Advertisement

Responsive Advertisement

மௌனம் 8

 அந்த உணவகத்தில் ஒரு அறையை தவிர மீதி அனைத்தும் காலியாகதான் இருந்தது. அந்த ஒற்றை அறையில் ரூபி இருந்தாள். 

ஸ்டெலாஸ்டியனின் முன்னால் அமர்ந்திருந்த ரூபி மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகியபடி அவனை வெறித்தாள். அவளை விட மூன்று மடங்கு உருவத்தை கொண்டவன் அவன். ஒன்பது மொழிகளை கற்று வைத்திருந்தான். மேற்கு நாடு ஒன்றை பிறப்பு நாடாக கொண்டவன். ஆனால் மொத்த உலகத்தோடு சேர்த்து தனது நாட்டையும்தான் வெறுத்துக் கொண்டிருந்தான்.

தண்ணீர் பாட்டிலை மேஜையின் மீது வைத்தாள் ரூபி.

"கார் பார்க்கிங்கிற்கு ஆள் அனுப்பி இருக்க நீ.!" என்றாள் கோபத்தோடு.

தனியாய் இருந்த நேரத்தில் கார் பார்க்கிங்கில் நடந்ததை பற்றி ரூபியிடம் சொல்லி விட்டிருந்தான் நவீன். ஆனால் தன்னை கொல்ல ஆள் அனுப்பியது யாரென்று தனக்கு தெரியாது என்றும் சொல்லியிருந்தான். ஆனால் ரூபிக்கு அது யாரென்று நன்றாக தெரியும். அதனால்தான் இவனை தேடி வந்திருந்தாள்.

"தங்சேயா என்கிட்ட சொன்ன ஒரே விசயம் நவீனை கண்காணிக்கறது மட்டும்தான்.." என்று ஸ்டெலாஸ்டியன் சொல்லவும் கோபத்தோடு எழுந்து நின்றாள் ரூபி.

"நீ இங்கே வந்திருக்கன்னு நவீனுக்கு தெரியாது.. அதுவும் அவரையே உளவு பார்க்க வந்திருக்கன்னு தெரிஞ்சா அடுத்த செகண்ட் நீ காலி.. புவின் அண்ணாக்கிட்ட எதிர்பார்த்த எந்தவித அனுதாபத்தையும் இவர்கிட்ட எதிர்பார்க்காத.!" என்றாள்.

சிரித்தபடியே எழுந்து நின்றான் அவன்.

"யாருக்கு வேணும் அவன் அனுதாபம்.? அவனை போட்டு தள்ளுறதுதான் என்னோட ஒரே குறிக்கோள்! தங்சேயா இவனை மாதிரி ஒருத்தனை நம்புறது தப்புன்னு நான் அவருக்கு புரிய வைப்பேன்! அப்புறம் அவரே ஆர்டர் போடுவாரு, இவனை சுட்டு தள்ள சொல்லி.! வந்த உடனே பொண்ணை பிடிச்சிட்டான்.! இவனை நம்பினா நம்ம கூட்டமே அழிஞ்சிடும்.. நீ அவனை விட்டுட்டு உன் வேலையை மட்டும் பாரு.. அவன் செத்த பிறகு அவன் உனக்கு என்னவா இருந்தானோ அதுவா நானே இருக்கேன்.." என்றவன் எழுந்து நின்று அவளின் கையை தடவினான். ஸ்லீவ்லெஸ் அணிந்திருந்தவளுக்கு அவன் தொட்ட இடம் அருவருப்பாக இருந்தது.

அவனின் கையை தட்டி விட்டாள். அவன் சொன்னது கேட்டு கோபமாக வந்தது. புவினும் சரி நவீனும் சரி அவளுக்கு சகோதர பாசத்தைதான் தந்துள்ளனர். அனாதையாக உணர்ந்தவளுக்கு இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் நாட்கள் அனைத்தும் நரகமாகி இருக்கும். நவீன் எதிரிகளிடம் துளியும் ஈவு இரக்கம் இல்லாதவன்தான். ஆனால் பயிற்சியின் போது கூட ரூபியை காயப்படுத்தியது கிடையாது. 

ஸ்டெலாஸ்டியன் உளவு பார்க்க வந்த விசயம் மற்ற ஆட்களின் மூலம் இவளுக்கும் தெரியும். நவீனுக்கு தெரிந்தால் பிறகு நவீனுக்கும் தங்சேயாவுக்கும் இடையில் பிரச்சனைகள் வருமே என்று சொல்லாமல் விட்டிருந்தாள். ஆனால் ஸ்டெலாஸ்டியன் கொலை வரை சென்றுள்ளான் என்பதை அறிந்த பிறகு அவளால் எப்படி அமைதி காக்க முடியும்.?

"இப்படியே கிளம்பி போயிடு செலா.. இல்லன்னா நவீனுக்கு பதிலா நானே உன்னை போட்டு தள்ளிடுவேன்.! இதுவரை இருபத்தியெட்டு பெரும்புள்ளிகளை போட்டு தள்ளிய எனக்கு உன்னை மாதிரி ஒரு சுண்டைக்காயை சுட்டு தள்ளுறது மேட்டரே இல்ல.. அதுவும் இல்லாம இப்ப நாம இருக்கறது என் நாட்டுல.. இங்கே உன்னை விட எனக்கு பலம் அதிகம்கறதை மறந்துடாத.!" எச்சரித்தாள்.

எதிரில் இருந்தவன் சிரித்தபடியே சிகரெட்டை பற்ற வைத்து இழுத்தான்.

"உன் நாடா.?" என்றுக் கேட்டான்.

"நம்ம இயக்கத்துக்கு சொந்த நாடு கிடையாது.. அதை மறந்துடாதே.! இங்கே நீ வந்தது இந்த நாட்டை அழிக்கதானே தவிர உன் நாடுன்னு உரிமை கொண்டாட இல்ல.. உன் பாதையிலிருந்து தவறி போகாதே.! அப்புறம் நான் நவீனோடு சேர்த்து உன்னையும் கொன்னுடுவேன், நீ எவ்வளவு செக்ஸியா இருந்தாலும் நான் உன்னை மன்னிச்சி விட மாட்டேன்.!" என்றான் புகையை இழுத்து விட்டபடி.

இவனை கொன்று விடலாம் என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் இவன் தங்சேயாவின் முதல் பிரிவு கையாட்களில் ஒருவன். இவனை கொல்வது தங்சேயாவுக்கு நேரடி பகையாவது போல என்பதால் மட்டுமே அங்கிருந்து அமைதியாக கிளம்பினாள்.

நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தவளை தன்னை மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி.

நவீனாவின் உடம்புதான் அசைந்துக் ஆடிக் கொண்டிருந்ததே தவிர அவளின் உள்ளம் முழுக்க மதியம் நடந்த கார் பார்க்கிங் விசயத்திலேயே இருந்தது.

துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்தது தனக்கு அல்ல என்று நவீனுக்கு தெளிவாக தெரியும். அது ரதிக்காகதான். அவள் தனது பாடிகார்டாக இருப்பது பிரச்சனையில்லை என்றும் தெரியும். அவன் அந்த கடையில் அவளை வெறித்து பார்த்திருக்க கூடாது. அந்த சில நொடி பார்வைதான் அவளுக்கு எமனாய் மாறி விட்டது என்று புரிந்தது. யாரோ தன்னை நெருக்கமாக கண்காணிக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு அது யாரென்றுதான் தெரியவில்லை. ரதியை கொல்ல முயன்றவர்களும் அனுப்பியது யாரென்று சொல்லாமலேயே இறந்து விட்டிருந்தனர். 

அவன் ஏற்கனவே நிறைய குழப்பத்தில் இருந்தான். எவ்வளவு குழப்பமாக இருந்தாலும் கூட தன்னால் ரதி இறப்பதை அவன் துளியும் விரும்பவில்லை. அவனுக்கு அவள் மீது எந்த பிடிப்பும் கிடையாது. ஆனாலும் கூட அவளை பலி தர விரும்பவில்லை.

ரதி தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவன் அவளை கண்டுக் கொள்ளாமல் நாட்டியம் ஆட முயன்றான். 

கடையில் இருந்த நேரத்தில் அவளை ஏன் ரசித்தோம் என்று யோசித்து குழம்பினான்.

"நவீனா ஸ்டாப்.. ஸ்டெப் மாறிடுச்சி.." என்றாள் அவளை கவனித்துக் கொண்டிருந்தவள்.

"சாரி மேடம்.." என்றவன் மீண்டும் முதலில் இருந்து ஆட ஆரம்பித்தான். ரதி மட்டும் ஆடாமல் அசையாமல் நின்று அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஸ்டெலாஸ்டியன் தங்சேயாவிற்கு போன் செய்தான்.

"பாஸ்.. நீங்க சந்தேகப்பட்டது உண்மைதான்.! அவன் இங்கே வந்தது வெட்டியா பொழுதை கழிக்கதான்.. ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு இருக்கான்.." இவன் சொன்னதும் அந்த பக்கம் ஏதோ பொருள் தரையில் விழுந்து உடையும் சத்தம் கேட்டது.

"லவ்.? அவனை கொன்னுடு ஸ்டெல்லா.! அவனும் அவங்க அண்ணனை போலதான்.! ச்சே.. நான் புவினை எவ்வளவு நம்பினேன் தெரியுமா.? என் மகன்.. இந்த குழுவுக்கு அவன்தான் என்னோட அடுத்த வாரிசுன்னு நம்பிட்டு இருந்தேன்.! ஆனா என்னை முழுசா ஏமாத்திட்டான்.. அவன் ஏமாத்தியதுக்கு அன்னைக்கே இவனையும் நான் கொன்னிருக்கணும்.. ஆனா வளர்த்த தோசத்துக்கு விட்டுட்டேன்.. இவனும் அவங்க அண்ணனை போலவே லவ்தான் பண்ணுவேன்னு இருந்தான்னா கொன்னுடு.. அவனோட வேலையை செய்ய என்கிட்ட ஆயிரம் பேர் உண்டு. ஆனா அவங்க அண்ணனால நம்ம கூட்டத்துக்குள்ள விஷம் விழுந்த மாதிரி இவனாலும் விஷம் பரவ வேணாம்.." என்றார் அவர் கண்டிப்போடு.

புவின் இது போல காதலித்த ஒரே காரணம்தான் அந்த குழுவையே சிதைத்து விட்டதாகவும், குழுவில் இருந்த பலரும் அவனால் கெட்டு விட்டதாகவும் நம்பினார் தங்சேயா.

"புரிஞ்சது சார்.. நான் டைம் பார்த்து முடிச்சிடுறேன்.!" என்றான் இவன்.

"நோ.. வெயிட் பண்ணு.. அவன் அங்கே போன வேலையை எந்த அளவுக்கு முடிக்கறான்னு பார்த்துட்டு அப்புறம் போட்டு தள்ளிடு.. ஆனா என்ன ஆனாலும் இதுக்கு பின்னாடி நான்தான் இருக்கேன்னு நவீனுக்கு தெரியவே கூடாது. ஏனா அவன் என் புவினோட செல்ல தம்பி.. புரிஞ்சது இல்லையா.?" என்றுக் கேட்டார்.

"ஓகே சார்.." என்றுவிட்டு கைபேசி இணைப்பை துண்டித்தான் ஸ்டெலாஸ்டியன்.

ரூபி தன் ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல் தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள். ஸ்டெலாஸ்டியனை கொல்ல துடித்தது அவளின் மனம். ஆனால் தங்சேயாவிற்கு கட்டுப்பட்டாள் அவள். ஆனாலும் கூட என்ன நடந்தாலும் நவீனை பலி தர விரும்பவில்லை. 

இந்த பிரச்சனையை நவீனுக்கு தெரியாமல் முடிக்க வேண்டியதாக இருந்தது அவளுக்கு. என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

காவல் கண்காணிப்பு அறை ஒன்றில் கொட்டாவி விட்டபடி அமர்ந்திருந்தான் ராகவ். ரதியின் போனில் பதிவாகி கொண்டிருந்தது அனைத்தும் அவனின் செவிகளில் வந்து விழுந்துக் கொண்டிருந்தது. அதை சிரத்தை இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

"வந்தது பொண்ணுங்க இல்ல..‌ ஒரு பொண்ணும் ஒரு பையனும்.! அதுக்கப்புறமும் இவங்க ஏன் என்னை இந்த போனை கண்காணிக்க சொல்றாங்க.?" சலிப்பு தீராமல் கேட்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


Post a Comment

0 Comments