நவீனா நாட்டியத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது ரதி காரை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.
"ஏய்.!" ரதியை அழைத்து நிறுத்தினான் நவீன்.
நின்றவளிடம் தனது பேக்கை வீசியவன் "தூக்கிட்டு வா.." என்றுவிட்டு நடந்தான்.
ரதி எரிச்சலோடு அவனை முறைத்துவிட்டு பின்தொடர்ந்தாள். அவனின் தலையை உடைத்து வைக்க வேண்டும் போல கோபம் வந்தது அவளுக்கு.
ரதியை இரவு பத்து மணிக்குதான் வீட்டிற்கு அனுப்பினான் நவீன்.
ரதி நேராக லாவண்யாவின் வீட்டிற்குதான் சென்றாள்.
"நான் இனி அந்த வீட்டுக்கு போக மாட்டேன்.. அவன் போர்ஜரி பண்ணிட்டு இருக்கான்.." என்று புலம்பினாள்.
லாவண்யா சோர்ந்து போய் அவளை பார்த்தாள்.
"ரதி.. நாங்க முக்கியமான ஒரு தீவிரவாதியை தேடிட்டு இருக்கோம். அந்த குரூப் இந்த இரண்டு பொண்ணுங்களையும் நமக்கு தூண்டிலா போட்டுட்டு வேற எங்கேயோ மீன் பிடிக்கற மாதிரி பீல்.. ஸ்டெல்லான்னு ஒருத்தன்.. அவன் ஒரு பயங்கரமான தீவிரவாதின்னு எங்களுக்கு இன்பர்மேசன் வந்திருக்கு. நாங்க அவனை தேடிட்டு இருக்கோம். அதனால இந்த நவீனா மேட்டர்ல எங்களால அவ்வளவா டைம் வேஸ்ட் பண்ண முடியல ரதி.. உனக்கு எங்க நிலமை புரியும்ன்னு நம்புறேன்.. அவன் ஏதோ ஒரு வேடதாரி.. அந்த கூட்டத்துக்கு அடிமட்டத்துல வேலை செய்றவன்.! உன்னால அவனை சமாளிக்க முடியாதா.?" என்றுக் கேட்டாள்.
லாவண்யாவின் முகத்தில் இருந்த சோர்வு ரதியையும் வருத்தியது. ஆனால் அதற்காக நவீனோடு போராட விரும்பவும்வில்லை.
"கார் பார்க்கிங்கில என்ன ஆச்சின்னு உனக்கு தெரியுமா.? கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தா அவனோட சேர்ந்து நானும் செத்திருப்பேன்.." என்றாள் கோபத்தோடு.
"ம்.. ராகவ் சொன்னாரு.. ஆனா அது மாதிரி மறுபடி நடக்காது.. சின்னையன் அந்த நவீனாவுக்குன்னு பர்சனல் பாடிகார்ட்ஸ் போட்டிருக்கான். அவங்க தூரத்துல இருந்து அவனையும் உன்னையும் கண்காணிப்பாங்க.. இன்னைக்கு நடந்த மாதிரி மறுபடியும் நடக்காது.. பயப்படாதே.!" என்றாள்.
"என்னமோ சொல்ற.." என்று இழுத்தவளின் கையை எடுத்தாள் லாவண்யா. தோழியின் புறங்கையின் மீது வருடி விட்டாள்.
"நீ என்னை நம்பலாம்.. இன்னைக்கு நடந்தது ஆக்சிடென்ட்ன்னு நினைச்சிக்க.. நவீனாக்கிட்ட கவனம் செலுத்துற அளவுக்கு இல்ல.. அது வெறும் புகை சிற்பம் போல.." என்றாள்.
ரதிக்கு உறுத்திக் கொண்டேதான் இருந்தது.
"அந்த நவீனாகிட்டயும் தப்பு இருக்குன்னுதான் தோணுது.."
"ஓகே.. நான் இதை விஷால் சார்கிட்ட சொல்றேன்.. அவர் முடிவு எடுப்பார். நீ அது வரைக்கும் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்க.."
ரதி சரியென்று தலையசைத்தாள். எழுந்து நின்றவள் லாவண்யாவின் அறையை நோக்கி கிளம்பினாள்.
"ஏன்.?" ரதியை நிறுத்தி குழப்பத்தோடு கேட்டாள் லாவண்யா.
"இந்த டைம்க்கு என்னால என் வீட்டுக்கு போக முடியாது லா.. எங்க அண்ணிக்கிட்ட திட்டு வாங்க இன்னைக்கு என்னால முடியாது.. ஏற்கனவே சோர்ந்துட்டேன்.."
லாவண்யா புரிந்துக் கொண்டவளாக பெருமூச்சி விட்டாள். "சரி வா.. சாப்பிட்டுப்ப.." என்று அழைத்துச் சென்று அவளுக்கும் தனக்கும் உணவு பரிமாறினாள்.
இரவு தோழியின் அருகில் படுத்திருந்த ரதி "நீங்க ரொம்ப ஸ்லோவா வேலை செய்றிங்க.. சந்தேகத்துக்குரியவங்க எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாவே பாதி பிரச்சனை தீர்ந்துடும்.." என்றாள் கூரையை பார்த்தபடி.
"சந்தேகத்துக்கு உரியவங்களை அரெஸ்ட் பண்ணலாம், அவங்க நம்ம ஊர்காரங்களா இருந்தா.! இவங்களை அரெஸ்ட் பண்ணா அவங்க நாட்டுக்கிட்ட ஒப்படைக்கணும்.! அரெஸ்ட் பண்ணியும் ப்ரயோஜனம் இருக்காது.. கொஞ்சம் வெயிட் பண்ணி பொறுமையா முடிக்க வேண்டிய வேலை இது.. ஆனா போன முறை புவினால் ஏற்பட்ட சேதாரம் போல இந்த முறை நடக்க கூடாதுன்னுதான் உன்னை பாதுகாவலுக்கு போட்டிருக்கோம்!" என்றாள்.
ரதி கொட்டாவி விட்டபடி தோழியின் புறம் திரும்பிப் படுத்தாள்.
"அவன் நம்ம நாட்டுல பிறந்ததா சொன்ன.?"
லாவண்யா சிரித்தாள்.
"அப்படிதான் சொல்லியிருந்தா.. ஆனா அவளோட பேரண்ட்ஸை பத்திய எந்த விவரமும் இல்ல.. அவ இங்கே பிறந்தாங்கறதுக்கு ஒரு ஆதாரமும் இல்ல.. அவ அயல்நாட்டுக்காரி மட்டும்தான்.. முகம் நம்ம இனமா இருக்குன்னு எல்லோரையும் நம்ம ஆட்களா ஏத்துக்க முடியாது.!" என்றாள்.
"என்னவோ போ.." என்றவள் பெட்ஷீட்டை முகம் வரை போர்த்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.
ஸ்டெலாஸ்டியன் அன்று நடு இரவில் தங்சேயாவுக்கு அழைத்தான்.
"நவீனுக்கு பாடிகார்டுன்னு வந்த பொண்ணு போலிஸ்காரங்களோட சகவாசம் வச்சிருக்கா.." என்றான்.
தங்சேயா குழம்பி போனார். நவீன்னை திரும்ப வர சொல்லி விடலாமா என்று யோசித்தார். பின்னர் தன் திட்டம் சரி வராது என்று புரிந்துக் கொண்டார்.
"அப்படின்னா நீ அவங்களுக்கு நடுவுல போகாதே.! அவன் யாருன்னு கண்டுபிடிச்சி அவங்களே அவனை போட்டு தள்ளட்டும்.! புவின் பண்ண தப்புக்கு அவனுக்கு என்னால தண்டனை தர முடியல.. அவன் தம்பி அதுக்கு பதிலா அனுபவிக்கட்டும்.!" என்றான் கோபத்தோடு.
ஸ்டெலாஸ்டியனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தங்சேயா நவீன் மீது பாசம் கொண்டிருக்கிறார். அதே சமயம் வெறுத்துக் கொண்டும் இருக்கிறார். இரண்டுக்குமே காரணம் புவின்தான் என்று புரிந்தது. இவரை விட்டால் கடைசி நேரத்தில் கூட மனம் மாறி நவீன்னை காப்பாற்றி தன்னோடு அழைத்துச் சென்று விடுவார் என்றும் சந்தேகபட்டான். ஆனால் ஸ்டெலாஸ்டியனுக்கு அவ்வளவு நல்ல மனம் கிடையாது. நவீனை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டான்.
ஸ்டெலாஸ்டியன் தங்சேயாவுக்காக செய்யாத வேலையே இல்லை.. அந்த குழுவோடு ரத்தமும் சதையுமாக தான் இணைந்திருப்பதாக நம்பினான். ஆனால் 'சின்ன பையன் புவின் தங்சேயாவின் சொந்த மகனை போல ஆகிவிட்டானே..' என்ற எரிச்சல் அவனுக்கு. அவனுக்கு நேர்ந்த முடிவை கண்டு அந்த குழுவில் சந்தோஷப்பட்ட ஒரே ஜீவன் இவன்தான். பொறாமையா, இல்லை தன் குழுவின் மீது வைத்துள்ள கண்மூடிதனமான பாசமா என்று தெரியவில்லை. ஆனால் புவினை விட்டு வைத்தது போல நவீனை விட்டு வைக்க அவனுக்கு துளியும் விருப்பமில்லை. ரூபியை தன் கைக்குள் போட்டுக் கொண்டால்தான் இந்த விசயம் நடக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவள்தான் இவனின் வலையில் விழாமல் இருந்தாள்.
மறுநாள் பொழுது விடியும் முன்பே துணிக்கடை ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது.
இச்செய்தியை கேட்டபடிதான் கண்விழித்தாள் ரதி.
"அவன்தான்.!" என்றாள் ஒற்றை சொல்லாக.
"இது அந்த ஸ்டெல்லாதான்.!" என்ற லாவண்யா "நான் சீக்கிரம் கிளம்பணும்.! நீ மெதுவா ரெடியாகி கிளம்பு.! அவன் மேல கண்ணாயிரு.!" என்றபடியே குளியலறைக்குள் நுழைந்தாள்.
"கண்ணு.. ச்சை.." என்றபடியே மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.
நவீன்னின் கண்கள் அவளின் நினைவில் வந்தது.
தலையை உதறித் கொண்டாள்.
"யார் வெடிகுண்டு வச்சது.?" செய்தியை கேட்டதும் ரூபியிடம் விசாரித்தான் நவீன்.
"தெரியல பாஸ்.." என்றவளுக்கு ஸ்டெலாஸ்டியன் மீதுதான் சந்தேகம் வந்தது. ஆனால் இதை நவீனிடம் சொல்லி பிரச்சனையை வளர்க்க வேண்டுமா என்று தயங்கினாள்.
"எத்தனை டெத்.?" விசாரித்தான்.
"யா.. யாரும் இல்ல பாஸ்.. செக்யூரிட்டிஸ்க்கு கூட அவ்வளவா அடிபடல.." என்றாள்.
இது ஸ்டெல்லாவின் சோதனை ஓட்டம் என்று கணக்கிட்டாள் ரூபி.
வெடிகுண்டு வெடித்ததால் மீண்டும் இன்று ஓர்நாள் ஊரடங்கு அறிவித்திருந்தார்கள்.
"சார் ப்ளீஸ்.. போதும் இதுக்கு மேல ரிஸ்க் எடுக்க வேணாம்.. இதையே காரணமா வச்சி நம்ம சந்தேக லிஸ்ட்ல இருக்கற எல்லோரையும் நம்ம நாட்டை விட்டு வெளியே அனுப்பிடலாம்.." என்றான் விஷால்.
தனசேகர் சிரித்தான். விஷாலின் அருகே நின்றிருந்த லாவண்யா தனசேகரின் பதில் என்னவாக இருக்கும் என்று காத்திருந்தாள்.
"போன முறை மாதிரி இந்த முறையும் தோத்துப் போகணும்ன்னு ஆசைப்படுறியா.?" என்று கர்ஜித்தான் அவன்.
தனசேகர் ஆறடி உயரத்தில் விஷாலுக்கு சிறிதும் கம்பீரம் குறையாமல் தன் மேஜையின் அந்த பக்கம் நின்றிருந்தான். அவனின் கையில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பின் பாரம் என்னவென்று அவனுக்கு தெரியும். ஒற்றை அடியை தவறாக எடுத்து வைத்தாலும் பல உயிர்கள் அழிய கூடும் என்று அவனுக்கு தெரியும்.
போன முறை நடந்த தவறுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு இப்போதுதான் மீண்டும் அதே பொறுப்புக்கு வந்திருக்கிறான். ஆனால் இது ரகசியமாக வழங்கப்பட்ட பொறுப்பு. ஆனாலும் கூட அவனுக்கு அதே பொறுப்பை மீண்டும் தந்ததற்காக அவனின் மேலதிகாரி இந்த விசயம் தெரிந்த பலராலும் விமர்சிக்கப்பட்டார். அவனுக்கு பதிலாக இதே பணியை செய்ய பல ஆயிரம் பேர் உண்டு. ஆனால் இதே போல தோற்றுப்போன அனுபவத்தோடு கூடியவன்தான் வெறியோடு இருப்பான் என்று நம்பினார் அவனின் மேலதிகாரி. அதனால்தான் பல எதிர்ப்புக்கு மத்தியில் இவனிடமே பொறுப்பை ஒப்படைத்து உள்ளார்.
ஓட்ட பந்தயத்தில் உச்சம் தொட்டவன் கூட பல இடங்களில் விழுந்து எழுந்தவன்தான் என்பது அவரின் எண்ணம். இப்போதும் கூட தனசேகர் தன் முந்தைய பணியில் தோற்றதாக எண்ணவில்லை அவர். சில துரோகிகளும், புவின் எனும் ஒற்றை எதிரியும் வென்று விட்டதாக எண்ணினார்.
"இந்த முறை ஆளில்லாத இடத்துல வெடிச்ச குண்டு அடுத்த முறை கூட்டமா இருக்கற இடத்துல வெடிச்சா என்ன ஆகும்ன்னு யோசிங்க.." என்றான் விஷால்.
"அதேதான் மேன் நானும் சொல்றேன்.. சட்டுன்னு போய் அந்த ஸ்டெல்லாவை கண்டுபிடிச்சி போட்டு தள்ளிட்டு வா.." என்றான் தனசேகர்.
"தேடிட்டுதான் இருக்கோம் சார்.." என்றுச் சொன்னாள் லாவண்யா.
"ஓ.. முழுசா இரண்டு நாளா தேடுறிங்க.. இன்னும் கண்டுபிடிக்க முடியல.. விடுங்க அப்படின்னா பாம் வெடிக்கட்டும்.." என்றான் அவன் தோள்களை குலுக்கியபடி.
விஷாலுக்கு ஆத்திரமாக வந்தது. தனசேகரை முறைத்துவிட்டு வெளியே நடந்தான்.
"வரோம் சார்.." அவசரமாக வீரவணக்கம் வைத்துவிட்டு விஷாலை பின்தொடர்ந்து ஓடினாள் லாவண்யா.
"விஷால் உங்ககிட்ட சொந்த பிரதரை போல பழகிக்கிட்டு இருக்கான்.. அவன்கிட்டயாவது உண்மையை சொல்லி இருக்கலாம்.!" என்றார் அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த மத்திய வயது அதிகாரி ஒருவர்.
"விஷாலுக்குள்ள இருக்கற நெருப்பு அணையுறதுல எனக்கு விருப்பம் கிடையாது சார்.." என்றவன் "அந்த மால் சின்னையனோட பினாமி பேர்லதானே இருக்கு.?" என்றுக் கேட்டான்.
"ஆமா.. இன்னைக்கு நம்மால சின்னையனுக்கு நாலு கோடி நட்டம்.!" என்றார் சிரித்தவாறு.
அவன் அந்த நாலு கோடியை நான்கு நாட்களில் சம்பாதித்து விடுவான் என்று தனசேகருக்கு தெரியும். ஆனாலும் அந்த செக்யூரிட்டிக்கு லேசாக அடி என்பதைதான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அவனேதான் திட்டமிட்டு அந்த மாலில் வெடிகுண்டு வெடிக்க செய்தான். அவர்கள் வைத்து வெடித்து உயிர்கள் பலியாவதை விட தானே குண்டு வைத்து, எதிரிகளை தங்களின் வளையை விட்டு வெளியை கொண்டு வரலாம் என்று திட்டமிட்டான். ஆளில்லாத இடமோ, ஏதோ.. நிச்சயம் இந்த குண்டு வெடிப்பு நாட்டு மக்களை கவனமாக இருக்க வைக்கும் என்று நம்பினான். அனைத்து வாயிலிலும் பாதுகாப்புக்காக நிற்கும் அதிகாரிகள் தங்களின் பணியை இன்னும் கொஞ்சம் கவனமாக செய்வார்கள் என்றும் நம்பினான்.
ஸ்டெல்லாவை கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதுதான் தனசேகரின் இப்போதைய ஒரே குறிக்கோளாக இருந்தது.
நவீன்னை பயத்தோடு பார்த்தாள் ரதி. நேற்றைய நாளை போல பார்க்க முடியவில்லை. வெடித்த குண்டு அவளின் மனதுக்குள்ளும் சேதாரத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆனால் அவளின் அந்த பயம் நவீனுக்குதான் தடுமாற்றத்தை தந்தது. அவளுக்கு ஏன் இந்த திடீர் பயம் என்று அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே குண்டு வெடித்து குழப்பம் ஏற்படுத்தி விட்டிருந்தது. இவளின் பயம் கலந்த பார்வை அந்த குழப்பத்தை கூட யோசிக்க விடாமல் தடுத்தது.
இந்த ஊரடங்கில் இவனின் வீடு வரை வருவதே பெரிய விசயமாக இருந்தது ரதிக்கு. இன்றைக்கு இவனோடு எந்த வேலையும் இல்லை என்று புரிந்ததும் தனது பத்திரிக்கையில் வெளியிட கட்டுரை ஒன்றை எழுதலாம் என்று எண்ணினாள்.
ரூபி இவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் தனது யோசனையில் மூழ்கியபடி ஹாலில் அமர்ந்திருந்தாள். ரதியை கண்டுவிட்டு தனது அறைக்குள் நுழைந்த நவீன் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வெளியே வரவில்லை. அதனால் ரதி அவனை தேடவும் இல்லை.
அந்த வீட்டின் பின்பக்கம் வந்து அமர்ந்தாள். தனக்கு முன்னால் இருந்த நீச்சல் குளத்தின் நீல தண்ணீரை பார்த்தவள் பெருமூச்சோடு தனது போனை எடுத்தாள்.
'மனிதர்கள் யார்.? இந்த அகண்ட பிரபஞ்சத்தில், ஆயிரம் கோடி கோள்கள் இருந்தும், சிந்தையுள்ள உயிரினங்களாக உள்ளவர்கள்தானே இந்த மனிதர்கள்.? சில நேரங்களில் கடவுளையே உருவாக்குபவர்கள் இவர்கள். பல நேரங்களில் உலகத்தையே மாற்றி அமைப்பார்கள். இந்த மனிதர்கள் இந்த பிரபஞ்சத்தின் வரம். ஆனால் அழிக்கவே இயலாத சாபமும் கூட. எப்போது வேண்டுமானாலும் இறப்போம் என்ற விசயத்தை நெஞ்சத்தின் துடிப்போடு உணர்ந்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தனக்கு உயிர் தந்த பூமியை அழித்து விட துடிக்கும் கிராதகர்கள் இவர்கள். மரணம் பற்றி பயமே இல்லை இவர்களுக்கு. இந்த பூமியின் இயற்கையில் பிறந்தோம் என்ற உண்மையையும் மறந்தவர்கள். மனிதர்களின் உயிர் என்பது இந்த பூமியும், இந்த பிரபஞ்சமும் போட்ட பிச்சை என்பதை கூட அறியாதவர்கள். உண்ட வீட்டுக்கு துரோகம் நினைக்கும் குரோதக நெஞ்சகர்கள். ஏன் பிறந்தோம் என்றும் தெரியாது. எதற்கு வாழ்கிறோம் என்றும் தெரியாது. ஆனால் அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்றால் மட்டும் தெளிவாக தெரியும். அவ்வளவு கல் நெஞ்சக நீசர்கள். அர்த்தமற்ற வாழ்வில் அநியாய சாபங்களை மட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டு இருப்பவர்கள்...'
"ஓ மை காட்.. இதுல நீயும் இருக்கியா.?" நவீனின் திடீர் குரலில் துள்ளி விழுந்தவள் திரும்பிப் பார்த்தாள். நவீன் அவளுக்கு பின்னால் நின்றிருந்தான். அமர்ந்திருந்தவளின் தலையை தாண்டிக் கொண்டு அவளின் போனை குனிந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரதி அவசரமாக தன் நெஞ்சை மூடினாள். அவள் அணிந்திருந்தது லாவண்யாவின் உடைகள். தொளதொளப்பாகதான் இருந்தது. பெரிய பிரச்சனை இல்லை என்று அணிந்து வந்திருந்தவள் இவனின் பார்வையில் விழுவோம் என்று நினைக்கவில்லை.
"நான் போன் ஸ்கீரினை தவிர வேறு எதையும் பார்க்கல.." என்று சாதாரணமாக சொன்னவன் சுற்றி வந்து அவளின் அருகே அமர்ந்தான். அணிந்திருந்த நைட்டியை முட்டிக்கால் வரை ஏற்றி விட்டுக் கொண்டவன் "இதைக் கண்டுக்காத.." என்றான்.
"மனிதர்கள்ன்னு சொல்லி இப்படி பொத்தாம் பொதுவா திட்டிட்டு இருக்கியே, இந்த மனிதர்களில்தான் நீயும் இருக்க.." என்றான் அவளை திரும்பிப் பார்த்து.
ரதி வீட்டை திரும்பிப் பார்த்தாள். ரூபி பார்வைக்கு தென்படவில்லை. அதனால்தான் பெண் வேடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டு ஆண் குரலில் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டாள்.
"ஆமா.. நானும்தான்.!" என்றாள் போனில் எழுதிக் கொண்டிருந்த பதிவை வெறித்தபடி.
நவீன் அவளை ஆச்சரியமாக பார்த்தான். "தன்னை தானே திட்டிக்கிறவங்களை இப்பதான் பார்க்கறேன்.." என்றான்.
போனின் ஸ்கீரினை நகத்தால் கீறியவள் "நானும் மனுசங்களில் ஒருத்தி.. யார் தப்பு பண்ணாலும் அது நானும் செஞ்சது போலதான்.! சேர்ந்து வாழ வந்திருக்கேன். சேர்ந்துதான் பழியை ஏத்துக்கணும்.!" என்றாள் சிறு குரலில்.
நவீனுக்கு வியப்பாக இருந்தது.
"நீ ஏன் இவ்வளவு சென்சிடிவ்வா யோசிக்கறன்னு தெரியல.. ஆனா பாரு.. மத்தவங்க தப்புக்கு நாம எப்பவும் பழி ஏத்துக்க முடியாது.. எவனோ ஒருத்தன் பேக்டரி கட்டி அந்த நச்சு காத்தால ஓசோனை சிதைச்சா நாம எப்படி காரணமாக முடியும்.?" என்றுக் கேட்டான்.
"ஏன் காரணம் இல்ல.? நான் அந்த பேக்டரியில் உற்பத்தியாகும் பொருளை பயன்படுத்தினாலும் கூட அந்த சேதத்துக்கு நானும்தான் காரணமாவேன். என் சொந்தங்கள் பயன்படுத்தினாலும் அதேதான். இங்கே உற்பத்தியாகும் எந்த பொருளையும் நான் பயன்படுத்தாம இல்ல.. நேரடியா இல்லன்னாலும் கண்டிப்பா மறைமுகமா எல்லா பொருளையும் பயன்படுத்துறேன். இதோ இந்த வீட்டுக்கு யூஸ் பண்ண ஒத்தை செங்கலுக்கு கூடதான் மரம் எரிஞ்சிருக்கும். மண் தன் சுயத்தை இழந்திருக்கும். இதை கொண்டு வர யூஸ் பண்ண லாரிக்கான ஏதோ ஒரு உதிரி பாகம் அந்த பேக்டரியில் தயாராகி வந்திருக்கும்.. இங்கே மத்தவங்க தப்பு செஞ்சாங்கன்னு பழியை தூக்கி போடுறதை போல முட்டாள்தனம் வேறு இல்லை.. நாம எல்லாம் ஒன்னுதான்.. நாம மனிதர்கள். ஒருத்தர் தப்பு செஞ்சாலும் அதுக்கான பழியை எல்லோரும்தான் ஏத்துக்கணும்.!" என்றாள்.
'இந்த சிவிலிசேசனை அழிக்கணும்.. எல்லோரும் மறுபடியும் ஆதிவாசி மக்களா காட்டுக்கு குடி போகணும். அப்பதான் இந்த பசி சாவை தடுக்க முடியும். அங்கே காட்டுல நீ எந்த பழத்தை பறிச்சி தின்னாலும் உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க.. ஏனா அங்கே எதுவும் யாருக்கும் சொந்தம் கிடையாது..' தங்சேயாவின் சொற்கள் நவீனின் மனதுக்குள் எதிரொலித்தது.
"அ.. அப்படின்னா உனக்கு இந்த மக்களை பிடிக்கலையா.?" என்றுக் கேட்டான்.
ரதி இடம் வலமாக தலையசைத்தாள். "பிடிச்சிருக்கு.. அதுவும் ரொம்ப.. ஏனா எல்லோரும் என் சொந்தம். அதனாலதான் பழியை ஏத்துக்கறேன்.!" என்றாள்.
நவீனுக்கு குழப்பமாக இருந்தது.
"அவங்க செய்றது தப்புன்னு சொன்ன.."
ரதி முகத்தை சுளித்தபடி அவனை திரும்பிப் பார்த்தாள். "சோ வாட்.? மனிதர்களா மண்ணுல பிறந்த அந்த செகண்டே தப்பு நம்ம ரத்தத்துல ஊறிடுது.! அந்த பேக்டரி கட்டியது தப்பு இல்ல.. ஆனா அந்த பேக்டரியில் காற்றை வடிகட்டி வெளியணுப்பும் மெஷின் வைக்காம போனதுதான் தப்பு.. அந்த நச்சுக்காத்து செய்யுற சேதாரத்தை சரி செய்யுற அளவுக்கு பூமியில் மரங்களை நடாம விட்டதுதான் தப்பு. என் பங்குக்கு நான் நூறு மரங்களையாவது வைக்கணும்.! ஆனா வைக்கல. ஏனா நானும் தப்பானவளே.. இங்கே திட்டி டைப் பண்ணிட்டு இருக்கறது என்னையும் சேர்த்துதான்.. நான் பிசியா இருக்கேன்.. நீ என்னை தொந்தரவு பண்ணாம போ.." என்று விரட்டினாள்.
"இது என் வீடு.!"
ரதி நக்கலாக அவனை திரும்பி பார்த்தாள். "இது என் நாடு. நீ என் நாட்டுக்கு வந்த ஓசி கெஸ்ட்.." என்றாள். அந்த வார்த்தையை சொன்னதற்கு அவளுக்கே தன் மீது கோபம் வந்தது. அது கெட்ட வார்த்தையை விட மோசமான வார்த்தை என்று தெரிந்திருந்தும் அவளை மீறி வந்து விட்டது வார்த்தைகள்.
அவளை வெறித்த நவீன் "இப்பதான் எல்லா மனுசங்களும் என் சொந்தம்ன்னு சொன்ன.." என்றான்.
பெருமூச்சு விட்டபடி தலை குனிந்தாள் ரதி. "சாரி.." என்றாள்.
"சாரி.!?" பற்களை கடித்தவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "சில தவறுகளுக்கான பாவங்களை பங்கு போட்டுக்க மனசு வரல.. அதனாலதான் அப்படி சொன்னேன்.. உன் மனசை புண்படுத்தியதற்கு சாரி.. சாதி, மதம், இனம், நாடு கடந்து மக்களை நேசிக்கிறேன் நான்.. இது நிஜமா என்னை மீறி வந்துட்ட வார்த்தை.. சாரி.." என்றாள்.
"மனசுல இருக்கற வார்த்தைதான் நாக்குல வரும்.. நெஞ்சம் முழுக்க வஞ்சம் வச்சிக்கிட்டு மனிதம் பேசுற நீ.." கண்களை வெறுப்பை நிரப்பி அவளை வெறித்துவிட்டு எழுந்து நின்றான்.
அவன் நகரும் முன் அவனின் கையை பற்றி நிறுத்தினாள் ரதி. "ரியலி சாரி.." என்றாள்.
"உன் லெப்ட் நெஞ்சுல மச்சம் இருக்கு.."
அவசரமாக டாப்பின் மேல் பகுதியில் கையை வைத்து மறைத்தவள் "பொறுக்கி.." என்றாள் கோபத்தோடு. கோபத்தை தாண்டி கண்கள் இரண்டும் கலங்கியது அவளுக்கு. லாவண்யாவிடம் ஒற்றை துப்பட்டா கூட இல்லை என்பதற்காக இந்த நேரத்தில் அவளை திட்டி வைத்தாள். இன்றைக்கு இந்த வீட்டிற்கு வந்திருக்கவே கூடாது என்று நினைத்து வருந்தினாள். இதயம் துடிப்பது அவளின் உள்ளங்கையில் உணரப்பட்டுக் கொண்டிருந்தது. கோபத்தாலா இல்லை அவமானத்தாலா என்று தெரியவில்லை, அவளின் கழுத்தும் முகமும் செவ்வானமாக சிவந்து விட்டிருந்தது.
"நீ என் கையை விடணும்ன்னு உடான்ஸ்தான் விட்டேன்.. நீதான் இருக்குன்னு ஒத்துக்கிட்ட.. மத்தபடி நான் எதையும் பார்க்கல.." என்றவனை நிமிர்ந்துப் பார்த்தாள். உணர்ச்சிகளற்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். கலங்கியிருந்த விழிகள் அடித்த காற்றின் வேகத்தில் கண்ணீராய் உரு திரண்டு கண்களை தாண்டி விழுந்து அவளின் கன்னங்களில் உருண்டது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments