Advertisement

Responsive Advertisement

தேவதை 16

 சில நூறு வருடங்களுக்கு பிறகு..


புவி. பால்வெளி அண்டத்தில் சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் அது. நீல வானும் கடலும், பச்சை வயல்வெளிகளும், துள்ளி திரியும் மான்களும், பெரிய அளவிலான மாமத யானைகளும் பறந்துக் கொண்டிருந்த யூனிகார்ன்களும், யாழிகளும், மழை குடிக்கும் சக்கர வாகங்களும், நெருப்பை கக்கும் டிராகன்களும் அதன் அடையாளமாக இருந்தது. 


அந்த கிரகத்தின் அழகை வார்த்தையால் வர்ணிக்கவே இயலாது. அது ஒரு அற்புத கிரகம். தன் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கி வைத்திருந்தார் அந்த அண்டத்தின் கடவுள்.


"என் குழந்தைகள் ரசிக்க ஆரம்பித்தால் அவர்களின் ஆயுட்காலம் முழுக்க இந்த கிரகத்தை ரசிக்க மட்டுமே செலவாகும்!" என்றார் பெருமையோடு.


"என் குழந்தைகள் மனம் வாடினால் எங்கும் போக தேவையில்லை. அண்ணாந்து பார்த்தால் போதும். நான் உருவாக்கி வைத்துள்ள வானத்தில் வெண்மேகங்கள் அவர்களுக்காக விளையாட்டு காட்டும். சோகமாய் இருக்கும் நேரத்திலும் தென்றல் அவர்களுக்கு தாலாட்டுப் பாடும். இங்குள்ள குயில்களும், மயில்களும் அவர்களுக்கு துணையென படைக்கப்பட்டதே! இங்கிருக்கும் மான்களும், மாட புறாக்களும் அவர்களின் தோழமைக்கு படைக்கப்பட்டதே. நாளை நான் அழிந்தாலும் என் மக்களின் மகிழ்ச்சியில் ஒரு துளி பங்கம் இருக்காது. இந்த பிரபஞ்சத்தில் பைத்தியம் போல சண்டை போட்டு திரியும் உயர் இன மக்களை போல இல்லாமல் என் மக்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சி விளையாடி வாழ்க்கையை ஆழ்ந்து அனுபவித்து வாழ போகிறார்கள்!" என்றுத் தனது மகிழ்ச்சியில் மூழ்கிக் கொண்டிருந்தார் அவர். பெரியதாக சாதித்த மகிழ்ச்சி அவருக்குள். 


ஹார்டின் மகிழ்ச்சி கண்டு ஃபயரும் கூட மகிழ்ந்தாள். தங்களது கிரகத்தை கண்டு ஆக்சிசனும், ஆக்வாவும் அதிசயப்பட்டுக் கொண்டிருந்தனர். தங்களின் கை வினையில் இவ்வளவு அழகான கிரகம் உருவாகும் என்று அவர்களே நினைக்கவில்லை. 


நான் சொல்வது உங்களுக்கு பொய்யாய் கூட தோன்றலாம். ஆனால் இந்த மாபெரும் பிரபஞ்ச வெளியில் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு நீங்களே இந்த பூமி போல அழகான கிரகம் எங்கும் இல்லை என்று பட்டயத்தில் எழுதி விடுவீர்கள்.


ஆதி தனது மர குகையில் இருந்தாள். நேற்றைய மழையில் அந்த வனமே ஈர காடாக கிடந்தது. வெளியே செல்ல ஆசை கொண்டு நடந்தாள். அது ஒரு பெரிய மரம். வானத்தில் பாதி உயரம் வளர்ந்து இருந்தது அம்மரம். அந்த மரத்தின் குகைக்குள் அவளைப் போல நூறு பேர் குடியிருக்கலாம். அவ்வளவு பெரிய குகை அது.


ஆதி ஈர தரையில் கால் வைத்து நடந்தாள். அருகே இருந்த செடிகளில் மழை துளிகள் கண்ணாடி துளிகளாக இலைகளிலும் கிளைகளிலும் ஒட்டிக் கொண்டிருந்தன.


ஆதியின் கரங்கள் அனிச்சையாக அந்த மழைத் துளிகளை கை பற்றின. அனைத்து துளிகளும் இணைந்து மாலைகளாக மாறின. அந்த மாலையை தன் கழுத்தில் அணிந்துக் கொண்டாள் ஆதி. தரையில் உருண்டோடும் நெருப்பு குழம்பென அவளின் கழுத்தில் தொட்டும் தொடாமல் மோதிக் கொண்டிருந்தது அந்த மாலையில் இருந்த நீர் துளிகள்.


மரங்களின் இடையே நடந்து போனாள். சமவெளி பகுதியில் ஆண்களும் பெண்களும் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆதி அவர்களின் பார்வைக்கு தென்படாதவாறு மறைந்து நின்றுக் கொண்டாள். 


அங்கிருந்த ஒவ்வொரு ஆண்களும் கவியின் பிரதிபலிப்பாகதான் இருந்தார்கள். பெண்களையும் கவியின் முக சாயலில்தான் வடித்து வைத்திருந்தாள். அழகான இரண்டு கரங்கள், நெற்றியின் கீழ் இரண்டு கண்கள், நடுவே அழகாய் ஒரு மூக்கு, மூக்கின் கீழ் பூவின் மென்மை போன்று அதரங்கள், அவர்களின் தேவைக்கு என்று செவிகள், இதயம், நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், கணையம் மட்டுமின்றி பல வித நரம்பு, மூளை அடுக்குகள் என்று உருவாக்கி இருந்தாள் ஆதி.


ஆம். அவர்கள் அனைவரையும் அவள்தான் உருவாக்கினாள். அவளின் சக்தியை கொண்டு, அந்த பிரபஞ்சத்துக்கு சொந்தமான ஆன்மாக்களை முன்னிறுத்தி அந்த மனிதர்களை உருவாக்கினாள். அந்த மனிதர்களின் உருவங்கள் அனைத்திலும் கவியின் மீது அவள் கொண்ட ஒரு தலை காதல் இருந்தது. அவர்களின் இதயத்தோடு கலந்த அன்பிலும் கவியின் மீது அவள் கொண்ட காதல்தான் இருந்தது.


சோகங்கள் அவர்களின் மூளையின் கீழ் அடுக்கோடு புதைக்கப்பட்டதை அந்த அப்பாவி தேவதை அறியவில்லை அப்போது. அவள் அழுத கண்ணீர், அவள் தன் ஏமாற்றத்தை தாங்க இயலாமல் விம்மிய விம்மல்கள் அனைத்தும் எங்கும் செல்லாமல் அந்த புவியினுள் இருந்த இயற்கைகளில் கலந்து விட்டதை அவளும் அறியவில்லை. தன் கிரகத்தின் அழகில் சொக்கி கிடந்த கடவுள்களும் கூட அதை அறியவில்லை.


அந்த சோகங்கள் அனைத்தும் அந்த கிரகத்து குழந்தைகளான மனிதர்களை பழி வாங்க போகிறது என்பதையும் அவர்கள் அறியவில்லை.


மனிதர்கள் ஆணும் பெண்ணுமாக அந்த ஆற்றங்கரை சமவெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த சமவெளியின் மேட்டில் மரக்கட்டைகளால் உருவான பல வீடுகள் இருந்தன. அவர்களுக்கு கட்டிடங்கள் மீது ஆவல். ஆற்றின் மறுபுற மேட்டில் பெரிய பெரிய கல் கோபுர வீடுகளையும் கட்டிக் கொண்டிருந்தார்கள்.


அவர்களுக்கு அனைத்து விலங்குகளும் நண்பர்களே. அவர்களின் கண்களில் இயல்பாய் வழிந்த அன்பு அங்கிருந்த அனைத்து மிருகங்களையும் பறவைகளையும் அடிமையாக்கி வைத்திருந்தது.


டிராகன் மீதும், யூனிகார்ன் மீதும் ஏறி பறந்து குதூகலிப்பார்கள். ஆழ கடலில் குதித்து நீல முத்தெடுத்து வந்து தங்களின் காதலர் கரம் தருவார்கள். அங்கே வீரம் தேவைப்படவில்லை. யார் பெரியோர் என்ற கேள்வி எழவில்லை. எது உயர்ந்த பாலினம் என்ற முட்டாள்தனமான யோசனைகளும் இல்லை. 


அனைவரும் மனிதர்களாக இருந்தார்கள். அன்பைத் தங்களின் நெஞ்சில் சுமந்து அந்த அகிலத்தை ஆளும் அளவிற்கு திறமைசாலிகளாக இருந்தனர். 


விலங்கு பறவைகளின் மொழியும், செடி கொடிகளின் பாசையும் அவர்களுக்கு புரிந்திருந்தது. அவர்கள் பேசுவது ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் புரிந்திருந்தது. 


இப்படி ஒரு இன்பமயமான வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்பதை அவர்களும் அப்போது அறியவில்லை.


புயலுக்கு முன் அமைதி என்பது போல பெரிய சேதாரத்திற்கு முன்புதான் இந்த அழகிய வாழ்வு என்பதை யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை.


வானத்தின் மழையை அள்ளி பருகினார்கள் அந்த மனிதர்கள். "தேன் துளிகள் தோற்கும் ருசியப்பா இந்த நீர் துளிகள்!" என்று வியந்தனர்.


வெயிலும் மழையும் அவர்களை ஏதும் செய்யவில்லை. 


பூக்களின் மகரந்தத்தோடு நனைந்திருந்த தேன் துளிகளை உண்டு அவர்களால் பசியாற முடிந்தது. ஆற்றோடு வளர்ந்துக் கிடந்த நாணல் புதர்களில் எட்டிப் பார்க்கும் சிறு பாசிகளை சேகரித்து அவர்களால் உண்டு வாழ முடிந்தது. 


அவர்களின் நரம்புகளில் கோபமும், ரோசமும் இல்லை. அதுதான் அவர்களுக்கு ஆபத்தாய் மாற காத்திருந்தது.


கவி ஆதியை காணாமல் ஒரு பக்கம் துடித்துக் கொண்டிருந்தான். நெவத்ஸி கிரக மக்கள் ஒருபக்கம் இவர்களை தேடி அலைந்துக் கொண்டிருந்தார்கள். யாரிடம் முதலில் சிக்குவார்கள் இந்த புவியின் ஆதிகால அன்பின் குழந்தைகள்?


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments