Advertisement

Responsive Advertisement

அன்பே அறிவாயா


 அன்பே அறிவாயா.?


தட்டறுத்த காட்டிற்குள் தானியவெள்ளாமை முடிந்தும் தடமழியாமல் காய்ந்திருக்கும்  ஏர்காலின் அச்சு போல் என் இதயத்து ஜீவனுக்குள் இன்னோர் உயிரென கலந்து மறைந்திருக்கிறது உன்நினைவு!

தென்மேற்கு பருவக்காற்றில் பதறியோடிக் கொண்டிருக்கும் மக்காச்சோள கதிரின் மகரந்த வாசமாய் உன்னருகாமை நிழலில் சிதறியோடி கொண்டிருக்கிறது கைப்பிடிக்குள் சிக்காத என் சிறுஇதயம்!

உன் சின்னஞ்சிறு சிரிப்பொலியின்யூடே சில்லுசில்லாய் உடைந்தொடிந்துக் கொண்டிருக்கிறது வார்த்தைகளை சுமந்து களைத்த என் மௌனங்கள்!

பஞ்சாமிர்த கனியும் பாலில் கலந்த தேனும் கசப்பென்று நம்பவைக்கும் என் முட்டாள் மூளை உன்னை உலக அதிசயத்தில் ஒன்றென கூறி என்னை பைத்தியமாக்கி கொல்கிறது!

தேவனவன் இல்லை தெய்வமேதும் இல்லையென நான் கசந்து நின்ற வேளையில் காதற்கடவுளே இவன்தான் என கூக்குரலிட்டது என் மனவானில் சிறகடித்து மரணவாயிலை நோக்கி பறந்துக் கொண்டிருந்த குருட்டு குயிலொன்று!

அழியாத காதற்கோட்டையில் உன் அழகுஉருவை சிலை வடிக்க எண்ணி என்னுள் அழிந்து மறைந்துக் கொண்டிருந்த என் அறிவின் கடைசி இழையில் எழுதி வைத்திருக்கிறேன் உன் கைரேகைகளை எண்ணிய கணக்கை!

தேனா பெண்ணிவளின் பூவா நாயகனே என் ஆசை செடியிற் உள்ள வேர்களின் உயிர் உன் பாத விரல்களினோரம் உள்ள ரகசியம் அறியாயோ?

நான் காணா கனவின் கருப்பொருள் கண்ட கள்வனே பெண்ணிவள் என்னுள் உன்னுயிர் உறைந்ததை என்றுமே அறியாயோ?

உடலோடும் நரம்புகளில் ஒன்று உன்நினைவில் உயிர்வதையென என்னை தொல்லை செய்துக் கொண்டிருக்கிறது! எத்தனை முறை சோதித்தும் பிடிபடவில்லை அடங்க மறுத்த அப்பிடாரி நரம்பு!

எழுதும் விரல்களை முடமாக்குகிறது! நடமாடும் கால்களை பின்னுக்கிழுக்கிறது! பார்வையில் தடுமாற்றத்தை தருகிறது! படுக்கையில் வீழும் பொழுதெல்லாம் பதறியெழ வைக்கிறது! கேட்கும் ஓசைகளாவும் உன் குரலேயென நம்ப வைக்கிறது!

அந்நரம்பை வெற்றிக்கொள்ள இயலாமல் நீ கை நனைத்த தூறல்களை தேடி நதியோர நாணலோடு கலந்து நாணம் மறந்து நிற்கிறேன்!

உன் சுவாச காற்றை கையில் பிடிக்கயெண்ணி ஊரோர கருவேல மரத்தோடு சேர்ந்து நானும் ஒரு மரமாய் நிற்கிறேன்!

மண்ணில் வீழ்ந்த உன் வியர்வை துளியை புழுதியிலிருந்து பிரித்தெடுத்து தரும் புயலுக்கு நன்றி கூறுகிறேன்!

உன் பாத சுவட்டின் மீது என் கைவிரல்களை தவிர வேறு பட்டுவிடக் கூடாதென மொத்த பூமியையும் சுருட்ட நினைக்கின்றேன்!

என்றோ நீ வீசி சென்ற பார்வையை இன்றும் என் விழிகளின் ஓரம் பசுமருதாணியாய் பதிய வைத்திருக்கிறேன்!

என்னுடலோடும் நரம்புகள் அனைத்தும் உன் நினைவை சுமந்தோட தன் இரத்தம் இறைக்கும் பணி மறந்து உன் சுவாச காற்றை சிறைப்பிடித்து வைத்திருக்கிறது என்னிதயம்!

உனக்கு சந்தேகமெனில் என் செவிப்பறையை சோதித்து பார்...அங்கே இன்னும் உன் குரல் மட்டுமே எதிரொலித்து கிடப்பதை நீயே அறிவாய்!

Post a Comment

2 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான வரிகள்
    கவி நயம் சிறப்பு

    ReplyDelete