Advertisement

Responsive Advertisement

தேவதை 11

 பாவள் ஒரு சாதாரண மனுசி. அவளுக்கும் அவளின் கிரகத்து மனிதர்களுக்கும் தங்களின் மரணத்தை வெற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசை. 


அவர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களின் அறிவியலை வைத்து மரணத்தை தடுக்க முடியவில்லை. அப்போதுதான் வேற்று கிரகத்தில் இது போன்றிருக்கும் மனிதர்கள் எப்படி சாவை எதிர்க் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள விரும்பி விண் ஓடம் மூலம் ஆளுக்கொரு திசையில் பயணம் கிளம்பினார்கள். 


அப்படி சென்ற நால்வரில் மூவர் தோல்வியோடு வந்தனர். ஆனால் பாவள் மட்டும் அன்பின் தேவ உலகம் என்ற ஒன்றை பற்றிய சேதியோடு திரும்பி வந்தாள்.


அனைவரும் அவளிடம் விவரம் கேட்டார்கள்.


"நேக்டிவா நட்சத்திரம் நோக்கிதான் போய்ட்டு இருந்தேன் நான். அப்போதுதான் என் விண்ஓடம் ஏதோ ஒரு சக்தியில் மாட்டி நகர முடியாம போயிடுச்சி. அது மீண்டும் செயல்பட ஆரம்பித்த போது அதோட ஓட்ட திசை மாறிடுச்சி. நான் சாக போறேன்னு நினைச்சபோது திடீர்ன்னு ஓடம் ஒரு மலர் வெளியில் போய் விழுந்துடுச்சி. பிழைச்சதே பெரிய விசயம்ன்னு வெளியே போனேன். அங்கேதான் ஒரு புது உலகத்தைப் பார்த்தேன். அங்கே இருப்பவங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க தேவதைகள்.. தேவர்கள்! அவங்களுக்கு மரணமே கிடையாது. அவங்க நம்மை விட சக்தியில் உயர்ந்தவங்க!" என்று அன்பின் தேவ உலகம் பற்றி இங்கே விவரித்தாள்.


இங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம். எப்படியாவது அந்த உலகத்தை பார்த்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்த உலகத்து மக்களின் சக்தியை தாங்கள் பெற்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் அந்த அன்பின் தேவ உலகத்தை தேடிச் செல்லும் முன் ஆதியே இங்கே வந்து விட்டாள்.


இவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிக்காட்ட முடியாத ஒரு சூழலில் இருந்தார்கள். 


ஆதியின் உலகத்தை விடவும் கவியின் உலகம் அதிக சக்தி வாய்ந்தது என்ற விசயம் அவர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி விட்டது. எப்படியாவது கவியின் சக்தியை தாங்களே அடைய வேண்டும் என்று நினைத்தார்கள்.


ஆதி இது எதுவும் அறியாதவளாக தனது சோகத்தில் மூழ்கி இருந்தாள். ஒருவேளை தான் அந்த காழர்களுக்கு செய்தி அனுப்பியிருக்காவிட்டால் கவி நல்லவனாக தன்னிடம் பழகி இருப்பானோ என்று எண்ணினாள். அப்படியாவது அவனின் அன்பு தனக்கு கிடைத்திருந்தால் போதும் என்பதுதான் அவளின் எண்ணமாக இருந்தது.


இந்த உலகம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை கண்டாள் ஆதி. வாகனங்கள் இருந்தன இங்கே. மக்களுக்கு சக்தி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால் புத்திசாலிகளாக இருந்தார்கள். இவர்களின் புத்தியில் கலந்துள்ள கொடூர குணத்தை அவளால் உணர முடிந்தது. 


"ஆனா இவங்க சாதாரண மனுசங்க. நிச்சயம் கவி அளவுக்கு கெட்டவங்க கிடையாது." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.


பாதாளத்தில் இருந்தது பாவளின் குடியிருப்பு. ஆனால் பெரும்பாலான நேரங்கள் அந்த பாதாளத்தோடு சேர்த்து கட்டப்பட்ட உயர கோபுரத்தில்தான் இருந்தாள் அவள். அவளோடு சேர்ந்து ஆதியும் அந்த உயர கோபுரத்திற்கு சென்றாள். அங்கிருந்தவர்கள் ஆதியை மரியாதையோடு நடத்தினார்கள். 


ஆதியை அன்பால் ஏமாற்றலாம் என்பதை பாவள் ஏற்கனவே அனைவரிடமும் சொல்லி இருந்தாள். அதனாலேயே அனைவரும் விழுந்து விழுந்து அவளை கவனித்துக் கொண்டனர்.


அந்த கோபுர உச்சியில் இருந்த ஒரு அறையில் அமர்ந்தபடி அந்த கிரகத்தின் தோற்றத்தை கவனிப்பாள் ஆதி. எங்கும் இயந்திரங்கள்தான். எல்லாமும் செயற்கைதான்.


அந்த அறையில் கூட செயற்கைதான் இருந்தது. அனைவரும் அமர இருக்கை இருந்தது. கருவிகள் நிறைய இருந்தது.


"இதெல்லாம் என்ன?" என்று ஒருநாள் பாவளிடம் விசாரித்தாள்.


பாவள் அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களை பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தாள். பெரியதாக இருந்த ஒரு கடப்பாரை வடிவ ஆயுதத்தை காட்டியவள் "இதன் மூலம் பெரிய மலைகளை கூட உடைத்து தூளாக்க முடியும்!" என்றாள்.


அடுத்ததாக இருந்த வாகனத்தை கை காட்டியவள் "இந்த ஆயுதம் மூலம் பெரிய கட்டிடங்களை கூட அழிக்க முடியும்!" என்றாள்.


"இங்கிருக்கும் அனைத்துமே எதையாவது அழிப்பதாகவே உள்ளது. ஆக்கும் சக்தி உங்களிடம் இல்லையா?" எனக் கேட்டாள் ஆதி.


சுற்றி இருந்தவர்கள் ஆதியை கவனத்தோடு பார்த்தனர்.


பாவள் சிரித்தாள். "அப்படி இல்லை. எங்களுக்கு ஆக்க வேண்டிய தேவைகள் எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் சொல்லுங்கள். நாங்கள் செய்து தருகிறோம்!" என்றாள்.


ஆதி யோசித்தாள். "கொஞ்சம் பனிப் பூக்கள் கிடைக்குமா? கவியின் நினைவாகவே உள்ளது." என்றாள் சிறு குரலில்.


பாவள் அங்கிருந்தவர்களிடம் கண் சைகை காட்டினாள்.


"இன்னும் சில தினங்களில் நீங்கள் கேட்பதை தருகிறோம். அது எப்படி இருக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா? இதில் வரைந்து காட்டினால் போதும். நாங்கள் அதை அப்படியே உருவில் கொண்டு வந்து விடுவோம்." என்று பலகை ஒன்றை நீட்டினாள் ஒருத்தி.


ஆதி அந்த பலகையை சில நொடிகள் பார்த்தாள்.‌ பின்னர் இடம் வலமாக தலையசைத்தாள்.


"வேண்டாம். நானே செய்துக் கொள்வேன்." என்று கையை அசைத்தாள். பனிப் பூக்கள் கூரையில் இருந்துக் கொட்டின. 


சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர்.


"போதும். இனி தாமதிக்க எதுவும் இல்லை. இவளை சிறை பிடியுங்கள்!" என்றான் ஒருவன்.


ஆதி குழப்பத்தோடு அவர்களை பார்த்தாள். 


அவளின் மீது வந்து மோதியது ஒரு ஆயுதம். கவியின் கத்தியை போல பாதிக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு மனம் உடைந்துப் போனது. கண்கள் கலங்கியது.


"உங்களை நம்பினேன்." என்றாள்.


பாவள் முன்னாடி வந்தாள். "எல்லோரும் அமைதியாக இருங்கள். இவர் தேவதை. இவள் மனமுவந்து நமக்கு வரங்களை தருவார்." என்றாள்.


ஆதிக்கு மனது விட்டுப் போனது. அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சுயநலவாதிகளாக இருந்தார்கள்.


"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றாள் சிறு குரலில்.


"மரணமில்லா வாழ்வு!" சுற்றியிருந்தவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள். பாவள் மட்டும் மௌனமாக இருந்தாள்.


"மரணமில்லா வாழ்வு கொடுங்க. இல்லன்னா கவியின் உலகிற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள்!" என்றனர்.


ஆதி முகத்தை மூடினாள். 


"உங்களுக்கு வாழ்க்கையின் ஆயுள் கூடட்டும். இப்போது இருப்பதை விட சற்று அதிகம் கூடட்டும். ஆனால் அதற்கு பதில் உங்களின் நிம்மதி தொலைந்துப் போகட்டும். என்ன சாதிச்சாலும் பற்றாக்குறையாகவே இருக்கும் மனதை பெறுவீர்கள் நீங்கள்." என்றாள்.‌


சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தார்கள்.


"என்ன வரம் இது? சாபம் போல் அல்லவா தெரிகிறது?" என்றாள் ஒருத்தி.


"சாபம்தான். உங்களின் பேராசையால் என் மனம் அதிகம் பாதித்து விட்டது. என்னால் வேறு வரங்கள் தர முடியவில்லை. உங்களின் சாபம் கண்டு மற்ற மனிதர்கள் யாரும் இப்படி பேராசை  கொள்ளாமல் இருப்பார்கள். நான் இங்கே வந்தது எனது தவறு. தேவர்களே கெட்டவர்களாக இருக்கையில் சாதாரண மனிதர்கள் நியாயவாதிகளாக இருப்பார்கள் என்று நம்பியது என்பது தவறுதான். நான் ஒரு அன்பின் தேவதை. எனது சாபங்கள் மிகவும் அபூர்வம். என் வாழ்நாளில் இதுதான் முதல் சாபம். அதனால் நிச்சயம் பலிக்கும். மரணத்தை எப்போது மகிழ்வோடு ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறீர்களோ அப்போது உங்களின் சாபம் விலகும்!" என்றவள் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.


அவளின் மீது வந்து விழுந்தது ஒரு சங்கிலி.


"உங்களை வெளியணுப்பும் அளவிற்கு நாங்கள் நல்லவர்கள் அல்ல!" என்றபடி ஒருவன் அவளை ஆயுதத்தோடு நெருங்கினான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments