Advertisement

Responsive Advertisement

அத்தியாயம் 112

 "எதுக்காக என்னை அரெஸ்ட் பண்றிங்க.?" விலங்கிடப்பட்ட கைகளை பார்த்தபடி கேட்டான் ஆதீரன்.


"உங்க மனைவியை வன்கொடுமை செஞ்சிருக்கிங்க.. வயித்துல இருக்கும் குழந்தை கலையும் அளவுக்கு அடிச்சி கொடுமை பண்ணி இருக்கிங்க.." சக்தியின் விளக்கம் கேட்டு கசந்து சிரித்தான் ஆதீரன்.


"ஏங்க நம்ம புள்ளை.." காந்திமதி கணவனின் தோளில் கீறினாள். ஆனால் அவரோ நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.


கோபத்தின் மொத்த உருவமாக நின்றிருந்த குந்தவியை பார்த்தான் ஆதீரன். "நல்லா செய்றடி எ.." மீதியை சொல்லும் முன் ஒரு அறையை விட்டாள் குந்தவி. 


"என்னை டி போட உனக்கு எந்த உரிமையும் கிடையாது.. நீ என்னை நம்பாம போன அந்த செகண்டே உனக்கான எல்லா உரிமையும் போயிடுச்சி.." பற்களை அரைத்தபடி சொன்னாள்.


"மேடம் நாங்க பார்த்துக்கறோம்.." என்று குந்தவியை பின்னால் நகர்த்தி நிறுத்தினாள் சக்தி.


"என் தங்கச்சியை எவ்வளவுதான் சித்திரவதை செய்வ நீ.? ச்சை.. அஞ்சி வருசம் உனக்கு அடிமையா கிடந்தாளே.. உனக்கு இன்னமுமா இரக்கம் வரல.?" 


ஆதீரன் விழிகளை மூடினான். 'நான் உண்மையாவே சித்திரவதை செஞ்ச நேரத்துலயெல்லாம் சூர்யா கூட டாவடிச்சிட்டு இருந்துட்டு,  இன்னைக்கு நானும் அவளும் காதலோடு வாழும்போது பழி வாங்கறேன்னு வந்து தொலைஞ்சிருக்கா.. கருமம்..' அதற்கு மேல் திட்டுவதற்கு அவனுக்கே தோன்றவில்லை.


ஆதீரனை அழைத்துக் கொண்டு நடந்தாள் சக்தி. "என் வொய்ப்பை பார்த்துட்டு வந்துடுறேன் மேடம்.." என்றான் கெஞ்சலை மறைத்துக் கொண்டு. ஆனாலும் அவனின் குரலிலிருந்த கெஞ்சல் தெளிவாகவே தெரிந்தது.


"என் தங்கச்சியோட நிழலை கூட நீ நெருங்க முடியாது.." குந்தவி நின்ற இடத்திலிருந்து சொன்னாள். 


திரும்பிப் பார்த்து முறைத்தவன் "என்னை பழையபடி ஆட வைக்க டிரை பண்ற.. ஆட ஆரம்பிச்சேன்னா தாங்குவியான்னுதான் தெரியல.." என்றுவிட்டு நடந்தான்.


"என் புள்ளையை போலிஸ் பிடிச்சிட்டு போகுது. நீங்க சிலை போல நிக்கிறிங்க.." காந்திமதி கணவனை உலுக்கினாள்.


"நீ தனியா இருந்திருந்தா என்ன செஞ்சிருப்ப.?" இருக்கை ஒன்றில் அமர்ந்து பொறுமையாகவே கேட்டார்.


"வக்கீலை கூட்டிட்டு போலிஸ் ஸ்டேஷன் போயிருப்பேன்.."


"ஆனா நான் போக மாட்டேன்.."


"ஏன்.?" அதிர்ச்சியோடுக் கேட்டாள்.


மனைவியின் முகம் பார்த்தவர் "உன் மகனை பொய் கேஸ்ல பிடிச்சிட்டு போயிருக்காங்க.. கேஸ் பொய்ன்னு தெரிஞ்சதும் விட்டுட போறாங்க.." என்றார்.


விழிகள் விரிந்தது அவளுக்கு. அவளின் கண்ணிலிருந்த கண்ணாடியை கழட்டினார். தன் பாக்கெட்டிலிருந்த கண்ணாடிக்கான பெட்டியில் கண்ணாடியை வைத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். 


"இந்த சீட்ல சாஞ்சி தூங்கு.. இல்லன்னு போய் கார்ல படுத்துத் தூங்கு.." என்றார் கொட்டாவி விட்டபடியே.


"யோவ்.. நீயென்னய்யா கொஞ்சம் கூட வெசனமே இல்லாம இருக்க.? பொய் கேஸ்ன்னா என் புள்ளையை இப்பவே காப்பாத்த வேண்டியதுதானே.? அந்த இன்ஸ்பெக்டருக்கு வேற என் பையன் மேல ஏற்கனவே கண்ணு. இன்னைக்கு விடிய விடிய வச்சி பொளக்க போறாங்க.." என்றாள் கவலையோடு.


"நாலு அடிதான் வாங்கட்டுமே.." என்றவர் தூரத்தில் நின்றிருந்த குந்தவியை பார்த்துவிட்டு "அந்த நாலு அடியாவது அவளோட மனசுல இருக்கும் கோபத்தை குறைக்குதான்னு பார்க்கலாம்.." என்றார்.


காந்திமதிக்கு ஒத்து வரவில்லை. "இல்ல.. எனக்கு என் புள்ளை இப்பவே வெளியே வரணும்.." என்றாள் அவரின் தோளில் மாறி மாறி குத்திவிட்டு.


"அடச்சீ.. கொஞ்சம் நேரம் சும்மா இருடி.. மருமக புள்ளை கண்ணை திறந்து உண்மையை சொன்னதும் அவனை வெளியே விட்டுட போறாங்க. இந்த அரை நாள்ல உன் பையன் ஏழடி குறைஞ்சிடுவானா என்ன.? அப்படி குறையறதா இருந்தா குறைஞ்சிதான் போகட்டுமே விடு.." என்றவர் கைகள் இரண்டையும் கழுத்தின் பின்னால் கட்டிக் கொண்டு கண்களை மூடி சாய்ந்தார்.


'ஆமா இல்ல.. சங்கவி எழுந்துட்டா ஆதி வெளியே வந்துடுவானே!' தாமதமாக புரிந்துக் கொண்டவள் எழுந்தாள். குந்தவியின் அருகே சென்றாள்.


ஐ.சி.யூவின் வாசலில் கையை கட்டியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்த குந்தவி வந்து நின்ற காந்திமதியை கண்டதும் கண்களை உருட்டினாள். அனைத்திற்கும் ஆரம்ப கர்த்தா இவள்தானே. இவளை அப்படியே புதைக்க தோன்றியது.


"நல்லா இருக்கியாம்மா.?" தயங்கி தயங்கி கேட்டாள்.


"ஏன் நல்லா இருந்தா எப்படி நாசம் பண்றதுன்னு யோசிக்கணுமா.?" வெடுக்கென்றுக் கேட்டாள்.


நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்ட காந்திமதி "அன்னைக்கு நான் செஞ்சதெல்லாம் தப்புதான்ம்மா.. புத்தி கெட்டுப்போய் அப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு. என் பையன் மேல எந்த தப்பும் இல்ல. அவனை விட்டுடும்மா.." என்றாள் இறைஞ்சுதலாக.


குந்தவி அவளை கீழிருந்து மேலாக பார்த்தாள். ஐந்து வருடத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை. புதிதாக ஒரு தாலியும், நெற்றியில் குங்குமமும் இருந்தது. கணவனையே பல வருடங்களாக ஒதுக்கி வைத்திருந்தாள் இந்த காந்திமதி என்று பவளம் சொல்லி இருந்தாள். அதை வைத்து விசயத்தை யூகித்துக் கொண்டவளுக்கு காத்தவராயன் மீது எந்த கோபமும் வரவில்லை. 


"அஞ்சி வருசம் முன்னாடி உங்ககிட்ட நானும்தான் கெஞ்சினேன், என் தங்கச்சியை விட்டுடுங்கன்னு.. நீங்க என் தங்கச்சிக்கு துப்பாக்கியால குறி வச்சிங்க.. நான் அவளை காப்பாத்தா ஓடி போனா, உங்க பையன் என் தங்கச்சிக்கு கட்டாய தாலி கட்டுறான். என்னை பார்த்தா அரை வேக்காடு மாதிரி தெரிஞ்சதா உங்களுக்கு.? உங்களையும் உங்க பையனையும் அன்னைக்கு என்னால எதுவும் செய்ய முடியல. தோத்து போயிட்டேனேன்னு தினமும் மனசுக்குள்ள எவ்வளவு அழுதேன்னு உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு ஈக்வெல்லா மாறி உங்களை பழி வாங்க முடியும்ன்னா, என் தங்கச்சி வாழ்க்கையை அஞ்சி வருசம் கழிச்சாவது காப்பாத்த முடியும்ன்னா அதை நான் ஏன் செய்ய கூடாது.?" பொறுமையான குரலிலேயே கேட்டாள். அந்த பொறுமைக்கு பின்னால் இருக்கும் வஞ்சம் காந்திமதிக்கும் புரிந்துதான் இருந்தது.


"அதெல்லாம் அப்ப நடந்ததும்மா.. இப்ப நான் சங்கவியை என் பொண்ணு மாதிரி நினைச்சி பார்த்துட்டு இருக்கேன். அவ மேல தூசிக் கூட படாத மாதிரி.."


"என் தங்கச்சி காலுல ஒரு சூடு இருந்தது.." கூரையை பார்த்தபடி சொன்னாள் குந்தவி. இமைகள் தாண்டி வழிந்தது இரு கோடுகள்‌.


காந்திமதி எச்சில் விழுங்கினாள்.


"இல்லாதவன் வீட்டு பொண்ணுன்னா என்ன வேணாலும் செய்விங்களா.? அஞ்சி வருசத்துல எட்டு அபார்ஷன்.. என் தங்கச்சிக்கு இரண்டு மூனு வருசம் ஓய்வு தரணும்ன்னு கூட தோணலையா உங்க மகனுக்கு.? மக மாதிரி பார்த்துக்கற மாமியார் சொல்லி இருக்கலாமே, அடிக்கடி அபார்ஷன் ஆகுது, கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் தள்ளி போடலாம்ன்னு.." வலியோடு கேட்டாள்.


"நாங்க ஆயிரம் முறை சொல்லியாச்சி. உன் தங்கச்சிதான் இப்பவே குழந்தை வேணும்ன்னு ஒத்தை கால்ல நின்னா.." காந்திமதி சொன்னதை இவள் எங்கே ஏற்க போகிறாள்.? 


"குழந்தை இல்லன்னு டார்ச்சர் பண்ணா அவ மட்டும் வேற என்ன செய்வா.?" 


தடுமாறியவள் "நீ நினைக்கிற மாதிரி இல்ல குந்தவி.. அப்ப வேணா நான் டெரரா இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் டம்மி பீஸு.. இந்த ஆள் என்னை டம்மி பீஸா மாத்தி வச்சிட்டாரு. உனக்கு ஈக்வெல் நான் கிடையாது. அதனால என்னையும் என் புள்ளையையும் விட்டுடும்மா.." என்றாள்.


குந்தவி அவளை ஒருமாதிரியாக பார்த்தாள்.


"தூர போங்க.." என்றவள் அறையிலிருந்து வந்த செவிலியையை விசாரிக்க சென்றாள்.


காந்திமதி தன் கணவனின் அருகே வந்து அமர்ந்தாள். 


ஆதீரன் விடிய விடிய சிறையினில் அமர்ந்திருந்தான். சக்தி அவனை இன்னும் விசாரிக்கவில்லை. காலையில் விசாரித்துக் கொள்ளலாம் என நினைத்து அவனை சிறையில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு உறங்க சென்று விட்டாள்.


ஆதீரன் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான். சங்கவி என்ன செய்துக் கொண்டிருப்பாளோ என்று ஒரே யோசனையாக இருந்தது.


கொசுக்கள் கடித்தன. அடிக்க தோன்றாமல் நினைவுகளுக்குள் மூழ்கிப் போயிருந்தான். அவள் சொல்ல வருவதை அப்போதே காது கொடுத்து கேட்டிருந்தால் இப்போது இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்காது. தனது பொறுமையின்மையை அடியோடு வெறுத்தான். அதே சமயம் இது இரக்கத்தின் அடிப்படையில் உண்டான காதல் என்பதையும் அவனால் மறக்க முடியாது. 


'நீ பண்ணதுக்கு அவ காதலிச்சதே பெரிய விசயம். இதுல இரக்கம் வந்துடுச்சின்னு சண்டை போட்டிருக்க..' தன்னைதானே திட்டிக் கொள்வதை தவிர வேறு வழியே தெரியவில்லை அவனுக்கு.


***


காலை பொழுதை பார்த்தபடி ஜன்னல் அருகே நின்றிருந்தாள் குந்தவி. 


"அ..அக்கா.." சங்கவியின் அழைப்பில் திரும்பினாள். வேகமாக படுக்கையின் அருகே வந்தாள்.


"சங்கவி.." அவளின் தலையை வருடினாள். நெற்றி நெருப்பாக சுட்டது.


சங்கவிக்கு பாரமாக இருந்தன இமைகள் இரண்டும்.


"அக்கா.." தயங்கியவள் இடது கையால் வயிற்றை தடவினாள்.


நேற்றைய இரவில் பட்ட வேதனையும் வலியும் நினைவில் அப்படியே இருந்தது.


"நிஜமாவே இந்த குழந்தையும்.." 


தங்கையின் கண்ணீரை துடைத்தாள் குந்தவி. "அழாத சங்கவி.." என்றாள். ஆனால் அவளின் விழிகளில் இருந்து கொட்டியது கண்ணீர்.


சங்கவி மௌனமாக கண்ணீர் வடித்தாள். 


"நான் செஞ்ச பாவம்.. உன்னை இப்படி பழி வாங்குது.. சாரி சங்கவி.." என்றாள்.


அப்படியே நேரம் கடந்தது. காத்தவராயனையும், காந்திமதியையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவே இல்லை குந்தவி. 


சங்கவி நினைவின் அலைகளில் மூழ்கிப் போய் விட்டிருந்தாள். இத்தோடு ஒன்பதாவது முறை. ஒவ்வொரு முறையும் கை சேர்ந்து மடி சேராமல் போன பொக்கிஷங்களை பற்றி நினைத்தாள். காரணங்கள், கர்மாக்கள் என்று அனைத்தை பற்றியும் யோசித்தாள்.


"ஒரு அஞ்சி நிமிசம்.." பத்து மணியளவில் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள் இன்ஸ்பெக்டர் சக்தி.


"உங்ககிட்ட விசாரிக்க வந்திருக்கேன்.."


சங்கவி புரியாமல் அக்காவை பார்த்தாள்.


"உண்மையை சொல்லு சங்கவி. அவனுக்கு ஜெயில்லயே சமாதி கட்டுறேன் நான்.." என்றாள் குந்தவி. சக்தி அவளை அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு சங்கவியின் புறம் திரும்பினாள்.


மிடறு விழுங்கிய சங்கவி "என்ன உண்மை.?" எனக் கேட்டாள்.


"உங்க கணவர் உங்களுக்கு வன்கொடுமை செஞ்சதா உங்க அக்கா புகார் தந்திருக்காங்க.. உங்க அபார்ஷனுக்கு காரணம் உங்க புருசன்னு சொல்லி இருக்காங்க.. நீங்க வாக்குமூலம் தந்தா நாங்க ஆக்சன் எடுப்போம்.." என்றாள்.


"என் புருசன் மேல எந்த தப்பும் இல்ல.." மெதுவாக சொன்னாள்.


"நீ பயப்பட வேணாம் சங்கவி.." குந்தவி சொன்னாள்.


"இல்லக்கா.." தலையை ஆட்டியவள் "இதுல முழுக்க முழுக்க என் மேல மட்டும்தான் தப்பு. நான்தான் படியிலிருந்து விழுந்தேன்.." என்றவள் "நீங்க எந்த வழக்கும் விசாரிக்க வேணாம் மேடம்.." என்றாள் சக்தியிடம்.


ஒன்றுக்கு நான்கைந்து முறை விசாரித்துவிட்டு அங்கிருந்துப் போனாள் சக்தி.


ஒரு மணி நேரத்திற்கு பிறகு காத்தவராயனோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் ஆதீரன்.


சங்கவி இருந்த அறைக்குள் நுழைந்தான். 


"வெளியே போ ஆதி.." குந்தவி ஆரஞ்சு பழம் ஒன்றின் தோலை உரித்துக் கொண்டே சொன்னாள்.


"நீ வெளியே போடி.. என் பொண்டாட்டி இருக்கும் ரூம்ல உனக்கு என்ன வேலை.?" என்று கேட்டவாறே மனைவியின் அருகே வந்தான்.


குந்தவி போனை எடுத்து யாருக்கோ செய்தி அனுப்பினாள்.


"நீ போகலாம் ஆதி. உன்னை யாரும் இங்கே வரவேற்கல.." தங்கையின் மறுபக்கம் வந்து நின்றுச் சொன்னாள்.


ஆதீரன் நிமிர்ந்தான். அவளை குப்பை போல பார்த்துவிட்டு சங்கவியின் கையை பற்றினான்.


"உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன் ஆதி.." என்றவளிடம் "பாப்பா.. நாம கொஞ்சம் பேசலாமா.?" எனக் கேட்டார் உள்ளே வந்த காத்தவராயன்.


"என்கிட்ட என்ன பேசணும்.?"


"தனியா பேசணும் வாங்க.." என்றவர் முன்னால் நடக்க, இவள் பின்னால் சென்றாள்.


"இப்ப எப்படி இருக்கு.?" மனைவியிடம் கனிவோடு கேட்டான் ஆதீரன்.


"ம்ம்.." என்றவள் "என்ன குழந்தை.?" என்றாள் குரல் அடைக்க.


சட்டென்று விழிகள் கலங்கி விட்டது அவனுக்கு. "பெண் குழந்தை.." அவளின் கையை அழுத்தமாக பற்றியபடி சொன்னான். 


விம்மினாள். அவளின் கன்னங்களை அள்ளினான். நெருப்பாக சுட்டது. முன்பு இப்படி இருந்தது இல்லை. ஆறு மாத குழந்தை என்பதால் இப்படி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.


"சாரி சங்கவி.. எல்லாம் என்னாலதான்.." அவளின் கையில் முகம் புதைத்து கெஞ்சினான்.


"அக்கா உங்களை விட்டுட்டு வர சொல்றா.." 


அதிர்ச்சியோடு நிமிர்ந்தவன் "அவ சொன்னா அதுக்கு நாம என்ன செய்ய முடியும்.? முடியாதுன்னு சொல்லு.." என்றான் கடுப்போடு.


"இல்ல மாமா. நானும் நல்லா யோசிச்சி பார்த்தேன்.."


முறைத்தான். அவள் கண்டுக் கொள்ளாமல் "நமக்குள்ள இந்த உறவு வேணாம் மாமா. ஏதோ தப்பு இருக்கு‌. அதனாலதான் இத்தனை அபார்ஷன்.. ஏதோ குத்தம் குறை இருக்கும்ன்னு தோணுது. இந்த குழந்தையாவது நல்லபடியா பிறக்கும்ன்னு எனக்கு தெரிஞ்ச எல்லா சாமிக்கிட்டயும் வேண்டிக்கிட்டு இருந்தேன். ஆனா இதுவும் இல்ல இப்ப. மனசு ரொம்ப வலிக்குது. கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கணும்ன்னு தோணுது. உங்களுக்கு விருப்பம் இருந்தா வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.. நான் வேஸ்டோன்னு தோணுது.." என்றாள்.


ஆதீரனுக்கு சிரிப்புதான்‌ வந்தது.


"அவ பிளான் பண்றா.. நீ அதுக்கேத்த மாதிரி ஆடுற.." 


"இல்ல மாமா. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.. ஒன்பது குழந்தை வயித்துக்குள்ளயே சாகறது சின்ன விசயம் இல்ல.." அவளின் வாயை பொத்தினான்.


"பத்தாவது குழந்தை பத்திரமா பிறக்கும். என்னை நம்பு.." என்றான். மறுப்பாக தலையசைத்தாள். "இதேதான் முன்ன ஒன்பது முறையும் சொன்னிங்க.." சிறு குரலில் குறை சொன்னாள்.


***


"என்கிட்ட என்ன பேசணும்.?" என்றுக் கேட்டாள் குந்தவி கையை கட்டியபடியே.


"என் பையன் அன்னைக்கு செஞ்சது தப்புதான்.. அவனுக்காக நான் சாரி கேட்கறேன்.. இன்னைக்கு அவனை பழி வாங்கறதா நினைச்சி உன் தங்கச்சியையும் சேர்த்து பழி வாங்காத.. அவ வாழ வேண்டிய பொண்ணு.. அவ மனசு முழுக்க என் புள்ளைதான் இருக்கான்.. அன்னைக்கு என் பொண்டாட்டி செஞ்ச அதே தப்பை இன்னைக்கு நீ செய்ய வேணாம்.." 


"ஆனா இறந்துப் போன குழந்தைகளுக்கு என்ன சொல்றிங்க? ஒவ்வொரு முறையும் வலியை அனுபவிச்சது என் தங்கச்சிதான். உங்களுக்கு தேவை வெறும் வாரிசு. ஆனா வலியும் துக்கமும் என் தங்கச்சிக்கு.." என்றவள் பேசிக் கொண்டே செல்ல, "இதுக்கு நீ பழி வாங்கறதா இருந்தா உங்க அப்பாவைதான் பழி வாங்கணும்.." என்றார்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே 



Post a Comment

0 Comments