Advertisement

Responsive Advertisement

தேவதை 12

 ஆதியை சுற்றி வளைத்தவர்கள் அவளை சிறை பிடிக்க முயன்றார்கள்.


"தப்பு மேல தப்பு பண்றிங்க.." என்ற ஆதி தன்னை நெருங்கியவர்களை தூசு தட்டுவது போல தட்டி விட்டாள்.


"நீங்க மனுசங்க.‌ நான் தேவதை. அதுவும் என் இனத்தின் கடைசி தேவதை. அதை மறந்துடாதிங்க. என்னை பிடிக்க உங்க யாராலும் முடியாது.!" என்றவள் அவர்களைக் காயப்படுத்தாமல் இருக்க முயன்றாள்.


"எங்களின் ஆயுதங்களை பற்றி உங்களுக்கு தெரியாது." என்ற ஒருவன் தனது கையிலிருக்கும் வலையை எடுத்து அவளின் மீது வீசினான்.


ஆதி சிரித்தாள். அவள் மீது வந்து விழுந்த அந்த உலோக வலை மாயமாக மறைந்துப் போனது.


அதே சமயத்தில் மற்றொரு திசையில் இருந்தவன் ஏதோ ஒரு கருவியை கொண்டு வந்து அவளின் மீது வைத்தான். 


மனிதர்கள் மீது வைத்திருந்தால் உடல் கருகி இறந்திருப்பார்கள். ஆனால் ஆதிக்கு எதுவும் ஆகவில்லை. தன் மீது கருவியை வைத்தவன் பக்கம் பார்த்தாள்.


"உன்னை விட்டுச் செல்கிறேன். திருந்த பாருங்கள்." என்றவள் அங்கிருந்த ஜன்னல் ஒன்றை உடைத்துக் கொண்டு வெளியே பாய்ந்தாள்.


"அவளை விட கூடாது. பிடிங்க.." என்று ஓடினார்கள் அனைவரும்.


"பாவம் அவள்!" என்ற பாவளை முறைத்தான் ஒருவன்.


"முட்டாள். நமது ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு அவள் வேண்டும்." என்றான்.


"விண்ஓடங்களை தயார் செய்யுங்கள். அவளை இங்கிருந்து தப்பிக்க விடக்கூடாது!" என்றுக் கட்டளையிட்டான்.


அங்கிருந்தவர்கள் அனைவரும்  தலைக்கு கவசம் அணிந்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள்.


ஆதி வானில் நடந்தாள். பறந்தாள்.


"அதிசயம். அவளை கண்டிப்பா சிறை பிடிக்கணும்.." என்றனர் அவளைப் பார்த்தவர்கள்.


"ஆனா நம்ம விண்ஓடத்தை விட அவளோட வேகம் அதிகம்." என்ற பாவளை கேலியாக பார்த்த ஒருவன் "நமது வில் குண்டுகளின் வேகம் பற்றி உனக்கு மறந்து விட்டது போல!" என்றான்.


பூமிக்கு அடியில் இருந்து நிறைய இயந்திரங்கள் வெளி வந்தன.


அவைகள் அனைத்தும் ஆதிக்கு குறி வைத்தன. ஆதி தரையை பார்த்துவிட்டு சிரித்தாள்.


"வில் குண்டுகளை விடுவியுங்கள்!" என்றான் ஒருவன்.


குண்டுகள் புறப்பட்டன. ஆதி சுழன்று திரும்பினாள். அவர்களை கேலியாக பார்த்தபடி மேலும் மேலே பறந்தாள். ஆனால் ஒரு குண்டு அவளை தொட வந்தது. அவள் சுதாரிக்க மறந்து விட்டாள்.


"முட்டாள்." என்ற குரலோடு அவளை இழுத்தது ஒரு கரம்.


ஆதி அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தாள். கவி அவளருகே இருந்தான். நெருப்பாக இருந்தான். அவனின் கண்களை பார்க்க கூட அவளுக்கு பயமாக இருந்தது.


"கேவலமான மனித பிறவிகளுக்கு இவ்வளவு திமிரா? இத்தனை பேராசையா?" என்றவன் தனது வாளை கையில் எடுத்தான்.


அவசரமாக அவனின் கையை பற்றினாள் ஆதி.


"குழந்தைகள் அவர்கள்.." என்றாள்.


"உன்னை முட்டாள் என்று திட்டிக் கொண்டே இருக்க எனக்கு சலிக்கிறது!" என்றவன் தனது வாளை தரை நோக்கி காட்டினான். வாளில் இருந்து வெளிவந்த கதிர்கள் தரையில் இருந்த மக்கள் மீதும் கட்டிடங்கள் மீதும் பட்டது. கட்டிடங்கள் கொழுந்து விட்டு எரிந்தன.


மக்கள் கருகி பொசுங்கிக் கொண்டிருந்தனர்.


கவி ஆதியை இழுத்துக் கொண்டு அந்த கிரகத்தை விட்டு வெளியே சென்றான்.


"கேவலமான மனிதர்கள் வாழும் கிரகத்தில் உனக்கு என்ன வேலை?" என்றான் பிரபஞ்ச வெளியில் நுழைந்த பிறகு.


"நான் உங்களை விட்டு விலகி வந்தேன். உங்களோடு இருக்க பிடிக்காமல் வந்தேன்." என்றாள்.


கவி தன் ஆச்சரியத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளை வெறித்தாள்.


"ஏன்?" என்றான்.


ஆதி பிரபஞ்ச வெளியில் இருந்த அழகு சூரியன்களை பார்த்தாள்.


"நீங்கள் என் மனதை உடைக்கிறீர்கள். அங்கிருந்தால் மனமுடைந்தே இறந்து விடுவேன் என்று பயமாக இருந்தது." என்றாள்.


கவி அவளின் முகத்தை பார்க்காமல் தவிர்த்தான்.


"நான் உன்னை விடுவிக்கிறேன்." என்றான்.


ஆதி அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.


"நிஜமாகவா?" எனக் கேட்டாள்.


"ஆமாம்.. நீ போகலாம். ஆனால் மனிதர்கள் வாழும் கிரகத்திற்கு போகாதே. அது உனக்கு ஆபத்தை தரும். நீ ஒரு அன்பின் தேவதை. உன்னை எல்லோரும் சுலபமாக ஏமாற்றி விடுவார்கள். ஆனால் நீயும் ஒரு தேவதை. உன்னை நீதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." என்றவன் அவளை விட்டு விலகி நின்றான்.


"நீ போகலாம்." என்றான்.


ஆதிக்கு நம்பிக்கையே வரவில்லை.


"அனுப்பி விட்டு பின்னால் வந்து என்னைக் கொல்ல போகிறார்களா?" என்றுக் கேட்டாள்.


அதிர்ந்தவன் இல்லையென தலையசைத்தான்.


"உன்னிடம் சில விசயங்கள் சொல்ல முடியாது. நாங்கள் சத்திய தேவர்கள். வீரத்தில் சிறந்தவர்கள். எங்களின் வாய்மையும் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் ஒரு முறை வாக்கு தந்தால் அதை காப்பாற்ற எங்களில் முடிந்த அளவிற்கு முயல்வோம். உனக்கு நான் உண்மையிலேயே விடுதலை தருகிறேன். சென்று விடு!" என்றான்.


'மயக்க பானம் ஏதாவது அருந்தி விட்டாரோ?' என்று குழம்பியவள் "நன்றிகள்.. நான் வருகிறேன்." என்றுவிட்டு பிரபஞ்சத்தின் வடக்குத் திசை நோக்கி நடந்தாள்.


கவி சத்திய தேவ உலகம் இருந்த திசை நோக்கி நடந்தான். அவனின் இதயம் பல மடங்காக வலித்தது. ஆனால் பொருட்படுத்தவில்லை அவன்.


ஆதியால் தன் புத்தி மாறுகிறது என்பதை அவன் அறிந்த உடனேயே தன்னைத்தான் முதலில் மாற்றி கட்ட வேண்டும் என்பதைப் புரிந்துக் கொண்டான்.


ஆதியை அவன் விடுதலை செய்ய இன்னொரு காரணமும் உண்டு. செழினியை பிடித்து விட்டான் ஆதி.


இந்த சில வாரங்களில் பூர்வ உலகில் இருந்து சண்டையிட ஒரு படை வந்தது.


அந்த சண்டையிலும் கவியின் படைதான் வென்றது. இயனியின் படைத் தளபதியை சிறை பிடித்து விட்டான் கவி. அவன் மூலம்தான் செழினி பூர்வ உலகில் இருக்கிறான் என்ற விசயம் தெரிந்தது.


உடனே‌ தனது படைகளோடு கிளம்பி விட்டான் கவி. அந்த உலகில் இருந்த வீரர்களையெல்லாம் மிக சுலபமாக வென்ற கவி, தன்னிடம் நேராகவே மோத வந்த செழினியை ஒரே அடியில் அடித்து நொறுக்கி பிடித்து விட்டான்.


இப்போது சத்திய தேவ உலகின் பனி சிறையில் இருந்தான் செழினி. அவனை பிடித்து விட்ட அந்த நேரத்திலேயே ஆதியை இனி சத்திய தேவ உலகில் அனுமதிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டான் கவி.


காரணம் அவனின் மனம் ஆதியை நேசிக்க ஆரம்பித்து விட்டது.  இந்த விசயத்தை அறிந்த நொடியில் அதிர்ந்து விட்டான் அவன்.


"நான் சத்தியர்களின் ஏந்தல்.‌ நான் எப்படி ஒரு அன்பின் தேவதையை நேசிக்க முடியும்? அதுவும் அவள் கண்களிலேயே கைது செய்யும் வித்தை வைத்திருக்கிறாள். அவளிடம் சிக்கினால் என்னை அவளுக்கு அடிமையாக்கி விடுவாள். எந்த ஆயுதத்திற்கு வீழ்ந்தாலும் விடிவு உண்டு. ஆனால் அன்பென்ற ஆயுதத்திற்கு வீழ்ந்தோருக்கு என்றுமே விடிவு இல்லை என்று என் முன்னோர்கள் சொன்னது நூறு சதவீத உண்மை." என்றவன் அவளை தூர அனுப்பி விட்டால் தான் தப்பித்து விடலாம் என்று நினைத்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments