பூமியில் சோகமாக அமர்ந்திருந்தார் ஹார்ட். அவர் தண்ணீரில் கலந்த ஆன்மாக்கள் மூலம் பூமி பச்சையாக மாறி இருந்தது. சில மிருகங்களும், பறவைகளும், நீர் வாழ் உயிரினங்களும் கூட உருவாகி இருந்தன. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல உலகை ஆளும் ஒரு உயிரினம் கூட அங்கே இருக்கவில்லை.
"கடவுளா இருந்தும் தண்டம் நான்!" என்றார்.
ஃபயர் சிரித்தாள். "கடவுள் மட்டும் நினைச்சா போதுமா? அதெல்லாம் இயற்கை, விதி." என்றாள்.
"என்னவோ போ. நான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கல." என்றார் அவர் சோகமாக.
***
ஆதி பிரபஞ்ச வெளியில் நடந்துக் கொண்டிருந்தாள் கண்ணில் பட்ட கிரகங்களில் எல்லாம் ஓய்வெடுத்தாள். ஆனால் எங்கே சென்றாலும் கவியின் நினைவு வந்தது அவளுக்கு. அவனின் கண்கள், அவனின் மேனி என்று அவனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அவனை விரும்பினாள். அவனின் அருகாமையை தேடினாள். ஆனால் அவளின் மனம் நொந்தது. அவன் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டான், அப்படி ஏற்றுக் கொண்டாலும் கூட தன்னை ஒருநாள் ஏமாற்றி விடுவான் என்று நம்பினாள்.
அவளுக்கு தன் மனதை உடைத்துக் கொள்ள விருப்பம் இல்லை.
பிரபஞ்ச வெளியில் இருந்த ஒரு கிரகத்தில் வந்து அமர்ந்தாள். பனிக் கிரகம் அது. ஆனால் சத்திய தேவ உலகம் போல இல்லை. ஆயினும் அந்த பனிக் கிரகம் சத்திய தேவ உலகத்தைதான் அவளுக்கு நினைவூட்டியது. அங்கே இருந்த தனது நண்பர்களை நினைத்துப் பார்த்தாள். அந்த கிரகத்தின் அழகையும், அந்த கிரகத்து ஏந்தலின் திமிரையும் நினைத்துப் பார்த்தாள்.
இக்கிரகத்திலேயே பனிப் பூக்களை உருவாக்கினாள். மாலையாக கோர்த்துக் கழுத்தில் போட்டுக் கொண்டாள். ஆனால் இந்த பூக்கள் அந்த ஏந்தல் தங்கியிருக்கும் மரத்தின் பூக்களை போல வாசம் வீசவில்லை.
சோர்வாக உணர்ந்தாள். பனியிலேயே குகை ஒன்றை செய்து அதில் அமர்ந்து விட்டாள்.
நாட்கள் மாதங்களாகியது. பிரபஞ்ச வெளியில் புது கிரகங்கள் உருவாயின. பழைய கிரகங்கள் அழிந்துக் கொண்டிருந்தன.
நட்சத்திரங்கள் எரிந்து சாம்பலாகி கொண்டிருந்தன. அதே சமயம் ஒரு புறம் பிரபஞ்சம் விரிவடைந்துக் கொண்டிருந்தது. அண்ட பெருவெடிப்புகள் ஆங்காங்கே நடந்துக் கொண்டிருந்தன.
ஆனால் தேவ உலகங்கள் மட்டும் அதே போல இருந்தது. ஆனால் தேவ உலகங்களையும் ஆதி தேடவில்லை. ஆட்சி செய்யும் உயிரினங்கள் உருவாகி இருந்த கிரகத்தையும் அவள் தேடவில்லை.
அவளுக்கு அமைதி தரும் ஒரு கிரகத்தை தேடினாள். ஆனால் அதுதான் எங்கும் கிடைக்கவில்லை.
***
இயனி வெற்றிக் களிப்பில் இருந்தான். தோற்றது அவன்தான் என்றாலும் கூட அவன் நினைத்த ஒரு விசயம் நடந்து விட்டது. அதுதான் அன்பின் தேவதை அந்த உலகத்தை விட்டுச் சென்றது.
அவனுக்கு அந்த உலகத்தின் பலம் பலவீனம் பற்றி தெரியும். கவி சிறைப்பிடித்த செழினியால் ஒரு பயனும் இல்லை. அவன் தூய்மையான அன்பின் தேவன் அல்ல. அவனின் சக்தி மற்றொரு உலகத்தையே தாங்கும் அளவிற்கு கிடையாது. எப்படி இருந்தாலும் விரைவில் இந்த உலகம் அழிந்து விடும் என்பது மட்டும் இயனிக்கு தெளிவாக தெரிந்தது. அந்த மகிழ்ச்சியில்தான் இருந்தான் அவன்.
இயனி கொண்ட அதே மகிழ்ச்சிதான் வித்யநயனுக்கும் கூட. சத்திய தேவ உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை பார்க்க வேண்டும் என்று ஆசையோடு இருந்தான்.
இவர்களின் எண்ணங்கள் அனைத்திற்கும் காரணம் கவியேதான். ஏனெனில் வீரம் உள்ளது என்ற காரணத்திற்காக அனைவரையும் வெற்றி கொள்ள ஆசைப்பட்டது அவன்தான். மற்ற உலகங்களின் மீது தேவையே இல்லாமல் படை எடுத்தான். தேவ உயிர்களை சாதாரண மனித உயிர்களாக கூட மதிக்காமல் பறித்தான். அவனின் அகங்காரமே அவனை பழி வாங்க ஆரம்பித்தது என்பதை அவன்தான் அறியவில்லை.
கவி தனது உலகில் நிம்மதியாக இருந்தான். செழினி பாதாள சிறையில் இருந்தான். இவனோ தினம் ஒரு இணை தேடி கூடி களித்துக் கொண்டிருந்தான். ஆதியை மறக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தான்.
செழினி சீறும் பாம்பாக சிறையில் கிடந்தான். தன் உலகையே அழித்த கவியை எப்படி பழி வாங்குவது என்ற யோசனையில் இருந்தான். எப்படி இருந்தாலும் தனது வீரத்தால் முடியாது என்று நம்பினான். அவனின் இதயத்தை இவன் பறிக்கும் முன்பு அவன் இவனின் கழுத்தை திருகி எறிந்து விடுவான் என்றும் தெரியும். அதனாலேயே புத்திசாலிதனமாக யோசித்தான்.
அன்பு இல்லாததால் இவர்கள் அழிவார்கள் என்றாலும் அவ்வளவு காலம் வரை காத்திருக்க விரும்பவில்லை செழினி. அவனுக்கு கவியின் உடனடி மரணம் தேவைப்பட்டது.
யோசித்தவன் தனக்கு காவலாக இருக்கும் மனிதனை தன் அன்பால் வீழ்த்த ஆரம்பித்தான்.
***
ஆதி பிரபஞ்ச வெளியில் மீண்டும் நடந்தாள். சோம்பலாக இருந்தது. வாழ்வதில் அர்த்தமில்லாமல் போனது போல இருந்தது. எங்கேயேனும் ஆழ குழி வெட்டி அதில் வசிக்க வேண்டும் போல இருந்தது.
இலக்கின்றி நடந்துக் கொண்டிருந்தவளின் முன்னால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நின்றார் ஹார்ட்.
"ஆதி.." என்றார்.
ஆதி தலை கவிழ்ந்தாள். கை கூப்பி வணக்கம் சொன்னாள்.
"பால்வீதியின் கடவுளுக்கு எனது வணக்கங்கள்" என்றாள். அவள் பால்வீதிக்குள் நுழைந்த அடுத்த சில கணங்களிலேயே இவளைத் தேடி வந்து விட்டார் அவர்.
"ஆதி.. நீ என்றும் இன்பமாக வாழ வேண்டும்." என்று கையை உயர்த்தி ஆசிர்வதித்தார் அவர்.
தூரத்தில் நின்றிருந்த ஃபயர் சிரித்தாள்.
"நீயொரு டுபாக்கூர் கடவுள் என்பதை அறியாதவள் அவள். உனது ஆசிர்வாதங்களை போன்றதொரு சாபம் எங்குமே கிடையாது என்பதையும் அறியவில்லை அவள்!" என்றாள்.
ஹார்ட் திரும்பிப் பார்த்து அவளை முறைத்தார். "பொறாமை பிடித்தவள் நீ." என்றார்.
ஃபயர் அதற்கும் சிரித்தாள்.
"நீ மன நிம்மதி தேடி அலைவதை நானும் அறிந்தேன் அம்மையே! உனக்கு விருப்பம் இருந்தால் எங்கள் வீதியில் உள்ள ஒரு கிரகத்தில் வந்து தங்கிக் கொள். அந்த கிரகத்தில் மிருகங்களும், பறவைகளும் உண்டு. உனக்கு பேச்சு துணையாகவும், பார்வை துணையாகவும் இருக்கும். நீ கொஞ்சம் நிம்மதியை உணருவாய்." என்றார்.
ஃபயர் கண்களை சுழற்றினாள்.
"கடவுள்தானே நீ? ஏன் பிரச்சனையை நேராய் சொல்லி அவளிடம் உதவி கேட்க கூடாது?" என்றாள் மனதுக்குள் ஹார்டிற்கு மட்டும் கேட்கும்படி.
"அவசியம் இல்லை. நீ உன் வேலையை பார்." என்றார் அவர்.
ஆதி அவரை நன்றியோடு பார்த்து கை கூப்பினாள்.
"உங்களின் உதவியை மறக்க மாட்டேன் இறைவா! இங்கே பிரபஞ்சத்தில் எத்தனையோ கிரகங்கள் உண்டு. ஆனால் எல்லா கிரகத்திலும் உயர் வாழ் உயிரினங்கள்தான் உள்ளன. தேவதைகளை மிஞ்சி, ஆண்டவனையும் மிஞ்ச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களிடம் நெருங்கவே எனக்கு பயமாக உள்ளது இறைவா! ஆனால் இங்கே நீங்கள் இவ்வளவு அழகான வாய்ப்பை தருவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. மிக்க நன்றிகள்!" என்றாள்.
ஆதியை புவிக்கு அழைத்துச் சென்றார் ஹார்ட். அந்த கிரகத்தை ஆர்வத்தோடு பார்த்தாள் ஆதி.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments