின் நெற்றியில் விழுந்தது.


சங்கவி மறுநாள் காலையில்தான் கண் விழித்தாள். மருத்துவமனை படுக்கையில் இருந்தவள் விசயம் புரிந்து விம்மினாள்.


"வாயை மூடு.." ஆதீரனின் மிரட்டலில் பதறி திரும்பினாள். அவளருகே நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான். விடிய விடிய உறங்காத கண்கள் சிவந்து போயிருந்தன.


உதட்டை கடித்தபடி அழுகையை அடக்கியவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை. 


மருத்துவர் ரேகா அறைக்குள் வந்தாள். சங்கவியின் தலையை தொட்டுப் பார்த்தாள்.


"ஸ்ட்ரெஸ்ம்மா. ஸ்ட்ரெஸ்னாலதான் அபார்ஷன் ஆகியிருக்கு.." என்றாள் ரேகா.


கையை முறுக்கியபடி அமர்ந்திருந்த ஆதீரனுக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆத்திரத்தில் யாரையாவது அடித்து கொல்ல வேண்டும் போலிருந்தது. 


அக்கறையாய்தான் கவனித்துக் கொண்டிருந்தான். அப்புறம் எப்படி மன அழுத்தம்.? ஒன்றும் புரியவில்லை. அக்காவின் நினைவில் உடல் வாடுகிறாளோ? தனது காதல் போதவில்லையோ? குழப்பியது அவனுக்கு.


"அழாம இரும்மா. கவலைப்படாம இரு. எல்லாம் சரியாகிடும்.." என்ற ரேகா "நீங்க கொஞ்சம் வாங்க சார்.." என்று அழைத்தாள்.


தன் முன் வந்து அமர்ந்தவனை யோசனையோடு பார்த்தாள் ரேகா.


"நாலஞ்சி மாசம் கூட முழுசா ஆகல. அதுக்குள்ள மறுபடியும் பிரகனென்ட். மறுபடியும் அபார்ஷன். அபார்ஷன் ஆன உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கணும்ன்னு கூட தோணலையா உங்களுக்கு? மிருகத்தை விட மோசமா இருக்கு உங்க செயல்.. இதை நான் பிரகனென்ஸி கன்பார்ம் டெஸ்டுக்கு வந்த அன்னைக்கே அந்த பொண்ணுகிட்ட சொன்னேன். ஆனா ஐயம் ஓகே டாக்டர்ன்னு என்கிட்ட சொல்லிட்டா. அந்த பொண்ணோட கருப்பை கூட நார்மலுக்கு வந்திருக்காது. இப்ப இன்னும் மோசமாகியிருக்கு.. தயவு செஞ்சி இனியாவது அந்த பொண்ணோட உடம்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க.. மறுபடியும் இதே மாதிரி ஏதாவது ஆனா அப்புறம் ரொம்ப மோசமாகிடும். அந்த பொண்ணு அம்மாவாக சான்ஸே இல்லாம கூட போயிடும். ஏன் அந்த பொண்ணு இறந்து போகவும் கூட சான்ஸ் இருக்கு." என்றாள்.


ஆதீரன் வாயே திறக்கவில்லை. திறக்க தோன்றவுமில்லை.


"இந்த டிஸ்கிரிப்சன் படி மாத்திரை மருந்தை கொடுங்க.." என்று பேப்பரை தந்து அனுப்பி வைத்தாள்.


வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.


சத்தமின்றி அழுதுக் கொண்டிருந்த மனைவியை ஹால் சோபாவில் அமர வைத்தான் ஆதீரன். 


"சுடு தண்ணீர் கொண்டு வாங்க.." இவனின் குரலில் தண்ணீர் கொண்டு வந்தாள் சமையல்காரி.


தண்ணீரை வாங்கிக் கொண்டவன் "நீங்க போங்க‌.." என்று அனுப்பி வைத்தான்.


மாத்திரைகளை பிரித்து இவளிடம் நீட்டினான்.


"நா.. நான் இன்னும் சாப்பாடு சாப்பிடல மாமா. மாத்திரை போட்டுக்க கூடாது.." 


பற்களை கடித்தபடி கையை இறுக்கினான். கண்ணாடி டம்ளர் நொடியில் நொறுங்கி விட்டது.


"ஐயோ மாமா.." பதறியவளின் தாடையை இடது கையால் பற்றினான். இறுகியது அவனின் கரம். வலித்தது அவளுக்கு.


அவனின் திடீர் செய்கைகளில் பயந்தே போய் விட்டாள். 


"இது மட்டும் தெரியுதா? ஆனா மீதி எதுவும் தெரியலதானே.." அவனின் கோபம் அவளுக்கு புரியவில்லை.


"நான் உன்கிட்ட குழந்தை கேட்டேனா.? அபார்ஷன் ஆகியிருக்கு. எதுவும் வேணாம் சங்கவின்னு சொன்னேனா இல்லையா?" அதட்டிக் கேட்டான்.


கண்ணீரோடு ஆமென்று தலையசைத்தாள். 


இவள்தான் அடம்பிடித்திருந்தாள். குழந்தை வேண்டும் வேண்டுமென்று.‌ விலகி போனவனை வலுக்கட்டாயப்படுத்தி இணங்க வைத்திருந்தாள். அப்போதும் கூட கூடல் போதும் குழந்தை வேண்டாமென்று பாதுகாப்பு தேடியவனிடம் கூடாது என மறுத்து  கட்டாயப்படுத்தியிருந்தாள். 


அவளின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் சொல்லி விடவும் உடைந்து போய் விட்டிருந்தான். அவளின் மீதிருந்த கோபத்தை இப்போது அவள் மீதேதான் காட்டினான்.


"கையில் ரத்தம் வருது மாமா.. நாம அப்புறம் பேசிக்கலாம்.." அழுதவளிடம் இடம் வலமாக தலையசைத்தான்.


"அழாதே.. உனக்கு என்னை விட குழந்தை முக்கியம். உன்னை விடவும் குழந்தை முக்கியம். அப்படிதானே?" 


"மாமா.." 


"பேசாதடி.." என்றவன் அவளின் முகத்தை தள்ளி விட்டுவிட்டு விலகி அமர்ந்தான்.


அப்போதாவது வருண் இருந்தான், இவனின் கிறுக்குதனங்களின் போது உதவி புரிய. இப்போது என்ன செய்வாள் இவள்.? பயத்தில் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிருந்தது. 


ஆசைதான். பேராசைதான். இல்லையென்று சொல்லவில்லை அவளும். இப்படி நடக்குமென்று அவள் மட்டும் கனவா கண்டாள்?


ஆதீரன் இடது கையால் நெற்றியை பிடித்தபடி அவளுக்கு நேராக அமர்ந்திருந்தான். பயத்தோடு தடுமாறி எழுந்தாள். அவன் தன் சொந்த சிந்தனையில் இருந்தான். தூரமாக வந்தவள் போனை எடுத்தாள்.


அரை மணி நேரம் கடந்திருந்தது.


காத்தவராயன் உள்ளே ஓடி வந்தார்.‌ மகனின் கையை கண்டுவிட்டு அதிர்ந்தவர் "பைத்தியம் பிடிச்சிருக்காடா உனக்கு?" எனக் கேட்டபடி அவனின் கையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.


அவரோடு வந்திருந்த காந்திமதி தூரத்தில் நின்றபடி மகனை கவலையோடு பார்த்தாள்.


அவனை மருத்துவமனை அழைத்துச் சென்று கைக்கு கட்டுப் போட்டு அழைத்து வந்தார் காத்தவராயன்.


கட்டுப் போட்டுக் கொண்டு வந்தவன் நேராக மனைவியின் முன்னால்தான் வந்து நின்றான்.


"நீ எனக்கு வேணும் சங்கவி. இந்த மண்டையில் இதை நல்லா ஏத்தி வச்சிக்கோ. நீ என்னை விட்டு எந்த வழியிலும் பிரிய முடியாது. மரணத்தை காரணம் காட்டி கூட நீ என்கிட்ட இருந்து போக முடியாது.. நானா உனக்கு சொல்லும் வரை உனக்கு குழந்தை கிடையாது. புரிஞ்சதா?" அதட்டினான்.


சரியென்று தலையசைத்தவள் அவனின் இந்த மிரட்டலை எப்படி முறியடிப்பது என்று யோசித்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே.. அடுத்த எபி‌க்கு வெயிட் பண்ற நட்புக்கள் கமெண்ட் பண்ணுங்க.. 



Post a Comment

0 Comments