Advertisement

Responsive Advertisement

மௌனம் 10

 அவளின் கண்ணீரை நவீன் எதிர்பார்க்கவில்லை. இதுவரை அவன் சென்ற பல நாடுகளிலும் பெண்கள் பலரும் வாய்ப்பு கிடைத்ததும் அவனை வால் போல சுற்றி இருக்கிறார்கள். அவன் வெறுத்து போகும் அளவிற்கு கூட அவனை தொல்லை செய்து இருக்கிறார்கள். 

இந்தியா மட்டுமல்ல பல நாடுகளிலும் பெண்களாய் பிறந்த பலரும் அடுத்தோரிடம் தங்களின் மேனியை வெளிக்காட்ட விரும்புவது இல்லை என்றும் அவனுக்கு தெரியும். ஆனால் இப்படி ஒற்றை சொல்லுக்கு கண்ணீர் விட்டவளை இங்கேதான் முதன் முதலில் பார்த்தான்.

அதிர்ந்துப் போய் அவளின் அருகே அமர்ந்தவன் "நான் சும்மாதான் சொன்னேன்.." என்றான்.

கண்களை துடைத்துக் கொண்டவள் "விடு.." என்றாள்.

"சாரி.." என்றான் அவளின் கையை பற்றியபடி.

அவனின் கையை உதறியவள் "என்னைத் தொடாதே.!" என்றாள் வெறுப்போடு.

"பொண்ணு மாதிரி வேஷம் போட்டிருந்தா மட்டும் நீயும் பொண்ணா மாறிட முடியாது.." என்றாள்.

"போதும்.. நீ இன்னொரு முறை உன் லிமிட் தாண்டாதே! அப்புறம் நானும் என் லிமிட்டை தாண்டிடுவேன்.!" எச்சரித்தான்.

ரதி அவனை முறைத்துவிட்டு எழுந்து நின்றாள். உதட்டை சுழித்து காட்டிவிட்டு வீட்டுக்குள் நடந்தான். நவீனின் இதழில் சிறு புன்னகை உருவாகியது. 

தங்சேயா தனது தனி தீவில் இருந்தார். கடற்கரையோரங்களில் வரிசையாக இருந்தன குடில்கள். குடில்களில் எவ்வளவு மோசமான ஆயுதங்கள் உண்டென்று அதை அறிந்தவர்களுக்குதான் தெரியும். 

சிறு வயது பிள்ளைகள் முதல் வாலிபர்கள் வரை கடற்கரை மணலில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள். தங்சேயா அவர்களை கவனித்தபடி தீவின் மறுபக்கம் வந்தார். வரிசையாக இருந்தன கல்லறைகள் பல. உலகம் அழிக்கும் வேலையில் ஈடுபட சென்றுத் தோற்றோ, வேறு வகையிலோ இறந்தவர்களின் உடல்கள் அங்கே புதைக்கப்பட்டு இருந்தன.‌

கல்லறைகளை வெறித்தபடியே வந்தவர் புவினின் கல்லறையை கண்டு தயங்கி நின்றார். அவரின் கண்கள் தானாய் கலங்கியது.

"எனக்கு எந்த வித பாசம் பந்தமும் இருக்க கூடாதுன்னு ரொம்ப கட்டுப்பாடா இருந்தேன். ஆனா நீ உன் பாசத்தால என்னை ஒரு சென்டிமெண்டல் பைத்தியமா மாத்திட்ட.!" என்று வெறுப்பு கலந்த வேதனையோடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பத்து நாடுகளில் மறைமுகமாக போர் தொடங்கியாகி விட்டது. ஒரு நாட்டோடு மற்றொரு நாட்டை மோத விடும் நிலமையில் இருந்தது போர். எந்த நாட்டிலுமே ஒற்றுமை இல்லை. சொந்த நாட்டை காட்டி தரும் துரோகிகள் கரையான் போல ஒவ்வொரு நாட்டிலும் தினமும் பெருகிக் கொண்டிருந்தார்கள். இனம், நிறம், வகுப்பு, மொழி, பணம், மதம் என்று மக்கள் ஆயிரம் பிரிவாக பிரிந்து நின்றார்கள். வேற்றுக்கிரகவாசி உலகை அழிக்க வந்தாலும் அங்கேயும் சோரம் போகிறவர்களாகதான் இருந்தார்கள் பலரும்.

தன் உயிர் பிரிவதற்குள் சிவிலிசேசனை முழுதாக அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கிறார் இவர்.

இவர் மீண்டும் தீவின் முன்பகுதிக்கு வந்தபோது அங்கே வடகிழக்கு நாடு ஒன்றை சேர்ந்த துணை தலைவர் வந்து தங்சேயாவுக்காக காத்திருந்தார்.

"தங்சேயா.." இருக்கையில் அமர்ந்திருந்தவர் இவரை கண்டதும் எழுந்து நின்று கையை நீட்டினார். கையை குலுக்கி விட்டு எதிரில் அமர்ந்தார் தங்சேயா. 

"எப்படியாவது இந்தியாவை அழிச்சிடுங்க.. மக்கள் தொகை பாதியா குறைஞ்சிட்டா போதும்.." என்றார்.

அவர் சொல்லாவிட்டாலும் தங்சேயா அதைதான் செய்ய போகிறார். ஏனெனில் இந்தியாவை அழிக்க சொல்லி பத்துக்கு மேற்பட்ட நாடுகள் பணத்தையும் ஆயுதங்களையும் தங்சேயாவின் காலடியில் கொட்டியிருக்கின்றன.

"வல்லரசான நாடுகளின் பட்டியலில் இந்தியா இணையவே கூடாது தங்சேயா.! ஏதோ ஒரு வகை.. நோயா, வறுமையா, நிதி பற்றாக்குறை, கடன்சுமைன்னு எதுவா வேணாலும் இருக்கட்டும்.. ஆனா அந்த நாடு இது போல இருக்க கூடாது.‌." என்றார் எதிரில் அமர்ந்திருந்தவர்.

எதிரில் இருந்தவரின் நாட்டை அழிக்க சொல்லி பன்னிரெண்டு நாடுகள் தங்சேயாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. எதிரில் உள்ள படையின் தலையை வெட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அனைத்து நாடுகளும் நின்றிருந்தன. ஆனால் தங்சேயா மொத்த நாடுகளுக்கும் பாதாளமாக பள்ளம் வெட்டிக் கொண்டிருந்தார். எதிரில் இருப்போரின் கழுத்து வெட்டுப்படுமா என்பதை ஆவலோடு எதிர்பார்த்தபடியே அனைவரும் தங்சேயாவின் பாதாளத்தில் விழுந்து மரிப்பது மட்டும் உறுதி. 

"இதுல நீங்க கேட்ட பணம் இருக்கு தங்சேயா.. சீக்கிரம் முடிச்சி கொடுத்துடுங்க.." என்ற எதிரில் இருந்தவர் கடற்கரையில் நின்றிருந்த தனது சொகுசு படகில் அங்கிருந்து திரும்பி போனார்.

தங்சேயா பெட்டியை திறந்துப் பார்த்தார். பணம்.. சலிப்பாக இருந்தது. பணம் பணம் என்று பணத்திலேயே மூழ்கி எழுந்து விட்டவருக்கு எந்த பணத்தின் மீதும் ஆசையே வரவில்லை.

ஸ்டெலாஸ்டியனோடு பிறகு பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்து தனது குடிலை நோக்கி நடந்தார். 

"ஸ்டெலாஸ்டியன் இருக்கற இடத்தை இன்னைக்குள்ள நாம கண்டுபிடிச்சாகணும்.." என்ற விஷால் ஒலித்த போனை எடுத்து செவியில் வைத்தான்.

"சார் நான் மைக்கேல்.. சந்தேகத்துக்குரிய எண்களின் அழைப்புகளை கண்காணிச்சதுல ஸ்டெல்லா பேசிய அழைப்புகளும், அவனோட நம்பரும் கிடைச்சிருக்கு. ஆனா அவனோட இடத்தையும், தங்சேயாங்கற ஒருத்தனோட இடத்தையும் டிரேஸ் பண்ண முடியல. அவனோடு பேசிய ஒரு பொண்ணோட அட்ரஸை மட்டும் கண்டுபிடிச்சிருக்கோம். நாட்டிய பட்டிணத்தில் உள்ள சின்னையா ஸ்ட்ரீட்ல இருக்கு வீடு.!" என்றார் எதிரில் இருந்தவர்.

போன் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் லாவண்யாவிடம் விசயத்தை சொன்னான் விஷால்.

"அந்த பொண்ணை பிடிச்சிட்டா ஸ்டெல்லாவையும் பிடிச்சிடலாம்.." என்றான். 

விஷால் சொன்ன அட்ரஸை கேட்டு அதிர்ந்தாள் லாவண்யா. 

"அது அந்த நாட்டியக்கார பொண்ணுங்க இரண்டு பேரும் தங்கியிருக்கும் இடம் சார்.." என்றாள்.

விஷால் புருவம் நெரித்து யோசித்தான். புரிந்துக் கொண்டவனின் முகம் ஒளிர்ந்தது.

"வா நாம உடனே அங்கே போகலாம்.." என்றான்.

அவன் தன் ஜீப்பில் அமர்ந்த மறு நொடியில் தனசேகர் அவனுக்கு அழைத்தான்.

"ஹலோ சார்.."

"இப்பதான் மைக்கேல் போன் பண்ணான்.. அந்த நாட்டியக்கார பொண்ணுங்க வீட்டுக்கு போகாதே.! ஸ்டெல்லாவோட அட்ரஸை சாயங்காலத்துக்குள்ள நான் தரேன்.!" என்றான்.

விஷாலுக்கு குழப்பமாக இருந்தது. தனசேகர் தன்னிடமிருந்து எதை மறைக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை.

தனசேகர் சொன்னதை லாவண்யாவிடம் சொன்னவன் தனது சீட்டில் சாய்ந்து அமர்ந்தான்.

"புவின் கேஸ் பாதியில் கட்டான பிறகு சார் ரொம்ப மாறிட்டாரு.. என்னவோ மறைக்கிறார்ப்பா.. தனியாவே நிறைய விசயங்களை பார்க்கறாரு.." என்றவன் லாவண்யாவின் புறம் திரும்பி அமர்ந்தான். "என் மேல கூட அவருக்கு நம்பிக்கை இல்ல லா.. நான் எந்த இடத்துல அவரோட நம்பிக்கையை உடைச்சேன்.?" என்றுக் கேட்டான்.

லாவண்யா பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்.

"நான் இந்த முறை அவரோட பேச்சை கேட்க போறது இல்ல லா.. அந்த பொண்ணுங்களை அரெஸ்ட் பண்ண போறேன்.! ஸ்டெல்லாவை சாகடிக்காம எனக்கு தூக்கமே வராது.." என்றவன் காரை வேகமாக ஸ்டார்ட் செய்தான்.

'மனிதர்கள் வசந்தமாக வாழ பிறவி எடுத்தவர்கள். ஆனால் மிக மோசமாக அழிந்துக் கொண்டிருக்கிறார்கள். நேசம் இறந்துக் கொண்டிருக்கிறது. சொந்தங்களை கூட பொறாமை கண்களோடு வெறித்துக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய மனப்பான்மை மிகவும் குறுகிப் போய்க் கொண்டிருக்கிறது. இரக்கம் தவறு என்று நம்புகிறார்கள். சத்திரம் வைத்து உணவிட்ட அதே நாடுதான் இப்போது பசியில் சொந்த குழந்தைகளை சாக விட்டுக் கொண்டிருக்கிறது. வறுமையை ஒழிக்க வேண்டி கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் பசியில் தூக்கிட்டுக் கொள்ளும் மனிதர்களை கண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் சொந்த கலாச்சாரங்கள் மனிதர்களை பட்டினி போடுகிறது என்று உரைத்துவிட்டு கம்பீரமாக மேடை ஏறிய நாகரீகங்கள் பசியில் இறப்போரையும், சண்டையில் இறப்போரையும் உடனுக்குடன் புதைத்துவிட்டு சுத்த தேசம் என்று கவி பாடிக் கொண்டிருந்தன. மனிதர்கள் கண்டறிந்த அனைத்துமே இங்கே அழிவுக்கான பாதையைதான் உருவாக்கி வைத்துள்ளன. அன்பு இறந்த இடத்தில் எந்த இயந்திரங்களாலும் பூக்களை பூக்க வைக்க முடியாது..' படபடவென டைப் அடித்துக் கொண்டிருந்த ரதி தன் முன் வந்து நின்ற நவீனை கண்டுவிட்டு போனை அணைத்து வைத்தாள்.

"என்ன.?" என்றாள் நிமிர்ந்து பார்த்து.

"நீ இங்கிருந்து கிளம்பி போகணும்.." என்றவனை வெறித்தவள் "எனக்கு வேலை இங்கேதான்.!" என்றாள்.

"நான் டிரிங்க்ஸ் பண்ண போறேன்.. நான் டிரிங்க் பண்றேன்னு தெரிஞ்சா ரூபி நாளைக்கு காலை வரை அவளோட ரூமை விட்டு வர மாட்டா.. நீ இருக்கணும்ன்னு ஆசைப்பட்டா இரு.. ஆனா பின்விளைவுகளை பத்தி எப்போதும் கவலைப்படாத.." என்றான்.

ரதி பயத்தில் எச்சில் விழுங்கினாள். சமையலறைக்கு சென்றவன் பெரிய பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு ரதியின் முன்னால் வந்து அமர்ந்தான்.

"உனக்கும் வேணுமா.? சும்மா ஒரு ஷாட்.!" என்று கண்ணாடி டம்ளரில் ஊற்றிய பானத்தை நீட்டினான்.

ரதி பற்களை அறைத்தபடி எழுந்து நின்றாள்.

"செத்து தொலை.." என்றுவிட்டு வெளியே நடந்தாள்.

சிரித்தான் நவீன். "நல்ல வாழ்த்து.." என்றான்.

ரதி எரிச்சலோடு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். "மூஞ்சியை பாரு.. பொறுக்கி பையன்.. இவனையெல்லாம் சுட்டு தள்ளாம வச்சி கொஞ்சிட்டு இருக்கற போலிஸை சொல்லணும்.!" என்று எரிந்து விழுந்தபடியே அங்கிருந்து கிளம்பினாள்.

ரதியின் ஸ்கூட்டி சத்தம் காதை விட்டு மறைந்த அடுத்த நொடியில் கையிலிருந்த பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு எழுந்து நின்றான் நவீன்.

"ரூபி.." வீடே அதிரும்படி கத்தினான்.

ஸ்டெல்லா பற்றிய யோசனையில் இருந்தவள் அவசரமாக வெளியே ஓடி வந்தாள். 

"என்ன பாஸ்.?" என்றவளின் கழுத்தை இறுக்கியது அவனின் கரம்.

"ஸ்டெலாஸ்டியன் எங்கே.?" என்றான் பற்களை அரைத்தபடி.

ரூபிக்கு மூச்சு விட சிரமமாக இருந்தது. அவனின் கையை தள்ளி விட முடியவில்லை அவளால்.

"நான் ஸ்டெல்லாவை போட்டு தள்ள நேரம் பார்த்துட்டு இருக்கேன்னு உனக்கு தெரியும் இல்ல.? என் கூட இருந்துட்டு அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கியா.? உன்னை இங்கேயே சாகடிச்சிடுவேன் ரூபி.." என்றான் ஆத்திரத்தோடு.

ரூபியின் கண்கள் மேல் இமைகளை தாண்டிக் கொண்டிருந்தது.

"இங்கே வந்த பிறகு நீ அவனை போய் பார்த்துட்டு வந்திருக்க.. உனக்கு நான் என்ன கேனையன் போல தெரியறேனே.? உன்னை ரொம்ப நம்பினேன் ரூபி.. நீயும் ஒரு சீட்டர்தான்.!" என்று கர்ஜித்தான்.

ரூபியின் முகம் சிவந்து போனது. நவீனின் கை அவளின் கழுத்தை விட்டு விலகியது. ரூபி சுவரில் சாய்ந்து அப்படியே மயங்கி விழுந்தாள்.

நவீன் ஆத்திரத்தோடு அங்கும் இங்கும் நடந்தான். நேற்று தன்னையும் ரதியையும் கொல்ல ஆள் அனுப்பியது ஸ்டெல்லாதான் என்று நிச்சயமாக தெரிந்தது இப்போது. 

ரூபி தன் முகத்தில் தண்ணீர் தெறித்து விழுவதை உணர்ந்து கண்களை திறந்தாள். கழுத்து பகுதி எரிந்தது‌. தடவி விட்டாள். கை பட்டதும் அதிகம் எரிந்தது. எழுந்து அமர்ந்தாள். தண்ணீர் பாட்டிலோடு நின்றிருந்த நவீன் அவளை ஆத்திரம் தீராமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஸ்டெல்லா எங்கே.? ஒரே வார்த்தை.." என்றான்.

ரூபி இரும்பினாள். தண்ணீரை தந்தான். குடித்து முடித்தவள் ஸ்டெலாஸ்டியன் இருக்கும் இடத்தைச் சொன்னாள். நவீன் அவளின் அருகே ஆயின்மென்ட் ஒன்றை எரிந்துவிட்டு அங்கிருந்து வெளியே போனான்.

"ஊரடங்கு.." என்ற அவளின் வார்த்தையை அவன் கேட்கவேயில்லை.

நவீன் சென்ற அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் விஷால் அங்கு வந்து சேர்ந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments