விஷால் அந்த வீட்டை சுற்றிலும் பார்த்தான்.
"இதுல ரூபியோட ரூம் எது.?" என்றுக் கேட்டவனிடம் ரூபியின் அறையை கை காட்டினாள் ரதி.
"லா.. மைக்கேல் இல்லன்னா ராகவ்க்கு போன் பண்ணி ரூபியோட போன் சிக்னல் இப்ப எங்கே இருக்குன்னு கேளு.!" என்றான் லாவண்யாவிடம்.
"ரூபி என்ன சொன்னா.?" விஷாலிடம் கேட்டாள் நவீனா.
அவளை முறைத்த விஷால் "நீ அவ கழுத்தை நெரிச்சதா சொன்னா.." என்றான் கடுப்போடு.
விஷாலுக்கு இருந்த ஆத்திரத்திற்கு நவீனின் தலையை உடைக்க வேண்டும் போல இருந்தது.
நவீன் குழப்பத்தோடு அவனை வெறித்தான்.
"அவளை எப்படி உனக்கு தெரியும்.?" இப்போதுதான் சரியான கேள்வியை கேட்பது போலிருந்தது.
"நேத்து நான் உன்னை அரெஸ்ட் பண்ண வந்தேன். நீ இல்ல. அதனால நான் அவளை அரெஸ்ட் பண்ணேன். ஆனா நீ சேகர் சார் கட்சின்னு தெரிஞ்சதும் அவளை விட்டுட்டேன்.." என்றான்.
நவீனுக்கு இப்போது ரூபியின் மீது கோபம் வந்தது. அவள் ஏன் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்று வருந்தினான்.
ரதி நவீனை அதிர்ச்சியோடு பார்த்தாள். "நீ அப்ரூவரா இருக்கியா.?" என்றாள்.
அவளின் அதிர்ச்சி புரியாமல் மற்ற மூவரும் அவளை குழப்பத்தோடு பார்த்தார்கள்.
நவீன் கடுப்போடு ஆமென்று தலையசைத்தான். அவனுக்கு ரூபியை தேட வேண்டும் என்ற கவலை இருந்தது. இவளின் கேள்விகளுக்கு நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்று எரிச்சலடைந்தான்.
விசயத்தை கேள்விப்பட்ட பிறகு ரதிக்கு திக்கென்று இருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நேற்றும் இன்றும் அவனை கொன்று விட நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவளுக்கு இந்த காவல்துறையின் கண்ணாமூச்சி விளையாட்டில் துளியும் பிடிப்பு இல்லை. இவனை கொன்று விட்டு பிறகு ஜெயிலுக்கு சென்றால் கூட நிம்மதியாக இருந்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள் அவள். அவசரத்தில் அப்படி கொன்றிருந்தால் தானே தன் நாட்டிற்கு ஆபத்தாக இருந்திருப்போம் என்ற விசயம் இப்போதுதான் அவளுக்கே புரிந்தது.
'ஜஸ்ட் மிஸ்ஸூ..' என அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே விஷால் ரூபியின் அறையை சோதிக்க சென்றான். சற்று நேரத்தில் "லாவண்யா.." என்று கத்தி அழைத்தான். லாவண்யாவோடு சேர்த்து மீதி இருவரும் கூட அங்கே ஓடினார்கள்.
"ரூபியை கடத்திதான் இருக்காங்க.!" என்று விஷால் சொன்னதும் லாவண்யா அவன் பார்த்த திசை பார்த்தாள். கதவின் ஓரத்தில் வாசற்காலை ஒட்டியபடி இருந்த சுவரில் கை நகங்களின் கீறல்கள் பதிந்து இருந்தது. சாதாரணமாக பதியாமல் மிகவும் அழுத்தமாக பதிந்து இருந்தது. இவ்வளவு பலத்தை பயன்படுத்துவது சாதாரண செய்கை இல்லை என்று அங்கிருந்த நால்வருக்குமே தெரிந்துதான் இருந்தது.
"இங்கே சி.சி.டிவி எங்கேயாவது இருக்கான்னு பாரு லா.." என்று அவளை அனுப்பி வைத்த விஷால் ரதியின் பக்கம் திரும்பினான்.
"இவன் இவ்வளவு நேரம் எங்கே இருந்தான்னு உங்களுக்கு தெரியுமா.?" என்றுக் கேட்டான்.
"இவனோடு காலையிலிருந்து இருந்தேன் சார்.. நேரா நாட்டிய அரங்கம் போய் நாட்டியம் ஆடிட்டு திரும்பி வந்துட்டோம். இவனோடு கூடவேதான் இருந்தேன். இவன் அவனோட போனை கூட யூஸ் பண்ணல. இவனோட பேக் என்கிட்டதான் இருந்தது.!" என்றாள் ரதி.
விஷால் கவலையாக அந்த கூடத்தை சுற்றிலும் பார்த்தான். ரூபியின் நேற்றைய பார்வை அவனின் நினைவை விட்டு அகல மறுத்தது.
"இது எங்க ஆளுங்கதான் யாராவது பண்ண வேலையாதான் இருக்கும்.!" என்ற நவீனை திரும்பிப் பார்த்து முறைத்த விஷால் "அப்படின்னா சொல்லு மேன்.. எத்தனை பேர் வந்திருக்கிங்க.? யாரெல்லாம் எங்கேயெல்லாம் இருக்காங்க..?" என்று கத்தினான்.
நவீன் தன் பின்னங்கழுத்தை தேய்த்தான்.
"எனக்கும் தெரியாது சார்.. எங்க குரூப்ல இருந்து நிறைய பேர் இங்கே வந்திருங்காங்கன்னு மட்டும்தான் எனக்கு தெரியும்.! என்னை விட ரூபிக்கு கொஞ்சம் பேரை தெரியும்.!" என்றான்.
விஷால் அதிர்ந்தான். அப்படியென்றால் நேற்று ரூபி தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னது அத்தனையும் பொய் என்று புரிந்துப் போனது அவனுக்கு. அவள் ஒரு தீவிரவாதி என்று வெளிப்படையாகவே தெரிந்திருந்தும் கூட அவளின் சொல்லை நம்பி விட்டோமே என்று தன் மீதே கோபம் கொண்டான். இந்த இடத்தை விட்டு போய் விட சொன்னது அவனின் ரோசம்.
அவன் வெளியே நடக்க இருந்த நேரத்தில் லாவண்யா ஓடி வந்தாள்.
"சி.சி.டிவி கேமரா எதிர் வீட்டுல இருந்திருக்கு சார்.. நமக்குதான் லக்குன்னு சொல்லணும்.!" என்றவள் மெமரி கார்டை போனில் போட்டு வீடியோவை ஓட விட்டாள்.
லாவண்யா ஸ்கிப் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள். 'நிறுத்திவிடு லா.!' என விஷால் சொல்ல இருந்த நேரத்தில் "யாரோ வந்திருக்காங்க.." என்று போனை காட்டினாள் லாவண்யா.
வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு நான்கு ஆண்கள் கீழே இறங்கினார்கள். அனைவரின் முகமும் மாஸ்க்கால் மறைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒருவன் மட்டும் வீட்டுக்குள் நுழைந்தான். இருபது நிமிடங்களுக்கு பிறகு ரூபியின் முடியை பற்றி இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். ரூபியின் முகம் வலியில் துடித்துக் கொண்டிருந்ததை அங்கிருந்த நால்வருமே உணர்ந்தனர். தான் நாட்டியத்திற்கு சென்றிருக்க கூடாது என்று நினைத்தான் நவீன்.
"இது தங்சேயா.." என்றாள் ரதி.
மூவரும் அவளை ஆச்சரியமாக பார்த்தனர்.
"உனக்கு எப்படி தெரியும்.?" எனக் கேட்ட நவீனுக்கே அந்த முகமூடி மனிதன் தங்சேயாதான் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. உயரமும், திடமும் அவரின் உருவத்தை ஒத்திருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
"அவனோட கண்கள்தான்.. நேத்து லா தங்சேயா போட்டாவ காட்டும்போது பார்த்திருந்தேன். அதே கண்கள்தான் இதுவும்.!" என்றாள்.
விஷால் அவளை சந்தேகமாக பார்த்தான்.
"நீயும் போலிஸ் ஆள்தானா.?" நவீன் ரதியை தன் பக்கம் திருப்பிக் கேட்டான்.
"நான் யார் ஆளும் கிடையாது. லாவண்யா என் பிரெண்ட். அவ்வளவுதான்.!" என்றவள் "லா.. இது தங்சேயாதான்.!" என்றுச் சொன்னாள்.
விஷால் லாவண்யாவை கேள்வியாக பார்த்தான். "நம்பலாம் சார்.. இவ கண்கள் பைத்தியம்.. இவளுக்கு இதெல்லாம் கை வந்த கலை.!" என்றாள்.
"ராகவ், மைக்கேல் யாராவது போன் பண்ணாங்களா.?" என்றவனிடம் "இன்னும் இல்ல சார்.." என அவள் சொல்லி முடித்த வேளையில் அவளின் போன் ஒலித்தது.
எடுத்துப் பேசினாள். அரை நிமிடத்திற்கு பிறகு அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவள் இடம் வலமாக தலையசைத்தாள்.
"அவளோட போன் சிக்னல் கடைசியா இந்த வீட்டுலயேதான் கட்டாகியிருக்கு.. நமக்கு இருக்கும் ஒரே வழி அந்த கார் எந்த இடத்தையெல்லாம் கடந்துப் போச்சின்னு செக் பண்றதுதான்.!" என்றாள் லாவண்யா.
"சரி வா போகலாம்.." என்றவன் வெளியே நடக்க அவர்களின் பின்னால் ஓடி வந்தான் நவீன்.
"நானும் வரேன்.!" என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்த விஷால் "நாங்க என்ன சந்தைக்கடைக்கா போறோம்.? எனக்கும் உனக்கும் சுத்தமா செட் ஆகாது.. சேகர் சாருக்காகதான் உன்னை அமைதியா விட்டுப் போறேன். நீயும் அதுக்கேத்த மாதிரி கோப்பரேட் பண்ணு.!" என்றவன் வாசலில் நின்றிருந்த தன் காரில் ஏறி அமர்ந்தான்.
"இந்த பொண்ணு காணம்ன்னு சேகர் சார்க்கிட்ட சொல்லிட்டு நான் விலகிடலாம்ன்னு இருக்கேன் லா.!" என்றான் வழியில் செல்கையில்.
"ஆனா ஏன் சார்.?" எனக் கேட்டவளிடம் "அவ ஒரு சீட்டர்ப்பா.! அவளும் நிஜமாவே டெரரிஸ்ட்தான்.! ரொம்ப இன்னசன்ட்ன்னு என்கிட்ட ஆக்ட் பண்ணிட்டா.!" என்றான் கோபத்தோடு.
"எனக்கும் அப்படிதான் தோணுது சார்.." என்று சொன்னாலும் கூட லாவண்யாவிற்கு ரூபியை நினைத்துச் சற்றுக் கவலையாகதான் இருந்தது.
நவீன் தன் போனை எடுத்து தனது குழுவில் இருந்த சிலருக்கு அழைத்தான். அனைவரிடமும் தங்சேயா இருக்கும் இடத்தை பற்றிதான் விசாரித்தான். ஆனால் ஒருவருக்கும் உபயோகமான தகவல்கள் தெரியவில்லை.
வெறுப்போடு நாற்காலியில் அமர்ந்தான். இந்த நாட்டில் அவனுக்கு எதுவும் பழக்கம் இல்லை. எப்படி அவளை கண்டுபிடிப்பது என்றும் தெரியவில்லை.
அவன் கவலைப்படுவதும் கூட பிடிக்காதது போல அவனுக்கு போன் செய்தான் தனசேகர்.
போனை எடுத்துப் பேசினான் நவீன்.
"ரூபியோட குடும்பத்தை கண்டுபிடிச்சாச்சி.! ஆனா அவங்க அட்ரஸ் உனக்கு வேணும்ன்னா நீ எனக்கு தங்சேயா அட்ரஸை தரணும் நவீன். நான் இப்ப கொஞ்சம் சிக்கல்ல இருக்கேன். இப்ப மட்டும் நான் தங்சேயாவை போட்டு தள்ளலன்னா எங்க டிபார்ட்மெண்ட்ல நான் இருக்கறதே வேஸ்டுன்னு ஆயிடும்.." என்றவன் "உன் போனுக்காக காத்திருக்கேன்.!" என்றுவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான்.
நவீனுக்கு பைத்தியம் பிடிக்கும்போல இருந்தது. அவனுக்கு உண்மையாகவே தங்சேயா இருக்கும் இடம் பற்றி தெரியாது. தன் குழுவில் உள்ள யாரிடம் விசாரித்தால் சரியான தகவல் கிடைக்கும் என்றும் அவனால் இப்போதைக்கு யோசிக்கவே முடியவில்லை.
"உனக்கு சின்னையன் ஆதரவு தந்தான் இல்லையா.. அது போல அந்த தங்சேயாவுக்கும் அவன்தானே ஆதரவு தந்திருப்பான்.? நாம சின்னையனை மிரட்டினா தங்சேயா இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சிடலாம் இல்லையா.?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள் ரதி.
நவீன் எழுந்து நின்றான்.
"தேங்க்ஸ்.." என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments