Advertisement

Responsive Advertisement

எங்கெங்கும் தேவதைகள்

 எங்கெங்கும் தேவதைகள்.. (ராட்சசிகள் விதி விலக்கு)


அடுத்தவர் மனதை புண்படுத்தாத அனைத்து மங்கையர் மனமுமே பேரழகுதான்..!

தந்தை தோளேறி திருவிழா பார்த்து வந்து தந்தையின் நெஞ்சிலேயே உறங்கி விடும் குட்டி தேவதைகள்..!

அன்னையின் காலை நேர மங்கல வாழ்த்தை காதில் வாங்கியபடியே போர்வையை இழுத்து போர்த்தி புரண்டு படுத்து உறங்கும் சோம்பல் தேவதைகள்..!

மிட்டாய்க்காக அண்ணின் காதை திருகி தம்பியின் கையை முறுக்கும் வீர தேவதைகள்..!

மீதி காசு கொண்டுவரா கடை சென்ற மகனை கண்டு வாசலில் கரண்டியோடு நிற்கும் அப்பாவி ருத்ர தேவதைகள்..!

மகன் தந்த காசு செலவானாதாக பொய் கணக்கு சொல்லி அதை பேரர்களிடம் தரும் அன்பு தேவதைகள்..! 

தேவதைகள் எங்கும் உண்டு..!

துடுப்பு பிடிக்கும் ஒரு கை அதே நேர நொடியில் வலை கறக்கும் மறு கை எம்மூர் தேவதைகளின் மீன் வேட்டையாடும் திறனில் தினம் தினம் கொள்ளை போய் கொண்டிருக்கிறது எத்தனையோ மனங்கள்.. நளினங்களில் நான் அறிந்த உயர் தரம் இதுவே..!

இடுப்பில் குழந்தையும் தலையில் ஆள் கன புல்லு கட்டுமாக வேக நடை நடக்கும் கொலுசணிந்த கால்களுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..!

ஏங்க என சிணுங்கலாக கொஞ்சி அழைத்து சிறு ஊடலையும் கூட தாங்க இயலாமல் கண்ணில் நீர் வழிய கணவன் முகம் பார்க்கும் தேவதைகள்..!
பேயே என அழைத்து ஒவ்வொரு சண்டையிலும் கணவனுக்கு ஓர் அடி அதிகம் தந்து முறைப்போடு வீட்டு வாசலில் கயிற்று கட்டிலையும் கணவன் தலையணையையும் வீசும் தேவதைகள் என அனைவருமே யாரையேனும் கவர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்..!

காய்கறிகளை சரியாக பார்த்து வாங்க தெரியாமல் கணவரை சந்தை அனுப்பி விட்டு அவர்கள் வாங்கி வரும் காய்கள் அனைத்தும் சொத்தையென கணவன்மாரை கஞ்சி காய்ச்சும் பெண்கள்..!

நிமிடத்தில் கோழியின் கழுத்து திருகி இறக்கை பறித்து நான்கு குச்சிகளை உடைத்து பற்ற வைத்து கோழியின் உடல் தீய்த்து அதை அழகாய் அறுத்து மணக்க மணக்க குழம்பு வைத்து வெளியூர் சென்று வந்த கணவனுக்கு பரிமாறும் பெண்கள் என ஏதோ ஓர் விதத்தில் அனைவரையும் கவர்ந்து இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் தேவதைகள்..!

பெண்ணாய் பிறந்த அனைவரும் இங்கு அழகே..!
கணிப்பொறியில் தட்டச்சு செய்தால் என்ன வெங்காயம் உரித்து சமையல் செய்தால் என்ன..?
இங்கே தேவதைகளின் விரல்கள் அனைத்தும் நளினம் மிகுந்தவையே..!

மையிட்டால் என்ன மஸ்காரா போட்டால் என்ன கன்னிகளின் கண்களில் மனம் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மன்னவர்கள் பலரும்..!

கண்ணாடி வளையாலானாலும் கை கடிக்காரமானாலும் சரி பெண்களின் கரங்கள் அழகே..!
உயர் குதி காலணியாய் இருந்தால் என்ன வெற்று பாதமானால் என்ன
அந்த அழகு காலடிகளில் தங்கள் ராதைகளை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் கண்ணன்கள்.!

தேவதைகள் வாழ்ந்துக் கொண்டேதான் இருப்பார்கள்..!

கள்ளி பாலில் உயிர் கொல்லும் துரோகர்..
பொய் காதலில் வாழ்வழிக்கும் மூடர்..
திராவகம் வீசி முகமழிக்கும் பைத்தியர்..
வரதட்சணையில் உடல் தீய்க்கும் கயவர்..
வன்புணர்வு கொண்டு உடலழிக்கும் மிருகர்..

சாத்தான்கள் உலாவிக் கொண்டு இருக்கும் அதே உலகில் தேவதைகளும் வாழ்ந்துக் கொண்டேதான் இருப்பார்கள்..!

இதே உலகில்தான் எங்கள் தேவர்களும் உள்ளார்கள் என்ற உண்மை மறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் சாத்தான்களும்..!

சாத்தான்களை அழிக்க முடியாமல் உள்ளுக்குள் வெந்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் தேவர்கள்..!

கயவனிடம் ஓர் தங்கையை இழந்து விட்ட அண்ணன்மார்கள் மற்ற தங்கைகளுக்கு ரௌத்திரம் பழக்க மறந்து விட்டனர்..!

வரதட்சணைக்கு மகளை இழந்த தந்தையர்கள் மருமகளிடம் சீரை எதிர்பார்க்க கூடாது என்பதை மறந்து விட்டனர்..!

வன்புணர்வு கொண்டு தேவதைகளை கொல்லும் சாத்தான்களை சிறையிலிருந்து சிறகு தந்து அனுப்பும் ஒவ்வொரு முறையும் நீதியரசர்கள் தங்கள் வீட்டிலுள்ள தேவதைகளை மறந்து விடுகின்றனர்..!

யார் எதை மறப்பினும் தேவதைகள் என்றும் மறந்ததில்லை தங்களின் சிறகையும் சிறகு தந்த தன் வீட்டு தேவர்களையும்..! 

வாழ்வோடு கலந்து விட்ட தேவர்களின் கால்தடம் பற்றி நடக்க கற்றுக் கொண்ட தேவதைகள் மனதில் இன்னும் உயிர்ப்போடுதான் உள்ளது தேவர்களின் அன்பு உயிர் தடம்..!

LIKE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments