Advertisement

Responsive Advertisement

சின்னதொரு கண்ணீர் துளி


 செங்கடல் பொங்குகையில் திங்களோன் உதிக்கையில் நெஞ்சத்து ஓரத்தில் தீயாக உன் நினைவு..

பற்றி எரிய மாட்டேன் என தெரியும்.. இருந்தும் வாழமுடியவில்லையடா உன் நினைவுகளோடு..

நான் கடைசிவரை அறியவே இல்லை என் மனம் உன் காதல் சாவடியில் பரிசோதனைக்கென பிடிக்கப்பட்ட கூண்டு எலி என்பதை..!

காதலெனும் ரகசிய ஆயுதம் கொண்டு என் உயிரை சிறைபிடித்தாய்..!

நீ உன் சிரிப்பின் மறைவில் நச்சுக்காற்றை பரிசாய் தந்தாய் உன்னை மட்டும் நம்பிய என் இதயத்திற்கு..!

உன் சொற்கள் அனைத்திலும் பொய்யிருந்ததை நானும் அறியவில்லை நீயும் கடைசிவரை சொல்லவேயில்லை..!

உன் முத்தங்கள் தோறும் பால்டாயல் மணமிருந்ததை அறியவேயில்லையடா இந்த அற்ப கன்னிகை..! 

ஆற்றின் கரையோரம் நீ நின்றிருந்த இடங்கள் உன் காதலை சுமந்து கொண்டிருப்பதாக நினைத்த எனக்கு கடைசிவரை தெரியாது உன் பொய்கள் அனைத்தும் அங்கு புதைக்கப்பட்டிருப்பதை பற்றி..!

நீ தந்த பூக்கள் அனைத்திலும் என் இதயம் கொல்லும் விஷமுள் இருந்ததை ஒருமுறையாவது நான் கவனித்திருக்கலாம்..! 

பாசமெனும் பெயரில் நஞ்சை ஊட்டினாய்..! உன் சொற்கள் அனைத்தும் சங்கீத மகுடியென என் மனதை மயக்கின..!

நீ சொற்கள் தேர்ந்தெடுத்த நேரங்களில் ஏமாறபோகும் என் இதயம் பற்றியும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்..!

கல்லறை வரை தொடர்வேன் என வாக்குதந்தாய் நீ.. நீதான் என் கல்லறையின் ஆதியேயென அறியாமல் இருந்தேன் நான்..!

பூங்காற்றுகள் கூறும் மொழி மறந்து உன் பாத செருப்பின் ஒலி ரசித்து கிடந்தேன் நான்..!

பொய்களின் இருப்பிடமென உருவெடுத்தாய் நீ..! 

உன் கைக்குட்டையின் நூல் இடைவெளிகளில் என் சுவாசத்தை நிரப்பியிருக்க மாட்டேன் நீ அதை தீயிலிட போவதை அறிந்திருந்தால்.!

என் கனவுகளில் நீ தினம் தினம் சிரித்துதான் கிடந்தாய்.. ஆனால் என் பகல்களை கூட கண்ணீரோடு மாற்றி சென்ற காரணம்தான் என்னவோ..!

புறம் பேசி திரியும் காரிகையென உன் நினைவில் பைத்தியமென என்னை மாற்றினாய்..!

என் வார்த்தைகள் அனைத்திலும் திக்கல்.. என் எழுத்துகள் அனைத்திலும் பிழைகள் உன்னால்..!

மனமில்லாமல் பழி சொன்னாய் நான் உன் வாழ்வின் சுமையென.. அன்று கூட நான் அறியவில்லை நீதான் என் உயிரின் வலியென..!

சின்ன சின்னதாய் வெறுப்பு கூட்டி எனக்கென நீயதை பரிசளிக்க.. உன் கண்மணி நானென நினைத்த பாவம் உன் வெறுப்புகளை கூட சிரிப்போடு பெற்றுக் கொள்ள செய்தது..!

பூ தேடும் தேனீக்களை விடவும் அதிகம் சுற்றினாய் நீ.. செங்குளவி நீயென்பதை நீ கொட்டிய பிறகும் நம்ப மறுத்தேன் நான்..!

தூக்கத்தையும் என் இரவுகளையும் பறித்ததற்கு பதில் என் ஜீவனை எங்கேனும் புதைத்திருக்கலாம்..!

என்னுடையது ஒரு தலை காதல் என்பதை இறப்பின் இறுதி வரையிலும் கூட நம்ப மறுக்கும் என் இதயத்தை உன் சிரிப்பை கொண்டு துடிக்க செய்யாமலாவது இருந்திருக்கலாம்..! 

நாத்திகமாய் மாற தோன்றியது நீ கூட்டிச் சென்ற கோயில்களையெல்லாம் நினைத்தபோது..! தெய்வீக காதல் என சொல்லி நீயென்னை ஏமாற்றியதை ஏதேனும் ஒரு தெய்வமேனும் எனக்கு உரைத்திருக்கலாம்..!

இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் ஒருவனை வெறுப்போடு முறைத்தேன் உன்னோடு ஊர் சுற்றியது நினைவுக்கு வந்து தொலைந்ததால்..!

பாடல்கள் அனைத்தும் பிடிக்காமல் போனது உன்னால்..! 

எந்தன் பெயரே வெறுத்து போனது நீ என்னை கொஞ்சி அழைத்ததை நினைத்ததால்..!

வாழ்வும் பிடிக்கவில்லை சாவும் வந்து சேரவில்லை.. உன்னை காதலித்த பாவம் உயிரோடு சாகவைக்கிறது..!

மரண வலியை தந்து சென்றதற்கு பதிலாக மரணத்தையே தந்திருக்கலாம் நீ எனக்கு..!

கடலோடிய தீவாக தனித்திருக்க செய்தாய்..!

கவிஞன் தொலைத்த கற்பனையாய் கை நழுவி சென்றாய்..! 

உந்தன் நாட்களனைத்தும் நானேயென நம்பியிருந்தேன்.. நீயோ என்னை நாள்காட்டி காகிதமாய் குப்பையில் வீசினாய்..! 

ஆகாயம் கூட அழுததடா என் மீள இயலா காதல் துயர் கண்டு..

உன் நெஞ்சில் துளி ஈரம் இல்லாமல் போனதே..!

என் வளையல் உடைத்து கையை அறுத்தேன் நீ கைவிட்டு சென்றதை எண்ணியல்ல.. நீ கைகோர்த்து சென்ற நாட்களை மறக்க இயலாத காரணத்தால்.!

ஏறாத மலையெல்லாம் ஏறி பூப்பறித்து வந்து தந்தேன் உனக்காக.. சுயநலகாரா.. பூக்கள் தந்த பாவத்திற்கு பூவாள் இவள் மனதை கருக்கிவிட்டாயே..!

சொற்கள் தேடி கவியெழுதினேன் உனக்காக.. கண் சைகையேனும் காட்டியிருக்கலாம் நீ விலக நினைப்பதை பற்றி..!

தொடரும் சொந்தம் தொடரா பந்தம் அனைத்தையும் நான் புறக்கணித்த நாளிலாவது சொல்லியிருக்கலாம்.. நீ என்னை அத்துவான வாழ்வில் அனாதையாக விட்டு செல்ல எண்ணியதை பற்றி..!

காதலித்த கன்னியிவள் முட்டாளென ஊர் ஏசியது..

கடன்காரா நீயும் ஏனடா அவர்களோடு சேர்ந்து சிரித்தாய்..?

நம்பிக்கையை கொன்று அதன் நிழலில் வாழும் நீ எப்போதுதான் அறிவாய் என் கதறலை..?

உன் கை பிடித்து கெஞ்ச தோன்றியதடா நீ என்னை தவிக்க விட்டு செல்கையில்..

எண்ணம் நீ.. என் நெஞ்சத்தின் வண்ணம் நீ.. வார்த்தை நீ.. என் சொற்களின் சொந்தம் நீ.. ஆசை நீ.. என் அறிவின் ஆழம் நீ.. அழகு நீ.. என் உயிரின் ஆதி நீ.. சிந்தை நீ.. என் உணர்வின் செயல்பாடு நீயென..

என் அழுத கண்களையே காணாத நீயா உன் பெயரில் துடிக்கும் என் இதயத்தை காண்பாய்..?

மின்சாரத்தையே கைப்பிடித்திருக்கலாம் உன் காதல் வசனத்தை நம்பியதற்கு பதிலாக..!

காவிரியில் இறங்கியிருக்கலாம் உன் காதல் வலையில் வீழ்ந்ததற்கு பதிலாக..!

அரளி அதிகம் இனித்ததடா உன் இதழ் தந்த பொய் முத்தங்களை நினைத்தபோது..!



Post a Comment

0 Comments