அழிவும், உருவாக்கமும்தான் இந்த பிரபஞ்சத்தின் ஒரே விதி. அதுதான் மனித உடல்களின், பால்வெளி அண்ட ஆன்மாக்களின் விதியாகவும் இருந்தது.
"இவர்களால் ஒரு பயனும் இல்லை. இவர்களை வைத்து நம்மால் மரணமில்லா வாழ்வை பெற இயலாது!" என்றான் ஒரு நெவத்ஸி கிரகத்தான்.
"ஒருவேளை இவர்கள் ஆதியின் வாரிசுகள் இல்லையோ?" குழப்பமாக கேட்டாள் ஒருத்தி.
"பால்வெளி அண்டத்தின் உதவாத கிரகத்தில் தனது வாரிசுகளை ஆதி உண்டாக்கி இருப்பதாக பிரபஞ்ச ஒற்றர் படையினர் சொன்னார்களே!" என்றான் மற்றொருவன்.
"இதுதானே அந்த கேவலமான கிரகம்!" என்ற அவள் அந்த கிரகத்தை சுற்றி பார்த்தாள்.
"படு கேவலமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வண்ணம். எங்கு பார்த்தாலும் நீரும் வானமும். இந்த கிரகத்தில் வாழ்வதே சாபம் போலதான் போல!" என்றாள் அவள்.
மனிதர்களுக்கு அவர்கள் சொன்னது வருத்தத்தை தந்தது. அவர்கள் புவியை அதிகம் நேசித்தார்கள். இதை விட அழகான கிரகம் இருக்குமா என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் வாழ, அவர்கள் ரசிக்க இந்த கிரகமே அதிகப்படியாகதான் இருந்தது.
"எங்கள் உலகத்தை வெறுக்காதீர்கள் உறவினர்களே! உங்களுக்குத் தேவையான ருசியான பழங்கள் இங்கே உண்டு!" என்றான் ஒரு மனிதன்.
சிரித்தான் நெவத்ஸியன்.
"இக்கிரக்கத்தாருக்கு நகைச்சுவை அதிகம். நாம் உறவினர்களாம்!" என்று நகைத்தவன் "இக்கேவலமான கிரகத்தில் கிடைக்கும் பழங்களை உண்பதற்கு பதிலாக நாங்கள் பட்டினியே கிடப்போம்!" என்றான். சிலர் வானில் பறந்தார்கள்.
மனிதர்களின் மனம் வாடிக் கொண்டே இருந்தது.
"இவர்களின் ஆதியின் வாரிசுகள் அல்ல. இவர்களுக்கு அறிவும் இல்லை. சக்தியும் இல்லை. இவர்களை அழித்து விட்டு அடுத்த கிரகம் நோக்கிச் செல்லலாம்!" என்றான் ஒருவன்.
வானில் பறந்துக் கொண்டிருந்தவர்களும் தங்களின் ஆயுதங்களை பயன்படுத்தி அங்கிருந்த இயற்கையை அழிக்க ஆரம்பித்தார்கள். விலங்குகளும் பறவைகளும் அவர்களை எதிரிக்க ஓடி வந்தன. ஆனால் அவைகளையும் கொன்றார்கள் நெவத்ஸியர்.
மனிதர்கள் அழுதார்கள். அவர்களின் நண்பர்கள் அழிவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் அவர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்றும் தெரியவில்லை.
அவர்கள் குழந்தைகளை போல. அது அந்த நெவத்ஸியருக்கு தெரியவில்லை.
"அமைதியாக செல்ல கூடாதா?" சந்தேகமாக கேட்டான் ஒருவன்.
"இவ்வளவு பெரிய பிரபஞ்ச வெளியில் இந்த தாழ்ந்த ஜீவராசிகள் இருப்பதால் என்ன பிரயோஜனம்? இவர்களால் பிரபஞ்ச கிரகங்களை பற்றி கணக்கிட கூட முடியாது. முட்டாள்கள். எதிரிகள் யாரென்று கூட அறியாமல் நம்மிடம் வந்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் ஒரு பயனும் இல்லை!" என்றவன் தன் முன் நின்றிருந்தவனின் தலையைப் பற்றிக் கீரை போல கிள்ளித் தூக்கி எறிந்தான். அவனின் கழுத்திலிருந்து வழிந்த ரத்தம் தரையில் ஓடுவது கண்டு மன அதிர்ச்சியில் ஏழெட்டு மானிடர்கள் மாண்டார்கள்.
நெவத்ஸியர் சிரித்தார்கள்.
"இது என்ன விந்தை? ஒருவன் இறந்தால் அதை கண்டு பலர் அல்லவா இறக்கிறார்கள்? இவர்களின் ஆயுள் ஒருவருக்கொருவர் இணைப்பில் உள்ளதா?" எனக் கேட்டான் ஒருவன்.
ஆதியின் படைப்பு அப்படிதான் இருந்தது. ஒருவரின் வலியில் மற்றொருவர் வருந்துவர். இதை அறியாத அவர்கள் மனிதர்களை வேட்டையாட ஆரம்பித்தார்கள்.
மக்களின் அழுகையும், கோரமான கத்தலும் தாமதமாகதான் ஆதியின் செவிகளில் விழுந்தது.
அலறியடித்து எழுந்தவள் மக்கள் வாழும் சமவெளி நோக்கி ஓடினாள். அவள் அவ்விடத்தை அடையும் முன்னால் அவளின் முன்னால் வந்து நின்றார் ஹார்ட்.
"உன்னால அவங்களை காப்பாத்த முடியாது ஆதி!" என்றார்.
ஆதி அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள்.
"நான் தேவதை. என்னால் முடியாது. ஆனால் உங்களால் முடியும். நீங்கள் கடவுள்!" என்றாள்.
ஹார்ட் இடம் வலமாக தலையசைத்தார்.
"விதிப்படிதான் எல்லாம் நடக்கும். இவர்கள் அனைவரும் இன்று மாண்டுப் போவார்கள் என்பதே விதி!"
ஆதி அதிர்ச்சியோடு அவரை விட்டு பின்னால் நகர்ந்து வந்து நின்றாள்.
"உங்களை கடவுள் என்று எண்ணினேன்!" என்றாள் சிறு குரலில்.
"கடவுள்தான்!"
மறுத்து தலையசைத்தாள்.
"அங்கே அழிந்துக் கொண்டிருப்பது என் மக்கள்! அவர்களின் வலியில் எது உயிர் கரைந்துக் கொண்டிருக்கிறது. நீங்களோ விதியென்று வந்து வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். விதிதான் எல்லாமும் என்றால் நான் எதற்கு? நீங்கள் எதற்கு? என் மக்களை நான் உங்களை நம்பி உருவாக்கினேன். அவர்கள் என்னை நம்பினார்கள். இன்று அவர்களை இறக்க தரவா நான் அவ்வளவு சிரமப்பட்டு அவர்களை உருவாக்கினேன்?" கண்ணீரோடு கேட்டாள் ஆதி.
கடவுள் அவளுக்கு சமாதானம் சொல்ல முயன்றார்.
"இது தவறம்மா. நம்மை நம்பி அவர்கள் இருக்கும்படி அவர்களை உருவாக்க கூடாது. விதியே அதுதான். ஒவ்வொருவரும் தங்களின் சுயத்தை மட்டுமே நம்ப வேண்டும். இது அதற்கான முன்னோட்டம். நான் சொல்லி இருந்தாலும் இது உனக்குப் புரிந்திருக்காது. இப்போது நீயே அவர்களை காண். வெறும் அன்பு மட்டும் கொண்டிருப்பதால் அவர்கள் எப்படி மாண்டுப் போகிறார்கள் என்றுப் பார்.." என்றார்.
அழிந்துக் கொண்டிருப்போரை அழுகையோடு கண்டாள் ஆதி.
"அவர்கள் என் குழந்தைகள் கடவுளே! என் கண் முன் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எனக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்!" என்றாள்.
இதற்கு மேல் இவளுக்கு எப்படி விளக்குவது என்று யோசனையில் ஆழ்ந்தார் ஹார்ட்.
"இவரை நம்பாதே என்று அன்றே சொன்னேன் ஆதி. ஆனால் நீதான் என்னை நம்பாமல் போனாய்!" மரத்தின் கிளை ஒன்றிலிருந்து குதித்தபடி சொன்னாள் ஃபயர்.
ஆதி அழுத முகத்தோடு அவளைப் பார்த்தாள்.
"இந்த ஆள் ஓர் அரை பைத்தியம்ப்பா. இவரை நம்பினா இப்படிதான்!" என்றாள் அவள்.
"ஃபயர்.. நீ உன் திருவாயை மூடிக் கொண்டு கிளம்பலாம் என்று எண்ணுகிறேன்!" கோபத்தோடுச் சொன்னார் ஹார்ட்.
"நடக்கும் விதியை பற்றி அறிந்துக் கொள்ள அவளுக்கு முழு உரிமை உள்ளது!" என்றாள் ஃபயர்.
ஆதி குழப்பமாக இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
"இந்த ஹார்ட்டுக்கு தனது பூமியில் அழகிய மனிதர்கள் வேண்டுமென்று ஆசை ஆதி. ஆனால் இந்த உலகில் மனிதர் உருவாக அன்பு தேவை. அதற்கு நீயும் தேவை. இதெல்லாம் எப்போதோ முடிவு செய்யப்பட்ட விதி. மனிதர்கள் உருவாக அன்பு மட்டும் போதாது. வேறு சில முக்கிய குணங்களும் வேண்டும். ஆனால் அதை இவர் உன்னிடம் சொல்லவில்லை. விதியின்படியே நீ அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்!" என்றாள்.
ஆதி இடம் வலமாக தலையசைத்தாள்.
"நீங்களும் நேரத்தைக் கடத்துக்கிறீர்கள். என் குழந்தைகளை நீங்கள் நினைத்தால் கூட காப்பாற்றலாம். ஆனால் என்னையும் அங்கே செல்ல விடாமல் மறித்து நின்று கதை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றாள்.
'கண்டுப் பிடித்து விட்டாளே!' கவலையோடு யோசித்த ஃபயர் சமவெளி பகுதியை எட்டிப் பார்த்தாள். இன்னும் சிலர் மிச்சம் இருந்தார்கள். வெற்று அன்போடு இருப்போர் உதவாத மரக்கட்டை போல என்பது அவளின் எண்ணம்.
"எல்லோரும் என்னை ஏமாத்துறிங்க! பாவள் கிரகத்தார் ஏமாற்றினார்கள். கவி ஏமாற்றினான். இப்போது நீங்களும்.." என்ற ஆதிக்கு ஏற்கனவே உடைந்திருந்த இதயம் மேலும் உடைந்தது போலிருந்தது.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
VOTE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments