ரதிக்கு கைகள் வலித்தது. கார் பார்க்கிங் நோக்கி நடந்துக் கொண்டிருந்தார்கள் நவீனாவும், ரூபியும். அவர்களை பின்தொடரவும் பிடிக்கவில்லை. அவர்களுக்கு சேவை செய்யவும் பிடிக்கவில்லை ரதிக்கு.
துப்பாக்கிக்கு வேலை தந்து விடு என்று உள்ளே ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. பொறுமை காக்க மிகவும் போராடினாள்.
கார் பார்க்கிங் அரை இருளில் இருந்தது. வரிசையாக நின்றிருந்த நூற்றுக்கணக்கான கார்களை தாண்டி நிறுத்தப்பட்டிருந்தது ரூபியின் கார்.
ரதிக்கு நடப்பது கூட சிரமமாக இல்லை. ஆனால் நவீனாவின் இடுப்பு அசைவை பார்க்கும்படி ஆனதே என்றுதான் கடுப்பாக இருந்தது. நவீன் வேண்டுமென்றே அப்படி நடப்பது போலிருந்தது.
'கேட் வாக் நடக்க இங்கே என்ன இவனுக்கு மேடையா போட்டு தந்திருக்காங்க.. லூசு பையன்..' என்று தனக்குள் கடுகடுத்தாள்.
"அட.. என் ஹேண்ட் பேக்கை காப்பி ஷாப்லயே வச்சிட்டு வந்துட்டேன்.. ஒரு நிமிசம் ஓடி வந்துடுறேன்.." என்ற ரூபி அங்கிருந்து ஓடினாள்.
நவீனா ரூபி சென்ற திசையை நோக்கி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். ரதிக்கு நிற்க பிடிக்கவில்லை. நிற்க கையின் பாரமும் விடவில்லை. நவீனாவை தாண்டிக் கொண்டு காரை நோக்கி நடந்தவளை கைப்பிடித்து நிறுத்தினாள் அவள்.
"ரூபி வந்த பிறகு போகலாமே.!" என்றாள் சர்க்கரை குரலில்.
"டேய் எருமை.. எனக்கு கை வலிக்குது.. விட்டு தொலைடா தடி மாடு.." என்று பற்களை கடித்தபடி திட்டினாள்.
அவளை வியப்போடு பார்த்தவன் "அப்படின்னா நேத்து நைட் என்னை அடையாளம் பார்த்துட்ட அப்படிதானே.?" என்றான் அவளின் முகத்தின் அருகே குனிந்து.
அந்த கண்களை எப்படி அவள் அடையாளம் காணாமல் போவாள்.? நெருங்கி நின்றிருந்தான். 'சுட்டு விடு ரதி..' என்றது மனம் மீண்டும்.
'உயிரே போனாலும் இவன் வந்த வேலை உனக்கு தெரியும் என்பது போல காட்டிக் கொள்ளாதே ரதி.. அப்புறம் லாவண்யாவும் அவளோட ஹெட் ஆபிசரும் போட்ட திட்டம் அத்தனையும் வீணா போயிடும்.!' என்று தன்னையே எச்சரித்துக் கொண்டாள்.
அவளின் மருண்ட விழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் மனதைப் படிக்கும் வழி தெரியவில்லை.
"கேட்ட கேள்விக்கு பதில்.!" என்றான் அதட்டலாக.
அவனின் தொடையில் ஒரு உதையை தந்தாள். அவன் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. தடுமாறி அவன் பின்னால் சாய, அவளும் தடுமாறி இந்த பக்கம் சாய்ந்தாள். அவள் சுதாரித்து நின்றாலும் கூட அவளின் கையில் இருந்த பைகள் அத்தனையும் தரையில் விழுந்து விட்டது.
"உனக்கு பரிசு பணம் வேணும்.. அதுக்காக பொண்ணா வேசம் போட்டுட்டு டேன்ஸ் ஆடுற.. கருமம்.!" என்று திட்டியவாறே பைகளை கீழிருந்து எடுத்தாள்.
அவள் தாக்கியதும் அவளை அங்கேயே முடித்து விட நினைத்திருந்தவன் இவளின் குற்றச்சாட்டு கண்டு அமைதியாகிக் கொண்டான். 'இப்படியா நினைச்சிருக்கா.? போனா போகுது.. பிழைச்சி போகட்டும்.!' என்று அவன் நினைத்த நேரத்தில் எழுந்து நேராக நின்றவள் அவனின் கையில் பாதி பைகளை திணித்தாள்.
"மாடு மாதிரி இருக்கியே.. பாதி பாரம் தூக்கி வந்தா என்ன குறையவா போற.?" என்றாள்.
முறைத்தான் அவன்.
"முறைக்காத. அப்புறம் நீ பொண்ணு இல்ல.. கிடா மாடுன்னு போட்டி நடக்கற ஸ்டேஜ்ல ஏறி மைக் பிடிச்சி சொல்லுவேன்.!" என்றாள் புருவத்தை உயர்த்தியபடி.
அவளை முறைத்தபடியே பைகளை பெற்றவன் பைகளின் கனத்தை உணர்ந்தான்.
"கார்க்கிட்ட போலாமா.?" என கேட்டவனுக்கு ரதி தலையசைக்கும் முன் துப்பாக்கி குண்டு ஒன்று சத்தமில்லாமல் பாய்ந்து வந்து நவீனாவை தாண்டி சென்று பின்னால் இருந்து தூணில் துளைத்து விழுந்தது.
"அம்மா.." கத்தியபடி மீண்டும் பைகள் அத்தனையையும் தரையில் விட்டு விட்டாள் ரதி. திடீரென்று அங்கிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்துப் போனது. ரதி கத்த இருந்த நேரத்தில் அவளின் வாயை பொத்தியது ஒரு கரம். கரத்திற்கு சொந்தக்காரனை தாக்க முயன்றாள். ஆனால் அதற்குள் அவளின் காதோரம் குனிந்த நவீன் "நான்தான்.. சத்தம் இல்லாம என்னோடு வா.. இல்லன்னா சுடுறவனோட துப்பாக்கிக் குண்டுக்கு செத்துப் போ.." என்றான் ரகசிய குரலில்.
அவளை பதில் சொல்லவே விடாமல் அவளை இழுத்துக் கொண்டு கார்களின் இடையே புகுந்தான். கார் ஒன்றின் பின்னால் அவளை அமர வைத்தவன் "இங்கேயே இரு.." என்று விட்டு கார்களின் இடையே புகுந்து ஓடினான்.
ரதி இடுப்பை தொட்டுப் பார்த்தாள். 'ரதி குட் சான்ஸ்..' என்று நினைத்தாள்.
நவீன் புடவையை தூக்கி சொருகிக் கொண்டான். இருட்டுக்கு சீக்கிரத்தில் பழகி விட்டது விழிகள். எத்தனை வருட பயிற்சி.!
சுற்றிலும் நோட்டம் விட்டான். எதிரே இருந்த கார்களின் பின்னால் ஒருவனின் உருவம் தெரிந்தது. அவன் இவனின் பக்கம் நகர்ந்து வந்தான். நவீன் வலப்பக்கம் நகர்ந்து அவன் அறியாதவாறு கார்களின் பின்னால் சென்றான். பிறகு அங்கிருந்து அவனின் முதுகை நோக்கி பாய்ந்து வந்து உதைத்தான். கீழே விழுந்தவனை எழ விடாமல் அவனின் கையிலிருந்த துப்பாக்கியையே பிடுங்கி அவனின் இடுப்பில் அழுத்தினான்.
"யார் நீ.? எதுக்கு என்னை குறி வைக்கற.?" என்றான் அவனின் ஆண் குரலில்.
நவீனின் முட்டியின் கீழ் சிக்கி இருந்தவன் எழுந்து விட நினைத்து திமிறினான். ஆனால் கடைசிவரை அவனால் முடியாமல் போனது.
"சொல்றியா இல்லை உன்னை இங்கேயே கொல்லட்டா.?" என்றான் மீண்டும் அதட்டலாக.
அதற்கும் ரதியும் அங்கே வந்து விட்டிருந்தாள். அவனின் சத்தத்தை வைத்துதான் அங்கு வந்து சேர்ந்திருந்தாள். தன் துப்பாக்கியின் குறியை அவள் சரி பார்த்திருந்த நேரத்தில் நவீனின் பிடியில் கிடந்தவன் ஏதோ ஒரு பாஷையில் என்னவோ சொன்னான். உடனே நவீன் அவனை படபடவென்று சுடுவது மிக மெல்லிய சத்தமாக கேட்டது.
ரதியின் கையில் இருந்த துப்பாக்கி அவளின் உள்ளங்கை வியர்வையின் பிசுபிசுப்பில் நழுவுவது போலிருந்தது.
"நகராம நில்லு வெள்ளை கொக்கு.!" என்று காற்றின் குரலில் எச்சரித்தான் நவீன்.
'எனக்கா இந்த அடைமொழி.? இது ஏன் இவ்வளவு கேவலமா இருக்கு.?' என்று ரதி யோசித்த நேரத்தில் அவளை கீழே தள்ளினான் நவீன். அவனும் அவள் மீதுதான் விழுந்திருந்தான்.
"உன்கிட்ட துப்பாக்கி இருக்கா.?" என கேட்டவன் அவனே அவளின் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டான்.
'லாவண்யாவோட மொத்த பிளானும் சொதப்பல்.. நான் சாக போறேன்..' கடைசி நேர எண்ணமாக அவள் நினைக்க நேரத்தில் அவளின் துப்பாக்கி சத்தமில்லாமல் வெடித்தது. ரதி தன் மீது விழுந்து கிடந்தவனை பார்த்தாள். அவன் நேர் எதிரே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது. ஆனால் அவன்
எழுந்தால்தானே அவளால் எதிரில் இருப்பவன் யாரென்று பார்க்க முடியும்.?
மூன்று குண்டுகளை தீர்த்து விட்டு எழுந்து நின்றான் நவீன். ரதி கை ஊன்றிய நேரத்தில் அவனே அவளின் தோளை பற்றி எழுப்பி நிறுத்தினான்.
"உனக்கு ஏது துப்பாக்கி.?" என அவன் கேட்ட நேரத்தில் அங்கே விளக்கு பளிச்சென்று ஒளிர ஆரம்பித்தது. அந்த பார்க்கிங்கிற்குள் நான்கைந்து தடியர்கள் ஓடி வந்தனர்.
"ஆர் யூ ஓகே நவீனா.?" என்று கேட்டபடி அருகே வந்தான் ஒருவன்.
நவீன் தன் கையிலிருந்த துப்பாக்கியையும் ரதியையும் மாறி மாறி பார்த்தான். துப்பாக்கியை தன் இடுப்பில் சொருகிச் சேலையின் தலைப்பை இழுத்து விட்டுக் கொண்டான்.
ரதி அவனை கலவரமாக பார்த்தாள். அவனை தாண்டிக் கொண்டு பின்னால் பார்த்தாள். நடு வயது மனிதன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்தான். இந்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவனை போலவே இருந்த இன்னொருவனும் அதே போல ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
"இந்த பாடியை மறைச்சிடுங்க.." என்ற நவீன் ரதியின் டாப்பின் ஓரத்தை எடுத்து தன் உள்ளங்கை ரத்தத்தை துடைத்தான். ரதி பயந்து விட்டாள் என்பதுதான் உண்மை. ஒரு கொலையை அவள் நேரில் பார்த்தது இதுவே முதல் முறை.
அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த பிணங்களை அப்புறப்படுத்தி, துளி ரத்தம் கூட இல்லாதவாறு சுத்தம் செய்தார்கள் அந்த தடியர்கள். சுவரில் பதிந்திருந்த அந்த ஒற்றை துப்பாக்கி குண்டையும் கூட அங்கிருந்து எடுத்து விட்டு அதன் மீது சாந்து பூசினார்கள். எல்லாம் படபடவென்று, எதற்கும் தயாராய் இருப்பவர்கள் வேலை செய்வது போல, இதையெல்லாம் ஏற்கனவே ஒத்திகை பார்த்தது போல செய்து முடித்தார்கள். ரதி சந்தேகத்தோடு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ரூபி அங்கிருந்து சென்று பன்னிரெண்டு நிமிடங்கள் ஆகியிருந்தது. அதற்குள் இத்தனையும் சாத்தியமா என்று ஆச்சரியப்பட்டாள்.
அவள் ஆச்சரியமாக நின்ற வேளையிலேயே அந்த தடியர்கள் அங்கிருந்த கிளம்பியும் சென்று விட்டார்கள். ரதி இறைத்திருந்த பைகளை கைகளில் எடுத்தான் நவீன்.
ரதி சிலையாக நின்று அவனைப் பார்த்தாள். எதுவும் நடவாதது போல இருக்க இவனால் எப்படி முடிகிறது என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.
நவீன் திரும்பி இவளின் திசை பார்த்தான். "மேடம்தான் பாடிகார்ட்ன்னு நினைக்கிறேன்.." என்றான்.
ரதி புரியாமல் அவனைப் பார்த்தாள். "இதை வந்து தூக்கிக்கோ.." என்றான் அவளை ஆழமாக பார்த்தபடி.
ரதி இயக்கி விட்ட பொம்மை போல ஓடி வந்து அவனின் கையிலிருந்த பைகளை வாங்கிக் கொண்டாள். அதே சமயத்தில் ரூபியும் அங்கே வந்து சேர்ந்தாள்.
"சாரிப்பா.. பேக் காப்பி ஷாப்ல இல்ல.. ஸ்லிப்பர் ஷாப்ல இருந்திருக்கு. தேடி எடுத்துட்டு வந்தேன்.." என்றாள். வியர்வையில் நனைந்திருந்தது அவளின் நெற்றி.
"ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்கிறேனேன்னு ஓடி வந்தேன்.. நீங்க கார்ல உட்கார்ந்து இருக்கலாமே.!" என்றாள்.
"பாடிகார்ட் மேடத்துக்கு இங்கே நிற்கதான் பிடிச்சிருக்காம்.!" என்ற நவீனா ரதியின் முகத்தை யோசனையோடு பார்த்துவிட்டு முன்னால் நடந்தாள்.
மூவரும் வீட்டிற்கு வந்தபோது மணி பகல் ஒன்றை தாண்டி விட்டிருந்தது. ரூபி தன் அறையில் இருந்தபடி "ரதி.." என்று இவளை அழைத்தாள்.
"உங்க டாப்ல ப்ளட் ஸ்டெயின் இருக்கு.. நீங்க என் பாத்ரூம் யூஸ் பண்ணிங்கறதா இருந்தா யூஸ் பண்ணிக்கலாம்.. அங்கேயே சேனிடரி நாப்கின்ஸ் கூட இருக்கு.!" என்றுவிட்டு வெளியே நடந்தாள்.
ரதி நெற்றியில் அடித்துக் கொண்டாள். நவீனின் மீது கொலைவெறி வந்தது. அவனின் கை வண்ணத்தால் கறையாகி இருந்த டாப்பின் ஓரங்களை தன்னால் முடிந்த அளவுக்கு சுத்தம் செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.
ரூபியின் அறையின் உள்ளே சாத்தியிருந்த கதவின் மேல் சாய்ந்து நின்றிருந்த நவீன் இவளை தினுசாக பார்த்தான்.
"யார் நீ.?" என்றான் அவளின் துப்பாக்கியை காட்டி.
"பாடிகார்ட்.." அவனின் அருகே வந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டாள்.
"பாடிகார்டுக்கு துப்பாக்கி எதுக்கு.?" உதட்டை சுழித்தபடி கேட்டவனை நக்கலாக பார்த்தவள் "உங்களுக்கு ஆபத்து வந்தா அப்போது காப்பாத்ததான் மேடம்.!" என்றாள்.
"எனக்கென்னவோ நீ என்னை காப்பாத்திய மாதிரி தெரியல.. நான்தான் உன்னை காப்பாத்தி இருக்கேன்.!" என்றான் அவன் நக்கல் குறையாமல்.
"உன் பாதுகாப்புக்குதான் குண்டாஸ் இருக்காங்களே.!" என்றவளின் கழுத்தை பற்றினான்.
"யார் நீ.? என்னை உளவு பார்க்கறியா.?" என்றவனின் கையை பற்றி வளைத்தவள் அவன் மீண்டும் தாக்கும் முன் அவனின் நெஞ்சில் துப்பாக்கியை பதித்தாள்.
"நான் சாதாரண பத்திரிக்கைகாரி.. அதுவும் அது ஓர் ஓடாத பத்திரிக்கை.. எனக்கு செலவுக்கு பணம் பத்தலன்னுதான் இந்த பாடிகார்ட் வேலைக்கு வந்திருக்கேன்.! நீ எப்படி நாசமா போனாலும் எனக்கு பிரச்சனை கிடையாது.. போர்ஜரி மூலமா போட்டியில் ஜெயிச்சாலும் சரி.. உன் பொறாமைக்காரங்க கையால குண்டடிப்பட்டு செத்தாலும் பிரச்சனை கிடையாது.." என்றாள் கடின குரலில். ஓடாத பத்திரிக்கை என்று சொன்னது அவளின் நெஞ்சில் வலியை தந்தது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
0 Comments