Advertisement

Responsive Advertisement

தேவதை 18

 விளக்கம் மெள்ள விளங்கலாம். ஆனால் கவிக்கு பொறுமை இருக்க வேண்டுமே!


"மெள்ள எனும் பேச்சை நிறுத்து. விசயத்தை தெளிவாய் என்னிடம் சொல்!" என்றான் அந்த கண்ணாடியிடம்.


கண்ணாடி சிரித்தது.


"உண்மையில் உனக்கு விளங்கவில்லையா?" எனக் கேட்டது.


கவி குழம்பினான். கண்ணாடி சொன்னதை யோசித்தான். புரிந்தும் புரியாமலுமாக இருந்தது.


விசயத்தை மீண்டும் மீண்டும் அசை போட்டுவிட்டு நிமிர்ந்தவன் "அந்த தேவ தேவதை நானும் ஆதியுமா?" எனக் கேட்டான். 


அப்படி இருக்குமோ என்று ஆச்சரியமாக இருந்தது. ஆதியை பார்க்கும்போது உண்டான இயல்பான நேசம் அவள் தன்னை மயக்க பயன்படுத்திய வேஷம் அல்ல, உண்மையான நேசம்தானோ என்று குழம்பினான்.


அவளை ஜென்மாந்திர காதலியாக நினைக்கையில் மனதுக்குள் இனிக்கதான் செய்தது. அவளின் அருகாமையை நினைத்து உடல் சிலிர்த்தான்.


அவனின் எண்ண ஓட்டத்தைக் கண்டு விட்டு நகைத்தது கண்ணாடி. கவி குழப்பத்தோடு கண்ணாடியைப் பார்த்தான்.


"இல்லை!" என்றது.


"அப்புறம் ஏன் இந்த கதையை நீ என்னிடம் சொன்னாய்?" எரிச்சலாக கேட்டான்.


"காரணம் உண்டு. சத்திய தேவர்களின் ஏந்தலும், அன்பின் தேவ இளவரசியும் இணைகையில் ஒரு குழந்தை பிறக்கும் என்பது விதி. அந்த குழந்தை யாரென்றால் மாண்டுப் போன அந்த தேவ தேவர்களின் பிரதி!" என்றது.


கவி குழம்பினான்.


"இரண்டு குழந்தைகளா?" என்றான்.


"இல்லை. ஒரு குழந்தைதான். ஏனெனில் அந்த தேவ தேவதை இறந்தபோதே அவர்களின் உயிர் ஓருயிராக இணைந்து விட்டது. அவர்களை இனி யாராலும் பிரிக்கவே முடியாது. ஆனால் அந்த குழந்தை மீண்டும் பிறக்க வேண்டுமானால் அதற்கு மட்டும்தான் நீ தேவை!" என்றது கண்ணாடி.


கவி கவலையோடு தரைப் பார்த்தான். "அன்பின் தேவ உலகில்தான் எந்த இளவரசியும் இல்லையே! நான்தான் அவர்கள் அனைவரையும் கொன்று விட்டேனே!" என்றான்.


அவனை பார்க்கையில் முட்டாளாக தோன்றியது கண்ணாடிக்கு.


"ஆதி.. அவள் இளவரசிதான்!" என்றது எரிச்சலோடு.


கவி அதிர்ச்சியோடு நிமிர்ந்தான்.


"அ.. அவ இளவரசியா?"


கண்ணாடிக்கு கோபம் வந்தது.


"உன்னைப் போன்ற ஆட்களிடம் பிரச்சனை என்ன தெரியுமா? இளவரசியாய் இருந்தால் மட்டும்தான் நேசிப்போம் என்பதுதான் அது. யாராய் இருந்தாலும் அவர்களின் குணத்திற்கு தக்கபடி அவர்களை நேசித்து ஏற்றுக் கொள்ள உங்களால் ஏன் இயலவில்லை? இளவரசி, அரசி, தேவதை இவர்கள்தான் உங்களுக்கு முக்கியமா? உங்களை நேசிப்போர் அவர்கள் அனைவரையும் உயர்ந்தோர் இல்லையா?" எனக் கேட்டது.


கவி கேலியாக கண்ணாடியைப் பார்த்தான்.


"தத்துவம் பேசுகிறாய்!" என்றான்.


"உனக்கான தகவலை தந்து விட்டேன். இத்தோடு போய் விடு. உன்னோடு பேச கூட எனக்குப் பிடிக்கவில்லை!" என்ற கண்ணாடி அத்தோடு தன் திரையை இழுத்துப் போர்த்திக் கொண்டது.


நெவத்ஸி கிரக ஓடங்கள் பிரபஞ்சமெங்கும் பறந்து திரிந்துக் கொண்டிருந்தன. அவர்களால் இன்னும் ஆதியையோ, கவியின் உலகையோ கண்டறிய முடியவில்லை.


ஆதியோ இவர்களை பற்றிய பயமும் இல்லாமல் புவியில் வாழ்ந்தாள். ஆம் அவள் வாழ்ந்தாள். அவள் வாழ காரணம் தேவையில்லை. கவியை போல கோபம், வீரம், ஆசை எதுவும் தேவையில்லை. ரசிக்கும் குணம் அவளிடம் இருந்தது. அந்த குணம்தான் அவளை வாழ வைத்தது.


அவள் மட்டுமல்ல அவளின் மக்களும் அப்படிதான் இருந்தார்கள். வாழ்க்கை என்பது ரசித்து வாழ என்பது அவர்களின் மூளையில் பதியப்பட்டு இருந்தது.


அழகாய் சிலை வடித்தார்கள். தண்ணீரிலும் ஓவியம் தீட்டினார்கள். பறவைகளில் கூடுகளில் படுத்து உறங்கினார்கள். பூக்களின் மெத்தையில் நடனம் ஆடினார்கள். 


அவர்கள் மனிதர்கள்தான். ஆனால் அவர்களுக்கும் அவ்வுலகில் இருந்த மற்ற ஜீவராசிகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பறவை விலங்குகளோடு இணைந்து வாழ்க்கையை கொண்டாடினார்கள். 


சூரியனுக்கு வணக்கம் சொல்லுகையிலும், இரவில் நிலவிற்கு கவி படிக்கையிலும் அவர்கள் அங்கே உயர்ந்த உள்ளங்களாக இருந்தார்கள். அவர்கள் கிரியேட்டர்ஸ். அவர்களால் நினைத்ததை உருவாக்க முடிந்தது. 


தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பினார்கள்.


எல்லாமே நல்லபடியாகதான் போய் கொண்டிருந்தது. ஒருநாள் மழையோடு மழையாக விண் ஓடங்கள் சில வரும்வரை.


ஆதி அப்போதுதான் உறங்க சென்றிருந்தாள். குறைந்தபட்சம் புவியின் கால அளவில் ஐந்தாறு மாதங்களுக்காவது உறங்கலாம் என்று நினைத்திருந்தாள் அவள்.


மனிதர்கள் மழையை ரசித்தபடி தங்களின் குகை வீட்டிற்குள்ளும், கட்டிட வீட்டிற்குள்ளும் இருந்தார்கள். அப்போதுதான் அந்த புயல் மழையில் இடி மின்னலின் இடையே வந்து இறங்கியது சில ஓடங்கள்.


பெரிய பெரிய ஓடங்கள். புவியின் மனிதர்கள் அப்பொழுதுதான் தண்ணீரில் செல்லும் ஓடத்தையே கண்டறிந்து இருந்தார்கள். இந்த ஆகாய ஓடங்கள் அவர்களுக்கு வியப்பை தந்தது.


மழையை பொருட்படுத்தாமல் அனைவரும் வெளியே வந்தார்கள். ஆதி அதிகளவில் மக்களை உருவாக்கி இருக்கவில்லை. நூற்று கணக்கில்தான் உருவாக்கி இருந்தாள். அவர்கள் அனைவரும் ஆகாய கப்பலை சுற்றி நின்றனர்.


அந்த கப்பல்களின் கதவுகள் ஒரே நேரத்தில் திறந்தது. உள்ளிருந்து நெவத்ஸி கிரக மக்கள் வெளியே வந்தனர்.


அவர்களின் கையிலிருந்த குச்சிகள் அனைத்தும் ஆயுதம் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களின் மனதில் இருப்பது அனைத்தும் வஞ்சம் என்பதையும் அறிந்திருக்கவில்லை.


அவர்களின் பெரிய தலைகளையும், மூன்று கைகளையும், விசித்திரமான வாலையும் அதிசயமென கண்டு வியந்தார்கள் இந்த மக்கள்.


"யார் இவங்க?" என்றான் ஒருவன்.


"விருந்தாளிகளாக இருக்க கூடும்!" என்றான் மற்றொருவன்.


அனைவருக்கும் வந்தவர்கள் விருந்தாளியே என்றே தோன்றியது.


"வாருங்கள்!" என்று வரவேற்றார்கள்.


வந்தவர்கள் கேலியாக சிரித்தார்கள்.


"ஆதி எங்கே?" என்றார்கள்.


மக்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


"அப்படி என்றால்?" என்றார்கள்.


"நடிக்கிறார்கள். ஆதியின் மக்களுக்கு நன்றாக நடிக்க தெரிகிறது!" 


ஆதிக்கு இந்த வசனம் கனவில் கேட்பது போல கேட்டது. ஏதோ பிரச்சனை என்று அவளின் மனம் துடித்தது. ஆனால் அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தனது படுக்கையை விட்டு எழாமல் இருந்தாள்.


பிரபஞ்சத்தின் மறு முனையில் இருந்த ஹார்ட்டிற்கும் மற்ற கடவுள்களுக்கும் புவியில் இருந்த தங்களின் குழந்தைகளுக்கு ஆபத்து என்று தெரிந்தது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் வருங்காலத்தின் கணக்கின்படி விதி எழுதப்பட வேண்டுமானால் நடப்பது எதையும் தடுக்காமல் கவனித்து ஆக வேண்டிய சூழல் அவர்களுக்கு.


வந்திறங்கிய நெவத்ஸி கிரகத்தார் சிலர் புவியின் மக்களை நெருங்கினார்கள். 


"ரத்த பரிசோதனை செய்தால் உண்மை தெரிந்து விட போகிறது!" என்றார்கள்.


ஒருவன் மனிதன் ஒருவனின் கையிலிருந்து வலுக்கட்டாயமாக ரத்தத்தை எடுத்தான்.


தங்களுக்கு எதிராய் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை கூட அறியாத அளவிற்குதான் இருந்தார்கள் அந்த அப்பாவிகளும்.


ரத்தம் விரைவில் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அதில் ஆதியை போல நீண்ட கால ஆயுள் தரும் ஜீன்கள் இருக்கவில்லை. நொடிக்கு நூறாய் அழிந்து உருவாகிக் கொண்டிருந்த மென் அணுக்கள்தான் அவர்களின் உடல் முழுக்க இருந்தது. 


பிரபஞ்சத்தின் மொத்த கோட்பாட்டையும் புவி மனிதர்களின் உடலில் வரைந்து வைத்திருந்தாள் ஆதி. அதை கண்டவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments