லாவண்யாவின் முன்னால் அதிர்ச்சியோடு அமர்ந்திருந்தாள் ரதி. லாவண்யா சொன்னதை இன்னமும் அவளால் நம்பவே முடியவில்லை. நவீனாவின் அந்த அழகான கண்களை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தாள்.
"அந்த இரண்டு பொண்ணுங்களும் ரொம்ப டேஞ்சர் ரதி.. ஆனா இந்த முறை நாம அவங்களை ஜெயிக்க விடுறது கிடையாது.. அவங்களோட எல்லா ப்ளான்ஸையும் நாம முடிச்சி வைக்க போறோம்.." என்றாள்.
ரதி தோழியை பார்த்தாள். நல்ல உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்தாள் லாவண்யா. மிகவும் தீர்க்கமான கண்கள் அவளுடையது. கம்பீரத்தோடு சேர்ந்த அழகிற்கு சொந்தக்காரி அவள். ரதி அவளிடம் பொறாமைப்பட இன்னொரு விசயம் இது. ரதி கொஞ்சம் உயரம் குறைவு. ஆனால் அது இதுவரை எங்கேயும் நட்டத்தை ஏற்படுத்தித் தந்தது கிடையாது. லாவண்யா அளவுக்கு கம்பீரம் கிடையாது. எவ்வளவு முயன்றாலும் முகத்தில் இருந்த குழந்தைதனம் மறையவே இல்லை ரதிக்கு. ஏதாவது சிறு அபூர்வமான விசயத்தை கண்டாலும் பிரமிப்பில் மூழ்கிப் போய் விடுவாள் ரதி.
"அவங்கதான் தீவிரவாதின்னு தெரியுது இல்ல.. வந்து அரெஸ்ட் பண்ணி தூக்குல போட வேண்டியதுதானே.? ஏன் விளையாட விட்டு வேடிக்கை பார்க்கறிங்க.?" கோபத்தோடு கேட்டாள் ரதி.
"அவங்களை பத்திய முழு விவரமும் எங்களுக்கு வேணும் ரதி.. இது எட்டு நாடுகளோடுஒ போட்டிருக்கும் ஒப்பந்தம். கொஞ்சம் ப்ளான் பிசகினாலும் அப்புறம் இந்த கூட்டத்தை யாராலும் பிடிக்கவே முடியாது. நாங்க எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியும் முக்கியம்.." விளக்கமாக சொன்னாள் லாவண்யா.
"நீ செய்ற உதவி எங்களுக்கானது இல்ல.! நம்ம நாட்டுக்கானது. இந்த விசயத்துக்கு நாங்க எங்கள்ல ஒருத்தரை கூட பாடிகார்டா அனுப்பி இருக்கலாம். ஆனா அவங்களுக்கு சந்தேகம் வந்துட்டா ப்ளான் முழுசா சொதப்பிடும்.. அதனால்தான் உன்னை அனுப்பி வச்சிருக்கேன் நான். உன் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.." என்ற லாவண்யா எழுந்து சென்றாள்.
ஒரு நிமிடங்களுக்கு பிறகு வந்தவள் ரதியின் முன்னால் துப்பாக்கி ஒன்றை வைத்தாள். "இது உன் பாதுகாப்புக்கு.. ஆனா ரொம்ப ரகசியமா வச்சிக்க.. அவங்க முன்னாடி இதை டிராப் பண்ணிட்டா அடுத்த செகண்ட் நீ டெட்பாடி ஆயிடுவ.!" என்றாள்.
ரதி துப்பாக்கியை கவனித்துவிட்டு அவளை நிமிர்ந்துப் பார்த்தாள். "உன்னை என் பிரெண்டுன்னு நினைச்சேன்.!" என்றாள்.
லாவண்யா சிரிப்போடு ரதியின் தோளில் தட்டி தந்தாள். "அப்கோர்ஸ்.. ஐ யம் யுவர் பெஸ்ட் பிரெண்ட் டூட்.." என்றுச் சொன்னாள்.
"இது பாதுகாப்புக்கு தந்தியா.? இல்ல நான் மாட்டிக்கிட்டு சாகணும்ன்னு சொன்னியா, அதையாவது சொல்றியா.?" என்றாள்.
லாவண்யா கேலியாக அவளை பார்த்தாள். "என்னை நம்பலையா நீ.?" என்றாள்.
"சத்தியமா இல்ல.." என்றாள் ரதி.
"இது நம்ம நாட்டுக்காக.."
"ஆனா நான் ஏன்.? அந்த பொண்ணு கண்ணை பார்த்து முதல் செகண்ட்லயே விழுந்துட்டேன் தெரியுமா.? அவ தீவிரவாதிங்கறதையே என்னால ஏத்துக்க முடியல.." கவலையோடு சொன்னவளின் தோளை இறுக்கமாக பற்றினாள் லாவண்யா.
"நீ இப்படி சொல்ல கூடாது ரதி. இந்த நாடு நமக்கான பாதுகாப்பை எவ்வளவோ தந்திருக்கு. நாமும் நம்ம மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ஒத்துழைக்கணும்.. இந்த வேலையை செய்ய ஓராயிரம் பேர் காத்துட்டு இருக்காங்க. ஆனா நான் உன்னை தேர்ந்தெடுக்க காரணம் உன் மேல நான் வச்சிருக்கும் நம்பிக்கை.. உன்னால நிச்சயம் முடியும்.. நாம இந்த போராட்டதுல வின் பண்ணிட்டா உன் மேகசின்க்கு தேவையான நியூஸை வாரி வழங்கறேன் நான்.. ப்ராமிஸ்.." என்றாள்.
ரதி பெருமூச்சோடு அந்த துப்பாக்கியை கையில் எடுத்தாள். "ஆனாலும் அந்த புள்ளை கண்ணை நினைச்சி பீலிங்க்தான்.." என்று வருத்தமாக சொன்னாள்.
"நல்ல வேளை அவ ஆம்பளையா இல்லாம போனா.. இல்லன்னா உன் கிறுக்குத்தனத்துக்கு நீயே அவன்கிட்ட மக்களோட உயிரை தூக்கி தந்தாலும் தந்துடுவ.!" கேலியாக சொன்ன லாவண்யாவை முறைத்தவள் "பீ சீரியஸ்.. கிரஷ் இல்ல.. ஹஸ்பண்டாவே இருந்தாலும் நானா அவனை கொன்னாதான் எனக்கு திருப்தியா இருக்கும்.." என்றாள் கடுமையான குரலில்.
"உன் எண்ணம் மாறாத வரை நாம உருப்பட்டுடலாம்.." என்றவள் "இதைவிட முக்கிய விசயம் என்னன்னா.. இந்த விசயம் எப்பவும் வெளியே கசியவே கூடாது.. உன்னை பத்திரிக்கைக்காரியா நினைக்காம பிரெண்டா நினைச்சிட்டேன்.. ப்ளீஸ் நீயும் இந்த விசயத்துல அப்படியே இரு.. உன் பத்திரிக்கைக்கார புத்தியை காட்டிடாதே.! அப்புறமா சங்குதான் நமக்கு.!" என்று எச்சரித்தாள்.
"ச்சே.. பரவால்லப்பா.. நீ என்னை நம்பலாம். நான் இந்த விசயத்தை வெளியே சொல்ல மாட்டேன்.." என்றவளுக்கு மனதுக்குள் இதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. 'பாடிகார்ட் டாஸ்கை விட இது ரொம்ப கஷ்டமாச்சே.. இருந்தாலும் என்ன பண்றது.? நாட்டுக்காக.. மக்களுக்காகன்னு சொல்லிட்டாளே.!' என்று நினைத்தபடி எழுந்து நின்றாள்.
கிளம்ப எத்தனித்தவள் "நான் ஒருநாளைக்கு எத்தனை முறை உங்களுக்கு போன் பண்ணனும்.?" என்றுக் கேட்டாள்.
லாவண்யா இடம் வலமாக தலையசைத்தாள். "அவங்க சந்தேகப்படும் படி நாம நடக்க முடியாது ரதி. நீ எங்களுக்கு போன் செய்ய வேண்டாம். உன்னோடு மைக், கேமரான்னு எதையும் எடுத்துப் போக வேண்டாம். நீ உன் போனை உன்னோடு வச்சிட்டு இருந்தா போதும். நாங்க இன்னைக்கு ஈவ்னிங்கே உன் போனை ஹேக் பண்ணிட்டோம்.." என்றவளை கொலை வெறியோடு பார்த்தாள் ரதி.
"சாரி.. சாரி.. நான் மதியமே சொல்லலாம்ன்னு இருந்தேன்.. ஆனா மறந்துட்டேன்.! ப்ளீஸ் புஜ்ஜி குட்டி.. இந்த ஒரு விசயத்தை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க.." என்று தோழியின் தாடையை பற்றிக் கொஞ்சினாள்.
"அவ்வளவுதானா நான் போகட்டா.?" பற்களை கடித்தபடி கேட்டாள் ரதி.
"உன் போன் டிவென்டி போர் ஹவர்ஸ்ம் கண்காணிக்கப்படும். அதோட மைக், கேமரா, கால்ஸ் எல்லாத்தையுமே எங்களால கன்ட்ரோல் பண்ண முடியும். இது உன்னை உளவு பார்க்க இல்ல.. அந்த பொண்ணுங்களை உளவு பார்க்கதான்.." என்றாள்.
புரிந்ததாக தலையசைத்தாள் ரதி.
"சாரி.. டார்லூ.. பீ கேர்புல்.. அவங்க பக்கத்துல நீ இருக்கும் போது உன் போன் பத்து நிமிசத்துக்கு மேல ஆஃப் ஆகியிருந்தாலோ, இல்ல சந்தேகத்துக்குரிய விசயங்கள் உன்னை சுத்தி நடந்தாலோ நானும் என் சீனியர் ஆபிசர் விஷாலும் உன்னை தேடி வந்துடுவோம். நீ எங்களை நம்பலாம்.!" என்றாள்.
"ம்ம்.." என்றவள் வெளியே நடந்தாள்.
வீட்டுக்கு செல்லும் வழியில் பூங்கா ஒன்றின் முன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள். இருண்டுக் கொண்டிருந்த சூழ்நிலையை வண்ண விளக்குகளால் ஒளிரூட்டி வைத்திருந்தார்கள்.
ஊஞ்சல் ஒன்றில் சென்று அமர்ந்தாள். ஆறு மாதங்களுக்கு முன்னால் இந்த பூங்காவிலும் குண்டு வெடித்திருந்தது. இப்போது சமீபத்தில்தான் அதை மீட்டுக் கட்டி பூங்காவை திறந்திருந்தார்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்னால் வரை எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தாள். எத்தனை அழுகை குரல்கள், செய்தி சேனல்களையே பார்க்க முடியாத அளவிற்கு கொடூர மரணங்கள்.
"இந்த முறை அப்படி நடக்காது.. நாங்க உங்களுக்கு பணிஞ்சிட மாட்டோம்.." என்று வானம் பார்த்துச் சொன்னாள். இருண்ட வானத்தில் நவீனாவின் கண்கள் தோன்றி இவளைப் பார்த்தன.
"இல்ல.. அவை நான் விரும்பும் கண்கள் இல்ல.. ரொம்ப டேஞ்சரான விழிகள்.! அந்த அழகுல ரொம்ப அதிகமான ஆபத்து ஒளிஞ்சிட்டு இருக்கு.." என்று முனகினாள்.
ஊஞ்சலில் அவள் அருகே அமர்ந்திருந்த குழந்தையும் தாயும் இருளை கண்டுவிட்டு எழுந்து அங்கிருந்துச் சென்றார்கள்.
ரதிக்கு அம்மாவிடமிருந்து மிஸ்டு கால் வந்தது. தாமதமாக வீடு சென்றால் அண்ணி வழக்கம்போல திட்டுவாள். ஆனால் வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை.
இந்த லாவண்யாவை நம்பாமல் தானே ஏன் அந்த இரு பெண்களையும் கொன்று விட கூடாது என்று யோசித்தாள். அப்புறம் அவர்களின் பின்னால் இருக்கும் கூட்டத்தை கண்டறிய முடியாமல் போய் விடுமே என்ற கவலையோடு எழுந்து நின்றாள்.
"நிச்சயம் இந்த பொண்ணுங்களை கண்காணிக்க ஆயிரம் போலிஸ் இருக்கும். நீ சும்மா ஒரு ஒப்புக்கு சப்பாணி.! உன்னால அவங்களுக்கு எந்த யூஸூம் கிடையாது. லாவண்யா நமக்கு ஹெல்ப் பண்ணனும்ன்னு இப்படி ஒரு ஜாப் தந்திருக்கா.. முடிஞ்ச அளவுக்கு நாமும் டிரை பண்ணுவோம்.!" முனகிக் கொண்டே பார்க்கின் வாயிலை நோக்கி நடந்தாள்.
விளக்கு கம்பங்களை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தவள் யார் மீதோ மோதி நின்றாள். பார்வை கீழிறங்கியது. தொப்பி அணிந்திருந்த ஒரு இளைஞன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான். விளக்கின் வெளிச்ச பிரதிபலிப்பில் அந்த கண்கள் இரண்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தன. அவன் யாரென்று நொடியில் அறிந்து விட்டாள். பயத்தில் எச்சில் விழுங்கினாள்.
"சா.. ரி.. கவனிக்கல.." என்றவள் அவனை விட்டு விலகி நின்றாள். தன் ஸ்கூட்டியை நோக்கி நடந்தாள்.
கைகள் இரண்டும் நடுங்கியது. 'அவ பொண்ணு இல்ல பையன்.. இந்த கண்களை செத்தாலும் என்னால மறக்க முடியாது. ஆனா இவன் ஏன் பொண்ணு மாதிரி வேஷம் போட்டு வரணும்.? ரொம்ப பெருசா ப்ளான் பண்ணி இருக்காங்களோ.!' நினைக்கும் போதோ பயமாக இருந்தது அவளுக்கு.
' இவன் ஒரு பையன்னு லாவண்யாவுக்கு தெரியுமா தெரியாதா.. நிச்சயம் தெரிஞ்சிருக்கும்.. படுபாவி.. போன் ஹேக் பண்ணதை சொல்லாத மாதிரியே இதையும் என்கிட்ட சொல்லாம போயிட்டா.. இல்ல பையன்னு தெரிஞ்சா இவன்கிட்ட நான் விழுந்துடுவேன்னு நினைச்சி சொல்லாம போயிருப்பா..' என்று அந்த இரவில் தன் தோழியை திட்டித் தீர்த்தாள்.
ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்த பிறகு அந்த பார்க்கிற்குள் பார்த்தாள். அவனை காணவில்லை. நிம்மதி பெருமூச்சி விட்டபடி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
ரதி வீட்டிற்கு வந்த பிறகு வழக்கம்போல அண்ணி அர்ச்சனை செய்தாள்.
நவீன் வீட்டிற்கு வந்தபோது அவனை கோபத்தோடு எதிர்க் கொண்டாள் ரூபி.
"உங்களுக்கு என்ன பிரச்சனை பாஸ்.? எதுக்கு இப்ப வெளியே போனிங்க? அதுவும் இந்த கெட்டப்அப்ல.?" என்றுக் கேட்டாள்.
"சும்மா ஒரு வாக்.. நானும் மனுசன்தானே ரூபி.. எத்தனை நேரம்தான் அந்த சுடிதார் உள்ளேயும், புடவைக்கு நடுவிலேயுமே இருக்கறது.?" என்றுக் கேட்டான்.
ரூபி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.
"இது மட்டும் தங்சேயாவுக்கு தெரிஞ்சதுன்னா நீங்க அத்தோடு காலி.. நாம இரண்டு பேரும் அவருக்கு சர்வண்ட்ஸ்.. அதை மறந்துடாதிங்க.. நாம என்னைக்குமே புவின் அண்ணாவை போல மாற முடியாது.." என்றாள்.
நவீனுக்கு கோபத்தில் ரத்தம் சூடேறியது. "அமைதியா தூர போ ரூபி.. அண்ணனை ஞாபகம் செய்யாதே.! அவனை நான் எவ்வளவு மிஸ் பண்றேன்னு உனக்கு புரியாது.." என்றவன் தன் அறைக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டான்.
பசியில் உணவிட்டவன் தங்சேயா இல்லை அண்ணன்தான். புவினுக்கு வேண்டுமானால் தங்சேயா கடவுளாக இருக்கலாம். ஆனால் நவீனுக்கு அவனின் அண்ணன்தான் கடவுள்.
கோபத்தை குறைக்க குளித்தான். குளிர்ந்த நீர் ஓரளவுக்குதான் ஏக்கத்தைக் குறைத்துத் தந்தது. பெருமூச்சி தீராமலேயே அறைக்குள் வந்தான். கட்டிலில் விழுந்தவனின் நினைவில் பார்க்கில் பார்த்த ரதி நினைவுக்கு வந்தாள். அவளுக்கு அடையாளம் பிடிப்பட்டிருக்காது என்று நம்பினான். ஆனால் அவளின் அந்த முகம்.. அவனுக்கு நினைக்கும்போதே என்னவோ போல் இருந்தது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
2 Comments
ரதி சூப்பர். நவினை கண்டுபிடித்து விட்டாளா.
ReplyDeleteநன்றிகள் சிஸ்
Delete