Advertisement

Responsive Advertisement

காதலே

 ஒரு தலை ராகமாய் ஒரு கவிதை

என் காதலின் கடைசி நிமிடங்களை கால் மிதித்து செல்கிறாய்..!
முட்டாள் போல் அழுகிறேன் காதலின் முதல் நொடிகள் திரும்பி வரதா என!


பிரபஞ்சம் மேல் அறிவியல் கொண்ட காதலாய் யுகங்கள் தாண்டி தேடி அலைகிறேன் உன்னை..
பார்த்த நொடியே காதல் அழித்து என் சிந்தையை மீள இயலா சூரிய ஆழியில் தள்ளி செல்கிறாய் நீ..!


இஞ்சிக்கும் மஞ்சளுக்கும் உள்ள உருவ ஒற்றுமை நம் மனமென்று இருமாத்திருந்தேன்!
சகியென காத்திருந்த என்னை சகோ என ஓரெழுத்தில்‌ உடைத்து செல்கிறாய் நீ..!


விரல் தீண்ட ஆசை கொண்டு பூக்களின் வண்ணமானேன்
வாசங்கள் என்னை எரிச்சலூட்டும் என விலக்கி செல்கிறாய் நீ.. நாளை வரும் நாளேனும் வாசமில்லா பூவாக பிறவியெடுக்க முடிவெடுத்துக் கொண்டிருக்கிறேன் நான்..!


முட்டாளின் கணிதமென முதல் படியே தவறாகி போன என் காதலை கடைசி படியிலாவது சரி செய்ய மாட்டாயோ என கனவோடு காத்திருந்தேன் நான் என் எண்ணத்தின் முட்டாள்தனத்தை அளவிட கூட தெரியாமல்..!


காதலென்ற பெயரில் அழிந்த வாழ்க்கைகளின் சாரம் எடுத்து என் காதலுக்கு சாயம் அடித்து விட்ட பாவம் நேசம் வைத்த என் கண்களின் பார்வையை குருடாக்கி செல்கிறது..!


ஆலயத்து மணியில் என் காதலை முடிந்து வந்திருந்தேன்..
குழந்தைகளின் கைகளில் உயிர் வளர்க்கட்டும் என்று..!


பெரியதொன்றாய் வேண்டுமென்றாய்! என் காதலின் உயிர் மூச்சு கலந்து வானம் செய்து தந்தேன்..!
ஒற்றை தீக்குச்சி எடுத்து என்னை மொத்தமாக வேக விட்டு செல்கிறாய்..!


சிறு குழவியின் கையில் சிக்கிய சலங்கையாக இசைத்து மகிழ்கிறேன் என் காதலை..!
ஆலத்தின் வேர் பிடுங்கும் புயலென என்னை அழ விட்டு செல்கிறாய் நீ..!


உழுவண்டியின் ஏர் கலப்பையில் சிக்கிய நெகிழியாய் நான்..!
மண்ணிற்கு உரமாக இயலாதென கற்பாறையில் தூக்கி வீசி செல்கிறாய் நீ..! வேதனையோடு என்னுள் விம்முகிறது நெகிழியில் வைத்து வீசப்பட்ட துளசியின் விதையென என் காதல்..!


பார்த்த நொடி பற்றி விட்டாய் நெருப்பென..!
பைத்தியத்தின் மேலாடையாய் பிய்த்தெரிகிறாய் என் காதலை..!
நம்பிக்கை இழக்காமல் உன் விழிப்பார்க்கிறேன் கந்தலை கைக் கொள்வாயா என..!


உதட்டோர சிரிப்பில் உன் நினைவுகளை ஒட்டி வைத்தேன் காலமெல்லாம் என் காதல் வாழ..!
கண் மறையும் தூரத்தில் கையசைத்து செல்கிறாய்..!
என் சிரிப்பின் விம்மல் ஒலி அடுத்த கிரகத்தில் கேட்டதாக சொல்லி செல்கிறது வானம்..! 


காலத்திற்கு உதவாத கடிகாரமென பழிக்கின்றாய் என் காதலை..! காதலின் நேர சிக்கலில் மாட்டி வெளி வரவே இயலாமல் சுற்றி திரிகிறது என் காதல்..!


ஆலகாலம் தேர்ந்தெடுப்பேன் உனக்கு பதில் என்கிறாய் நீ..! உன் வெறுப்பின் பார்வையிலும் அமிர்தம் இருப்பதாக யாசித்து திரிகிறேன் நான்..!


நாட்காட்டியின் ஒவ்வொரு தாளிலும் உன் பெயர் எழுதி என் நாட்களை கடந்து கொண்டிருக்கிறேன்..!
அந்த வருடம் முடிந்து பல யுகம் ஆனதாக பரிகசிக்கிறாய் நீ..!


சில் வண்டின் ரீங்கரமாக ஏன் காதோரம் கத்தி தொலைகிறாய் என கத்துகிறாய் நீ..!
உனது அந்த கொஞ்சலை என் காதுகளின் ரகசிய அறையில் பத்திரப்படுத்தும் முயற்சியில் இருக்கிறேன் நான்..!


இமயத்தின் வேரென வளர்க்கிறது என் காதல் நிலவென இருக்கும் உன் காதலை கைப்பற்ற..! கூடா காதல்களின் நிஜங்கள் சொல்லும் அறிவுரை கடைசி வரை என் காதில் விழவேயில்லை..!


உன்னில் தொலைத்த என்னை எங்கு சென்று தேடுவதென்ற ரகசியம் அறியாமல் யோசனையில் ஆழ்ந்திருக்கிறேன் மிட்டாயில் கரைந்த இனிப்பை பிரிக்க நினைக்கும் குழந்தையென..!


மனிதன் மீது இயற்கை கொண்ட வெறுப்பென நீ..! இயற்கையில் பிறந்து இயற்கையில் மரிக்கும் இயற்கையெனவே நான்..!


வானவில்லுக்கு வண்ணம் தந்து கொண்டிருக்கிறாய்..!
அந்த வண்ணங்கள் அனைத்தும் நான் என் உயிர் கொண்டு உனக்காக உருவாக்கியவை என்ற ரகசியம் அறியாமல்..!


மீனென நீ மின்மினியென நான்! வானம் தாண்டி கொண்டுவிட்ட காதலை பிழை என்று உரைக்கிறாய் நீ! கூடா காதலையும் கூட உயிர்யெனதான் மதிக்கிறேன் நான்..!


ஆசையில் பிடித்து விட்ட கரட்டு உடும்பென என் காதல் கோபத்தில் கை விலங்கிட்ட காவல்துறையென நீ..!


மூளையின் ஒவ்வொரு அடுக்கிலும் உன் சிந்தனை! இதயத்தின் அனைத்து அறையிலும் உன் யோசனை! உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் உன்னுடனான காதல்! காற்றின் வேகத்தில் கடந்த படி சொல்கிறாய் முட்டாளேயென..!


சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரும் கரிப்பதாக சொல்லும் அறிவியலுக்கு நிச்சயம் தெரியாது உன்னை நினைத்து நான் விடும் கண்ணீர் இனிக்கும் ரகசியம் பற்றி..!


காலங்கள் கடந்து சென்ற நாளில் நாட்கள் அனைத்தும் முடிந்து சென்ற நிமிடத்தில் யுகங்கள் அனைத்தும் மறைந்து சென்ற நொடிகளிலாவது ஒரு தரம் திரும்பி பார்.. அப்போதும் என் காதல் உன் நிழலோடுதான் ஒட்டிக் கொண்டிருக்கும்..!



Post a Comment

0 Comments