Advertisement

Responsive Advertisement

ஆயா மரம்

 எங்களூரில் ஆயா மரமொன்று இருந்தது! அதன் நிழலில் தன் வேதனை தீர்ப்போர் அதை போதிமரமென அழைத்தனர்

முன் பின் போதிமரம் பார்க்கவில்லையாகையால் அதனை போதிமரமாய் இருக்கலாமென்று ஒப்புக்கொண்டேன் நானும்

சுத்தோதனரின் மைந்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் இந்த
பாரததேச குமாரர்களுக்கு புத்தி தராதா என சிலர் காத்திருந்தனர்!

பெருங்காற்றெல்லாம் தாங்கி சித்திரை அக்னியையும் தாங்கி ஊராரின் கண் பார்வையில் விழுந்தும்
வாகன கரும்புகை சுவாசித்தும் தன் வேரில் உயிர் வைத்து ஒவ்வொரு வசந்தத்திலும் தண்டு சிலிர்த்து கிளை வளைந்து இலை முளைக்கும் மரமது!

அதனடியில் அமர்வோர் மதுவை புட்டிபுட்டியாக பங்கிட்டு குடிக்க ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் அவர்களின் சிறுகுடலின் வெம்மை தாங்காமலேயே தன்னிலைகளை இழந்து நிற்கும் அந்த போதிமரம்! 

காக்கை ஆயிரம் கரைந்தாலும் அந்த மரம் ராசியானதுதான் எங்களுக்கு..!கழுகுகள் பறந்தாலும் சரி குருவிகள் எச்சமிட்டாலும் சரி அந்த மரத்தினுடனான எங்கள் சொந்தத்தை பிரித்தெடுக்க முடியாது

எல்லோரும் அறிந்திருப்பீர் குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதையும் பிரபலங்களுக்கு பாலாபிஷேகம் செய்வதையும்..!ஆனால்

எங்களை தவிர யாரும் அறிந்திருக்கமாட்டார்  எங்கள் போதிமரம் ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் கொண்டாடியதை..!
நண்பர்கள் கேக் வெட்டுவர்..!
அண்ணன்கள் சிலர் அதற்கு வேட்டி துண்டு கட்டி சந்தன குங்குமமிடுவர்..!
அப்போதும் கூட சில சோதரர்கள் அதன் வேருக்கு மது பங்கிடுவர்..!

அம்மரத்தடிதான் இளைஞர்கள் புதுபயணம் யோசித்த இடம்!
சில அறிஞர்கள் உருவான இடம்!
சில உழைப்பாளிகள் சிரித்து மகிழ்ந்த இடம்!
சிறுவர்களுக்கு போட்டியாக கோலி குண்டு உருண்டோடிய இடம்!
நண்பர்களை பிரிய இயலாமல் கண்ணீர் சிந்திய இடம்!
தங்கள் காதல் கதைகளை பகிர்ந்த இடம்!

படிக்கலாமா இல்லை பணிக்கு செல்லலாமா என்று பயந்து பயந்து முடிவெடுத்த இடம்!
இறந்த நண்பனுக்காய் மௌன அஞ்சலி செலுத்திய இடம்!
இழந்த காதலுக்காய் கைகளை அறுத்த இடம்!

ஒவ்வொரு நினைவையும் தன் வேரில் பதுக்கி வைத்திருந்த போதிமரம் காற்று மழைக்கு வீழவில்லை..!
ஒவ்வொருவர் நினைவையும் தன் தண்டில் தேக்கி வைத்திருந்த போதிமரம் கடும் வெயிலுக்கும் சிறு இலை வாடவில்லை..!

இயற்கை தந்ததை மனிதனின் கோடாரி கொன்றது...
ரம்பத்தின் ஓரங்களில் அதை அறுத்து தள்ளியவர்களின் வியர்வை இல்லாமல் இருக்கலாம்...

ஆனால்

அதன் வேர் பிடுங்கிய இடத்தை சோதித்து பாருங்கள்...
பல கண்களின் கண்ணீரும்
சில நெஞ்சத்தின் சிறகுகளும் வீழ்ந்திருப்பதை காண்பீர்..!

 

Post a Comment

0 Comments