சத்திய தேவ உலகம் பாதி அழிந்து விட்டிருந்தது. வறண்ட பனிக் காற்றில் சத்திய தேவர்களின் அர்த்தமில்லா வார்த்தைகள்தான் கலந்திருந்தன.
கவியால் தன் உலகத்தை நிர்வகிக்க முடியவில்லை. அரசனாக தோற்றுக் கொண்டிருந்தான். அந்த மொத்த பிரபஞ்சத்திலும் இளமையிலேயே ஏந்தலாக முடி சூடியவன் அவன்தான். அதை நினைத்து பல நாட்கள் பெருமை பட்டுள்ளான். ஆனால் இப்போது தனக்கு ஏந்தலாக இருக்க தகுதி இல்லையென நினைத்து உள்ளுக்குள் உடைந்துக் கொண்டிருந்தான்.
அவனால் வருத்தப்பட முடிந்தது. நிறைய எண்ணங்களை யோசிக்க முடிந்தது. ஆனால் எதையும் செயல்படுத்த முடியவில்லை. அவனுக்கு தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது.
காரணமே இல்லை. வாழவும் காரணம் இல்லை. ஒரு சொல் சொல்ல கூட காரணம் தேவைப்பட்டது. ஆசைகள், கோபங்கள், விருப்பு வெறுப்பு அடங்கிய மனதில் தற்கொலை மட்டும்தான் கடைசியாக எஞ்சி இருக்கும் என்பதை புரிந்துக் கொண்டான்.
ஆசைகள் ஏன் தேவை? வாழ்வை உயிரோட்டமாக வைத்திருக்க, ஏன் எதற்கு என்ற காரணம் கேட்காமல், எட்டாத நட்சத்திரத்தை எட்டி பிடித்து ஓடி நாட்களை தொலைக்கவாவது ஆசைகள் தேவை. ஆனால் இதை தாமதமாகதான் உணர்ந்தான் கவி.
கவியின் சோர்வுக்கு மற்றொரு காரணமும் உண்டு. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல ஆதியை துரத்தி அடித்த பிறகுதான் தனது உலகத்தின் நூலகத்திற்குள் நுழைந்தான்.
பனிக் குகைக்குள் இருந்த ஓராயிரம் கண்ணாடிகள்தான் அவர்களுக்கான நூலக புத்தகமாக இருந்தது. அதில் ஒரு கண்ணாடி அன்பின் தேவ உலகத்தை பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தது.
செழினியை கொன்ற பிறகு கவி அந்த கண்ணாடியின் முன்னால்தான் வந்து நின்றான்.
"அன்பின் தேவ உலகம் பற்றி சொல்!" எனக் கேட்டான்.
அன்பின் தேவ உலகம் பற்றிய காட்சிகள் அந்த கண்ணாடியில் தோன்ற ஆரம்பித்தன.
சூனியம் மட்டும்தான் முதலில் இருந்தது. திடீரென்று ஒரு சிறு புள்ளி. அந்த சிறு புள்ளி வெடித்தது. ஒரு துகள் ஆயிரம் கோடி மடங்காக வெடித்தது. நெருப்பும் பனியும் சரி சமமாக அங்கே படர்ந்தது. நெருப்பு துகள்கள் ஆங்காங்கே ஒன்று கூடி நட்சத்திரங்களாக உருவாகின. பல நட்சத்திரங்கள் வட்டமிட்டு அண்டமாக மாறின. அண்டங்கள் பேரண்டங்களாக, குட்டிக் துகள்கள் எல்லாம் கிரகங்களாக மாறிக் கொண்டிருந்தன.
அகன்ற அந்த பிரபஞ்சத்தின் நடுவில் ஓடிக் கொண்டிருந்த மின்சார வெளிச்சங்கள் எல்லாம் ஆங்காங்கே ஒன்றிணைந்துக் கொண்டிருந்தன.
ஈர்ப்பு விசையால் அலைக்கழிக்கப்பட்டு பல நூறு ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு பிறகு அந்த மின்சார வெளிச்சங்கள் அனைத்தும் ஒவ்வொரு உருவமாக மாற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் வடிவத்தில் நேர்த்தி இல்லாமல் இருந்த அந்த உருவகங்கள் அந்த பிரபஞ்சத்தை சுற்றிப் பார்த்து தாங்கள் யாரென்று அறிந்துக் கொள்ள முற்பட்டன.
சுயமாய் கற்று அனைத்தையும் தெரிந்துக் கொண்டன. அந்த பிரபஞ்சத்தில் சுற்றி திரியும் கோள்களையும், நட்சத்திரங்களையும் இடம் மாற்றி வைத்து, அவைகளின் சக்தியை கூட்டி குறைக்கவும் கற்றுக் கொண்டன.
தாங்கள் கடவுள் என்பதை அவர்கள் அப்போதும் கூட அறியவில்லை. பிரபஞ்சம் உருவாக்கிய கடவுள்கள் பிரபஞ்சத்தை வைத்து விளையாட கற்றுக் கொண்டிருந்தார்கள்.
வருடங்கள் பல கடந்த பிறகு அவர்களை போலவே இன்னும் சிலர் உருவாயினர்.
கடவுள் அளவிற்கு அவர்களுக்கு சக்திகள் இருக்கவில்லை. ஆனால் ஒரு உலகத்தை மேம்படுத்தும் அளவிற்கு சக்திகள் இருந்தது.
அப்படிப்பட்ட சக்திகளோடு உருவாகிய ஒரு கூட்டம்தான் தேவ வம்சம். அவர்கள் கடவுள் இல்லை. ஒருவருக்கொருவர் துணையாய் இருந்தால் மட்டும்தான் அவர்களின் சக்தி வேலை செய்யும்.
அன்பின் தேவ உலகத்தை கட்டுமானம் செய்த தேவனுக்கும் சத்திய தேவ உலகத்தை உருவாக்கிய தேவதைக்கும் இடையில் ஒரு காதல் இருந்தது.
அவர்களுடையது மென்மையான காதல். அவர்களுக்கு அழிவே இல்லை. ஆனால் அப்போது பிரபஞ்சம் ஒருபுறம் மெள்ள அழிந்துக் கொண்டிருந்தது. அதை சரி செய்ய இவர்கள் இருவரும் தங்களின் வாழ்வை துறக்க வேண்டியதாகி விட்டது.
"மரணிக்கும் முன் ஓர் வார்த்தை சொல்ல ஆசைக் கொள்கிறேன் என் மன்னவா!" என்றாள் அவனின் தேவி.
"நானும் ஒன்றை சொல்ல விளைகிறேன்!" என்றவன் தங்களை நோக்கி வந்த பிரபஞ்ச புயலை பார்த்தான்.
"என் உலகத்திற்கு அன்பு இருந்தால் மட்டும்தான் வீரமும் வாழ்வும் அங்கே இருக்கும். இந்த உண்மையை நான் இப்போதுதான் கண்டேன். அதை என் மக்களிடமும் சொன்னேன். ஆனாலும் பயமாக உள்ளது மன்னவா! வீரம் அழிந்தால் இந்த பிரபஞ்சம் இருப்பதே வீண் என்றாகி விடும்.!" என்றாள் கவலையாக.
"எங்களின் அன்பின் உலகிற்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது தேவி. நான் அதை என் மக்களிடம் கடத்தி விட்டேன். ஆனால் காலப்போக்கில் மறந்து போய் விடுவார்களோ என்று பயம் கொள்கிறேன். நம் உலகத்தை ஒன்று இணைத்து விடலாமா என்று உன்னிடம் கேட்க இருந்தேன். ஆனால் அதற்குள் இந்த பிரபஞ்ச புயல் நம்மை இழுத்து விட்டது!" என்றான் அவன் வருத்தமாக.
அவனின் தேவி தன் சோகத்தை வெளிக்காட்டாமல் "நம் மக்கள் நம் பேச்சை மதிப்பார்கள் மன்னவா! ஒருவர் இன்றி ஒருவர் வாழ இயலாது என்பதையும் புரிந்துக் கொள்வார்கள். அப்படி அவர்கள் புரிந்துக் கொள்ள முடியாத நாள் வருகையில் இந்த பிரபஞ்சம் மீண்டும் நம்மை உருவாக்கும் என்றே நம்புகிறேன்.!" என்றாள். ஆனால் அவளுக்குள்ளும் பயம் இருந்தது. எப்படியாவது தன் மக்கள் வாழ்ந்து விட வேண்டும் என்று ஆசை கொண்டாள்.
வீரம் அவர்களின் உடன் பிறந்தது. அவர்களின் வீரம்தான் பிரபஞ்சத்தின் வெளிகளில் பரவி சிறு சிறு கிரக மக்களுக்கும் கூட ரத்த ஓட்டத்தை தந்துக் கொண்டிருந்தது.
"என் வாழ்வின் ஜீவன் நீ தேவி! இந்த பிரபஞ்ச புயல் நம் உடலை அழித்தாலும் நம் நேசத்தை அழிக்காது என்றே நம்புகிறேன்!" என்றவன் அவளின் கையை பற்றிய அதே நொடியில் பிரபஞ்ச புயல் அவர்கள் இருவரையும் தனக்குள் மூழ்கடித்தது. இவர்கள் உள்ளே வீழ்ந்ததும் புயலின் வேகமும் குறைந்துப் போய் விட்டது.
பிரபஞ்சம் அழித்த புயல் இருவரோடு திரும்பி சென்றது.
சத்திய தேவ உலகில் இருந்தவர்கள் அன்பின் தேவ உலகின் முக்கியத்துவம் பற்றி தங்களின் அடுத்தடுத்த வாரிசுகளிடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால் கால போக்கில் ஏந்தல்கள் தங்களின் ஓய்வு காலம் வந்ததும் சொகுசு தேடி ஓடுவதில் முக்கியத்துவம் செலுத்தியதில் அன்பின் தேவ உலகம் சத்தியர்களுக்கு ஏன் முக்கியம் என்ற செய்தியை கூட கடத்தாமல் விட்டு விட்டார்கள்.
கவி தானாய் உண்டான ஒரு சுத்த சத்திய தேவன்தான். ஆனால் அவனுக்கு முன்னால் இருந்த ஏந்தலுக்குமே கூட அன்பின் தேவ உலகம் பற்றி தெரியாமல் போய் விட்டது. கவியும் அந்த உலகில் ஏந்தலாய் பொறுப்பேற்ற உடன் தன் மக்களின் நலனில் பெரிய அக்கறை செலுத்தினான். அவனின் அக்கறையேதான் அந்த உலகத்தை அழிக்க இருக்கிறது என்பதை கூட அவன் உணரவில்லை.
"என்ன இது? நான் அன்பின் தேவ உலகம் பற்றிய விவரங்கள் கேட்டேன். ஆனால் நீ என்னை பற்றிய விவரங்களை தந்துக் கொண்டிருக்கிறாய்!" என்று கண்ணாடியின் மீது அடித்தான் கவி.
"விளக்கம் மெள்ளவே விளங்கும்!" என்றது அந்த கண்ணாடி.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments