Advertisement

Responsive Advertisement

கனவு காதலி

 கனவு காதலி


உன் விழியோரம் தேக்கி வைத்திருக்கிறாய் என் வாழ்வை..! வீழாத கண்ணீராய் உன்னோடு இருக்கிறேன் நான்..!

சுவாசம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு முறை உன் வாசம் நுரையீரல் தீண்டும் போதெல்லாம்..!

உறக்கம் வருவதாய் சொல்லி செல்கிறாய்..!
உந்தன் கனவுகள் என் இரவு மேடையில் ஒளிர தொடங்கின..!

புதிதாய் பிறந்த சாமி பார்க்க வேண்டுமென்றாய்..
நிலைக்கண்ணாடிக்கு கை காட்டுகிறேன் நான்..!

பட்டாம்பூச்சி வண்ணம் உன் மேனியில்
விரல் தீண்டுகையிலெல்லாம் வானவில்லாகிறேன் நான்..!

யாரிடனோ சிரித்து பேசுகிறாய்
அப்பாவி குழந்தையென அழுகிறது என் பிஞ்சு மனம்..!

சாமந்தியை விட அதிகம் மணக்கிறது உன் மனம்..! சாமியின் பாதமாக மாற துடிக்கிறது என்னிதயம்..!

சங்கீதங்கள் பாட தொடங்கி விட்டனர் கச்சேரியில்..! ஸ்வரங்களின் இனிமை உன் குரலில் உள்ள ரகசியம் மறைக்க போராடிக் கொண்டிருக்கிறேன் நான்..! 

சூரிய ஒளிக்கு எட்டு நிமிடத்திற்கு மேலாகுமாம் பூமி சேர..! உன் விழியின் சிறு பார்வை தரும் காந்த சக்தியின் வேகத்தை விடவும் குறைவுதான்..!

கரும்பாக இனிக்கிறது உன் வார்த்தைகள்..! என் செவிகள் பொன் வண்டாக மாறி கொண்டிருக்கிறது..!

நீ நடக்கும் பாதையோரம் இருக்கும் பூக்களை எல்லாம் சேகரித்து மாலையென ஊசியில் கோர்த்தேன் உன் நிழல் தீண்டி விட்டதற்கு தண்டனையென..!

நிலவு பார்த்து மணல் வெளியில் அமர்ந்திருக்கிறாய்..!
உன் அழகின் வலிமை தாளாமல் பிறையென தேய்கிறது என் தைரியம்..!

நகம் கடித்து துப்புகிறாய் மண்ணில்
மிகப்பெரும் பொக்கிஷம் கிடைத்ததாக தன்னுள் மறைக்கிறது அந்த பேராசை கொண்ட பூமி.. 

மலையின் உச்சி புற்கள் பூகம்பத்தை உண்டாக்கி உன் பாதம் தொடும் ஆசையில் நடைபாதையின் ஓரம் உருண்டு வந்து சேருவதை போல விழுகிறது ஆகாயத்தில் நான் பத்திரப்படுத்தி வைத்த என் இதயம் உன் கண்ணசைவில்..!

சொன்னால் தித்திக்கிறது உன் பெயர் என்கிறேன்..! வெட்கம் எனும் சர்க்கரையை என் பார்வைக்கு பரிசளிக்கிறாய் நீ..!

எரியும் அகல் விளக்கின் ஒளியாக நீ இருந்தாய்.! அதன் சுடராக நானும் அதன் வெம்மையென என் காதலும் உன்னிலிருந்து பிரிக்க இயலாமல் எரிகிறது..! 

கனவுகள் கோர்த்து செய்த கட்டிடத்தின் உச்சியில் அழகு மலரென பூத்துக் கொண்டிருக்கிறது உன்னுடனான என் காத்திருந்த காதல்..! காதல் சொன்ன கணமே ஒளியின் வேகத்தில் கை சேர்ந்து விட்டது மலர்கள்..!

சுட்டுவிரலால் கன்னம் தொட்டபடி கதை பேசிக் கொண்டிருக்கிறாய்..! உன் கன்னம் படரும் குழலின் காரணமான காற்றை திட்டுகிறாய்..! நான் அனுப்பிய சேதியை சேர்க்க இயலாமல் என்னிடமே திரும்பி வருகிறது அந்த உதவா காற்று..! 

மழையின் சாரலில் நனைந்து கொண்டிருக்கிறாய்..!
மழையோடு கரையும் மண் திட்டென உன் அழகில் கரைந்துக் கொண்டிருக்கிறது எனது வாழ்நாள் தவம்..! 

பொழுது விடிந்து விட்டது..
ஆனால் நித்திரையின் உலகம் விடிய மறுக்கிறது
உன் கொலுசணிந்த பாதம் சொப்பனத்தில் ஓடி விளையாடி கொண்டிருக்கிறது..!

சேற்று வயல் இறங்கி களை பறித்து எறிந்துக் கொண்டிருந்தாய்..! அந்த களை செடிகளை பூந்தொட்டியில் பத்திரப்படுத்தினேன்.. கேட்டவரிடமெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தேன் அது காதல் செடியென..!

ஆயிரம் கோடாரிகளின் வெட்டை உணர்கிறது என் கைப்பிடி இதயம் உன் கண்ணில் தத்தளிக்கும் ஒரு துளி கண்ணீர் கண்டு..!

ஆகாசத்தின் பாதையில் ஒவ்வொரு முறையும் நின்று செல்கிறது நிலா உன் முகத்தை காணும் போதெல்லாம்..! நானோ உன் காலடி தவிர வேறு உலகம் உண்டா என சந்தேகிக்கிறேன்..!

வெளிச்சங்கள் தோற்றுக் கொண்டிருப்பதாக சேதி வருகிறது! உன் சிரிப்பில் மயங்கி கொண்டிருந்த சூரியன் அதை காதில் வாங்கவேயில்லை..!

நிலவு தந்த ஒளி சேர்த்து பொம்மை செய்துக் கொண்டிருக்கிறேன் நான் உன் காதலின் பிரதிபலிப்பு பொம்மையின் கண்களுக்கு உயிர் தந்துக் கொண்டிருக்கிறது.!



Post a Comment

0 Comments