Advertisement

Responsive Advertisement

தேவதை 14

 ஆதியின் மகிழ்ச்சி கட்டுக் கடங்காமல் இருந்தது. இவ்வளவு மகிழ்ச்சியை அவள் உணர்ந்ததே இல்லை. எவ்வளவு அழகான கிரகம் என்று சுற்றிலும் பார்த்து வியந்தாள். 


மற்ற கிரகங்களோ உலகங்களோ ஒரே ஒரு நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கே பல வண்ணங்கள் இருந்தன. வானமும் கடலும் நீலமாக இருந்தது. மலைகள் சிகப்பும் பச்சையாகவும் இருந்தன. பாறைகள் கருப்பாக இருந்தன. எரிமலைகள் சிவப்பாக இருந்தன. மண் சிகப்பும், வெள்ளை, கருப்பு, சாம்பலாக இருந்தன. செடிகளும் மரங்களும் பச்சையாக இருந்தன.


ஆதி அந்த கிரகத்தின் தரையில் நின்றுக் கைகளை விரித்தபடி சுற்றினாள். மகிழ்ச்சி முகம் முழுக்க இருந்தது. அவளின் இதயம் முழுக்கவும் இருந்தது.


"அழகான கிரகம்!" என்றாள் ஹார்ட்டை பார்த்து.


ஹார்ட் வெட்கப்பட்டார்.


"ரொம்ப கேவலமாக வெட்கப்படுற!" என்றாள் ஃபயர்.


"திமிரை தவிர வேறு ஏதேனும் உன்னிடம் உண்டா?" அவளைப் பார்த்துக் கேட்டார் ஹார்ட்.


"அவர் விளையாடுகிறார் இறைவா. உங்களுக்கு சரியான தோழியாக உள்ளார்." என்று இடைப்புகுந்துச் சொன்னாள் ஆதி.


ஹார்ட் புன்னகைத்தார். "புரிந்தது ஆதி." என்றார்.


ஃபயர் ஆதியின் அன்பு நிறைந்த கண்களை சற்று நேரம் பார்த்தாள். பின்னர் மேகத்திற்கு சென்றாள். மேக படுக்கையில் படுத்துக் கொண்டாள். 


ஆதி அந்த கிரகத்தின் மண்ணில் அமர்ந்தாள்.


"இந்த கிரகத்திற்கும் எனக்கும் முன் ஜென்ம சம்பந்தம் போல் தோன்றுகிறது." என்றாள்.


ஹார்ட் அவளுக்கு முன்னால் அமர்ந்தார்.


"இந்த ஜென்ம சம்பந்தம்தான்." என்ற ஹார்ட் இங்கே கடல் உருவாக காரணமாக அவளின் கண்ணீரை பற்றிச் சொன்னார்.


ஆதி வெட்கத்தில் தரை பார்த்தாள்.


"உன்னிடம் ஒரு உதவி கேட்கிறேன் ஆதி." என்றவரைக் கேள்வியாக பார்த்தாள்.


"இங்கே ஆளும் ஜீவராசிகள் வேண்டும் ஆதி. ஆனால் என்னால் உருவாக்க முடியவில்லை. அனைத்து அண்டங்களிலும் ஆளுமை ஜீவராசிகள் கொண்ட கிரகங்கள் நிறைய உள்ளன. ஆனால் இந்த பால்வீதி பேரண்டத்தில் என்னால் ஆளுமை ஜீவராசிகளை உருவாக்க முடியவில்லை. நானே என்னை கேலி செய்துக் கொள்ளும் ஒரு வாழ்க்கையைதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்." என்றார் சோகமாக.


ஆதி அதிர்ந்தாள். அவர் சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை. 


"நீங்கள் இந்த பேரண்டத்தின் கடவுள்." என்றாள்.


சிரித்தபடி ஆமென்று தலையசைத்தார்.


"ஆனால் பலன் என்ன? என்னால் உயிர்களை உருவாக்க முடியவில்லையே!" என்றார் கைகளை அசைத்தபடி.


ஆதி அவரின் ஒரு கரத்தை பற்றினாள்.


"உங்களால் முடியும் இறைவா!" என்றாள்.


இடம் வலமாக தலையசைத்தார் அவர்.


"எனது பேராசையம்மா. மற்ற கிரகத்தை போல ஆளுமை ஜீவராசிகள் தேவையில்லை எனக்கு‌. நான் விரும்புவது வேறு விதமான ஜீவராசிகள். துன்பத்தில் பாடம் படித்து, இன்பத்தில் மற்றொரு ஜீவனையும் மகிழ செய்து, ஒவ்வொரு கணத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கும் ஜீவன்கள் வேண்டும். இந்த உலகத்தை நான் பெரும் ஆசையோடு உருவாக்கி வைத்துள்ளேன். சொத்து சேர்த்தது வாரிசு வாழதான். அது போல இந்த கிரகத்தை நான் உருவாக்கியதும் இங்கே உருவாகப்போகும் என் குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து வாழதான். அவர்கள் வாழ வேண்டும். அவர்களின் வாழ்க்கையை கண்டு இந்த மொத்த பிரபஞ்சமும் வியக்க வேண்டும். பால்வீதியின் பிள்ளைகளை போல யாருமே வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று வரலாற்றில் எழுதப்பட வேண்டும்." என்றார்.


ஆதி ஆச்சரியத்தில் உறைந்துப் போனாள். அவரின் ஆசை அவளை வியப்பில் ஆழ்த்தியது. இவரை போல தன் குழந்தைகளை விரும்பும் கடவுள் இந்த பிரபஞ்சத்தில் உண்டா என்று யோசித்தாள்.


மற்ற அனைத்து அண்டங்களிலும் உயிர்களை உருவாக்கி விட்டு அத்தோடு நகர்ந்துக் கழண்டுக் கொள்வார்கள். மற்ற அண்டங்களில் உள்ள யாருக்கும் கடவுள் என்ற ஒன்றை பற்றி கூட தெரியாது. ஏனெனில் அவர்கள் தங்களை தவிர வேறு யாரையும் உயர்ந்தோராக எண்ணவில்லை. அனைவரையும் எதிரியாக பார்த்தனர். தங்களை தவிர வேறு யாரும் வாழ கூடாது என்று எண்ணினார்கள். 


ஆனால் இங்கே இவர் வாழ்வதற்கு மக்களை கேட்டார்.


ஆதிக்கு மனம் நெகிழ்ந்து போனது.


"இங்கே உயிர்களை உருவாக்க உன்னால் மட்டும்தான் முடியும் ஆதி." என்று அவர் சொல்ல மேலும் அதிர்ச்சியானாள் அவள்.


அவளின் முன் நான்கு கால் பிராணி ஒன்று துள்ளிக் கொண்டு ஓடியது.


"இதன் பெயர் மான்!" என்றார்.


ஆதி அந்த மானின் பின்னால் பார்வையை ஓடவிட்டாள். மான் தரையில் இருந்த புற்களை தின்றபடி அவள் இருந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வந்தது. ஆதிக்கு அந்த மானை பிடித்திருந்தது.


"ஆனால் என்னால் எப்படி? நான் ஒரு அன்பின் தேவதை!" என்றாள்.


"ஆமாம் அம்மா. என் குழந்தைகளுக்கு தேவையான அன்பு உன்னிடம் உண்டு. நீ நினைத்தால் என் உலகில் ஆளுமை உயிர்களை உருவாக்க முடியும்.‌ உனது சக்தியை நீ இங்கே கலக்கும்போது உன் ஆசைப்படி உயிரினங்கள் உருவாகும். எனக்காக இந்த உதவியை செய் ஆதி." என்றார்.


ஆதி யோசித்தாள். அவள் ஒரு சிறிய தேவதை. இவ்வளவு பெரிய பொறுப்பு அவளை ஆச்சரியப்படுத்தியது. தன்னை மதிக்கும் ஒருவரை தானும் மதிக்க வேண்டும் என்று நினைத்தாள். இந்த பிரபஞ்சத்தில் அவளை நெருங்கிய அனைவரும் அவளை ஏமாற்ற முயன்றனர். ஆனால் இக்கடவுள் மட்டும்தான் அவளிடம் நேர்மையாக உதவி கேட்டார். அதுவும் அவர் கடவுளாய் இருந்தும் தன்னிடம் கட்டளை இடாமல் உதவியாய் கேட்டது அவளை மேலும் நெகிழ செய்து விட்டது.


"நிச்சயம் செய்கிறேன் இறைவா. உங்களின் நல் மனது போலவே உங்களின் பிள்ளைகளும் இருப்பார்கள்!" என்றாள்.


ஹார்ட் எழுந்து நின்றார்.


"இந்த உலகத்தை ஆட்சி செய்யும் பொறுப்பை உன்னிடம் தருகிறேன் ஆதி. நீ இதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்!" என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.


***


செழினியின் அன்பில் மயங்கினான் அவனை காவல் காத்துக் கொண்டிருந்தவன். செழினி சிணுங்கி கேட்கவும் அந்த அறையின் கதவையும் அவனுக்காக திறந்து விட்டான். ஆனால் வெளியே வந்த அடுத்த கணமே அவனை கொன்று விட்டான் செழினி.


சத்திய தேவ உலகம் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆதியை மறக்க வேண்டி அழகு பெண் ஒருத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தான் கவி.


கடந்த சில நாட்களாகவே அவனின் மனதில் பழைய வெறுப்பு வந்து விட்டது.‌ எதிலும் பிடிப்பு இல்லை. மக்கள் பயிற்சி செய்வதை விட்டு விட்டனர். இவனும் கண்டுக் கொள்ளவில்லை. அந்த அளவிற்கு மனதில் சோர்வு இருந்தது.


பாதாள சிறையை விட்டு வெளியே வந்த செழினி கவியைதான் முதலில் தேடினான். ஆனால் அதற்கும் முன்பே இயனிக்கு தகவல் அனுப்பி இருந்தான். அவனின் உதவி இருந்தால்தான் இவனை தாக்க முடியும் என்பது செழினியின் கணக்கு.


ஆனால் இயனி வேறு ஒரு கணக்கு போட்டிருந்தான் என்பதை இவன்தான் அறியாமல் போய் விட்டான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments