Advertisement

Responsive Advertisement

மௌனம் 2

மணி காலை ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. நல்ல உறக்கத்தில் இருந்தாள் ரூபி. எதிர் அறையில் நவீன்னும் கவிழ்ந்தடித்து உறங்கிக் கொண்டிருந்தான். இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததின் விளைவாய் இருவரும் நேரம் காலம் தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஓயாமல் ஒலித்த காலிங் பெல் சத்தம் கேட்டு ரூபிதான் முதலில் எழுந்தாள். யாராக இருக்கும் என்று யோசிக்காமல் கண்களை கசக்கியபடி சென்று கதவை திறந்தாள். வெளியே நின்றிருந்த ரதி இவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள்.

"ஹாய்.. நான் ரதி.. விண்ணைத் தொடு பத்திரிக்கை ரிப்போர்ட்டர்.. நவீனா மேடம் எங்க பத்திரிக்கைக்கு பேட்டி தருவதா சொல்லி இருந்தாங்க. அதுக்காகதான் வந்திருக்கேன்.." என்றாள்.

அவள் சொன்ன நவீனா என்ற பெயரில் மொத்த தூக்கமும் கலைந்துப் போனது ரூபிக்கு. காலிங் பெல் அடிப்போரை திட்டிவிட்டு மீண்டும் சென்று நான்கைந்து மணி நேரங்கள் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாள் அவள். ஆனால் இப்படி ஒரு இளம்பெண் நவீனாவை தேடி வரவும் அதிர்ச்சியில் தூக்கம் போன திசையே தெரியவில்லை.

"நவீனா மேடத்தையா.?" உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டவளிடம் ஆமென தலையசைத்தாள் ரதி.

"சாரிங்க.. அப்படி யாரும் இங்கே இல்ல.." என்ற ரூபி கதவை மூட இருந்த நேரத்தில் கதவை தடுத்து பிடித்தாள் ரதி.

"நான் ரதி.. நவீனா மேடத்துக்கு டூரிட்ஸ் கைட் அன்ட் பர்சனல் செக்யூரிட்டி வேணும்ன்னு கேட்டதால என்னை அனுப்பி வச்சிருக்காங்க.." என்றாள்.

ரூபி தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். நெற்றியில் அடித்துக் கொண்டாள். 

'நமக்குன்னே வந்து வாய்க்கிறாங்க போலயே!' என்று நினைத்து நொந்துக் கொண்டவள் மீண்டும் தலையை வெளியே நீட்டினாள்.

"ஹாய்.. இதுதான் நவீனாவோட வீடு.. சாரி முன்ன கொஞ்சம் தூக்க கலக்கத்துல இருந்துட்டேன்.. அதான் உங்க கேள்வி புரியாம நவீனா இல்லன்னு சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதிங்க.." என்றாள்.

ரதி புரிந்ததாக தலையசைத்தாள். 

'இவளெல்லாம் எங்களுக்கு பாடிகார்டா.? நம்பர் ஒன் ஜோக் இதுவாதான் இருக்கும்..' ரூபி தனது நினைவில் இருந்த நேரத்தில் "உள்ளே வரலாமா.?" என்றுத் தயக்கமாக கேட்டாள் ரதி.

அவளுக்கு வழி விட்டு நகர்ந்து நின்றாள் ரூபி. வீட்டை அண்ணாந்து பார்த்தபடியே உள்ளே வந்தாள் ரதி. ஹாலில் இருந்த பெரிய சோபா ஒன்றில் அமர்ந்தாள்.

"நவீனா மேடம்.." தயக்கத்தோடு ரூபியை பார்த்துக் கேட்டாள். 

"ஹலோ.. நீங்க பாடிகார்ட்தானே.? அப்புறம் ஏன் இந்த அவசரம்.? தூங்கிட்டு இருக்கார்.. இருக்கா ந..வீனா.. இப்ப வருவா இருங்க.." என்றவள் கொட்டாவி விட்டபடிபடியே நவீன் இருந்த அறை நோக்கி நடந்தாள்.

வெறுமனே சாத்தியிருந்த அறையை திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள். நவீன் கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்து கிடந்தான். போர்வை தரையில் கிடந்தது.

அருகே சென்று அவனின் தோளில் தட்டி எழுப்பினாள். "மிஸ் நவீனா.." என்றாள்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் இவள் தட்டியதால் அரையாய் தூக்கம் கலைந்தான். பெயரை கேட்டவன் விலுக்கென்று எழுந்து அமர்ந்தான். 

"நவீனான்னா சொன்ன.?" அதிர்ச்சியோடு கேட்டவனிடம் ஆமென தலையசைத்தவள் "ஆமாங்க மிஸ் நவீனா.. உங்க பாடிகார்ட் வெளியே வெயிட் பண்றாங்க.." என்ற ரூபி கட்டிலில் ஒரு ஓரமாக அமர்ந்தாள்.

குழப்பத்தோடு அவளைப் பார்த்தவன் "நான் எப்ப பாடிகார்ட் கேட்டேன்.?" என்றான்.

"நல்லா ஞாபகம் பண்ணி பாருங்க.." என்றாள்.

நவீன் குழப்பத்தோடு தலையை சொறிந்தான்.

இந்தியா வருவதற்கு அவன் பயன்படுத்தியது பெண் வேடம்தான். அதற்கு காரணம் போன முறை இங்கே வந்த புவின்தான். அப்போது நடந்த தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக நாட்டில் அதிக பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாட்டுக்குள் நுழைந்த ஒவ்வொருவரின் பிண்ணனியையுமே விசாரித்தார்கள்.

சின்னையன் இந்த நாட்டின் பணக்காரர்களின் பட்டியலில் முதல் பத்திற்குள் வர துடித்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிலதிபன். நாட்டில் பல வகை தொழில்கள் செய்து வருபவன். அவன். தொலைக்காட்சி நிறுவனம், பட தயாரிப்பு நிறுவனம் என்று பொழுதுப்போக்கு தளத்தில் தனது பெயரை முத்திரை பதித்து வைத்திருப்பவன். 

அவன்தான் இப்போதைய நேரத்தில் பரத நாட்டிய போட்டி ஒன்றை உலக அளவில் நடத்திக் கொண்டிருக்கிறான். உலகின் எந்த திசையில் வாழும் இந்தியரும் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள முடியும் என்று அறிவித்திருந்தான். இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் பணம் அவனுக்கு விசயம் கிடையாது. எப்போதும் பணத்தின் பின்னால் ஓடுபவன் இந்த முறை அதற்காக ஓடவில்லை. அதன் காரணம் தங்சேயாவும், நவீனும்.

அவன் அந்த பரத நாட்டிய போட்டியை நடத்த காரணமே நவீன்தான். நவீனை இந்த நாட்டிற்குள் அழைத்து வருவதற்குதான் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் எந்த திறமையானவர்கள் இருந்தாலும் அது வெளிச்சத்திற்கு வர போவது இல்லை. போட்டியின் கடைசி நொடி வரை நவீன்னும் இங்கேயே இருக்க போகிறான்.

ஆனால் நவீன் பரதம் பற்றி அறியாதவன் இல்ல.

நவீனுக்கு சிறு வயதிலிருந்து பரதம் கற்றுக் கொள்ள ஆசை அவனுக்கு. ஆனால் விதியின் பயனாய் பெற்றோரை விபத்தில் பறி தந்துவிட்டு, சொந்தங்களாலும் ஒதுக்கப்பட்டு, பிச்சை எடுத்தும் வயிறு நிரம்பாத வாழ்க்கைக்கு உள்ளானவர்கள் அவனும் அவனின் அண்ணனும். தங்சேயா அவர்களை தத்தெடுத்ததன் பலனாய் அவர்களுக்கு செல்வ வாழ்வும், பசியற்ற வயிறும் பரிசாக கிடைத்தது. பிறகு நவீனால் அவன் ஆசைப்பட்ட பரதத்தையும் கற்றுக் கொள்ள முடிந்தது.

அந்த பரதம்தான் இப்போது பயன்பட்டது. சின்னையன் நடத்திய பரத நாட்டிய போட்டியின் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது நவீனாவின் பரதநாட்டிய வீடியோ. மற்ற சுற்றுக்களுக்கும், அரையிறுதி, கால் இறுதி, மற்றும் இறுதி சுற்றுக்களில் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தை சொல்லி இங்கே வரவும் இங்கேயே தங்கவும் அனுமதியும் பெற்று விட்டாள் நவீனா.

இந்த நாட்டில் தங்கினாலும் இங்கிருக்கும் போலிஸ் அதிகாரிகளிடம் மாட்டி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால்தான் சின்னையனின் சொந்தக்காரனான விஷாலின் உதவியோடு பாடிகார்ட் ப்ளஸ் கைட் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். விஷால் விசயத்தை லாவண்யாவிடம் சொல்ல, லாவண்யா தன் தோழி ரதியை தேர்ந்தெடுத்தது நமக்கும் தெரிந்த கதை.

எதிரிகளின் அருகே இருந்தால் அவர்களால் சட்டென்று கண்டறிய முடியாது என்பது நவீனின் எண்ணம். ஆனால் அவர்கள் ஏற்கனவே அறிந்து விட்டார்கள் என்பது இவன் அறியாத விசயம்.

சலிப்போடு எழுந்து குளிக்க சென்றான் நவீன். கண்டும் காணாமல் அரும்பியிருந்த தாடியையும், மீசையையும் க்ளீன் சேவ் செய்தான். பஞ்சடைத்த நெஞ்சகத்து உள்ளாடையையும், இன்ன பிற உள்ளாடைகளையும் அணிந்த பிறகு நைட்டி ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டான். பெண்ணாய் வேடமிட்டதில் இந்த நைட்டி மட்டும்தான் உருப்படி என்று நினைத்தான்.

விக்கை எடுத்து மாட்டிக் கொண்டவன் குளியலறையை விட்டு வெளியே வந்தான். ரூபி அவனை பார்த்துவிட்டு தன் சிரிப்பை காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.

"பாஸ்.. விக் மாறிடுச்சி..!" என்றாள்.

குழப்பத்தோடு கண்ணாடியை பார்த்தான். கரும் கூந்தல் இடுப்பு வரை இருந்தது. 

"உங்களோடது செம்பட்டை தலைமுடி.. அதுவும் இவ்வளவு நீளம் கிடையாது.. ஈசியா மாட்டிக்காதிங்க.." என்றாள்.

நவீன் மீண்டும் குளியலறைக்குள் நுழைந்து வெளியே வந்தான்.

ரதி கூரையில் தொங்கிக் கொண்டிருந்த சான்டிலியரை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கொலுசொலியோடு அங்கே வந்தாள் நவீனா.

ரதி திரும்பிப் பார்த்தாள். அழகாய் இருந்தாள் நவீனா. நேற்றைய அலங்காரத்தை விட இப்போதைய சாதாரண ரூபம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

'இவளா.?' குழப்பத்தோடு ரதியை பார்த்தவள் "ரூபி.." என்று அழைத்தாள். 

"ஒரிஜினல் லேடி வாய்ஸ் பாஸ் உங்களுக்கு.." வாய்க்குள் முணுமுணுத்தபடி அறையை விட்டு வெளியே வந்தாள் ரூபி.

"இவங்க நமக்கு பாடிகார்டா.?" நளினமாய் கழுத்தை அசைத்தபடி கேட்டாள்.

"அப்படிதான் சொன்னாங்க.. இருங்க நான் எதுக்கும் போன் பண்ணி ஒரு கன்பார்ம் பண்ணிட்டு வந்துடுறேன்.." என்றாள்.

ரதி எழுந்து நின்றாள். 

"ஹாய் மேடம்.." என்று தன் கையை நீட்டினாள்.

"நீங்க ஏதோ பத்திரிக்கையில வேலை செய்றதா சொன்னிங்களே.?" கண்களை இமைத்தபடி கேட்டாள் நவீனா.

"யெஸ் மேடம்.. ஆனா உங்களுக்கு பாடிகார்டா இருக்க வேண்டிய வேலையை தந்துட்டாங்கா.. நான் சமாளிப்பேன் மேடம்.." என்றவள் தனது கரம் அனாதையாக காற்றில் நிற்பதை உணர்ந்து கரத்தை கீழிறக்கினாள்.

தனது ஒற்றை அறைதலுக்கு இவள் தாங்க மாட்டாள் என்று கணித்த நவீனுக்கு இதுவும் நாடகம்தானே என்ற நினைவில் இந்த விசயம் பெரியதாக தோன்றாமல் போனது‌.

ரூபி போனோடு வந்தாள்.

"இவங்கதான்.." என்று உறுதி கூறினாள்.

சிறு கடுப்போடு விழிகளை அலைபாய விட்டாள் நவீனா.

"வாவ்.. மேடம்.. நீங்க ரொம்ப அழகாவும் க்யூட்டாவும் இருக்கிங்க.." உணர்ச்சி பொங்க கூறியவளை விசித்திரமாக பார்த்தாள் ரூபி.

"நேத்து இந்த லூசுக்கிட்டதான் மாட்டிக்கிட்டேன்.!" ரூபியிடம் சிறு குரலில் சொன்னான் நவீன்.

"உங்களுக்கு பாடிகார்டா இருக்க போறேன்.. நான் உங்களோட வாழ்க்கை பயணத்தை அப்படியே ஆர்டிக்கலா பப்ளிஷ் பண்ணிக்கலாமா.?" ஆர்வத்தோடு கேட்டாள் ரதி.

ரூபியும் நவீனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"அதை அப்புறமா பார்க்கலாமே.!" என்றபடி அவளின் முன்னால் வந்து அமர்ந்தான் நவீனா.

"நேத்து பேட்டி தரதா சொல்லி இருந்தேன். நீங்க எடுத்துக்கறதா இருந்தா எடுத்துக்கங்க.. ஆனா அதுக்கப்புறம் உங்களோட பத்திரிக்கை வேலைகளை நமக்குள்ள கொண்டு வராம இருங்க.." கண்டிப்புக் குரலில் சொன்னாள் நவீனா.

லேசாக வலித்தது ரதிக்கு. இதற்கு முன் பலரிடமும் இது போன்ற நிராகரிப்பு மொழிகளை பரிசாக பெற்றிருக்கிறாள். ஆனால் நவீனாவின் கண்களுக்கு காதலியாகி விட்ட காரணத்தால் அவள் இப்படி பேசியது வலித்து விட்டது.

இருந்தாலும் தனது தொழில் தர்மத்தை விடவில்லை ரதி. நவீனாவிடம் தனது கேள்விகளை கேட்டாள். அவள் சொன்னதை போனில் ரெக்கார்ட் செய்துக் கொண்டாள். 

"உங்களை போட்டோ எடுக்கலாம்ன்னு இருந்தேன் மேடம்.." என்ற ரதியின் முகத்தைப் பார்த்துவிட்டு நான்கைந்து புகைப்படங்களை கொண்டு வந்து தந்தாள் ரூபி.

"நவீனாவோட போட்டோஸ்.. நீங்க யூஸ் பண்ணிக்கங்க‌‌.." என்றாள்.

நவீன் அவளை முறைத்தான். ஆனால் ரூபி கண்டுக் கொள்ளவில்லை. 

ரதி புகைப்படங்களை வாங்கி பொக்கிஷம் போல தன் பேக்கிற்குள் வைத்துக் கொண்டாள்.

நவீனாவின் பரத நாட்டிய வாழ்க்கையை (உடான்ஸை) கேட்டு அறிந்து பிறகு நவீனாவின் மீதான மரியாதை சற்று அதிகரித்திருந்தது ரதிக்கு.

"இன்னைக்கு எங்க இரண்டு பேருக்கும் உங்க உதவி தேவையில்ல.. நீங்க நாளைக்கு வாங்க... நாங்க போன் பண்றோம்.." என்ற நவீனா எழுந்து தன் அறைக்கு சென்றாள்.

ரதியின் கைபேசி எண்ணை வாங்கிக் கொண்டாள் ரூபி.

"நான் ரூபி.. நவீனாவோட கசின் சிஸ்டர் அன்ட் பிரெண்ட்.." என்று கையை நீட்டினாள்.

'இவளுக்காவது மனசு வந்ததே.!' என்ற எண்ணத்தோடு அவளின் கையை பற்றிக் குலுக்கினாள் ரதி.

"அவங்க ஐஸ் ரொம்ப அழகா இருக்கு.. சர்ஜரி பண்ணாங்களா.?" ஆர்வ கோளாறை அடக்க இயலாமல் கேட்டாள் ரதி.

சாத்தியிருந்த நவீனின் கதவை பார்த்துவிட்டு திரும்பியவள் "இல்ல.. நேச்சுரல்தான்.." என்றாள்.

"ஓ.. ரொம்ப அழகு.!" என்றவள் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

"பாஸோட கண்ணை பார்த்து அழகா இருக்குன்னு சொல்றா.. அவை எத்தனை மனுசங்க சாவை சந்தோசத்தோடு பார்த்த கண்கள்ன்னு எனக்குதானே தெரியும்.!" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW


Post a Comment

2 Comments

  1. குட்டி எபியா போட்டுட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. இனி பெரிய எபி போடுறேன் சிஸ்

      Delete