Advertisement

Responsive Advertisement

மௌனம் 3

லாவண்யாவும் விஷாலும் ஒன்றாக அமர்ந்து தேனீரை பருகிக் கொண்டிருந்தார்கள். 

"என் பிரெண்ட் ரதி இன்னைக்கு போய் அவளைப் பார்த்துட்டு வந்திருக்கா.." என்றாள்.

விஷால் நிமிர்ந்துப் பார்த்துவிட்டு தலையசைத்தான்.

"புவினை மிஸ் பண்ணிட்டோம்.. ஆனா அதே கூட்டத்தை சேர்ந்த இவளை சக்கையா பிழிஞ்சி எடுக்கலன்னா நான் என் பேரை மாத்தி வச்சிக்கிறேன்.." என்றான் ஆத்திரத்தில் கொதித்த நெஞ்சத்தோடு.

"நீங்க உங்க கோபத்தை கட்டுப்படுத்துறது நல்லது.." எச்சரித்தாள் லாவண்யா.

"உனக்கு என்‌ கோபம் புரியாது லாவண்யா.. புவினை என் கையால சித்திரவதை பண்ணியிருந்தா கூட என் ஆத்திரம் தீர்ந்திருக்காது.. எத்தனை பேர் தெரியுமா.? அதுல எத்தனை சின்ன குழந்தைங்க தெரியுமா.? ஸ்கூல் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்.. இவங்களால நம்ம எகானமி எவ்வளவு பாதிச்சது தெரியுமா.? அவங்களால நம்ம நாட்டுல ஏற்பட்ட இழப்பு இன்னமும் சரியாகல.. இந்த முறை ஆணுக்கு பதிலா இரண்டு பெண்களை அனுப்பி வச்சா மட்டும் நாம அவங்களை விட்டுடுவோமா என்ன.? இந்த விசயத்துல, அந்த தீவிரவாத கூட்டத்தை ஒழிச்சி கட்டணும்ங்கற எண்ணத்தோடு நம்மோடு எட்டு நாடுங்க சேர்ந்திருக்கு.. அவங்களை பத்திய பாதி விவரம் நமக்கு தெரியும்.. மீதி விவரமும் தெரிஞ்ச பிறகு அவங்களோட நிழல் கூட இல்லாத அளவுக்கு அவங்களை அழிச்சாதான் எனக்கு கோபம் தீரும்.!" என்றான்.

சின்னையனின் நாட்டிய போட்டி பற்றிய செய்தி வந்த முதல் கணமே நடக்க இருக்கும் விசயத்தை யூகித்து விட்டான் தன சேகர். தனசேகரின் சந்தேக பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் இருந்தவன் இந்த சின்னையன். அந்த சந்தேக பட்டியலில் இருக்கும் யார் என்ன செய்தாலும் அதற்கான பின்புலத்தை உடனே விசாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் தனசேகர்.

சின்னையனின் போட்டியில் கலந்துக் கொள்ளும் ஒரு பெண் தங்சேயாவின் நாட்டில் இருந்து வருவதை அறிந்த உடனே தன் ஊர்ஜிதம் உறுதியாகி விட்டதை புரிந்துக் கொண்டான் தனசேகர். 

பிறகு என்ன அவர்கள் கண்ணாமூச்சி ஆட தொடங்கினார்கள். இவர்கள் கண்களை கட்டிக் கொண்டது போல நடித்துக் கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். 

ஆனால் அவர்களே நினைக்காதது இந்த பாடிகார்ட் விசயம். சின்னையனுக்கு தூரத்து சொந்தக்காரன்தான் விஷால். ஆனால் எதிரிகளின் அருகே இருந்தால் கண்டுப்பிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இவனிடமே வந்து பாடிகார்ட் ஏற்பாடு செய்து தர சொன்னார் சின்னையன். வலையில் வந்து மாட்டிய மீனை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மீன்காரனை போல அவனிடம் சரியென்று சொல்லிவிட்டு தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள் இவர்கள். ஏதோ ஒரு பாடிகார்ட் என நினைத்திருக்கும் தங்சேயாவின் குரூப்பிற்கு தெரியாது ரதியை இவர்கள் உளவு பார்க்க பயன்படுத்த போகிறார்கள் என்பது.

"அவ எங்கே போனாலும் எனக்கு உடனே தெரியணும் லாவண்யா.." தேனீரை அருந்தி முடித்துவிட்டு சொன்னான் விஷால்.

"நீங்க என்னையும் என் பிரெண்டையும் நம்பலாம் விஷால்.." நம்பிக்கை கூறினாள் லாவண்யா. 

விண்ணைத் தொடு பத்திரிக்கை நிறுவனம் நான்கடுக்கு மாடி கட்டிடத்தோடு நின்றுக் கொண்டிருக்கவில்லை. விரிசல் ஓடிக் கொண்டிருந்த ஒரு பழைய கட்டிடம் ஒன்றின் தரைதளத்தில் அமைந்திருந்தது. சமீபத்தில் பெயிண்ட் செய்யப்பட்டதால் விண்ணைத் தொடு என்ற போர்ட் மட்டும் அந்த இடத்தில் பளிச்சென்று இருந்தது.

விண்ணைத் தொடு பத்திரிக்கை வாரம் ஒரு முறை வெளியாகிக் கொண்டிருக்கும் இதழ்‌. பலவகை நல் விசயங்களையும் தாங்கி வெளியாகும் இதழ். மாவட்டத்திற்குள் மட்டும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அந்த இதழை மாநிலம் முழுக்க விற்பனையாகும் அளவிற்கு உயர்த்திவிட்டால் போதும் என்றிருந்தது பரந்தாமனுக்கு. ஆனால் மாவட்டத்திற்குள்ளேயே பேர் எடுக்காத பத்திரிக்கை அது என்பது பரந்தாமனும் ரதியும் அறிந்த விசயம்தான்.

ரதி தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினாள். செகண்ட் ஹேண்டடாக வாங்கப்பட்ட அந்த ஸ்கூட்டிக்கு பணம் வாங்க ரதி தன் அண்ணனிடம் எவ்வளவு கெஞ்சினாள் என்று அவளுக்குதான் தெரியும். 

தனது தோள் பையை எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள். உள்ளே நான்கு மேஜைகளோடு கூடிய நாற்காலிகள் இருந்தன. இரண்டு நாற்காலிகள் காலியாகதான் இருந்தன. அனைவரும் அனைத்து நாட்களும் அலுவலகம் வருவதில்லை. பரந்தாமன் ஒரு மேஜையின் பின்னால் அமர்ந்து தனது கம்ப்யூட்டரில் எதையோ தீவிரமாக டைப் அடித்துக் கொண்டிருந்தார். 

ரதி தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள். தனது போனில் இருந்த ரெக்கார்டை கவனமாக கேட்டாள். அந்த வீட்டில் இருந்தபோது நவீனாவின் கண்களை பார்த்தே கிறங்கி போய் விட்டதில் அவள் சொன்னது இவளின் மனதில் பதியவே இல்லை. ரெக்கார்டை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு நவீனாவை பற்றி அறிய அறிய ஆச்சரியமாக இருந்தது.

'நவீனா.. இவர் நளினத்திலும், நாகரீகத்திலும் நவீனமானவர்தான்! பரதத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த சிலரில் நவீனாவும் ஒருவர். இவரின் கண்களை பார்த்தால் காலங்களின் ஓட்டங்கள் பற்றி தெரியாது. இவரின் பரதத்தை பார்த்தால் நடனங்களுக்கு நாமும் ரசிகர் ஆவது உறுதியே.!

இந்திய பெண்ணாக இருந்தாலும் இவரின் சிறுவயதிலேயே இவரின் பெற்றோர் அயல்நாட்டிற்கு சென்றுத் தங்கிவிட்டதன் காரணமாக சொந்த நாட்டிற்கே விருந்தாளி போல வந்துள்ளார் நவீனா.

ஐந்து வயதில் பரதம் மேல் ஏற்பட்ட மோகம். பத்து வயதில் முதல் முறையாக மேடை ஏறிவிட்டார்.. இதுவரை எண்ணிலடங்கா அரங்கேற்றம், பல மேடைகளில் பரிசு, மூத்த கலைஞர்களிடம் பாராட்டு.. என்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறது நவீனாவின் பயணம். நம் நாட்டில் நடக்கும் பரத திருவிழா போட்டிக்காக தன் நாட்டை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறார். பரத திருவிழா போட்டியால் இவரின் திறமையை நாமும் அறிந்துக் கொள்ளலாம்..' எழுதி முடித்த ரதி புகைப்படங்களை போனில் புகைப்படமாக எடுத்து கட்டுரையின் நடு நடுவே சேர்த்தாள். நவீனாவின் சொந்த வாழ்க்கை பற்றி அவள் தந்த பேட்டியையும் அதில் எழுதி இணைத்தாள். 

"சார்.. உங்களுக்கு டாக்குமெண்ட் அனுப்பி வச்சிருக்கேன் பாருங்க.." என்று அமர்ந்த இடத்திலிருந்தே தகவல் தந்தாள்.

தீவிர யோசனையோடு நெற்றியை தேய்த்துக் கொண்டிருந்த பரந்தாமன் "ரதிம்மா இங்கே வா.." என்று அழைத்தார்.

அருகே வந்தவளிடம் கணினி திரையை சுட்டிக் காட்டினார்.

"இவர் தனசேகர். ஆறு மாசம் முன்னாடி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுப்பிடிக்க உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் காவல் படையோட ஹெட் இவர்தான்.." என்றார்.

ரதி புரிந்துக் கொண்டதாக தலையசைத்தாள்.

"ஆறு மாசமா இவரும் இவரோடு குரூப்பும் சைலண்ட் மோடுக்கு போயிட்டாங்க.. ஆனா இப்ப சமீபமாக.. கிட்டத்தட்ட ஒரு வாரமா மறுபடியும் இவங்களோட குரூப் ஆக்டிவாக இருக்க ஆரம்பிச்சிருக்கு.. இவங்க காரணம் இல்லாம செயல்பட ஆரம்பிச்சிருக்க மாட்டாங்க.. வேறு ஏதாவது பிரச்சனைன்னு நினைக்கிறேன். நீ இவங்களை பத்தியும், இவங்களோட ஆக்டிவிட்டி பத்தியும் கொஞ்சம் விசாரிக்கிறியா.?" என்றுக் கேட்டார்.

"ஓகே சார்.." தடுமாற்றமாக சொன்னாள். இப்படி திடீர் வேலை வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் பாடிகார்ட் வேலையில் சிக்க வைத்த லாவண்யாவை மனதுக்குள் திட்டினாள். ஆனால் நவீனாவின் கண்கள் ஞாபகத்தில் வந்து அந்த திட்டையும் பாதியிலேயே தடுத்து நிறுத்தியது. 

ரதிக்கு இருக்கும் பண பிரச்சனைக்கு உதவி புரியதான் இந்த பாடிகார்ட் வேலை என்று லாவண்யா சொன்ன நியாயமான காரணமும் கூட அவளின் திட்டை குறைத்தது எனலாம்.

"இவங்க எல்லாம் அந்த குரூப்ல இருக்காங்க.. பன்னிரெண்டு பேர் அந்த குரூப்ல.. நீ இதுல யாராவது ஒருத்தர்கிட்ட பேசி விசயம் கறந்துட்டு வந்தா கூட போதும்.." 

பன்னிரெண்டு பேரின் புகைப்படங்களையும் பார்த்த ரதியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. 'லாவண்யா எருமை.. நீயும் இந்த குரூப்லதான் இருக்கியா.? கஷ்டப்படாமலேயே வேலை ஈசியா முடிஞ்சதே.!' என்று தனக்குள் சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

ரதி பக்கம் திரும்பினார் பரந்தாமன்.

"ஒரு பத்திரிக்கையாளரா நமக்குன்னு சில கடமைகள் இருக்கு ரதி. போன முறை அத்தனை குண்டுவெடிப்பு நடந்தது. மக்களை கலவரப்படுத்த கூடாதுன்னு அரசாங்கம் எந்த விசயத்தையும் வெளியே விடல.. ஆனா நாம நினைச்சிருந்தா மக்களை இன்னும் கொஞ்சம் அதிகமா எச்சரிக்கை செஞ்சிருக்கலாம்.. நம்மை சுத்தி என்ன நடக்குதுன்னு கழுகு பார்வையோடு பார்த்து, இருட்டுல இருக்கும் தவறுகளையும், திறமைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரவன்தான் பத்திரிக்கைகாரன்.." என்றார்.

புரிந்ததாக தலையசைத்தாள் ரதி. தனசேகரின் குரூப்பை கண்காணிப்பது தனக்கு தரப்பட்ட எல்லைக் காக்கும் வேலையை போல உணர்ந்தாள்.

"சீக்கிரம் விசயத்தை கண்டுபிடிச்சிடும்மா.." என்றார்.

"ஓகே சார்.. நிச்சயம்.." என்றவள் தனது மேஜைக்கு வந்து அமர்ந்தாள். பெரியோரின் பொன்மொழிகளை தொகுக்க ஆரம்பித்தாள். 

விடுகதைகள், அதிகம் அறியப்படாத கேள்விகள் என்று தேடி தேடி தொகுத்தவள் மாலை ஐந்து மணியளவில் அங்கிருந்து புறப்பட்டாள். தன் வீடு இருந்த அப்பார்ட்மெண்டின் தரை தளத்தில் ஸ்கூட்டியை நிறுத்தியவள் லிப்டை தவிர்த்துவிட்டு படிகளில் ஏறினாள். நடந்தபடியே லாவண்யாவிற்கு போன் செய்தாள்.

"லாம்மா.. ஒரு ஹெல்ப் பண்றியா.?" 

"சொல்லு.." லாவண்யா தனது அறையில் இருந்த வால் பெயிண்டை ரசித்தபடியே பேசினாள்.

"உன் ஹெட் ஆபிஸ்ல இப்ப உனக்கு என்ன அசைன்மென்ட் தந்திருக்காங்க.?" தெரியாதவள் போல கேட்டாள்.

"ம்.. ஒரு சீக்ரெட் வொர்க்.. உன்கிட்ட சொல்ல முடியாது.."

அவளிடமிருந்து எப்படி பதிலை வாங்குவது என்று யோசித்தாள் ரதி. இவளிடம் எப்படி நவீனாவை துப்பறிய சொல்வது என்ற யோசனையில் இருந்தாள் லாவண்யா.

"ரதி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.?" என அவள் கேட்ட அதே நேரத்தில் "லா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.?" என்றுக் கேட்டிருந்தாள் இவள்‌.

"நீயே முதல்ல.." மீண்டும் இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

"ஓகே‌.. நான் பேசுறேன்.. நவீனா இருக்கா இல்லையா.? அந்த பொண்ணு இங்கே இல்லீகல் வேலை செய்ய போறதா தகவல் வந்திருக்கு.. நீ அவளை கண்காணிச்சி அவளோட நடவடிக்கைகளை பற்றிய தகவல்களை உடனுக்குடனா எனக்கு சொல்லணும்.." என்றாள் லாவண்யா.

ரதி அதிர்ச்சியோடு போனை பார்த்தாள். அந்த அழகான விழிகளை உடையவள் இல்லீகல் வேலை செய்பவள் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நவீனாவை எந்த விதத்திலும் கெட்டவளாக எண்ண முடியவில்லை. 

ரதிக்கு லாவண்யா மீதுதான் கோபமாக வந்தது. விசயத்தை முதலிலேயே சொல்லி இருந்தால் இப்படி பார்த்த உடன் கண்களின் அழகில் விழுந்திருக்க மாட்டேன்தானே என்று விம்மியது அவளின் நெஞ்சம்.

"ரதி.. இது சீக்ரெட் வொர்க்ப்பா.. நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.! நான் கூட்டத்தோடு கலக்க முடியாது. என்னை பத்தி பலருக்கும் தெரியும். நான் அந்த நவீனா பக்கத்துல நெருங்கினாளே மத்தவங்க எல்லோரும் உஷார் ஆகிடுவாங்க.. ப்ளீஸ் நீதான் எனக்கு எல்லாமே.! நான் உன்னை விட்டுட்டு வேற யார்கிட்ட இந்த உதவியை கேட்க முடியும்.?" என்றாள்.

"இல்லீகல்ன்னா என்ன வித இல்லீகல் வேலை.? அதையாவது சொல்லு.. மொட்டையா சொல்லாத.. அப்புறம் ஹெராயின் கடத்தினான்னு அவளை கைது பண்ண வர போலிஸ் என்னையும் சேர்த்து அரெஸ்ட் பண்ணிட போறாங்க.." என்றாள்.

எதிர் முனையில் மௌனம் காத்தாள் லாவண்யா.

"போன்ல சொல்ல முடியாதுப்பா.. நேர்ல வரியா‌.?" என்றாள்.

ரதி படிகளில் நின்றாள். சலிப்போடு மீண்டும் கீழே இறங்கினாள்.

"அரை மணி நேரத்துல வந்துடுவேன்.!" என்றவள் அடுத்த அரை மணி நேரத்தில் லாவண்யாவின் அறையில் இருந்தாள். ஆனால் அவள் தன் நிலையில்தான் இல்லை. நவீனா ஒரு தீவிரவாதி என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு அழகான கண்கள் என்று இப்போதும் அதையேதான் நினைத்து மனம் வாடினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


Post a Comment

2 Comments

  1. நவின் ஒரு ஆண் என்றே இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படி துப்பறிஞ்சு கண்டுபிடிச்சு ...

    ReplyDelete